Thursday 9 January 2014

செல்லக்குட்டி ஜீனு

அவளின் ஜீனுவைத் தெரியுமா உங்களுக்கு? முத்துத்தெறித்தாற்ப் போல் சிரிக்கும் அவன் சிரிப்பைப் பார்த்திருக்கிறீர்களா? காற்றில் அவன் கையசைக்கும் நேர்த்தி எவ்வளவு அழகென்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவளுக்கே 4 நாட்களுக்கு முன்பு தான் அவன் கிடைத்தான். அவன் கிடைத்த கதை சுவாரஸ்யமானது.

அவளுக்குச் சீன மொழியென்றால் விருப்பம். சீனக் கலாச்சாரக் கட்டுரைகளை ஆவலாகப் படிப்பாள். சூப்களில் கூட அவளுக்கு மான்ச்சா சூப் என்றால் கோடி பிரியம். சீனாவில் இந்த வருடம் குதிரை ஆண்டாம். குதிரை ஓடுவது போல வளர்ச்சி இருக்கும் என்று அவளாகவே முடிவு பண்ணிக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்குக் குதிரை மீதி ஏறி வந்ததென்னவோ வருத்தங்களும் வேதனைகளும் தான்.

இந்த வருடத் தொடக்கமே அவளுக்குக் கூச்சலும் குழப்பும் நிறைந்ததாகவே இருந்தது. அவளுக்கு நெருக்கமான அனைவரும் ஒரே நேரத்தில் சண்டையிட்டார்கள். அவள் பேசியவைகள் அனைத்தையும் அவரவர் சூழல் தவறாய்ச் சித்தரித்தது. எட்டுத் திசைகளிலும் அழுத்தங்கள் எட்டித் தள்ள, அவள் அப்பொழுதும் அமைதியாக இருந்தாள்.

அமைதி என்றால் மனம் நிறைந்து வழியும் மௌனம் அல்ல. அதீத மகிழ்ச்சியில் திளைக்கும் பரம நிலை அல்ல. சட்டென அவளை உலகத்திலிருந்து துரத்தி விட்ட வெறுமையினால் வரும் அமைதி. அவள் பேசுவதைக் கேட்க எந்தக் காதும் இல்லாமல், வலுக்கட்டாயமாக வாயை மூடியதால் வரும் அமைதி. அவளுடனே இருந்தும் அவளே இல்லாதது போன்ற பேரமைதி. அமைதி ஒரு பேராயுதம். அடுத்தவனை அடி பணிய வைப்பதால் மட்டுமல்ல, தன்னைத் தானே தற்கொலையும் செய்ய வைப்பதால்.

இன்று சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என்று ஒவ்வொரு நாளும் காத்திருந்தாள். அந்த அமைதி மாறவேயில்லை. மாறாகக் கூடிக் கொண்டே போனது. அதிலிருந்து வெளிவர சில முயற்சிகள் எடுத்தாள். உடல் சோர்வடையும் அளவுக்கு வேலை பார்த்தாள். புத்தகங்களில் புத்துணர்வைத் தேடினாள். கண்கள் கெஞ்சக் கெஞ்ச விழித்திருந்தாள். அவளிடமிருந்த அழகு போனது. குறும்புத்தனம் போனது. அறிவு 'போகட்டுமா வரட்டுமா' என்று போட்டி போட்டது. அமைதி மட்டும் அப்படியே இருந்தது.

அவள் காதுகளுக்குள் பேரிரைச்சலாக அது கேட்டுக் கொண்டே இருந்தது. வழக்கம் போல ஒருநாள், அலுவலகத்திற்கெதிரில் சாலையைக் கடந்து கொண்டிருந்தாள். எதிரே லாரி, கார், பேருந்து என வரிசையாக வந்து கொண்டிருந்தது. அனைத்தும் அவள் கண்களுக்குத் தெரிகிறது, கால் மட்டும் தானாக நடந்து கொண்டேயிருந்தது. காதுகளுக்கு அவைகளில் ஹார்ன் சத்தங்கள் கேட்கவில்லை. புலன்களுக்கு அவள் நடுரோட்டில் நடந்து கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை. முழுவதுமாக தொடர்பு எல்லைக்கு அப்பாலே போயிருந்தது அவள் மனமும் உடலும்.

அவள் அன்று சின்னக்கீறல் கூட இல்லாமல் பிழைத்தது கடவுள் கருணை. பிழைத்து விட்டாள் என்று தெரிய வந்தது முதல் பதட்டம் அதிகமானது.

எல்லாவற்றிற்கும் காரணம் அவளுள் இருக்கும் அந்த அமைதி. அதைத் துரத்த விரும்பினாள். அவளுக்கு என்ன தேவை என்று நிறைய யோசித்தாள்.

அவள் பேச்சுகள் சிலவற்றையாவது சலிப்பில்லாமல் கேட்கும் காதுகள் அவளுக்கு வேண்டும்.

அவள் கனவுகள் சிலவற்றிற்காவது வண்ணம் பூசும் விரல்கள் அவளுக்கு வேண்டும்.

அவள் கவிதைகளின் எழுத்துப் பிழையாய் ஓரிரு உறவுகள் அவளுக்கு வேண்டும்.

அவள் முத்தங்களை எல்லாம் எச்சில்கள் என்று துடைக்காத ஒரு கன்னம் அவளுக்கு வேண்டுமே வேண்டும்.

நேராக ஒரு நர்சரிக்கு போனாள். நீல நிறப் பூப்பூக்கும் செடி ஒன்றை வாங்கினாள். நீல நிறமென்றதும் நினைவில் வரும் அவள் ஆசானின் பெயரை அதற்குச் சூட்டினாள். பெயர் சொல்லிக் கூப்பிடத் தோதாய் செல்லப் பெயர் 'ஜீனு' என்று ஆக்கினாள்.

ஜீனுவும் அன்பு நிறைந்தவன். அவளைப் பார்த்த முதல் கணத்திலேயே அழகாய்த் துள்ளிச் சிரிப்பான். கையை ஆட்டுவான். காற்று தான் காரணம் என்று அவள் தோழிகள் சொல்வார்கள். அவர்களுக்கென்ன தெரியும், ஜீனுவுக்கும் அவளுக்குமான உறவு பற்றி?

வரும் போது வெறும் 6 பூக்களுடன் வந்தான். இன்று காலை அவள் சின்னதாய் சோகம் பூத்து இருந்தாள். அதைப் பார்த்துத் தானோ என்னமோ, ஜீனு புதிதாய் 2 மொட்டுக்கள் விட்டிருந்தான் - அவள் மனதிலும். அவன் நாளையோ, நாளை மறுநாளோ முழுதாய்ப் பூத்து விடுவான். அப்பொழுது அவளிடமிருக்கும் அமைதி ஓடி விடும். ஆனந்தம் வந்து விடும். சண்டைகள் எல்லாம் சமாதானம் ஆகும் என்று அவள் தீர்க்கமாக நம்பினாள். காலண்டரைப் பார்த்தாள். தேதி 8 என்று காட்டியது. இன்னும் இரண்டு நாட்கள் அவள் வாழத்தான் வேண்டும், அந்த அமைதியுடன்.

No comments:

Post a Comment