Saturday 29 March 2014

ஔவை'யார்'?


நேத்து ஔவையார் பத்தி ஒரு கிசுகிசு சொல்றேன்னு சொன்னேன்ல? அது இது தான்.

நாலஞ்சு ஔவையார் இருந்தாங்கன்னு நமக்குத் தெரியும். சங்க கால ஔவையார், ஆத்திசூடி எழுதின ஔவையார், விநாயகர் அகவல் எழுதின ஔவையார் இப்படி இன்னும் 2 பேர்.

ஆனால் "ஔவையார்"ன்னு மனசுல நெனச்சதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்?

Of course, நரைத் தலையும், கையில் ஒரு குச்சியும், வெள்ளைச் சேலையும், ஓலைச் சுவடியும்..கிட்டத்தட்ட கே.பி.சுந்தராம்பாள் திருவிளையாடல் படத்தில் வந்தது போல ஒரு கேரக்டர் தானே ஞாபகத்துக்கு வரும்?

ஆனால் நம்ம சங்ககாலத்து ஔவையார் பாட்டி இல்ல. ஷி இஸ் எ பியூட்டி.

எப்டி சொல்றேன்னு கேக்குறீங்களா? எவிடன்ஸ் வச்சுருக்கேன்.

புறநானூற்றின் 89-ஆவது பாடலை அதுக்கு நாம பார்க்கணும்.


'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,

மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி!

பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என,

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!

எறி கோல் அஞ்சா அரவின் அன்ன

சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று,

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை

வளி பொரு தெண் கண் கேட்பின்,

'அது போர்' என்னும் என்னையும் உளனே'



பொருள்: 

“மணிகள் கோத்த அணிகள் விளங்கும் (உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?” என்று என்னைக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே! எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, “அது போர்ப்பறையின் முழக்கம்!” என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.

இங்க நாம கவனிக்க வேண்டியது, 'விறலி' என்ற வார்த்தையை. விறலி என்றால் 16 வயதுப் பெண் என்று அர்த்தம்.

எதிரி நாட்டு மன்னன் ஔவையாரை 'விறலி'ன்னு கூப்ட்ருக்கான். அதனால அவங்க அப்போ "16 வயதினிலே"வாக இருந்துருக்காங்க.

ஆனா பாருங்க, அந்த வயதில் அவங்க எதிரி நாட்டுக்குத் தூது போகும் அளவுக்கு வெளியுலக அறிவும் கவிதைப் புலமையும் கொண்டவங்களா இருந்துருக்காங்க. நாமள்லாம் 16 வயதில் என்ன பண்ணினோம்? பஞ்சு மிட்டாய் தான் சாப்ட்டுட்டு இருந்துருப்போம்.

இதனால சகலமானவருக்கும் சொல்ல வர்றது என்னன்னா, இனிமே ஔவையாரை நினைக்கும் போது, நோ நரை, நோ வெள்ளைச் சேலை. அழகா ரெட்டை ஜடை, கை நிறைய வளையல், தலை நிறைய மல்லிகைப்பூ, கலக்கல் தாவணி என்று நினைத்துக் கொள்ளுமாறு சங்கம் கட்டளையிடுகிறது.

நாளைக்கு வேற கிசுகிசு சொல்றேன். அதுவரைக்கும் விளம்பர இடைவேளை.

# கிசுகிசு கீதா

No comments:

Post a Comment