Thursday 11 April 2013

அன்றொரு நாள் அதே நிலவில் - 5


அந்த நாள் அவர்கள் அனைவருக்கும் முக்கிய நாள் என்று அந்த நிலவுக்குத் தெரியும்.

சுதர்சன், பெண்ணியம் மதிப்பவன். தேவியைத் தன் குழந்தையெனப் பார்த்துக் கொள்ள நினைக்கும் மனம் கொண்டவன். இதற்காக அவள் பயந்தால் அவர்களுக்கென்று ஒரு குழந்தை வேண்டாம் என்று சொல்லவும் தயாராக இருந்தான். தேவியே போதுமே! அருணாவின் சுயகௌரவமும், தன்மானமும் அவளை அவன் ரசிக்கும் முதற்காரணிகள். அவற்றிற்கு முன் மற்றவை அற்பம் தான்! அருணா என்னவள்! என் புத்தகங்களின் பக்கங்கள் அனைத்தும் அவளாய் இருப்பதில் எனக்கு சம்மதம். கவிதை வரைய முயன்றது அவன் மனது.

அருணா, முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட பெண். அவள் எப்படியெல்லாம் கணவன் வேண்டுமென்று நினைத்திருந்தாலோ அதற்கு நேர் மாறாய் பிரசாத் அமைந்திருந்தான். சரியாகி விடும் என்று சில விஷயங்களில் பொறுத்துத் தான் போனாள். சில காரணிகள் அவளால் காம்ப்ரமைஸ் பண்ண முடிவதில்லை. பிரசாத் இல்லாமல் தனியாக வாழ முடியும் என்று வாழ்ந்து கொண்டிருக்கையில் தான் சுதர்சன் வந்து சேர்ந்தான். 'தனியாக வாழ முடியும் தான். ஆனால் அது அவசியமா? ஏன், நல்ல நண்பனான சுதர், ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்கக் கூடாது? பிரசாத்தை விட சுதர் பொருத்தமென்றால் சேர்வதில் என்ன தவறு உள்ளது? தேவியைப் பற்றிய அவன் நிலைப்பாடு நன்றாகத் தெரியுமே!' ரொம்ப நாள் கழித்து அவள் கன்னங்கள் சிவப்பது போல் இருந்தது.

பிரசாத், அமெரிக்கக் குடியுரிமைக்கு அப்ளை செய்து விட்டான். அவன் உலகம் வேறு. அதில் சிரிப்பு, கவர்ச்சி, ஜாலினெஸ், குட்டைப்பாவாடை, ராக் மியூசிக் அதற்குத் தான் முன்னிலை. அழுகைகள், கவிதைகள், சம்பிரதாயங்கள், கமிட்மெண்ட் இவையெல்லாம் டைம் வேஸ்ட். ரீட்டா கிட்டத்தட்ட இந்த வாழ்க்கையைத் தான் விரும்பினாள். 2 நாளில் அமெரிக்கா கிளம்புகிறார்கள். விசா வந்தாச்சு. ரீட்டா கன்னங்களில் பரிசளித்தாள்.

பீச்சில் பந்து விளையாண்டு கொண்டிருந்த குழந்தை தேவி, சுதர்சனையும் பிரசாத்தையும் மாறி மாறிப் பார்த்தாள். 

'அதெப்படி, டீச்சர் சொன்னது தப்பா இருக்கும்?'

'அப்பான்னா டாடின்னு சொன்னாங்க. அப்பா தான் டாடியாம். ராகுல் கூட அப்பான்னும் டாடின்னும் கதிரேசன் அங்கிளைத் தானே சொல்கிறான். ஆனா எனக்கு அப்பா பிரசாத், டாடி சுதர்சன். எப்டி எனக்கு மட்டும் ரெண்டு?'

'அதெப்படி, டீச்சர் சொன்னது தப்பா இருக்கும்?'

'வீட்டுக்குப் போய் பாட்டிட்ட கேக்கணும்'

இப்பொழுதும் அந்த நிலா பால் வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு தான் இருந்தது.

(முற்றும்)

நன்றி: பேனா பிடிக்கக் கற்றுத் தந்த எங்கள் மாலன் சாருக்கும், மங்கிய சுடரைத் தூண்டி விட்ட முகமறியா ரமணி சாருக்கும்.

3 comments:

  1. என் மரமண்டைக்கு கதையின் முடிவு தெளிவாக விளங்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் ஸ்டாலின். இப்பொழுது தான் எழுதப் பழகிக் கொண்டிருக்கிறேன். அதனால் மனதில் நினைத்ததை வாசகர் மனதில் இறுக்கும் லாவகம் தெரியாமல் இருக்கலாம். உன் ஃபீட்பேக் அனைத்திற்கும் மிக்க நன்றி. இந்தப் பதிவு என்றில்லை எல்லாப் பதிவுகளிலும் நீ பின்னூட்டம் இடுவது 'இன்னும் நன்றாக எழுது' என்று என்னைத் தூண்டுகிறது. நம் எழுத்துக்களை யாரோ ஒருவர் படிக்கிறார்கள் என்ற ஃபீல் கொடுக்கும் சக்தி அலாதியானது. எழுத ஆரம்பித்திருக்கும் என் போன்றவர்களுக்குத் தேவை 'நீ முயற்சித்துப் பார். படிக்க நான் இருக்கிறேன்' என்ற ஆதரவும், 'இதைப் படித்து நான் இப்டி ஃபீல் பண்ணினேன்' (In both +ve and -ve )என்ற உண்மை உணர்வுகளும் தான். இதயத்திலிருந்து நன்றிகள் ஸ்டாலின்!

      Delete
    2. கதையின் முடிவு இது தான்: சுதர்-அருணா திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். பிரசாத்-ரீட்டா அமெரிக்கா கிளம்புகிறார்கள். பிடித்த வரைக்கும் சேர்ந்து இருப்பார்கள். பிடிக்காவிட்டால் புன்னகையுடன் பிரிவார்கள். அவர்கள் வாழ்வில் கண்ணீருக்கும், சம்பிரதாயங்களுக்கும் இடமில்லை.

      இந்த 4 பேர் குணங்களும் அவரவர் பார்வையில் சரி தான். தவறு என்பதற்கில்லை.

      சுதர் - பெண்ணியம் போற்றுபவன். முற்போக்குச் சிந்தனையாளன். அருணா உணர்வுகளை மதிப்பவன்.

      அருணா - சுயகௌரவம் வேண்டுமென்று நினைக்கும் பெண். வார்த்தைகளை விட வாழ்க்கையில் புதுமைகள் கொண்ட தெளிவான, தைரியமான பெண்.

      பிரசாத் - வெளிநாட்டு மோகத்தில் திளைப்பவன். ஆனாலும் ஆணாதிக்க சிந்தனைகள் அவ்வப்போது வெளிப்படுத்தும் குணம் கொண்டவன். கேளிக்கைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உறவின் அழகியலுக்கு கொடுக்கத் தோன்றாத குணக்காரன்.

      அருணாவிற்கு உகந்தவனாக பிரசாத் இல்லையெனும் போது, சுதரைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை என்பது அவள் எண்ணம். தனியாக அவளால் வாழ முடியும்,ஆனால் அது அவசியமா என்பதுதான் அவள் கேள்வி. அதனால் சுதரைத் தேர்ந்தெடுக்கிறாள்.

      அதே போல் பிரசாத் குணங்களுக்கு இப்போதைக்கு ஒத்து வரும் ரீட்டாவை அவன் தேர்ந்தெடுக்கிறான்.

      இதில் இவர்கள் எல்லாருக்கும் தாங்கள் செய்வது என்ன என்ற புரிதல் இருக்கிறது, தங்கள் முடிவின் மீது அசாத்திய நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நம் தேவிப்பாப்பாக்கு இதெல்லாம் புரியாது அல்லவா? அவளுக்குத் தெரிந்து அப்பா என்றால் பிரசாத்; அம்மா என்றால் அருணா; சுதர் டாடி என்று அழைக்கச் சொல்லியிருக்கிறான். அதுவும் ஏன் என்று புரியாது.

      எல்லாருக்கும் டாடியும் அப்பாவும் ஒருவராய் இருக்கும் போது இவளுக்கு மட்டும் ஏன் வேறு வேறு என நினைக்கிறது குழந்தை மூளை. நாளை பிரசாத் வெளிநாடு போன பிறகு, அவன் எங்கே என்று கேட்டால் என்ன பதில் இருக்கும் அவர்களிடம்? சுதருடன் வாழும் போது 'நாம ஏன் இங்கயிருக்கோம்' எனக் அவள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்? இதற்கு உண்மையான பதில் சொன்னால் குழந்தை மனதிற்கு என்ன புரியும்? கேட்காமல் விட்டுவிடும் வயதையும் தேவி கடந்திருந்தாளே? ஆனால் இந்தக் கேள்விகளுக்காக அருணா, பிரசாத்தைச் சகித்து வாழ முடியுமா? எது சரி? என்ன விடை?

      இது தான் இந்தக் கதையின் முடிவு. இப்படி எழுதியிருந்தால் இது பழைய காலக் கதை சொல்லும் பாணியாகியிருக்கும். அதைத் தான் கொஞ்சம் புதுமையாய் முடித்திருந்தேன்.

      எல்லாவற்றிற்கும் பதில் இருக்கிறது. அதெல்லாம் அவரவர் மனதிற்கு மனம் மாறுபடும். அதனால் முடிவை வாசகர் கையிலேயே விட்டாச்சு. அதனால் தான் இந்த வரி 'இப்பொழுதும் அந்த நிலா பால் வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு தான் இருந்தது.'

      Delete