Thursday 28 June 2012

சொல்லிவிடு நிலவே


சொல்லிவிடு நிலவே!
அணுஅணுவாய் ஆவி பிரிந்திருக்க
நொடிக்கொருமுறை இறக்கிறாள் என்று;


சொல்லிவிடு நிலவே!
பிள்ளைபோல் துள்ளித் திரிந்தவள்
பிறர் கண்ணில் படுவதில்லை என்று;

சொல்லிவிடு நிலவே!
அவர்பெயர் உச்சரித்த இதழ்களுக்கு
பிறர்பெயர் தெரியவில்லை என்று;

சொல்லிவிடு நிலவே!
காதலினைத் தாங்கிய இதயத்திற்கு
பிரிவினைத்தாங்க பலமில்லை என்று;

சொல்லிவிடு நிலவே!
மணமுடிக்க வற்புறுத்திய உறவுகளிடம்
பிணமாய்போக ஒத்துக்கொண்டாள் என்று;

சொல்லிவிடு நிலவே!
கண்ணாய் வளர்த்த பெற்றோர்களுக்கே
கன்னியவள் கபடமானாள் என்று;

சொல்லிவிடு நிலவே!
அவர் ரசித்த விழிகளுக்கு
கண்ணீர்தவிர வேறு கதியில்லை என்று;

சொல்லிவிடு நிலவே!
விட்டுச்செல்லும் உயிரைக் கட்டிவைப்பது
காதலரவர் பொறுப்பு என்று;

முகம் காட்டு



தாலாட்டுப் பாடிக் கேட்டதில்லை
தாய்ப்பால் ருசி கண்டதில்லை
அப்பாவுக்கு அரவணைக்க நேரமில்லை
அவர் அன்னைக்கு உடல்நலம் போதவில்லை
சொத்துக்கள் அதிகம் இருக்கவில்லை
சொந்தபந்தங்களுக்கு உறவு தெரிவதில்லை
சிரிக்க அவசியம் வருவதில்லை
சிந்தவும் கண்ணீர் மிச்சமில்லை
அம்மா என்று யாருமில்லை
அதனால் தானே இந்தநிலை?
அந்தக் கவலை உனக்கில்லை
அன்னை இருக்காள் துயரில்லை
ஒருமுறை காட்டு உன் முகத்தை
ஒத்த குழந்தைப்பருவ சந்தோசத்தை
உனைப் பார்த்தாவது தெரிந்து கொள்கிறேன்!!

Tuesday 26 June 2012

காதலியே!!


பொருந்துமா பார்
என் பெரிய அன்பு
உன் சிறிய இதயத்திற்குள்;

நிமிர்ந்துதான் பார்
என் காதல்மனு சென்றுசேரட்டும்
உன் வலை விழிகளுக்குள்;

தேடித்தான் பார்
என் காதலைவிட பெரியதொன்றை
உன் உறை உலகத்திற்குள்;

கொடுத்துத்தான் பார்
உன் ஆசையனைத்தையும் பூர்த்தி செய்வேன்
என் உயிர் பிரிவதற்குள்;

Friday 22 June 2012

மோட்சம்


மோட்சம் பெறுகிறேன் தவணை முறையில்
உன் பட்டிதழ்கள் படும் வேளையில்
கடவுள் இப்படியா இறங்குவான் கருணையில்
அமுதமனைத்தையும் அமிழ்த்தி விட்டான் உன் இதழில்
ஓடி வா உயிரே சடுதியில் 
தவிக்கிறேன் சுடுநீர் தந்த ரணத்தில்;
இதழ் கொண்டு ஆழ்த்து கண்ணே இனிமையில்;
உன் பிரிய தேநீர்க்கோப்பை இங்கே நான் வெறுமையில்;


Monday 18 June 2012

எது அமைதி?



அமைதிக்காக ஆயுதம் ஏந்துவது சாதாரணமாய் ஆகி விட்டது
அன்று பிரம்பெடுத்தார் ஆசிரியர் - வகுப்பறையில்;
இன்று தடியெடுக்கிறார் காவலர் - அமைதி மாநாட்டில்;
நாளைக்காவது ஆயுதத்தால் வேண்டாம் 
அன்பினால் காப்போம்..


அன்பு


பெருமைக்காக சேர்த்து விட்டேன் பெரிய கல்லூரியில்;
பெட்டி பெட்டியைப்  பணம் கொடுத்தேன் -
பெற்ற மகள் பெயர் எடுக்க;
படித்து முடிந்த கையுடன் 
பட்டணம் தான்  சென்று விட்டாள்;

மாதம் ஒன்று முடிந்து விட்டதால் 
மணி ஆர்டர் வருமானக் காத்திருந்தேன்;
வந்ததென்னவோ தந்தி மட்டும் தான்;
என்னவோ ஏதோ என்று பதறிப்போய் 
படிக்கச்  சொன்னேன் பக்கத்துக்கு வீட்டு வாத்தியாரை;

அன்பு தான் பெரிதென்று உன் மனம் 
விரும்பியவனை மணம் செய்து கொண்டதாய் அறிந்து கொண்டேன்.
அது அன்பென்றால் நான் வைத்தது என்ன மகளே??

Wednesday 13 June 2012

மிருதங்கம்



தியானம் செய்கிறாயோ தினமும் 
கோடிக்கைகள் அடித்தாலும் கோபம் வராதிருக்க !

Tuesday 12 June 2012

கந்துவட்டிக்காரன்


ஓடத்துடிக்கின்றன கால்கள் உன்னைக் கண்டவுடன்
காரணம் நீ கந்துவட்டிக்காரன்!
ஒற்றை முத்தம் கொடுத்து விட்டு 
பதிலுக்குப் பத்து முத்தம் கேட்பாயே!!

Saturday 9 June 2012

ஏமாற்றம்



இருபது நாள்கள் ஆகிவிட்டது இன்றுடன்  
இருவர் விழிகளும் நலம் பேசி;
இருந்தும் வரவில்லை வாய்திறந்து வார்த்தையொன்று;
கண்கள்மட்டும் கவிபேச கடையோரம் நின்றிருந்தேன் ;
கன்னல் மொழி  வார்த்தை யொன்றை 
கன்னியவள் உதிர்த்து வைத்தாள்;
என்னவென்று கேட்டுவர எதிர்நோக்கி சென்றிருந்தேன்;
எள்வெடித்த தோற்றம் என்னவள் மலர்முகத்தில்
எட்டவே நின்று கொண்டேன் சட்டென நெருங்காமல்;
அரும்பு முகம் மலர்ந்து விட்டது ஐந்தே நொடிப்பொழுதில்;
அப்படியே அவள் அருகில் அன்புடன் நான்நின்று கொண்டேன்;
அவள் மொழிந்தாள் அழகுத் தமிழில் 
'எங்கடா  போய்ட்ட திடீர்னு 
எப்படி டென்ஷன் ஆயிட்டேன் தெரியுமா?'
என்னென்னமோ வண்ணக் கனவுகள் கண்ட அந்த வேளையிலே 
மறுபடியும் அவள் அழைத்தாள்
'ஹலோ..கேக்குதா?இங்க சரியா டவர் கிடைக்கல!!'
அடக் கடவுளே!!எவன் டா கண்டுபிடிச்சது இந்த ஹெட்செட்ட??

Wednesday 6 June 2012

மனுஷ்யபுத்திரன் - சிநேகிதிகளின் கணவர்கள் ( படித்ததில் பிடித்தது )




சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்
ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்
ஒரு சர்க்கஸ் கோமாளியின்
அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேதிகளின் கண்களை
முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்
அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை
மறுதலித்துவிடுகிறேன்
அவளைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்
அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை
அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை
சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு
காட்டப்படும் பெருந்தன்மை
நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும்
பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறாள்
உரையாடல்களின்
அபாயகரமான திருப்பங்களை
பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்
எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்
ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களின் இடையே இருப்பது
ஒரு உறவல்ல
இலக்குகள் ஏதுமற்ற
ஒரு பந்தயம்
ஒரு அன்னியனுக்குக் காட்டும்
வன்மம் மிகுந்த  மரியாதை
ஒரு சட்டபூர்வ உரிமையாளனுக்கு எதிராக
ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்
தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட
ஒரு மீன் முள்

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை
மாற்றிக் கொள்கிறேன்
அவர்களது எல்லா அக்கறைகளையும்
எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்
சிநேகிதிகளுடன் பேச
ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது
அவர்களின் கணவர்களுடன் பேச
ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
சிநேகிதிக்குப் பதில்
சிநேகிதியின் குழந்தைகளை
நேசிக்கக் கற்றுக் கொண்டேன்
எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்
எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்
நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று
அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை
‘சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று
*