Sunday 9 February 2014

குறுந்தொகை...(2)


பாடல் - 2

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!

காமம் செப்பாது, கண்டது மொழிமோ:

பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,


செறி எயிற்று, அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?



- இறையனார்

விளக்கம்:

இதுவும் முதல் பாடலைப் போல குறிஞ்சித் திணைப் பாடல். தலைவியின் வெட்கம் போக்கும் பொருட்டு தலைவன் அவள் கூந்தல் மணத்தின் இனிமையை அள்ளி விடும் பாடல்.

பூக்களின் மகரந்தத்தை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய வண்டே! நீ என் நிலத்து வண்டாதலால், நான் விரும்பியதைச் சொல்லாமல், நீ கண்ட உண்மையைச் சொல்! என்னுடன் நெருக்கமான நட்பு கொண்ட மயில் போன்ற, நெருங்கிய பல்வரிசைகளையுடைய இளம்பெண்ணின் கூந்தலைப் போல, நறுமணமிக்க பூக்கள் உள்ளனவா? நீ அறிவாயா?

கொங்கு - பூக்களின் மகரந்தம் / தேன்

தேர் - தேர்ந்தெடுத்து

அஞ்சிறை - அம் சிறை; அம் - அழகிய; சிறை - சிறகு

காமம் - விருப்பம்

பயிலியது - பழக்கம் கொண்ட

கெழீஇய - நெருங்கிய

எயிறு - பல்

நறியவும் - நறுமணமும்

இந்தப் பாடலை எழுதியவர் இறையனார்.

இதை எங்கேயோ கேட்டது போல இருக்குமே! யெஸ். திருவிளையாடல் படத்தில், நாகேஷ் - சிவாஜி சீன். ஐ ஆம் சாரி. திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் தருமிக்கு எழுதிக் கொடுக்கும் பாடல். (copyright குறித்து ஹன்ஸா மேம் பதிவு போடும் போதெல்லாம் எனக்கு இந்தப் பாடல் மனதில் வந்து போகும்) அதனால், இங்கு இறையனார் என்பவர் அந்தச் சிவபெருமான் தான் எனக் கொள்க. அதற்கு ஆதாரம் திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்த வரி: "தென்ன வன்குல தெய்வமாகிய,மன்னர்கொங்குதேர் வாழ்க்கை யின்றமிழ், சொன்ன லம்பெறச் சொல்லி நல்கினார், இன்ன றீர்ந்தவ னிறைஞ்சி வாங்கினான்’’

இதே கருத்தொத்து திருக்குறளின் காமத்துப்பால்-களவியல் பகுதியில் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில் ஒரு குறள் வருகிறது.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ள் இவட்கு
. (1113ஆவது குறள்)

பாடல் - 3:

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.



- தேவகுலத்தார்

விளக்கம்:

இந்தப் பாடலின் களம்: தலைவன் தலைவிக்காக வேலிக்கு அந்தப் புறத்தில் காத்துக் கொண்டு நிற்கிறான். தலைவியை அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும் அவள் அன்பை அவன் முழுதாக உணர்ந்து கொள்ள வேண்டுமென்றும் எண்ணிய தலைவியின் தோழி (ஹ்ம்...'காவலன்' படம் பார்த்திருக்கீகளா?), அவர்கள் காதலைக் இழித்துப் பேசுகிறாள். அதைக் கேட்டுத் தலைவி பொறுக்க முடியாமல் தன் காதலை உயர்வாகக் கூறுகிறாள். அது தலைவனுக்கும் கேட்கிறது. இதுவும் குறிஞ்சித்திணைப் பாடலே!

மலைப்பக்கத்தில் உள்ள, கருமை நிறத்த கொம்புகளை உடைய குறிஞ்சிப் பூக்களில் உள்ள தேனைச் சேகரித்து வைக்கும் பெரிய வண்டுகள் நிறைந்த நாட்டை உடைய தலைவனோடு நான் கொண்ட நட்பானது(காதலானது) நிலத்தை விடப் பெரியது. வானை விட உயர்ந்தது. கடலின் ஆழத்தை விட அளவில் பெரியது.

( சாதாரணத் தேன் இல்லையாம். 12 வருடங்களுக்கு ஒருக்கா பூக்கும் குறிஞ்சிப் பூக்களின் தேனைச் சேகரித்து வைக்கும் நாடாம்! அது மாதிரி 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி'யாம். சும்மா எல்லாப் பூவிலும் போயெல்லாம் மகரந்தத்தை உண்ணாதாம். நல்ல பூக்களாகத் 'தேர்ந்தெடுத்து' உண்ணுமாம்! அம்புட்டு கவுரதையா வாழுறாகளாம்! சக்க! சக்க! சக்க! )
 

No comments:

Post a Comment