Sunday 2 February 2014

குறுந்தொகை...(1)

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை படித்ததற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அது போல அடுத்த சுற்று ஞாயிறுதோறும் இன்னும் சில மரபு இலக்கியங்கள் படிக்கலாம் என்று எங்கள் குழுவில் முடிவு செய்திருக்கிறோம். ஆளுக்கு ஒரு இலக்கியத்தைத் தேர்வு செய்து படிக்கலாம் என்பது திட்டம். அதில் நான் தேர்வு செய்திருப்பது "குறுந்தொகை".

முதலில் குறுந்தொகை குறித்து ஒரு பறவைப்பார்வை பார்ப்போம்.

குறுந்தொகை எட்டுத்தொகை (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு) நூல்களுள் ஒன்று. மொத்தல் 401 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை 206 புலவர்கள் பாடியுள்ளனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை முதலிய ஐந்திணைகள் குறித்தும் பாடப்படும் அகப்பாடல்களின் தொகுப்பு. இதில் வருணணைகள் குறைந்தும் உணர்வுகள் மிகுந்தும் காணப்படுகிறதாம்.

முதல் பாடல் கடவுள் வாழ்த்து:

தாமரை புரையும் காமர் சேவடி
பவளத்து அன்ன மேனி, திகழ் ஒளி
குன்றி ஏய்க்கும் குடுக்கை, குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்,
சேவல்அம் கொடியோன் காப்ப,
ஏம வைகல் எய்தின்றால் உலகே

- பாரதம் பாடிய பெருந்தேவனார்

பொருள்:

தாமரை மலரை ஒத்த அழகு பொருந்திய செந்நிற அடிகளையுடையவனும், பவளம் போன்ற மேனி உடையவனும், விளங்கா நின்ற ஒளியையும், குன்றிமணி போன்ற சிவந்த ஆடையை அணிபவனும், குன்று நடுவில் பிளக்குமாறு எறிந்த அழகிய, ஒளி வீசுகின்ற நெடிய வேலை உடையவனும், சேவல் கொடியைக் கொண்டவனுமாகிய முருகப்பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இன்பம் நிறைந்த நாட்களைக் கொண்டு விளங்குகிறது.

புரை - ஒத்த, பொருந்திய
அம் - அழகு
பக - பிளந்த (பகுத்தல் என்பதிலிருந்து 'பக')
ஏமம் - இன்பம்
வைகல் - நாள்

இந்த கடவுள் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவர் 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். மகாபாரதத்தை வெண்பா வடிவில் 12000 பாடல்களில் எழுதியுள்ளாராம். ஆனால் 830 பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கிறதாம்.

பாடல் - 1

செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின், செங்கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.

(தோழி கையுறை மறுத்தது)

- திப்புத்தோளார்

விளக்கம்:

போர்க்களம் இரத்தத்தால் செந்நிறம் அடைய, அசுரர்களைக் கொன்று அழித்த செங்கோல் அம்பையும், (போர்க்களத்தில் பகைவர்களைக் குத்திக் கிழித்ததால்) சிவந்த தந்தங்களைக் கொண்ட யானையையும், தோள்வளை அணிந்திருப்பவனுமாகிய முருகக்கடவுளுக்குரிய இம்மலையானது கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் இரத்த நிறமுடைய காந்தள் மலர்களை உடையது.

அவுணர் - அசுரர்
கோடு - தந்தம்
தொடி - தோள்வளை
சேஎய் - முருகன் 

சே என்றால் செந்நிறம். எய் என்றால் அம்பு. இவை இரண்டும் உடையவன் முருகன். பொதுவாக முருகனைக் குறித்துச் சொல்லும் போதெல்லாம் செந்நிறத்தைச் சொல்வார்கள். (அபிராமி அந்தாதியின் முதற்பாடலில் இது போல செங்கதிர், உச்சித்திலகம், மாணிக்கம், மாதுளம்பூ, தாமரை, குங்குமம் என்று செந்நிறங்களை வரிசையாகச் சக்திக்கு உவமைப்படுத்திச் சொல்லியிருப்பார்)

இந்தப் பாடலின் களம் குறிஞ்சி நிலம். அதன் கடவுள் முருகன். 

தலைவன், செங்காந்தள் மலரைக் கொண்டு வந்து கொடுக்கிறான்.(அப்படித் தருவதை அந்தக் காலத்தில் கையுறை என்கிறார்கள். நம் பாஷையில் அது 'ஐஸ்' வைப்பது). அதற்கு நம் தலைவி அடப் போடா இவனே, சும்மா ஒரு காந்தள் பூவைக் கொண்டு வந்து கொடுத்து ஃபிலிம் காட்டாதே! எங்கள் மலையில் இந்த மாதிரி கொத்துக் கொத்தாக் கெடக்கு! இந்த மாதிரி டபாய்க்குற வேலையை விட்டுட்டு ஒழுங்கு மரியாதையா வந்து கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்கிறாள். 

அதிலும் அவள் அலட்சியப்படுத்தும் அழகைப் பாருங்களேன்! அவன் ஒரு காந்தள் பூவைக் கொண்டு வர்றான். அது சிவப்பு நிறம் கொண்டது. அதை அலட்சியப்படுத்த எவ்வளவு செந்நிறத்தை அவள் வரிசையாய்ச் சொல்கிறாள் பாருங்கள். போர்க்களத்தின் இரத்த நிறம், அம்பு, யானைத் தந்தத்தில் படிந்த இரத்த நிறம், சேவற்கொடி எல்லாவற்றையும் சொல்லி விட்டு, "கொத்து கொத்தாக" அவங்க மலையில் காந்தள் பூ இருக்குதாம்.எப்படியொரு ரிவீட்டு! அழகுடி ராசாத்தி!

No comments:

Post a Comment