சென்ற வாரம் உணங்குதல் பற்றிப் பேசும் போது, துணங்கைக் கூத்து பற்றி நம் மாலன் தொட்டுச் சென்றார். அது குறித்துத் தேடியவற்றில் சிலவற்றை இங்கே பதிகிறேன்.
சங்க காலத்தில் வழிபாட்டின் போதும், போர்க்காலங்களிலும், பொழுதுபோக்கிற்காகவும் பல வகைக் கூத்துக்கள் ஆடப்பட்டிருக்கின்றன. அவைகளுள் முக்கியமானவை மற்றும் பரவலானவை: குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து, தழூஉ கூத்து, வெறியாடல் போன்றவை. இவை தவிர இன்னும் 11 ஆடல் வடிவங்களைச் சிலப்பதிகாரம் சொல்கிறது.(‘பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப் பதினோராடலும் பாட்டும் கொட்டும்’)
துணங்கைக் கூத்து எப்படி ஆடப்படுகிறது?
துணங்கைக் கூத்து என்பது முடக்கிய கைகளால் விலாவில் புடைத்து, தோள்களை உயர்த்தி ஆடப்பட்டது. "பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத், துடக்கிய நடையது துணங்கை யாகும்" என்று திருமுருகாற்றுப்படை சொல்கிறது.
வகைகள்:
பேய்த்துணங்கை, போர்த்துணங்கை, மகளிர்த் துணங்கை என்று வகைகள் இருக்கின்றன.
குரவையும் துணங்கையும்:
குரவையும் துணங்கையும் இணைய வைத்தே பேசப்படுகிறது. குரவை என்பது கைகளைக் கோர்த்தும், கைகளை உயர்த்தியும் ஆடப்படுகிறது. இதில் பேய்த்துணங்கை என்பது பின்தேர்க்குரவை எனவும், போர்த்துணங்கை என்பது முன்தேர்க்குரவை எனவும் சொல்கிறார்கள். (போருக்குப் போகும் மன்னனின் தேருக்கு முன் ஆடுவது முன்தேர்க்குரவையாகும். போரில் வென்ற பின் மன்னன் தேருக்குப் பின்னால் ஆடுவது பின்தேர்க்குரவையாகும்.)
பேய்த்துணங்கை பற்றி அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. போரில் வென்ற அரசனின் புகழ் பாடி அவனது தேர்களுக்குப் பின்னின்று நிழல் போலப் பேய்கள் குரவை ஆடும் என்று சொல்லப்படுகிறது. (மன்னன் ஊரும் மறமிகு மணித்தேர்ப் பின்னும் முன்னும் பேய்ஆ டின்று.) அது போல பேய்த்துணங்கையும் இருக்கலாம்.
பொதுவாக வழிபாட்டின் போதும், போரில் வென்ற களிப்பிலும் துணங்கைக் கூத்து ஆடப்படுகிறது. வழிபாட்டின் போது அதிகம் பெண்களும், வெற்றிக் களிப்பின் போது ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடுவதாக இருக்கிறது.
வழிபாட்டில்:
முந்தைய பதிவில் மாலன் quote செய்திருந்த திருவாய்மொழிப் பாடலில் இதைக் காணலாம்.
ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக்
கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக்கழு தைஉதடு
ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர்
வேதம்வல் லாரையே.
இந்தப் பாடலின் பொருள்: "அந்தப் பெண்ணின் நோயைப் போக்கும் உரிய மருந்து என்று ஆட்டையும் கள்ளையும் மதித்து தோள் குலைய துணங்கை ஆடும் பெண்களே! காய்ந்த நெல் கெட அதைத் தின்கின்ற கழுதையின் உதடு அசைவதைப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பயன்? வேதத்தில் சிறந்தவர்களைப் போய் வணங்குங்கள்!"
இங்கு வழிபாட்டின் போது பெண்கள் ஆடிய மகளிர்த் துணங்கைக் காணலாம்.
//ஆடும் கள்ளும் பராய்// ஆடு எதற்கு வந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் கூத்தின் போது கள் குடித்தாடும் வழக்கம் அப்போது(ம்) இருந்தது.
"திண்டிமில் வன்பரதவர்
தண்குரவைச் சீர்தூங்குந்து
" - என்று புறநானூறு சொல்கிறது. (மட்டுண்டு - மதுவுண்டு)
போரில்:
“குண்டு கண் அகழிய மதில் பல கடந்து
பண்டு பண்டுந்தாம் உள் அழித்துண்ட
நாடு கெழு தாயத்து நனந்தலை அருப்பத்துக்
கதவம் காக்கும் கணை ஏழு அன்ன
நிலம்பெறு திணி தோள் உயர ஓச்சிப்
பிணம் பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடி” – பதிற்றுப்பத்து
இப்பாடலின் பொருள்: “ஆழ்ந்த அகழிகளையுடைய மதில்கள் பலவற்றைக் கைப்பற்றிக் கடந்து சென்று, உட்புகுந்து அழித்து, நாடாட்சிக்கு உரியதாக அமைந்த, அகன்ற உள்ளிடத்தையுடைய அரண்களின், வாயில் கதவு வலிமையுடையதாகக் காக்கும் கணைய மரத்தை ஒப்ப, பகைவர்களின் நாடுகளைப் பெறும் திண்ணிய தோள்களை உயரத் தூக்கி வீசி, பிணங்கள் குவிந்து கிடக்கும் போர்க்களத்திலே முன்னே பல காலங்களில் பன்முறை துணங்கைக் கூத்தினை ஆடி”
போர் வெற்றி தவிர்த்து பக்திக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பெண்கள் துணங்கை ஆடினாலும், அதில் தலைக்கை கொடுத்தல் என்று ஆணுக்கும் பங்கு இருக்கிறதாம். தலைக்கை அல்லது முதற்கை கொடுத்தல் என்றால் பெண்ணின் கையைப் பற்றி ஆடுதல் அல்லது தழுவிக் கொண்டு ஆடுதல்.
குறுந்தொகையின் மருத நிலப்பாடலில் தலைவியை அயலார் வந்து மணமுடிக்க விரும்பிய போது, தன் தலைவன் குறித்து வீட்டாருக்குத் தெரியப்படுத்தும் பாடலில் இப்படி வருகிறது.
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்டக் கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே
பொருள்: “மாட்சிமை பொருந்திய தகுதியை உடையோனாகிய தலைவனை, வீர்ர் கூடியுள்ள சேரி விழாவின்கண்ணும், மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தின்கண்ணும் ஆகிய எவ்விடத்தும் காணவில்லை. நானும் ஒரு ஆடுகின்ற களத்திற்குரிய மகளே! தந்தங்களை அறுத்துச் செய்த வளையல்கள் தன் பிரிவினால் நெகிழுமாறு செய்த பெருமைமிக்க தலைவனும் ஓர் ஆடுகின்ற களத்திற்குரிய மகனே!
அதாவது என்னோடு துணங்கை ஆடிய தலைவன் ஒருவன் உள்ளான் என்று அவள்(ஆதிமந்தி) சொல்வதாய் உரையாசிரியர் சொல்கிறார். “மகளிர் விழாக் காலத்தே துணங்கை ஆடுதலும் ஆடவர் அவர்கட்கு முதற்கை கொடுத்தலும் பண்டை வழக்கங்கள்” என்றும் சொல்கிறார்.
குரவை, துணங்கை போல, வெறியாட்டு என்ற ஒன்றும் வெரி குட்டான கூத்து. சிவபெருமான் அல்லது முருகன் அருள் வந்து வேகமாக ஆடுவது. வேலன் வெறியாட்டு என்று பல இலக்கியங்களில் வரும். பொன்னியின் செல்வனில் கூட, வந்தியும் ஆதித்தனும் பழுவேட்டையர் அரண்மனையில் இருக்கும் போது, வேலன் வெறியாட்டு கூத்து நடக்கும் நிகழ்ச்சி வருவது போல ஒரு மங்கல் ஞாபகம். (ஸாரி, பொன்னியின் செல்வனை refer பண்ண நேரமில்லை. அதைத் தொட்டால் கீழே வைக்க விடாது.)