Monday 6 January 2014

தோழிக்கு ஒரு கடிதம் - நூல் அறிமுகம்: வனவாசம்

அன்புள்ள ராஜி,

உன்னிடம் சில விஷயங்கள் பேச வேண்டும். நேரிலோ, போனிலோ பேச முடியுமென்றாலும் நான் கடிதம் வழி பேசுவதையே அதிகம் விரும்புகிறேன். இங்கு தான் நீயும் நானும் மட்டும் இருப்போம். மற்றவைகளில் நம் சூழலும் நேரமும் ஒட்டுக் கேட்கும்.

நாம் அன்றைக்கு புத்தக வாசிப்பு பற்றிப் பேச ஆரம்பித்தது, கடிகாரத்தின் கண்டிப்பில் பாதியில் முடிக்கப்பட்டு விட்டது. இன்று அதை இரு நிமிடங்கள் தொடர விழைகிறேன்.

ராஜி, இரண்டு, மூன்று நாட்களாக கடுமையான மன அழுத்தம். அதிலிருந்து வெளிவர விரும்பி, என்னென்னவோ செய்து பார்த்தேன். அழுக்காய்க் கிடந்த அத்தனை துணிகளையும் பொறுமையாகத் துவைத்தேன். நேர்த்தியாக இருந்த அத்தனை உடைகளையும் கசக்கி, மீண்டும் அயர்ன் பண்ணி மடித்து வைத்தேன். கால் வலிக்க நடந்தேன். காது வலிக்கப் பாடல் கேட்டேன். கண்ணில் பட்டதையெல்லாம் படித்தேன். கடைசியில் அதில் கொஞ்சம் பலன் கிடைத்தது.

புத்தகங்கள் போதை என்பதில் எனக்கு எப்பொழுதும் உடன்பாடு இருந்ததில்லை. போதை பாதை காட்டாது, மாறாக அவற்றை மறைக்கும். ஆனால் புத்தகங்கள் அப்படியல்ல. அவை ஒரு வகைத் தியானம் என்று சொல்லலாம். எவ்வளவு மனப் பிரச்சனைகளின் ஊடேயும், நிகழ் உலகத்திலிருந்து நம்மைக் கடத்திச் சென்று, வேறொரு உலகத்தில் நம்மைக் குவிக்க வைக்கும். புத்தகங்கள் - ஆள் மயக்கி! அவைகளுக்குக் காலை மாலை பேதம் கிடையாது. எப்பொழுது திறந்தாலும் அதே வாசனை. அதே போதனை.

அப்படியானதொரு புத்தகத்தைத் தான் இந்த வார விடுமுறையில் படித்தேன். பழைய பாடல்கள் குறித்து நாம் சிலாகித்தும் விமர்சித்தும் பேசிய இரவுகள் இன்னும் மனதில் இருந்து விடியவில்லை. 'அவனிடம் நான் சொன்னேன் என் அஞ்சுதலை. அந்த அண்ணலே, தந்து வைத்தான் ஆறுதலை' - எப்படி மறக்க முடியும் ராஜி இந்த வரிகளை?

ஆம், அந்த வரிகளுக்கு உரிமையாளன் கண்ணதாசன் சுயசரிதையாகிய 'வனவாசம்' தான் அது! 'கண்ணதாசனிடம் தமிழ் நில் என்றால் நிற்கும். உட்கார் என்றால் உட்காரும்' என்று அந்தக் 'காவியத்தாயின் இளைய மகனை'ப் பற்றி என் பிரியத்திற்குரியவர் பேச்சில் கேட்டேன். கண்ணதாசன் திரைப்படப் பாடல்களைத் தாண்டி, அவரைப் படிக்க நான் ஆசைப்பட்டேன். அதன் தொடக்கமாக 'வனவாசத்தை' எடுத்தேன். நீ கேட்கலாம். எழுதியதைப் படிக்காமல், எழுதுபவனைப் படித்து என்ன பிரயோஜனம் என்று! என் பார்வையில், எழுதுபவனைத் துதிக்கவோ தூற்றவோ வேண்டியதில்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தப்பில்லை. அவனைப் பற்றித் தெரிந்து கொண்டால், அவன் வாழ்ந்த காலத்திய சூழல் பற்றித் தெரிந்து கொண்டால், அவன் எழுத்துக்களை முழுதாகப் புரிந்து கொள்ள முடியும். எழுத்துகளின் பின் உள்ள நேர்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தப் புத்தகம் இரைச்சலான சுய தம்பட்டமாக இல்லாமல், வறண்ட சோக கீதமாக இல்லாமல், எளிமையாக 'இது தான் நடந்தது' என்ற பாணியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இப்படி நடந்தது? அது சரியா தவறா? அதற்கான விவாதங்கள், ஒப்புதல்கள், மன்னிப்புகள் எங்கேயும் இல்லாதது இந்நூலைச் சிறப்பிக்கிறது. நூல் முழுக்க, 'நான்' என்று எழுதாமல் 'அவன்' என்று எழுதியிருப்பது படிப்பவனுக்கு ஒரு இலகுத்தன்மையைத் தருகிறது.

கண்ணதாசன் முன்னுரையிலேயே சொல்லியிருக்கிறார்: 'எப்படி வாழ வேண்டும்? என்பதற்கு இது நூலல்ல! எப்படி வாழக்கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி' என்று.

அவர் பிறப்பு, வளர்ப்பு என்று பெரிதாக ஒன்றும் விளக்காமல் நேரடியாக வேலை தேடிச் செல்வதில் ஆரம்பித்து, அவர் பட்ட கஷ்டங்கள், அடைந்த வாய்ப்புகள், நழுவல்கள், தவறுகள், கட்சியில் சேர்ந்தது என்று ஒரு நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்துடன் விரிகிறது. கவிஞரின் மொழி நடை அத்தனை அருமை!

அவர் மேற்கோள் காட்டும் உதாரணங்கள், ஆங்காங்கே வரும் பொதுவுடமைக் கருத்துகள் அனைத்தும் அழகு!

உதாரணத்திற்கு உனக்காக சில:
---
எவ்வளவு மகிழ்கிறார்கள்! கவலை இருக்கிறதோ, இல்லையோ பசி இல்லை! அது இருந்தால் காதல் இவ்வளவு உற்சாகமாக இருக்காது!

நாலணா முள்ளங்கியை ஐந்தணா ஆக்கினான். ஓரணா கீரை தானாகவே ஒன்றரை அணா ஆயிற்று. இப்படி எல்லாக் காய்கறிகளும் அவனுக்காகத் தங்கள் விலையை உயர்த்திக் கொண்டன.

நடத்தப்படும் படகு கரை வரை சேர்கிறது. சிதறி விழும் கட்டையும் காலங்கடந்தாவது கரைக்கு வந்து விடுகிறது. முடியுமானால் படகாவோம். இல்லையென்றால் கட்டையாவோம். என்றேனும் ஒருநாள் கரை சேர்வோம் என்று அவன் நம்பினான்.

சட்டையில்லாத திறந்தமேனி, முதன்முறையாக போலீஸ் காவலுக்கு ஆளானது

நெடுநேரம் தூங்குகிறவனையே செத்துவிட்டவனாக நினைத்துக் கொத்தித் தின்னும் கழுகுகள், உண்மையிலேயே செத்துவிட்டவனை உடனே கொத்தித் தின்றுவிடலாம்.

4 பேருக்கும் ஒரே மாதிரித் துயரம் வரும் போது அவர்கள் நண்பர்களானார்கள். 4 பேருக்கும் ஒரே மாதிரியான ஆசை வந்துவிட்டதல்லவா? அவர்கள் பகைவர்களானார்கள்.
---
பத்தாண்டுகள் அவர் தி.மு.க கட்சியில் இருந்ததைத் தான் வனவாசம் என்கிறார். அண்ணா பேச்சினால் கவரப்பட்டு, கட்சிக்குள் வருகிறார். கருணாநிதியுடனான ஆரம்ப கால நட்பு, அண்ணா மீது கொண்ட பக்தி எப்படி கொஞ்சம் கொஞ்சமாகக் கசந்து கட்சியை விட்டு அவரை விலக்குகிறது என்பதை கூடுமானவரை, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்திலேயே சொல்லியிருக்கிறார்.

போகிற போக்கில் நேற்றைய & இன்றைய முக்கியத்தலைவர்களை வெளிப்படையாகவே வசை பாடியிருப்பது பகீர் என்றிருந்தது. நிஜமாகவே இப்படியெல்லாம் இருந்தார்களா, கண்ணதாசன் சொல்வது உண்மை தானா என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அவை குறித்தான தேடல்களை எனக்குள் தொடங்கி வைத்திருக்கிறது என்று கூட சொல்லலாம். சில இடங்களில் 'இப்படியுமா இருக்கும் அரசியல்?' என்று வாய் விட்டே சொல்ல வைக்கிறார்.

ஒரு கழுகுப் பார்வையில் கண்ணதாசனைப் பார்த்தால், அவர் சாதாரண மனிதராகவே இருந்திருக்கிறார். பிரத்யேக குணங்கள் என்று பெரிதாக ஒன்றுமில்லை. வேலைக்காகச் சிபாரிசுக்கு அலைந்தது, வேலையைப் பொசுக்கென்று ராஜினாமா செய்து விட்டு வருவது, காசில்லா விட்டால் தண்ணீரைக் குடித்துக் கொண்டு தனியாகக் கிடப்பது, காசு கையில் வந்தால், நணபர்களுடன் மது அருந்திக் களிப்பது, விலைமாதர் வீடுகளுக்குச் செல்வது என்று எல்லாமும் ஒரு சராசரியின் குணம்.

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி நூல் ஆரம்பம் முதல் முடியும் வரை எனக்குப் புரிந்தது, எந்த இடத்திலும் எந்தத் துன்பத்திலும் எத்தனை அவமானத்திலும் அவர் தன் எழுத்தை நம்பினார். எதையும் நாளைக்கென்று எடுத்து வைக்காமல், போனது போன வழியில் போயிருக்கிறார். பிரியத்திற்காக, நட்பிற்காக எதையும் யோசிக்காமல் சில சரியான/தவறான செயல்களைச் செய்திருக்கிறார். அவையனைத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார் தைரியமாக. இவையனைத்தும் சாதாரணனின் செயல்கள் இல்லை. அந்த நம்பிக்கையும் வலிமையும் தான் அவரைக் கவியரசு ஆக்கியதோ, என்னமோ!

மும்முனைப் போராட்டத்தின் போது அவர் சிறையிருந்த நாட்கள், அவரின் பாவமன்னிப்பு கட்டுரை, அ ஆ இ ஈ உலகத்தை அழித்த கதை, சம்பத் - அண்ணாவிற்கிடையேயான பேச்சுவார்த்தை போன்ற இடங்கள் கண்களை புத்தகத்தை விட்டு எடுக்காமல் படிக்க வைத்த பகுதிகள். அதிலும் அந்த அ ஆ இ ஈ கதை..'அம்மாடி! கவிஞரே! காலைக் காட்டுமய்யா! வெறும் முத்தையாவா? முத்தைய்யா நீவிர்'

சில இடங்களில் முகச்சுளிப்பு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. முழுக்க முழுக்கக் கருணாநிதியை வசை பாடியே இருக்கிறது. அவரைத் தவறான கோணத்திலேயே காட்டியிருக்கிறது. அவற்றை எல்லாம் 'கண்ணதாசன் சொல்கிறார்' என்ற ஒரு காரணத்திற்காக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. அவைகள் வன்மத்தால் வந்த வார்த்தைகளா, நிஜமாகவே அவர் அப்படித் தானா என்பதை அடுத்தடுத்துத் தேடுவோம்.

1961 ஏப்ரல் 9 ஆம் தேதி கட்சியிலிருந்து விலகுகிறார். அதனுடன் நூல் முடிகிறது.

இதன் பின்னான பகுதிகள், மனவாசம் என்ற நூலில் வருகிறதாம்! விரைவில் அதையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நீயும் படித்துப் பார் ராஜி. Better late than never!

இது நூல் விமர்சனம் இல்லை. விமர்சிக்கும் அளவுக்கு நான் வளரவுமில்லை. என் பார்வையில், நான் புரிந்து கொண்டதில் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன். உனக்கும் மற்றவர்களுக்கும் இது வேறுபடலாம். மீண்டும் அடுத்த வாரம் ஏதாவது படித்தால் அந்த அனுபவத்தைப் பகிர்கிறேன். அதுவரை, டாட்டா. டேக் கேர் ராஜி.

அன்புத்தோழி,
மகிழ்வதனா
கனவுபுரம்,
கற்பனையூர்

No comments:

Post a Comment