Tuesday 31 December 2013

எப்படியிருந்தது 2013?

இது ஒவ்வொரு வருட முடிவிலும் அந்த ஆண்டில் நடந்த நல்லது பொல்லதுகளை நினைத்துப் பார்ப்பது தான்.
சம்பிரதாயமாக ஆகாமல் அடுத்தடுத்த செயல்களுக்கு ஊக்கமாகவும், தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கட்டும் என்று உள்மனதிற்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

இது நண்பர்களுக்கான வருடம் போல! அருமையான அக்காக்கள், அன்பான அண்ணன்கள், பிரியம் நிறைந்த மச்சிக்கள், குட்டித் தங்கைகள் என்று
நிறைய்ய்யய்ய்ய்ய நட்புகள் இந்த வருடம் கிடைத்தன. இது ஆசிர்வதிக்கப்பட்ட வருடம். போன வருடத்தை விட, இந்த வருடம் இன்னும் கொஞ்சம் நிறைவாய் உணர்கிறேன். அது நண்பர்களின் வரவால் கூட இருக்கலாம்.

இந்த வருடம் தந்த மிக மிக்கியமான ப்ளஸ்: என் பலம் என்று நான் நம்பிக் கொண்டிருந்தவைகள் ஒரு பாதைக்கு முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆர்வம் என்று மட்டும் இருந்தவைகள் எல்லாம் செயல் என்று மாற ஆரம்பித்திருக்கின்றன. நிச்சயமாய் இது முன்னேற்றத்தின் முதல் படி என்று நம்புகிறேன். இதற்கான அத்தனை credit-களும் என் ஆசானுக்குச் சமர்ப்பணம்.

புத்தகங்கள் வாசிப்பு போன வருடத்தை விட அதிகமாகியிருக்கிறது. ஆத்மார்த்தியுடன் நட்பான ஆரம்ப நாட்களில் ஒருமுறை புத்தக வாசிப்புக்கு அவ்வளவு நேரம் கிடைப்பதில்லை என்று ஒரு வாதம். 'உங்களுக்கு அதே தான் தொழில். உங்களால் முடிகிறது. எனக்குத் தொழில் வேறு. இது வேறு. இது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அவ்வளவு நேரம் ஒதுக்க முடியல ஆத்மா' என்றேன். அழகாக ஒரு வார்த்தை சொன்னார்: 'இல்ல ராஜி. அப்டியெல்லாம் சொல்லவே முடியாது. உனக்கு நிஜமாவே ஆர்வம் இருந்தா உன்னால படிக்காம இருக்கவே முடியாது. புத்தக வாசிப்புன்றது தன்னிச்சையா நிகழ்கிற ஒன்று. படிக்கணும் ராஜி. நிறையப் படிக்கணும்' என்றார். நிச்சயமாய் அது உண்மை தான் என்று அடுத்த சில மாதங்களிலேயே புரிந்தது. இந்த இடத்தில் என்னை உற்சாகப்படுத்திய ஆத்மாவுக்கு நன்றி சொல்லியாகணும்.

இந்த வருடம், நேரத்தைக் கொஞ்சம் உருப்படியாகப் பயன்படுத்தியிருக்கிறேன் என்ற திருப்தி இருக்கிறது. அட்லீஸ்ட் பின் ஆறு மாதங்களைக் குறை சொல்ல முடியாது. ஆனால் இன்னும் முன்னேற்றம் வேண்டும். இது போதாது.

வேலையைப் பொருத்தமட்டில் சில ஏற்ற இறக்கங்கள் வந்து போய் விட்டது. Mistral, Renesas, Broadcom என்று அதிரடியாகச் சில மாற்றங்கள். எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி இல்லை. அது மார்க்கெட் நிலவரத்தாலும் கூட இருக்கலாம். சீரியஸான கவனம் வேண்டும் என்பது மண்டைக்குள் 2 மாதத்திற்கு முன்னமே உரைத்தது. அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் அல்லது செய்து தான் ஆக வேண்டும். இடையில் ஓரிரண்டு மாதங்கள் ரொம்பவும் மனது சோர்ந்து போயிருந்தது. இப்பொழுது அதைச் சரியாக்கியாயிற்று. பார்க்கலாம். திரும்பவும் அந்த 'கடுப்பிங்ஸ் ஆஃப் கம்போடியா' mode-க்குப் போக மாட்டேன் என நம்புவோம். அப்படிப் போனால் அம்புட்டும் போச்சு.

கோகிக்கு காலேஜ் கிடைத்தது இந்த வருடத்திய மிகப் பெரிய வெற்றி. அது வெறும் அவள் கனவு மட்டுமல்ல. ஒரு தலைமுறையின் கனவு. எதிர்பார்த்தற்கு அருகில் அவளுக்கு அமைந்து விட்டது குறித்து ஒரு மாதிரி மன நிறைவு தான்.

நினைத்து மகிழ நிறைய சம்பவங்கள் இருந்தாலும், போன வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் சோகங்கள் அதிகம். அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது, வீட்டுப் பிரச்சனை etc etc..சில சமயம் தனியாய் நின்று தாங்க வேண்டிய சூழல் கூட வந்து போனது. சுயகழிவிரக்கம் கொஞ்ச நாளைக்கு இருந்தது. அந்த சமயத்தில் அப்பா ஒருத்தர் மனதிலறைவது போல ஒரு வார்த்தை சொன்னார். 'My dear child! Are you a kid? you are a grown up woman. you should learn to handle problems on your own' சரியான சந்தர்ப்பத்தில் சொன்ன மிகச் சரியான வார்த்தை அது! அதன்பின் தேவையில்லாமல் யாரிடமும் மூக்கைச் சிந்தவில்லை. தைரியமாக இருப்பதாய் மனதை ஏமாற்றிக் கொண்டாவது காலத்தைத் தள்ளியாச்சு. அடுத்த வருடத்திலாவது அனைத்துப் பிரச்சனைகளும் முடிய வேண்டும் என்று கேட்கவில்லை. கொஞ்சம் வீரியம் குறைந்தால் கூட போதும். கொஞ்சம் நிம்மதியாய் மூச்சு விடுவேன்.

இந்த வருடம் செய்த நல்ல காரியம் என்று கணக்குப் போட்டால், கண்தானம், அப்பா பிறந்த நாளுக்கு உதவும் உள்ளங்களுக்குச் சின்னதாய் ஒரு நன்கொடை, கல்பனா சாவ்லா துளிர் கல்வி மையத்திற்குச் செய்த சில அறிவுப் பகிர்தல்கள்/motivation இவைகளைச் சொல்லலாம். துளிர் அமைப்பில் சில முயற்சிகள் எடுத்தேன். சில மனப் பிரச்சனைகளால் அதன் பக்கம் கவனம் குறைந்தது. அடுத்த வருடம் அவற்றை முடுக்கி விடவேண்டும். இந்த வருடம் உடல்தானம் pledge பண்ணி விட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன். வீட்டில் பெர்மிஷன் வாங்கியாச்சு.

போன வருடத்துப் பிடிவாதங்களும் சிறுபிள்ளைத்தனங்களும் அப்படியே இருப்பது போலத் தான் தெரிகிறது. மனதுக்கு நெருக்கமானவர்களை miss பண்ணுவதை இன்றும் வார்த்தைகளில் சொல்வதை விட முதலில் கோபமாய் தான் வெளிப்படுத்த வருகிறது. இது எங்கு போய் முடியப் போகிறதோ என்ற கவலையும் இருக்கிறது. ம்ம்ஹும்..மாற்ற முடியவில்லை. புது வருடமாவது இதைக் கொஞ்சம் புரிய வைக்குமா பார்ப்போம்.

மொத்தத்தில் புது வருடம் மன நிம்மதியைத் தர வேண்டும். அது இருந்தால் சுறுசுறுப்பு தானாக வரும். சுறுசுறுப்பு இருந்தால் போதும், பட்டையைக் கிளப்பலாம். பார்ப்போம். என்னென்ன ரகசியங்களுடன் புது வருடம் பிறக்கப் போகிறது என்று!

Monday 30 September 2013

பாதுகாப்பு?

எழுத்தறிவித்தவன் இறைவனாவான், பிச்சை புகினும் கற்கை நன்றே, கண்ணுடையார் என்போர் கற்றோர் இப்படி எண்ணற்ற பொன்மொழிகள் கல்வியின் இன்றியமையான்மையை வலியுறுத்துவது நம் தமிழ்ச்சமூகம் அறிந்த ஒன்றே. இவையெல்லாம் ஏட்டோடு நின்று விடாமல் இயல்பிலும் இருப்பது மகிழத்தக்கது. அதிலும் பெண்கல்வியின் அவசியம் குறித்து தினமும் ஒலி, ஒளி, அச்சு, கேளிக்கை ஊடகங்களின் பரப்புரை மக்களைச் சென்றடைகிறது. ஒரு தலைமுறையை உயர்த்தக் கூடிய ஒரே ஏணி கல்வி மட்டுமே. பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெடுக்கும் மிகப் பெரிய ஆயுதம் கல்வி. இதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்பதன் கண்முன் சாட்சியாக நிற்கிறது இந்திய அரசின் 2010ஆம் வருட கணக்கெடுப்பு.

இந்திய அளவில், 2001 ஆம் ஆண்டு 53.67%ஆக இருந்த பெண்களின் படிப்பறிவு விகிதம், 2010 ஆம் ஆண்டு 65.46%ஆக உயர்ந்திருக்கிறது. 10ஆண்டுகளில் ஆண்களை விடப் பெண்களின் படிப்பறிவு விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இன்று அநேகமாக எல்லாத்துறைகளிலும் பெண்கள் புலமை பெற்று விளங்குகிறார்கள். கிராமங்களிலும் முன்பிருந்ததை விடக் கணிசமான அளவு பெண்கல்வி அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் இந்தியனைக் கண்டு ஏளனிப்பவர்கள் தலையில் விழுந்த இடி.

ஆனால் இதன் இன்னொரு முகத்தை மறைப்பது நியாயமாகாது. சமூகத்தில் பெண்களுக்கு முன் இருக்கும் சவால்கள் அதிகம். உடல் மீதும் உணர்வுகள் மீதும் நடக்கும் வன்முறைகளைத் தாண்டித்தான் ஒரு பெண் ஜெயிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் ‘பெண்கள் பாதுகாப்பு’ என்ற பெயரில் ஆண் வர்க்கம் செய்யும் அராஜகம் வேதனையானது.

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தையடுத்து, பெண் பாதுகாப்பு குறித்து நன்கு படித்தவர்களும், உயர்பதவியில் இருப்பவர்களும் அரசியல்வாதிகளும் வெளியிட்ட கருத்துக்கள் பல அபத்தங்கள் நிறைந்ததாகவே இருந்தது. ஆடைக்கட்டுப்பாடு, நேரக்கட்டுப்பாடு என்று விரிந்தவைகள் என் நினைவில் வந்து செல்கின்றன. இந்த அபத்தங்களின் இன்னொரு வடிவமாக இருக்கிறது சில கல்லூரிகளின் பெண்கள் விடுதிகள்.

எனக்குத் தெரிந்த பெண் ஒருத்திக்கு, ஒரு புகழ்பெற்ற கண் மருத்துவமனைக் குழுவிற்குச் சொந்தமான கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்திருந்தது. அவள் ஏழை வீட்டுப் பெண். நல்ல மதிப்பெண்கள் வைத்திருந்தாலும், மேலே படிக்க வைக்க வசதியில்லாமல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அந்தக் கல்லூரியில் இடம் கிடைத்தது. படிப்புச் செலவு, விடுதிச் செலவு என அனைத்தையும் அவர்களே ஏற்றுக் கொள்வார்கள். கண் நர்சிங் படிப்புடன் அங்கேயே பகுதி நேர வேலையும் பார்க்க வேண்டும். 5 வருடம் கட்டாயமாக அங்கே இருக்க வேண்டும். தமிழகத்தின் எந்தக் கிளையில் வேண்டுமானாலும் பணிக்குப் போடுவார்கள். மாதாமாதம் சின்னத் தொகை சிறப்பூதியமாக (stipend) உண்டு. 5 வருட நிறைவில் ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரும். சராசரி மத்திய வர்க்கத்திற்கு அது திருமணம் போன்ற செலவுகளுக்குப் போதுமானதாக இருக்கும். பெண்கள் மட்டும் படிக்கும்/பணிபுரியும் இடம் வேறு.

இத்தகைய சலுகைகள் ஏழை மாணவர்களுக்கு அவசியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் விடுதியில் இவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளைக் கேட்டால் கண்கள் பனிக்கின்றன.

Rule 1: யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது. 

Rule 2: ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அம்மா, அப்பாவிற்கு மட்டும் விடுதியின் லேண்ட்லைன் போனில் பேசிக் கொள்ளலாம்.

Rule 3: அம்மா, அப்பா மற்ற சொந்தங்கள் யாரும் மாணவியைத் தொடர்பு கொள்ள முடியாது. அவளாகப் அழைத்தால் தான் பேச முடியும்.

Rule 4: ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பா, அம்மா விடுதி சென்று பார்க்கலாம். அதிலும் காத்திருப்பு அறையில் இருந்துதான் பேசிக் கொள்ள வேண்டும். 

Rule 5: அம்மா கூட பெண்ணின் அறைக்குச் சென்று பார்க்க முடியாது.

Rule 6: அம்மா உடன் இருந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்ணை வெளியே அழைத்துப் போகலாம்.

Rule 7: நினைத்த நேரத்தில் வீட்டுக்கு வர முடியாது. ஆண்டிற்கு 15 நாட்கள் விடுப்பு. (தீபாவளி, பொங்கல் இப்படி...) அந்தக் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வீட்டிற்குச் செல்ல முடியும்.

Rule 8: அம்மாவோ, அப்பாவோ யாராவது வந்து தான் அழைத்துச் செல்ல முடியும்.

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்திற்கும் நிர்வாகம் சொல்லும் ஒரே ஒரு காரணம்: 'பெண்கள் பாதுகாப்பு'

இதன் பெயர் பாதுகாப்பா? அடிமைத்தனமா?

செல்போன் வைத்துக் கொள்ள முடியாது. நினைத்த நேரத்தில் பெண்ணுடன் பேச முடியாது. அவளாகப் பேசினால் தான் பேச முடியும். அதுவும் நிர்பந்திக்கப்பட்ட நிமிடங்கள். எவ்வளவு கொடுமை இது? ஆத்திர அவசரமென்றால் என்ன செய்வார்கள்? இங்கு கல்வி என்ற பெயரில் பெற்றோர்களிடமிருந்து பிரித்தல்லவா வைத்திருக்கிறார்கள்!

இந்தக் 'கால்'(call) கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் அபத்தோபத்தம். போன் பேசினால் காதல் வயப்பட்டு விடுவார்களாம். இதென்ன கொடுமை? 17 வயதான பெண்ணிற்கு எது சரி தவறு என்று தெரியாதா? கல்லூரி படிக்கும் பெண்ணின் மன முதிர்ச்சியின் மேல் இப்படியொரு சந்தேகமா? அப்படியே காதலித்தால் தான் என்ன தவறு? ஒரு பெண் தன் மனத்திற்குப் பிடித்தவனை விரும்புவது எந்த விதத்தில் தவறாகும்? இது அவள் தனியுரிமைகள். இதில் தலையிட அரசாங்கத்திற்கே அதிகாரம் இல்லையெனும் போது நிர்வாகத்திற்கு ஏது? பெண்ணென்பவள் அதே உணர்வில் திரிபவள் என்ற எண்ணமா? அதைத் தாண்டி செல்போனில் செய்வதற்கு எதுவுமே இல்லையா? அவள் கனவுகளும் வேட்கைகளும் இங்குமே பாலியல் ரீதியில் தான் பார்க்கப்படுகிறது என்பது எப்பேர்ப்பட்ட அடக்குமுறை!

16 வருடமாய் பெற்றோர்களின் செல்லமாய் இருந்துவிட்டு, திடீரென்று வாழ்ந்த சூழல்களை மறந்து இன்னொரு இடத்தில் படிப்பது/வேலை செய்வது என்பது நடைமுறைச் சவால் தான். மனம் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். பெற்றோர்களை நினைத்த நேரத்தில் பார்க்கத்தான் முடியாது. பேசிவிட்டுப் போகட்டுமே! இதில் நிர்வாகத்திற்கு என்ன வயிற்றெரிச்சல்?!

அது விடுதியா? இல்லை சிறைச்சாலையா? விடுதிக்கு வெளியே அப்பா, அம்மா இல்லாமல் தனியாகப் போக முடியாது. பின் எப்படி எதிர்கொள்வது இந்தச் சமுதாயத்தை? திருமணத்திற்கு முன்பு வரை பெற்றோர்களைச் சார்ந்து, அதன் பின் கணவனைச் சார்ந்து வாழ நிர்பந்திக்கப்படுகிறாள். பின்பு எதற்கு இவ்வளவு படிப்பு! எப்படி வரும் சொந்த சிந்தனைகள்! பெற்றோரோ, கணவனோ சரியாக அமையாத பெண்ணின் கதி என்னவாக இருக்கும்? அவள் படித்த கல்விச்சூழல் இப்படியானதாக இருக்கும் போது தைரியமான மனோநிலைக்கு அவளால் வர முடியுமா? ஏழைகள் என்பதால் இவ்வளவு கட்டுப்பாடுகளா? இல்லை பெண் என்பதால் இப்படியா? அவள் இளமைக்கால மகிழ்ச்சிகளை இந்த அடக்குமுறைகள் தின்பது உரிமைமீறல் அல்லவா?

பாதுகாப்பு என்ற போர்வைக்குள் இங்கே நடப்பது அனைத்தும் பெண்கள் மீதான அப்பட்டமான அடக்குமுறைகள். இந்தக் கல்லூரி என்றில்லை, பெரும்பாலான கல்லூரி விடுதிகளின் கதி இது தான். இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறோம் நாம்?

உயரப் பறக்கும் போது தவறி விழுந்தால் அடிபடும். தடுமாறாமல் பறப்பது எப்படி, தடுமாறும் போது சமாளிப்பது எப்படி என்று கற்றுத் தருவதன் பெயர் தான் பாதுகாப்பு. மாறாக, சிறகுகளை முறிப்பது சரியான செயலா?

இங்கே முடக்கப்படுவது பட்டாம்பூச்சியின் சிறகுகள் அல்ல. குருவிகள் கூடு கட்டிக் குடியிருக்கும் மரத்தின் ஆணிவேர். அதன் பெயர் சமுதாயம்!

(முற்றும்)

Tuesday 3 September 2013

இரத்தத்தின் இரத்தங்கள்


தமிழ் சினிமாக்களில் நாம் அதிகம் கண்டிருப்போம். காதலையோ, குடும்பத்தினர் மேலுள்ள பாசத்தையோ பெரிதாகக் காட்ட வேண்டிய சூழல்கள், சத்தியம் செய்பவர்கள், நம்பிக்கை ஏற்படுத்த முனையும் முயற்சிகள் எல்லாம் கையை அறுத்து இரத்தத்தை முன்னிலைப்படுத்தியே இருக்கும். ஏன் இரத்தம் அத்தனை சிறப்புப் பெற்றது?

இரத்தம் புனிதமானது. காரணம் அது கடவுளைப் போல. நல்லவனுக்கும் கெட்டவனுக்கும், பணக்காரனுக்கும், ஏழைக்கும் ஒரே நிறம், ஒரே குணம். மருத்துவ மொழியில், ஆரோக்யமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. இரத்தத்தில் 3 விதமான செல்கள் இணைந்திருக்கும். அவை 1. இரத்த சிவப்பணுக்கள் 2. இரத்தத்தட்டுகள் 3.சிவப்பணுக்கள்

இரத்த சிவப்பணுக்கள், நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பாகங்களுக்குக் கொண்டு செல்லவும், கார்பன்-டை-ஆக்ஸைடை மீண்டும் நுரையீரலுக்குக் கொண்டு வரவும் செய்கின்றன. இரத்தத்தட்டுகள் மற்றும் பிளாஸ்மாக்கள் இரத்தத்தை உறைய வைப்பதில் பங்கு வகிக்கின்றன.

இரத்த வகைகள்:

இரத்தத்தில் 4 வகைகள் உண்டு. அவை A, B, O, AB. இதிலும் உபபிரிவாக A+, A-, B+, B-, O+, O-, AB+, AB- எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரத்த வகைக்கும் அதே பிரிவைச் சேர்ந்த இரத்த வகையே பொருந்தும். இதில் O மற்றும் AB சற்றே வித்தியாசமுடையது. O பிரிவு இரத்த வகை அனைத்துப் பிரிவுகளுக்கும் பொருந்தும். அதாவது எந்த இரத்தவகையைக் கொண்டவர்களுக்கும் இந்த வகை இரத்தத்தை ஏற்றலாம்(Universal Donors). AB பிரிவு இரத்தவகை எல்லாப் பிரிவுகளையும் ஏற்றுக் கொள்ளும்(Universal Acceptors).

ஏன் இரத்ததானம் அவசியம்?

  • அறுவைச் சிகிச்சையின் போதுவிபத்தின் போது அல்லது புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்ய இரத்த தானம் அவசியப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் நம் தேசத்தின் மொத்த இரத்தத் தேவை அளவு 4 கோடி யூனிட்கள்.(1 யூனிட் = 450ml) ஆனால் நமக்குக் கிடைக்கும் இரத்த அளவு வெறும் 40 லட்சம் யூனிட்கள்.
  • ஒவ்வொரு 2 வினாடிக்கும் யாரோ ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
  • ஒவ்வொரு நாளும் 38000 தானம் செய்பவர்கள் தேவைப்படுகிறார்கள்.
  • 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒருவர் 350-450மி.லி இரத்தம் தானம் செய்யலாம்.

தானம் செய்வதற்கான தகுதிகள்:

  • தானம் செய்பவர்களின் வயது 18லிருந்து 60க்குள் இருக்க வேண்டும்.
  • அவர்கள் உடல் எடை குறைந்த பட்சம் 45ஆக இருக்க வேண்டும்.
  • இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபினின் எண்ணிக்கை 12.5க்கு குறையாமல் இருக்க வேண்டியது அவசியம்.
  • ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்யலாம்.

யாரெல்லாம் இரத்த தானம் அளிக்க முடியாது?

  • எய்ட்ஸ், பாலியல் நோய், இரத்தப் புற்று நோய், மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் அளிக்க முடியாது.
  • மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 6 மாதங்கள் வரையிலும், மலேரியா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 3 மாதங்கள் வரையிலும் தானம் பண்ண முடியாது.
  • பெண்கள் கருவுற்றிருக்கும் போதும், மாதவிடாய்க் காலத்திலும், தாய்ப்பாலூட்டும் காலங்களிலும் ரத்த தானம் அளிக்க முடியாது.


எங்கே? எப்படி?

அரசு மருத்துவமனைகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இரத்த வங்கிகள் செயல்படுகின்றன. அவை இரத்தத்தை தானம் பெறுவதோடு சேமித்து வைக்கவும் செய்கின்றன. இது போக, தனியார்த் தொண்டு நிறுவனங்கள் சிலவும் இந்தப் பணியினைச் சமூக சேவையாகச் செய்கின்றன. இரத்த தான விழிப்புணர்வுக்காக நடமாடும் இரத்த சேமிப்பு ஊர்திகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தானம் பெறப்பட்ட இரத்தத்தின் சேமிப்புக்காலம்?

இவ்வாறு தானம் பெறப்பட்ட இரத்தம் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகிறது.

ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

  • தூய இரத்தம் (Whole blood)--35 நாட்கள்
  • இரத்தச் சிகப்பணு (Packed Red cells)--42 நாட்கள்
  • இரத்தத் தட்டுக்கள் (Platelets)--5 நாட்கள்
  • பிளாஸ்மா (Plasma)--1 வருடம்

ஒரு வாரத்திற்கு முன் நியூசிலாந்தில் ஒரு சம்பவம். எலித்தொல்லைக்காக வைத்திருந்த மயக்க மருந்தை தின்று விட்ட கிம் எட்வர்ட்ஸ் என்பவரின் செல்லப்பூனை ‘ரோரி’ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் அவரது தோழி மிச்சேல் விட்மோர் என்பவரின் நாயான ‘மேக்கி’யின் இரத்தம் ‘ரோரி’க்குச் செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டது.

எதிரி விலங்குகளான, வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த நாய், பூனைக்கு ரத்த தானம் செய்கிறது. ஒரே இனத்தைச் சேர்ந்த, ‘யாவரும் கேளிர்’ என வாழும் மனிதனுக்கு மனிதன் எப்போது செய்யப் போகிறோம்?

‘தனக்குப் போகத் தான் தானமும் தர்மமும்’ என்பது இந்தக் காலத்திற்கு சரி வராது. தனக்குப் போக, மற்றவனுக்காகவும் வேண்டும் (இரத்த)தானமும் தர்மமும் என்று புதிய மொழி படைப்போம். சக உயிர் காப்போம்.


தகவலுக்கு: ஜூன்14 – சர்வதேச இரத்த தான நாள்

(முற்றும்)

Monday 2 September 2013

நான்காம் வகை ஆசிரியர்கள்

அரசுப்பள்ளியில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்கள் கீழ் மத்திய வகுப்பைச் சார்ந்தவர்கள்.அவர்கள் பெற்றோர்களும் கல்வியில் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முடிவதில்லை. அதனால் இயல்பாகவே அவர்களுக்கு கல்வியில் சறுக்கல்களோ, சரியான புரிந்துணர்தல்களோ கிடைப்பதில்லை.அதையெல்லாம் சரி செய்யும் பொறுப்பு தனியார் பள்ளி ஆசிரியர்களை விட, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகம்.ஆனால் சில ஆசிரியர்கள் அதையெல்லாம் உணரவே இல்லை என்பது கசப்பான உண்மை. அரசாங்க வேலை, நல்ல சம்பளம், சமுதாயத்தில் மரியாதை-இவற்றுடன் திருப்திப்பட்டு விடுகிறார்களோ என்ற வினா எழுகிறது.

நான் பார்த்தது வரையில் ஆசிரியர்கள் 4 வகை.முதல் வகை:அனைத்து மாணவர்கள் மீதும் ஒரே அக்கறையுடன் இருப்பவர்கள்.மாணவர்களின் வளர்ச்சிக்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்பவர்கள்.இரண்டாம் வகை:குறையேதும் சொல்ல முடியாமல் அவரவர் கடமைகளைச் சரியாகச் செய்பவர்கள்.மூன்றாம் வகை:எதையும் கண்டுகொள்ளாதவர்கள்.சம்பளம் வந்தால் சரி என்றிருக்கும் பேர்வழிகள்.இவர்களைக் கூட விட்டுவிடலாம்.மாணவர்கள் வாழ்க்கையில் அப்படி ஒன்றும் பேரிடர்களைப் பண்ணிவிட மாட்டார்கள்.ஆனால் அந்த நான்காம் வகை ஆசிரியர்கள் இருக்கிறார்களே, மாணவர்களை discourage பண்ணுபவர்கள்.பெர்சனலாகப் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்தாலும் குற்றம் காண்பவர்கள்.அதிகாரத்தைத் தவறாகவும் கடுமையாகவும் பயன்படுத்துபவர்கள்.சொந்த விருப்பு வெறுப்புகளை வகுப்பறையில் திணிப்பவர்கள்.இவர்கள் எல்லாம் ஒரே வகை-அபாய வகை.நான்காம் ஆசிரியர்களின் சதவீதம் குறைவாகவே இருக்கும்.ஆனால் நிறைய மாணவர்களுக்கு நிச்சயம் இந்த மாதிரி ஆசிரியர்களுடனான அனுபவம் இருக்கும். 

யாரையோ எதற்குச் சொல்ல வேண்டும், எனக்கே இப்படி ஒரு அனுபவம் இருந்தது எங்கள் பள்ளியில்.அந்த ஆசிரியருக்கு மெடிக்கல் படிப்பதில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது.உடனடியாகச் சம்பாதிக்கும் தொழில் இல்லையென்று எப்பவுமே சொல்வார்.ஒரு முறை 12-ஆம் வகுப்பில் அனைவரையும் என்ன படிப்பதில் ஆர்வம் என்று சொல்லச்சொன்னார்.என் முறை வந்த போது 'மெடிக்கல்' என்று சொன்னேன்.'அதெல்லாம் வேஸ்ட்.உக்காரு' என்று கூறிவிட்டார்..அதைக் கூட பெரிதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.'ஹால் டிக்கெட்' வாங்குவதற்கு பள்ளிக்குச் சென்றிருந்த போது அப்போதும் அதே கேள்வி.என் அதே பதில்.கடுப்பாகிவிட்டார் மனிதர்.என்னை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்துவிட்டார்.மெடிக்கல் வேஸ்ட் என்று.நான் என் கோணத்தினைச் சொன்னேன்.(அவரிடம் பணிவு தான் காட்ட முடியும்.அடிமையா பட முடியும்)அவரால் அவர் கருத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.தாக்குதல் வேறு மாதிரியாகத் தொடர்ந்தது.அப்போது நான் 2 அல்லது 3 -ஆம் ரேங்க் வாங்குவேன்.முதல் ரேங்க் வாங்கும் என் நண்பனை(அவன் engineering என்று அன்று சொன்னவன்.அதனால் அவன் மேல் இவருக்கு ஒரு பிரியம்) முந்துவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும்.அதைச் சொல்லி அவர் discourage பண்ண ஆரம்பித்து விட்டார்.'அவனையே உன்னால் முந்த முடியவில்லை.மெடிக்கல்ல சீட்டு கிடைக்கணும்னா எவ்வளவு போட்டி இருக்கும் தெரியுமா, உன்னால அதெல்லாம் முடியுமா?புத்திசாலித்தனமா யோசிச்சுக்கோ!பேசாம பொறியியல் படி.அதான் உன் குடும்பத்துக்குச் சரி'-என்றாரே பார்க்கலாம், எனக்குத் தூக்கிவாரிப் போட்டு விட்டது.பரிட்சைக்குச் செல்லும் முன் தன் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் பேசும் பேச்சா இது?என் நிலைமை எப்படி இருந்திருக்கும்?!

அவர் சாபம் விட்டதுபோல் என்னால் மெடிக்கல் படிக்க முடியவில்லை.பொறியியல் தான் படித்தேன்.அவரால் தான் என்று சொல்லவில்லை.என் மேல் கூடத் தவறு இருந்திருக்கலாம்.என் உழைப்பு குறைவாக இருந்திருக்கலாம்.ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் என் தைரியத்தையும், ஆர்வத்தையும் அசைத்துப் பார்த்து விட்டது.அதுவும் கூட ஒரு காரணம்தான் நான் இழந்ததுக்கு.அந்தச் சம்பவம் நடந்து 7 வருடம் ஆகிவிட்டது.ஆனால் அது மனதில் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.அந்த முதல் ரேங்க் நண்பன் இன்னும் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவன்.அந்த ஆசிரியரை மட்டும் என்னால் இன்னும் மன்னிக்கவே முடியவில்லை.விளைவு-அதன் பின் என் பள்ளியில் நிறைவாக நான் செல்லவே முடியவில்லை.என் தொடக்கப்பள்ளியை நான் நேசிக்கும் அளவுக்கு, இலகுவாக செல்லும் அளவுக்கு அந்தப் பள்ளிக்குச் செல்லவே மனம் தடுக்கிறது.ஒரு பள்ளியையே பிடிக்காமல் செய்து விடும் வல்லமை அவர் வார்த்தைகளுக்கு இருந்தது என் 'கட்டக் கோளாறு' என்றுதான் சொல்ல வேண்டும்.வேறு என்ன சொல்வது?

என் வாழ்வில் இந்த மாதிரி ஆசிரியர்கள் ஒரு புறமென்றால் இன்னொரு புறம், 12 ஆரம்பம் முதல் பார்த்துப் பார்த்து செதுக்கி எனக்காகவே அவர் சொந்த வேலைகளைக்கூடத் தள்ளிவைத்து படிப்பும், ஊக்கமும் கொடுத்த என் வேதியியல் ஆசிரியர், கணித ஆசிரியர் ஒரு புறம்.

எல்லா ஆசிரியர்களும் நான்காம் வகை இல்லை.நான்காம் வகை ஆசிரியர்கள் இல்லாத எந்தப் பள்ளியும் இல்லை.

(21.02.2013 புதிய தலைமுறை இதழ் பெண்கள் டைரி பகுதிக்காக எழுதியது)

படிப்பதால் மட்டுமே எதையும் கற்றுக் கொள்ள முடியாது

எங்கள் பள்ளியின் சாரணிய(Guide) இயக்கத்தில் எனது எட்டாம் வகுப்பிலிருந்து உறுப்பினராய் இருந்தேன். அதன் பொறுப்பாசிரியை திருமதி.குருமணி. எங்கள் சாரணிய இயக்கம் முன்நின்று சில பொதுச் சேவைகளில் ஈடுபட்டிருக்கிறோம். இரண்டு வருடம் எந்தப் பிரச்சனையுமின்றிப் போய்க் கொண்டிருந்தது. 

10-ஆம் வகுப்பு வந்ததும் இயக்கத்தில் ஆர்வம் குறைந்தது.  '10ஆம் வகுப்பு...கவனமா படிக்கணும்..இதில் மார்க் கம்மியானா அவ்ளோ தான்..' - என்ற பயமுறுத்தல்கள், 'நீ தான் இந்த குடும்பத்தைத் தாங்க வந்த குத்துவிளக்கு' என்ற ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு வித கிலியை மனதிற்குள் எற்படுத்தியிருந்தது அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். கேம்ப், மீட்டிங் என்று சில முக்கிய வகுப்புகளைக் கட் அடிப்பது போல் சூழ்நிலை அடிக்கடி ஏற்பட்டது. 

அதனால் ஒரு முடிவெடுத்தவளாக அடுத்த மீட்டிங்கில்  'இனி நான் இயக்கத்திற்கு வரப் போவதில்லை' என்று டீச்சரிடம் சொல்லி விட்டேன். ஆர்வமாய் இருக்கும் பெண் தானே, ஏன் திடீர் விலகல் என்ற கேள்விக்கு எனது பதில்: 'படிப்பு பாழ்படுகிறது. சில முக்கிய வகுப்புகளை கட் அடிப்பது பிடிக்கவில்லை' என்ற எனது துணிந்த பதில் அவரைக் கோபப்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன். நிறைய அறிவுரைகள் சொன்னார். 'படிப்பு தான் வாழ்க்கை. அதில் தான் ஒட்டுமொத்த முன்னேற்றமும்' என்று நான் திடமாய் நம்பியிருந்த காலம் அது என்பதால் அவர் சொன்னது எதுவும் காதுகளைத் தாண்டி மனதைத் தட்டவில்லை. அதன் பிறகு மீட்டிங்குக்கு போகவேயில்லை. இந்தப் பிரச்சனையில் மேடம் சொன்ன கடைசி வார்த்தை: 'புத்தகப் புழுவாகவே இருந்தால் வாழ்க்கையில் எதையுமே கற்றுக் கொள்ள முடியாது' என்பது. அதையும் அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


பின்பு, கல்லூரியில் ஊழல் ஒழிப்பு இயக்கம், தமிழ் மன்றம், பெண்கள் தின நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு என்று சில இயக்கங்களுக்கு நான் பெண்கள் தரப்புத்  தலைவியாய் இருந்ததுண்டு. 'எதிலும் கொஞ்சம் வித்தியாசமாய்ப் பண்ணுவோம்' என்ற கும்பல் எங்களுடையது. 

வருடாவருடம் விடுதி தினத்தையொட்டி போட்டிகள் நடப்பது வழக்கம். அந்த முறை சாதாரணமாக கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி என்றில்லாமல் கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகள், செந்தமிழ்ப் போட்டிகள் என்று முயன்றிருந்தோம். அது மாணவிகள் மத்தியில் பலத்த வரவேற்பு  பெற்றிருந்தது.

அன்றைய ஆண்டு தமிழ் மன்ற விழாவில் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். விழா முடிந்து விடை பெறும்போது அப்துல் காதர் என்னை முதல்வர் அறையில் கூப்பிட்டு, 'சிறப்பாகப் பேசினாய். நல்ல சிந்தனைக்காரி' என்று பாராட்டினார். அப்பொழுது எங்கள் கல்லூரி முதல்வர் சொன்னார்: 'ஆமா சார். இந்தப் பொண்ணு எந்த ஈவண்ட் என்றாலும் நல்லா ஹேண்டில் பண்ணும். ஹாஸ்டல் டே-க்கு நடத்திய போட்டிகள், கான்செப்ட் எல்லாம் அத்தனை அருமை' என்றார். பெரியவர்கள் கூடியிருந்த அவையில் கிடைத்த அந்தப் பாராட்டு மனதிற்குப் புதுத் தெம்பைத் தந்தது. 

புதிதாக முயற்சிக்கும் ஆர்வம், தலைமைப் பண்பு இவையனைத்தையும் கற்றுத் தந்தது என் சாரணிய இயக்கம். குருமணி டீச்சர் இல்லாமல் அதெல்லாம் சாத்தியமேயில்லை. அன்றைக்கு நான் அவரிடம் பேசியது எவ்வளவு தவறு என்று அந்த நாளில் நான் உணர்ந்தேன்.

அதன் பிறகு ஒன்றிரண்டு தருணங்களில் டீச்சரைப் பார்த்தாலும் இது பற்றிப் பேச சரியான சூழ்நிலை அமையவில்லை. இன்றும் கூட மன்னிப்பு கேட்க மனம் நினைக்கிறது. 'எந்த முகத்தை வைத்துக் கொண்டு சந்திக்க' என்பது போன்ற ஒரு சில மனத்தடைகளும் இருக்கின்றன. அடுத்த முறை பார்க்கும் போது கண்டிப்பாக மன்னிப்புக் கேட்டு விட வேண்டும். 'அன்று எனக்குக் கிடைத்த அத்தனை பாராட்டுக்களும் உங்களுக்குத் தான் சமர்ப்பணம்' என்று ஒரு முறையாவது சொல்லிவிட வேண்டும்.

​பார்க்கலாம், அன்பு அகந்தையை வெல்லும் தினம் எப்போது வருமென்று?​

(30.05.2013 புதிய தலைமுறை இதழ் பெண்கள் டைரி பகுதிக்காக எழுதியது)

மறந்து போகும் மனிதாபிமானம்

அது என் கல்லூரி நாட்களின் பரபரப்பான காலை நேரங்களில் ஒன்று. நானும் என் தோழியும் திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்தோம். அப்பொழுது பத்து, பன்னிரண்டு வயதில், பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு, பள்ளிச் சீருடையில் ஒரு பையன் அருகில் வந்து நின்றான். 

தயங்கித் தயங்கிச்  சொன்னான்: 'அக்கா...பஸ்க்கு வச்சிருந்த காசைத் தொலைச்சுட்டேன். இன்னைக்குப் பரீட்சை. வீட்டுக்குப் போயி எடுத்துட்டு வர நேரமில்லை. சீக்கிரம் போகணும் ஸ்கூலுக்கு. பஸ்க்கு காசு தரேங்களா அக்கா?'

அந்தப் பையன் கேட்ட விதம் எங்கள் மனதைச் சங்கடப்படுத்தியது. திருநெல்வேலிப் பகுதியில் பிரபலமான ஒரு பள்ளியின் சீருடை அணிந்திருந்ததாலும், அது தேர்வுக்காலம் என்பதாலும் சந்தேகிக்காமல் பணத்தைக் கொடுத்து தேர்வுக்கு 'ஆல் தி பெஸ்ட்' சொல்லி அனுப்பி வைத்தோம்.

இரண்டு நாள் கழித்து என் மற்றுமொரு கல்லூரித் தோழியும் தனக்கும் இதே போல் அனுபவம் ஒன்று அன்றைக்கு நடந்ததாய்ச் சொன்னாள். ஆனால் அது திருநெல்வேலியின் வேறொரு பகுதி. வேறொரு பள்ளியின் சீருடை. மேலும் விசாரித்துப் பார்த்ததில், அவன் உடல் அடையாளங்களை வைத்து அதே பையன் தான் என்றறிந்தோம்.

அந்தப் பையன் மீது கோபத்தை விட, பரிதாபம்தான் மேலோங்கியது. ஏமாற்றுவதற்கு அவன் கையாண்ட உத்தி, அவன் சொன்ன பொய்யை மெய் போலக் காட்டிய கண்கள், வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசிய லாவகம் இவையெல்லாம் அவன் வயதுக்கு சற்று அதிகம். கல்வியின் பெயரில் ஏமாற்றச் சொல்லித் தந்தது யார்? எவ்வளவு தேவை இருந்திருந்தால் அப்படி நேர்த்தியாக நடித்திருக்க முடியும்? அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறானோ? என்ற கேள்விகள் மனதில் மொய்த்தன.

இது போன்று நாம் ஏமாறும் அனுபவங்கள், பல நேரங்களில் நம் மனிதாபிமானத்தை மறந்திருக்க நிர்பந்திப்பது என்னவோ உண்மைதான்.

(22.08.2013 புதிய தலைமுறை இதழ் பெண்கள் டைரி பகுதிக்காக எழுதியது)

Tuesday 20 August 2013

முள்வேலி







காலையிலிருந்து சங்கீதாவிற்கு நிலை கொள்ளவில்லை. எவ்வளவு முயன்றும் ஒன்றும் நடவாத கையாளாகாத்தனம், கோபமாய் வருத்தமாய் வெளிப்படுத்தியது போக மிச்சசொச்சம் பதற்றமாய் வழிந்து கொண்டிருந்தது.


இந்தாடி….இன்னும் இங்க என்ன பண்ணுறவ? பேசாம பள்ளிக்கூடத்துக்குப் போ! வம்பு தும்பு பண்ணாம கெளம்புடி’ – அம்மா அடுக்களையிலிருந்து சத்தம் போட்டாள்.


ம்….கெளம்பிட்டேன்த்தா’ – சைக்கிளை எடுத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாகப் பள்ளியை நோக்கி அழுத்தினாள்.


சங்கீதா மதுரைக்குப் பக்கத்தில் நெடுஞ்சாண்பட்டி எனும் கிராமத்தில் வசிக்கிறாள். தான் படிக்கும் 8-ஆம் வகுப்பிற்கு கிட்டப்பட்டிக்குச் செல்ல வேண்டும். நெடுஞ்சாண்பட்டியும் சரி, கிட்டப்பட்டியும் சரி, 1980-களில் தமிழ் சினிமாக்கள் காட்டிய அதே புழுதிக்காட்டு குக்கிராமம். கல்வியை விட கலவிக்குத்தான் பெண்என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் பிற்போக்குச் சமுதாயத்தை உள்ளடக்கியது. ஆண் குழந்தைகள் இல்லாத வீட்டுப்பெண்கள் 8 வரை இயல்பாகப் படிக்க முடிகிறது - இடையில் பெரிய மனுஷியாய் ஆகாமல் இருந்தால் அல்லது முறைமாமன்கள் இல்லாமல் பிறந்திருந்தால்.


இந்த வழக்கம் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருக்கிறது. மாற்றத்தின் கடைநிலை வரிசையில் சங்கீதா குடும்பம். அதை மறுக்கும் முதல்நிலை வரிசையில் பேச்சியம்மாள் குடும்பம். பேச்சி - சங்கீதாவின் நெருங்கிய தோழி. 'சத்துணவு'ப் பள்ளிக்கூடத்திலிருந்து பழக்கம். அவள் அதிர்ஷ்டக்கட்டை. 8 ஆம் வகுப்பில் குத்த வைத்தாள்.

சங்கீதா மணிபார்த்துக் கொண்டாள். 8.30 எனக் காட்டியது, 9 - 10.00 முகூர்த்தம். 'இந்நேரம் மாப்ள வீட்டுக்காரங்க வந்திருப்பாங்க. அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்து விடும்’ - நினைக்கும் போதே நெஞ்சை அடைத்தது சங்கீதாவிற்கு.


படிப்பையும் கனவையும் தவிர ஒரு சூதும் தெரியாத பெண் - பேச்சி. ஒரு மாதத்திற்கு முன்பு சங்கீதாவைத் தனியே அழைத்து, 'டி...இங்க பாரேன்...இப்டின்னா அப்டித் தான?' என்று கேட்கும் போது இருவருக்கும் தெரியவில்லை, அன்று அது அவள் கனவுகளின் அழிவுக்கால ஆரம்பம் என்று.


அதன் பிறகு பேச்சி பள்ளிக்கே வரவில்லை. 16 நாள் விசேஷத்திற்கு வரச் சொல்லிச் மூன்றாம் வகுப்பு முத்துவிடம் சொல்லி அனுப்பியிருந்தாள்.


இளம்பச்சையும் அரக்கு பார்டரும் கொண்ட ஜரிகை தூக்கலான சேலை, தலைநிறைய மல்லியும் கனகாம்பரமும், முகம் முழுக்க அரைத்துப் பூசிய மஞ்சளின் வனப்பு. பூஞ்சையான உடம்பு தான் என்றாலும் இன்று புதுப்பூவாய் நின்றிருந்தாள். கண்களில் மட்டும் அந்த மிரட்சி மிச்சமிருந்தது. என்னாயிற்று..சங்கீதாவுக்குப் புரியவில்லை.

'ஏடி பேச்சி...அழகழகா டிரஸ், மேக்கப்லாம் போட்டுட்டு ஏன்டி பிரமை புடிச்ச மாதிரி வெறிச்சு நிக்குற? கொஞ்சம் சிரியேன். உன் மாமன் மயங்கட்டுமே! வேண்டாம்ன்னா கெடக்கு' - விளையாட்டாய்த் தான் சொன்னாள் சங்கீதா.

கேட்டவளோ பொலபொலவென்று கண்ணீர் விட்டாள்.


'ஐயோ...ஏய்! எதுக்கு டி அழுவுற? சும்மா தான் சொன்னேன்...டி...எல்லாரும் பார்க்கப் போறாங்க..வேணாம்' - சமாதானப்படுத்த முயன்றாள்.

யாரும் அறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டே பேச்சி தொடர்ந்தாள். 'ஆமா டி.. மாமன் தான் மயங்கிட்டான். இன்னும் 15 நாள்ல எனக்கும் அதோ நிக்குறானே என் முறைமாமன் அவனுக்கும் கல்யாணமாம். இனிமேல் என்ன பள்ளீத்துக்கு வுட மாட்டாங்களாம். போச்சு டி எல்லாம் போச்சு...எவ்ளவோ கெஞ்சி பார்த்துட்டேன்..அழுது பார்த்துட்டேன்..கேக்க மாட்டேங்குறாங்கடி..எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல..செத்துடலாம் போல இருக்கு..நான் படிக்கணும்டி..படிச்சு பெரியாளா வரணும்..நான் படிக்கணும்...' - சொல்லிக் கொண்டிருக்கும் போதே குரல் உடைந்தது. அது இயலாமையின் இறுதி முனைப்பு.

'கல்யாணமா? 14 வயதிலா?' தூக்கி வாரிப் போட்டது சங்கீதாவுக்கு. இது ஒன்றும் இந்த ஊருக்குப் புதிதில்லை. ஆனால் சங்கீதாவுக்குப் புதிது. விபரம் தெரிந்தது முதல் பழகிய தோழிக்குத் திடீரென்று இப்படி ஒரு நிலை வந்தது புதிது. எப்படிப் படிக்கும் பெண்! இனி சமையல், பாத்திரம், குழந்தைகள், வீட்டு வேலை...சீ...நினைக்கும் போதே நெஞ்சம் கொதித்தது. பேச்சியின் அந்த அழகும் வனப்பும், இப்பொழுது பசித்திருக்கும் புலியின்முன் நிற்கும் மானின் செழுமையாகத் தெரிந்தது.

(நல்ல)நேரம் வந்து விட, அத்தைமார்கள் பேச்சியை அழைத்துச் சென்று விட்டனர்.

அவர்கள் பழகிய விதத்திலிருந்து, இனி அவளைப் பார்க்க அனுமதிப்பார்கள் என்று நம்புவதற்கில்லை.

'ஏதாவது செய்து என்னைப் காப்பாற்று' - கடைசிக் கெஞ்சலாக பேச்சி மேடையிலிருந்து சைகை காட்டினாள்.

நேரே வகுப்பாசிரியை சசிகலா வீட்டிற்குச் சென்று சங்கீதா விவரத்தைச் சொன்னாள்.

'நல்லாத் தெரியுமா? நிஜமாவே பேச்சிக்குச் சம்மதம் இல்லையா?' - ஆசிரியர்

'நெசந்தான் டீச்சர். அவ அழுதா என்கிட்ட'

'சரி அப்டின்னா நாளைக்கு ஹெச்.எம் கிட்டச் சொல்லி ஏதாவது பண்ணச் சொல்லுவோம்'

மறுநாள் தலைமையாசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது. அனைத்தும் விசாரித்த பிறகு சசிகலா டீச்சருடன் சாரும் சங்கீதாவை அழைத்துக் கொண்டு, பேச்சி பெற்றோர்களுடன் பேசுவதாய் முடிவாயிற்று.

உள்நுழையும் போது ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதை, இந்த விஷயம் என்றதும் குறையத் தொடங்கியது.

'இதோ பாருங்கம்மா..பேச்சி நல்லாப் படிக்கிற பொண்ணு. படிக்க வச்சா பெரிய ஆளா வருவா. பெரிய டாக்டரா வருவா.. கல்யாணம்ன்னு அந்தப் பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்துறாதீங்க ப்ளீஸ்' - கெஞ்சினார் ஹெச்.எம்

'யாருக்கோவா கொடுக்கிறோம்? என் தம்பிக்குத் தான்.. அதெல்லாம் நல்லாத் தான் இருப்பா' - பேச்சியின் அம்மா.

'இது படிக்குற வயசும்மா. இந்த வயசுல கல்யாணம் தேவையா? அவ 12 படிச்சு காலேஜ் எல்லாம் படிச்சு முடிச்ச பிறகு உங்க தம்பிக்கே கொடுங்க. இப்போ படிக்க வைங்க'

'இவ படிச்சு என்னத்த கிழிக்கப் போறா? இவ அப்பன் சொத்து சேர்த்து வச்சுட்டா மேலோகம் போனான்? இல்ல கடன் வாங்கிக் கழிக்குறதுக்கு அவன் தான் உசிரோட இருந்தானா? நாதியத்தவளா இருந்து நான் தானே வளர்ந்தேன். எனக்குத் தெரியாது என்ன பண்ணனும்னு?'

'இல்லம்மா..இது கல்யாணத்திற்கு சரியான வயசு இல்லை. எத்தனை குழந்தைகள் இந்த மாதிரி சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணினதால் குறைப் பிரசவம், கர்ப்பப்பைக் கோளாறுகள்ன்னு இறந்திருக்கு தெரியுமா? உங்க பொண்ணுக்கும் இந்த நிலை வரணுமா?' - சசிகலா டீச்சர் ஆத்திரமாகவே கேட்டார்.

'இந்தா..எங்க வந்து என்ன பேசிட்டு இருக்க? பொம்பளைன்னு பார்க்குறேன். இவ வயசுல நான் 3 புள்ள பெத்துப் போட்டேன். இவங்கப்பன் இருந்திருந்தா இன்னும் 3 பெத்துருப்பேன். கல்லு மாதிரி இன்னும் இல்ல நான்? செத்தா போயிட்டேன்' - டீச்சரைப் பிடித்து அடிக்காத குறையாக வெகுண்டெழுந்தாள் பேச்சியின் அம்மா.

'இல்ல அப்டிச் சொல்லல...எல்லாருக்கும் அந்தத் திடம் இருக்காது. முதல்ல கல்யாண வயசு வராத பெண்ணுக்குத் திருமணம் பண்ணி வைப்பது தப்பு. அதிலும் அவளுக்கு விருப்பமில்லை எனும் போது சட்டப்படி இது மிகப் பெரிய குற்றம்' - பொறுமையாகப் பிரச்சனையைக் கையாள எண்ணி உதிர்த்த வார்த்தைகளே பிரச்சனையாகின.

'யோவ் வாத்தி..என்னய்யா...எங்களையே ஜெயில்ல போடுவேன்னு சொல்ல வர்றயா? கம்ப்ளெயின்ட் குடுக்குறதுக்கு நீ மொத உசிரோட இருக்கணும். அந்த நம்பிக்கை இன்னும் இருக்கா உனக்கு? இந்தச் சிறுக்கி மவ தான் உன்னை இங்க கூட்டுட்டு வந்தாளா?' - சரமாரியாக ஆரம்பித்த பேச்சுகள் அநாகரீகமாகத் தொடர்ந்தன. கேட்கும் காதுகளே வெட்கிக் கூசுமளவு அருவெருப்பு வசையாடல்கள். அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை. மூவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பேச்சியின் கண்களில் இருந்த கடைசி நம்பிக்கையும் கண்ணீராய் சிதறி விழுந்தது.

கெஞ்சிக் கூத்தாடி இன்னுமொரு முயற்சி எடுக்கலாம் என்ற மனோ நிலைக்கு ஆசிரியரைக் கொண்டு வருவதற்கு, சங்கீதா தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருந்தது. அவள் பள்ளி டி.சியை பிறந்த தேதிக்கு அத்தாட்சியாய் வைத்து போலீஸில் புகார் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.

பள்ளிக்குச் சென்று பார்த்தால் அங்கே அலுவலகம் சூரையாடப்பட்டிருந்தது. பேச்சி குறித்த அத்தனை சான்றுகளும் முழுதாய் அழிக்கப்பட்டிருந்தன. ஒரு பெண்ணின் படிப்பை அழிக்க எத்தனை நாச வேளைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை நினைத்துக் கையறு நிலையை அடைந்தனர் ஆசிரியர்கள்.

'என்னா வாத்தி...கம்ப்ளைன்ட் குடுக்கப் போறியா? ...ஹா...ஹா...எத்த வச்சுக் குடுப்ப? ம்? பேச்சி உன் பள்ளிக்கொடத்துலையே படிக்கலையே? பின்ன எப்டி குடுப்ப? ...ஹா...ஹா..ஆளுங்கட்சி நம்மள்து..மறந்துடாதப்பு...வந்தோமா புள்ளைகளுக்குப் பாடம் சொன்னோமா சம்பளம் வாங்குனோமான்னு இரு..வீணா உன் வூட்டம்மாவை பென்ஷன் வாங்க வச்சிறாத..புரியுதா?..இந்தா கொடுக்கு...நீ அந்தக் காரியக்காரன் மக தானே? கரும்புக்காட்டு வழியா தான போவ? வாடி வா...கையக் கால ஒடிக்கிறேன்' - சைக்கிள் செயின் சவால் விட்டுப் போனது.

பொறுக்கித்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் முன்னால் ஒன்றும் செய்ய முடியாதது, நம் கடைநிலை மக்களுக்கு விதிக்கப்பட்ட சாபம். எண்ணிக் கொண்டே பள்ளி வகுப்பு ஆரம்ப மணி அடிப்பதற்கும் கல்யாணப் பந்தலில் மேளம் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

இறத்தல் என்பதும் இப்படித் தான் இருக்குமோ? அந்த வலி வலித்தது மனது. மாலையின் கனமோ இல்லை மனதின் கனமோ தெரியாது. கனம் தாளாமல் கால் இடறினாள். கூட்டம் கூட்டமாய் வந்து மணமகனுக்கு - பேச்சியின் கணவனுக்கு - கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். 'மனத்தைக் கழட்டி வைத்த பிணத்திற்குத் தாலி கட்டியவனுக்கு இவ்வளவு மரியாதையா? சீ' - பேச்சிக்கு அருவெருப்பாய் இருந்தது, அவனருகில் நிற்கும் அத்தனை நிமிடமும்.

வரக்கூடாது என்று அவள் தவித்துக் கொண்டிருந்த இரவு வந்தே விட்டது. அவள் என்ன நளாயினியா? சூரியனை உதிக்காதிருக்கச் செய்தது போல் அஸ்தமிக்காதிருக்கச் செய்வதற்கு?

வெ(ற்)றிப்புன்னகையோடு அவள் கணவன் - கனவுகளைக் கொன்றவன் - அறைக்குள் நுழைந்தான். தீக்குள் தெறித்த காகிதமாய் அவள் உள் ஒடுங்கினாள்.

'வாடி என் அக்கா மவளே! இன்னும் என்ன ஓட்டம்? அதான் தாலி கெட்டியாச்சே! இனி என்னை விட்டு ஒரு போக்கும் பொகலும் இல்ல உனக்கு..வா வா இப்டி பக்கத்துல'

'என்ன ரோசனை?' - உறுமினான். கையைப் பலம் கொண்டமட்டும் இழுத்து நெஞ்சில் பரப்பிக் கொண்டான்.

'என்ன சிணுங்குற?'

'இல்லை...இன்னும் 3 நாளைக்கு வேண்டாம்...ப்ளீஸ் விட்ருங்க...'

'ஏனாம்?'

'நாள் தோதில்ல'

'! ஒரு மாசம் ஆச்சோ?'

'ஆமா..ஆமா..இப்பத்தான்' - பதட்டத்துடன் வந்து விழுந்தன வார்த்தைகள்.

'பொய்யில்லையே?'

'இல்லை இல்லை..' - இதயம் தொண்டைக்குள் வந்து சிக்கிக் கொண்டு விட்ட உணர்வு அவளுக்கு.

தலையணை, போர்வையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

இப்பொழுது தான் இயல்பாக அவளால் மூச்சு விட முடிந்தது. 'கடவுளே... 3 இரவுகள் தப்பி விடலாம். நான்காம் இரவு?' - நினைக்கும் போதே படபடத்தது.

யோசித்தாள். அதிகம் யோசித்தாள். எது முக்கியம் என்னும் யோசனை மனம் முழுக்க எழுந்தது. அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். ஜன்னலுக்கு அந்தப்பக்கம் முள்வேலிக்குள்ளே அரளிச்செடி. நிலவொளியில் பறிக்கப்படாத அதன் பூ மின்னியது.

ஒரு முடிவுக்கு வந்தவளாக விளக்கை அணைத்து கட்டிலில் படுத்தாள். பல நாட்களாய் தூங்காமல் சேமித்து வைத்த அத்தனை உறக்கத்தையும் முழுக்கத் தீர்த்தாள்.

பொழுது விடிந்ததும் வீட்டிலிருந்தவர்கள் அறைக்கதவைத் தட்டத் தட்ட, அது திறக்கப்படவேயில்லை. அனைவரையும் பதற்றம் பற்றிக் கொண்டது. கதவை உடைத்து உள்சென்று பார்த்தால் அங்கே அவள் இல்லை. கொல்லைக்கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. அறைக்குள் இருந்த அவளது புத்தகப்பையைக் காணவில்லை.

அனைவரும் அசந்திருந்த அதிகாலைப் பொழுதில் பேச்சி வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள். சந்தைக்குப் போய்த் திரும்பிக் கொண்டிருந்த வெளியூர் மாட்டு வண்டி, அவளுடன் அவள் கனவுகளைச் சுமந்து முன்சென்று கொண்டிருந்தது. கழுத்தில் தொங்கிய தாலியைக் கழற்றி எறிய முற்பட்டாள். ஏதோவொன்று தடுத்தது. செண்டிமெண்டா? இல்லையில்லை...எதன் காரணமாகப் படிப்பை இழந்தாளோ அதையே முதலாக வைத்துப் படிப்பைத் தொடர்ந்தால் என்ன? 5 பவுன் தங்கம் நிச்சயம் படிக்க வைக்கும். ஒரு புதிய பாதை அவள் வழியில் விரவிக் கிடந்தது.

கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்த்தாள். அந்த முள்வேலி அப்பவும் தெரிந்தது.

முள்வேலிகள் வெளியிலிருந்து யாரும் மலர் பறித்து விடக் கூடாது என்பற்காக மட்டுமல்ல. உள்ளிருந்து மலரும், விடுதலை வேண்டி பயணித்து விடக் கூடாது என்பதற்காகவே. வேலியைத் தாண்டிய மலர்கள் வாழ்வதும் நசிவதும் அந்தந்த மலரின் சாமர்த்தியமே!



(முற்றும்)