Sunday, 9 February 2014

சொல், ஒரு சொல்!...(4)

இன்றைய சொல்: "உணங்கு"

உணங்குதல் என்றால் உலர்தல், மனம் வாடுதல்

மேற்கோள்கள்:

1. பட்டினப்பாலை - நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்

அகல் நகர் வியன் முற்றத்து
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனம் குழை
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
கொழும்பல் குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு

2. அதே பட்டினப்பாலையில் 'நிலவு அடைந்த இருள் போல, வலை உணங்கும் மணல் முன்றில்' என்றும் வருகிறது.

3. நற்றிணை - உணங்கு திறன் நோக்கி

முற்றா மஞ்சள் பசும்புறங் கடுப்பச்
சுற்ரிய பிணர சூழ்கழி இறவின்
கணங்கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிப்
புன்னையங் கொழுநிழல் முன்னுய்த்துப் பரப்புந்
துறைநணி யிருந்த பாக்கமும் உறைநனி
இனிதுமன் அளிதோ தானே துனிதீர்ந்து
அகன்ற அல்குல் ஐதமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே

4. பதிற்றுப்பத்து - கான் உணங்கு கடு நெறி

முகநூலில் பகிர்வுக்குப் பின் பிற்சேர்க்கை:

மாலன்: திருக்குறளிலும் ’உணங்கு’ உண்டு. உணக்கு என்று எழுதுவார் வள்ளுவர். தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் (குறள் 1037) பலம் வீசை மணங்கு என்பவை பழையகாலத்து அளவுகள்.பலம் என்பது சுமாராக 35 கிராம்.தொடி என்பது பலத்தைக் குறிப்பதற்கு இன்னொரு சொல்.ஒரு பலம் புழுதி (மேல் மண்) நன்றாகப் பொடிந்து கால் பலம் ஆகும் அள்விற்கு உழவு செய்து நிலத்தை காயப்போட்டால் (உலர்த்தினால், உணங்கு செய்தால்) அந்த நிலத்தில் ஒரு பிடி உரம் கூடப் போடாமல் பயிர் செய்யலாம் என்கிறார் வள்ளுவர்.

லாவண்யா: "இடிக்கும் கேளிர் நும் குறை ஆகநிறுக்கல் ஆற்றினோ நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே.


இப்படியும் ஒரு பாடல் இருக்கு தோழி. வெண்ணெய் உருகி வழிவதை சொல்லி இருக்காங்க, அது வெண்ணையின் இயல்பே என்றாலும் ஒரு துயரத்தோடும் ஒப்பிடலாம், இந்த பாடலில் தொனி அதுவே.


இராஜி: முந்தைய இடங்களிலெல்லாம் 'உலர்ந்த' என்று பொருளில் வந்தது, இங்கு உருகிய என்று வருகிறது. (செயலறுதல் என்று கூடச் சொல்லலாம். உணங்குதலுக்கு அப்படி ஒரு அர்த்தம் அகராதி சொல்கிறது)
வெப்பத்தில் உருகிய வெண்ணையைப் படித்ததும், சமீபத்தில் படித்த ஒரு கம்ப ராமாயணப் பாடல் நினைவு வருகிறது. சூர்ப்பனகையின் காதல் வெறியை இதே வார்த்தைகளில் கம்பர் சொல்லியிருப்பார்.

//
கைகளால், தன் கதிர் இளங் கொங்கைமேல்,
ஐய தண் பனி அள்ளினள், அப்பினாள்;
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால்
//


மாலன்:
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் உணக்கில்லாதோர் வித்து என்று ஒரு வரி எழுதுவார். அதாவது உலர்ந்து போகாத விதை. உலராத விதைதான். ஆனால் மழை இல்லாததால் முளைக்காமல் கிடந்தேன். நீ மழையாக வந்து கருணை காட்டினாய் என்கிறார். இது சென்னைக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பாடியது: 

பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கிலாததோர் இன்பமே வரும்
துன்பமே துடைத்து எம்பிரான்
உணக்கிலாததோர் வித்து மேல் விளையாமை
என் வினை ஒத்தபின்
கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே.


வைணவத்திற்குப் போனால், திருவாய்மொழியில் உணங்கல் கெடக்கழு தைஉதடு ஆட்டம்கண்டு என்பயன்? என்று ஒரு வரி உண்டு. உலர்ந்த நெல்லைத் தின்கிற கழுதையின் உதடுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் என்ன பயன் என்று அர்த்தம். உலர்ந்த நெல்லைத் தின்னும் கழுதையின் உதடு எப்படிஆடும் என்று ஒரு நாள் உதைக்காத கழுதைக்குப் பக்கத்தில் போய்ப் பார்க்க வேண்டும். இது துணங்கைக் கூத்து என்ற ஒன்றைப்பற்றிய குறிப்பும் கூட. துணங்கைக் கூத்து என்றால் என்ன என்று நேரம் கிடைக்கும் போது கதைக்கலாம்.

No comments:

Post a Comment