Monday 2 September 2013

மறந்து போகும் மனிதாபிமானம்

அது என் கல்லூரி நாட்களின் பரபரப்பான காலை நேரங்களில் ஒன்று. நானும் என் தோழியும் திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்தோம். அப்பொழுது பத்து, பன்னிரண்டு வயதில், பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு, பள்ளிச் சீருடையில் ஒரு பையன் அருகில் வந்து நின்றான். 

தயங்கித் தயங்கிச்  சொன்னான்: 'அக்கா...பஸ்க்கு வச்சிருந்த காசைத் தொலைச்சுட்டேன். இன்னைக்குப் பரீட்சை. வீட்டுக்குப் போயி எடுத்துட்டு வர நேரமில்லை. சீக்கிரம் போகணும் ஸ்கூலுக்கு. பஸ்க்கு காசு தரேங்களா அக்கா?'

அந்தப் பையன் கேட்ட விதம் எங்கள் மனதைச் சங்கடப்படுத்தியது. திருநெல்வேலிப் பகுதியில் பிரபலமான ஒரு பள்ளியின் சீருடை அணிந்திருந்ததாலும், அது தேர்வுக்காலம் என்பதாலும் சந்தேகிக்காமல் பணத்தைக் கொடுத்து தேர்வுக்கு 'ஆல் தி பெஸ்ட்' சொல்லி அனுப்பி வைத்தோம்.

இரண்டு நாள் கழித்து என் மற்றுமொரு கல்லூரித் தோழியும் தனக்கும் இதே போல் அனுபவம் ஒன்று அன்றைக்கு நடந்ததாய்ச் சொன்னாள். ஆனால் அது திருநெல்வேலியின் வேறொரு பகுதி. வேறொரு பள்ளியின் சீருடை. மேலும் விசாரித்துப் பார்த்ததில், அவன் உடல் அடையாளங்களை வைத்து அதே பையன் தான் என்றறிந்தோம்.

அந்தப் பையன் மீது கோபத்தை விட, பரிதாபம்தான் மேலோங்கியது. ஏமாற்றுவதற்கு அவன் கையாண்ட உத்தி, அவன் சொன்ன பொய்யை மெய் போலக் காட்டிய கண்கள், வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசிய லாவகம் இவையெல்லாம் அவன் வயதுக்கு சற்று அதிகம். கல்வியின் பெயரில் ஏமாற்றச் சொல்லித் தந்தது யார்? எவ்வளவு தேவை இருந்திருந்தால் அப்படி நேர்த்தியாக நடித்திருக்க முடியும்? அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறானோ? என்ற கேள்விகள் மனதில் மொய்த்தன.

இது போன்று நாம் ஏமாறும் அனுபவங்கள், பல நேரங்களில் நம் மனிதாபிமானத்தை மறந்திருக்க நிர்பந்திப்பது என்னவோ உண்மைதான்.

(22.08.2013 புதிய தலைமுறை இதழ் பெண்கள் டைரி பகுதிக்காக எழுதியது)

No comments:

Post a Comment