Sunday 16 March 2014

குறுந்தொகை...(4)

பாடல் - 5

நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே

- பதுமனார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப் பாடல். பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைவனது பிரிவை ஆற்றாதவளாகிய தலைவி தன் தோழிக்குச் சொல்லியது.

பொருள்:

செறிந்த இருள் நிறைந்ததாக இந்த இடையிரவு இருக்கிறது. மனிதர்கள் பேசுதலை ஒழித்து இனிமையாகத் தூங்குகின்றனர். அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் வெறுப்பின்றித் தூங்குகின்றன. யான் ஒருத்தியே நிச்சயமாகத் தூங்காமல் இருக்கிறேன்.

நள் - செறிவு

யாமம் - இடையிரவு

மாக்கள் - மக்கள்

முனிவு -  வெறுப்பு/வருத்தம் (முனிவர்கள் என்று எப்படிப் பேர் வந்ததோ?)

நனந்தலை - அகன்ற இடம்

இங்கு மாக்கள் என்பதற்கு மக்கள் என்றும் பகுத்தறிவில்லாதோர் என்றும் பொருள் உள்ளது.

பகுத்தறிவில்லாதோர் என்ற பொருளில் கூட இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கலாம் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

அது சரியென்று தான் தோன்றுகிறது. பொதுவாக எல்லோரும் தூங்கும் போது, நமக்கு மட்டும் தூக்கம் வராவிட்டால் பயங்கர கடுப்பாக இருக்கும். எனக்கெல்லாம் அப்படித் தான். தூக்கம் வராத இரவுகளில் பக்கத்து பெட்டில் தூங்கும் வைஷ்ணவியை எழுப்பி விடணும் போல குறுகுறுப்பாக இருக்கும். 'அடிப்பாவி, இப்டி தூங்குறயேடி!' என்று தோணும்.

அது போல, தலைவிக்கும் தோணுது போல! "நான் ஒருத்தி இங்கு தலைவன் பிரிவால் தூங்காமல் கிடக்கிறேன். உங்களுக்கு என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு? முட்டாப்பயலுக! உலகம் முழுக்க முட்டாப்பயலுக!" என்கிறாள்.

பாடல் - 6:

வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர்தாமே-ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே.

- பெரும்பதுமனார்

பாடலின் களம்:
 
பாலைத்திணைப் பாடல். தலைவனும் தலைவியும் உடன்போக்கு (உடன்போக்குன்னா ஓடிப் போறது) போன போது, எதிரில் வந்தவர்கள் இவர்களைப் பார்த்து இரக்கப்பட்டுக் கூறியது.

விளக்கம்:

ஆரியக்கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் போது கொட்டப்படும் பறையைப் போல, மேல் காற்றின் தாக்குதலால் நிலை கலங்கி, வாகை மரத்தின் வெள்ளிய முதிர்ந்த காய்கள், மூங்கில் நிறைந்த பாலை நிலப்பரப்பில் சத்தத்துடன் விழுந்து கிடக்கிறது. அதில் வில்லை உடையவனாகியவனும் வீரக் கழல்கள் அணிந்தவனுமான தலைவனும், தோள் வளையணிந்த மெல்லிய அடிகள் கொண்ட சிலம்பு அணிந்த தலைவியும் செல்கிறார்கள். அவர்களைக் கடந்து செல்ல வருபவர்கள் அவர்களின் முகங்களின் பாவத்தாலும் தலைவி காலில் சிலம்பு இருப்பதாலும் அவர்களுக்கு இன்னும் மணமாகவில்லை என்று அறிந்து இந்தப் பாலை நிலத்தில் கடந்து செல்லும் அவர்களின் கஷ்டத்தினால் 'இந்த நல்லோர்கள் யாரோ? இரங்கத்தக்கவர்கள்' என்கிறார்கள்.

(ஹ்ம். உடன்போக்கும் அந்தக் காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. அப்படிப் போனவர்களைப் பார்த்து அவர்களுக்காக இரக்கமெல்லாம் கொள்கிறார்கள். இந்தக் காலத்தில் அது கூட அரசியலாகத் தான் ஆகிறது)

அதெப்படி தலைவி காலில் உள்ள சிலம்பை வைத்து அவர்களுக்கு மணமாகவில்லை என்று கண்டுபிடித்தார்களாம்? குட் கொஸ்டின். அதற்குப் பதில் இருக்கிறது.

அந்தக் காலத்தில் 'சிலம்பு கழி நோன்பு' என்றொரு சடங்கு இருந்ததாம். சின்ன வயதிலேயே பெண்களுக்குக் காலின் சிலம்பு அணிவித்து விடுவார்களாம். அதற்குப் பெயர் 'கன்னிமைச் சிலம்பாம்'. திருமணத்திற்கு முன்பு, மணமகள் வீட்டில் வைத்து அவள் காலிலிருக்கும் சிலம்பைக் கழற்றுவது ஒரு விழா போல நடக்குமாம். அதற்குப் பெயர் 'சிலம்பு கழி நோன்பு'. 

இதற்கு நற்றிணை, சிலப்பதிகாரம், அகநானூறு, ஐங்குறுநூறு போன்றவற்றில் reference ,கிடைக்கிறது.  உதாரணத்திற்குச் சில:

ஐங்குறுநூறு - பாடல் எண்: 399

நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம் மனை வதுவை நன் மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென் வேல்
மை அற விளங்கிய கழல் அடிப்
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே.

உடன்போக்கு நிகழ்த்திய தலைவன்-தலைவியை, தலைவன் வீட்டில் ஏற்றுக் கொண்டு அவளுக்குச் செய்ய வேண்டிய சிலம்புகழி நோன்பை தலைவனின் தாய் செய்கிறாள். (But actually அது தலைவி வீட்டில் செய்ய வேண்டிய சடங்கு) அதைக் கண்டு வந்து சிலர், தலைவியின் தாயிடத்தில் சொல்கிறார்கள். அதற்கு அவள் 'வெற்றி பெற்ற வேலை உடைய, குற்றமற்றவனாகிய, பொய் கூறுவதில் வல்லவனான தலைவனின் தாயிடத்தே வதுவை மணத்தை நம் வீட்டில் செய்யும்படி சொன்னால் ஏதேனும் குற்றமாகுமா?' என்று வருத்தப்பட்டுச் சொல்கிறாள். அதாவது இவங்க வீட்டிலும் அவர்களை ஏற்றுக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதைச் சூசகமா சொல்கிறாளாம்! (யாருக்கெல்லாம் இங்க பாரதியின் சுட்டும் விழிச் சுடர் தான் பாட்டு ஞாபகத்துக்கு வருது? மீ ஃபர்ஸ்ட்!)

நற்றிணையில் 'சிலம்பு கழீஇய செல்வம் பிறர் உணக்கழிந்த என் ஆயிழை அடியே' என்று வருகிறது.

No comments:

Post a Comment