Sunday, 16 February 2014

குறுந்தொகை...(3)

பாடல் - 4

நோம், என் நெஞ்சே; நோம் என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே.

- காமஞ்சேர் குளத்தார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப் பாடல். தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறாள் என்று கவலையுற்ற தோழிக்குத் தலைவி கூறியது.

பொருள்:

(அடேங்கப்பா! இந்தப் பாடலுக்கு எகனைக்கு மொகனையாக ஏகப்பட்ட விளக்கங்கள். அதில் எனக்குச் சரியென்று தோன்றியதை இங்கே பதிகிறேன்)

என் நெஞ்சம் வருந்தும். என் நெஞ்சம் வருந்தும். கண் இமைகளைத் தீயச் செய்யும் கருவி போல, வெம்மையுடைய எனது கண்ணீரைத் தான் துடைத்து, அளவளாவுவதற்கு அமைந்த நம் தலைவர், இப்பொழுது மனம் பொருந்தாராய்ப் பிரிந்திருத்தலால், என் நெஞ்சம் வருந்தும்.

இந்தப் பாடலில் என்னவொரு அழகு! பொதுவாக நீர் என்பது தீயை அணைக்கும். இங்கே கண்களின் கண்ணீர் அவள் இமைகளைத் தீயிலிடுகிறதாம். என்ன அழகான கற்பனை! வாவ்!

இதே போல, அகநானூற்றுப் பாடல் ஒன்று இப்படிச் சொல்கிறது. அது இதை விட ஒரு படி அழகு அதிகம்.

நறவின் சேயிதழ் அனைய ஆகி,  குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல் உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்,
வெய்ய உகுதர, வெரீஇ

குவளை மலர் போன்ற கரிய நிறம் கொண்டிருந்த கண்ணிமைகள், நறவம்பூவின் சிவந்த இதழ்களைப் போல செந்நிறமானதாம், அவள் கண்ணீரால். (நீளமாகச் சொல்லத் தேவையில்லை என்பதால் சுருக்கமான விளக்கம் எனக் கொள்க)

இன்னும் சில இடங்களில் இதே கருத்தையொட்டி, கருந்தடக் கண்ணின் இமைதீர் வெம்பனி முலைமுக நனைப்ப (பெருங்கதை), உற்று மை கலந்து கண்கள் வெம்பனி உகுத்த அன்றே (சீவகசிந்தாமணி),  கண் உகும் வெய்ய நீர் வெள்ளத்து மெள்ளச் சேறலால் (கம்பராமாயணம்) என்று வருகிறது.

குறுந்தொகையின் 202 ஆவது பாடலிலும் இதே போல, முதலடியில் இரண்டு 'நோம் என் நெஞ்சே'வும் கடைசியிலும் 'நோம் என் நெஞ்சே'வும் வருகிறது. (மொத்தத்தில் தலைவர்கள் எல்லாம் தலைவிகளை நோகடிக்கத்தான் செய்யுறானுவ போல)

பாடல் - 5

அதுகொல் தோழி! காம நோயே?-
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை
உடை திரைத்திவலை அரும்பும் தீம் நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே

- நரி வெரூஉத்தலையார்

பாடலின் களம்:

நெய்தல் திணைப்பாடல். தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறாள் என்று கவலையுற்ற தோழிக்குத் தலைவி கூறியது.

பொருள்:

தோழி! சேற்றில் தங்கியிருக்கும் நாரைகளைத் தன் இனிய நிழலால் உறங்க வைக்கிற புன்னை மரங்களை உடையதும், கரையை உடைக்கின்ற அலைகளில் இருந்து தெறிக்கும் துளிகளால் அரும்புகின்ற, கண்ணுக்கு இனிமையாகிய நீர்ப்பரப்பையும் கொண்ட, மெல்லிய கடற்கரை நாட்டுத்தலைவன் பிரிந்ததனால், பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள் இமை பொருந்துதலைச் செய்யவில்லை(அதாவது தூங்கவில்லை). காம நோய் என்பது இத்தன்மை கொண்டதா?

வதி - சேறு அல்லது கால்வாய் ( 'குருகு' எனச் சொல்லப்படும் நாரைகள் பொதுவாக சேறு கொண்ட புதர்களில் தங்குமாம். குருகு பற்றி சில நல்ல விளக்கங்கள் ஜெயமோகன் தளத்தில் இருக்கிறது. அதன் சுட்டி: http://www.jeyamohan.in/?p=16748)

குருகு - பொதுவான அர்த்தம் நாரை என்பது

திரை - அலை

திவலை - துளி

புலம்பு - கடற்கரை (புலம்பன் - தலைவன் ( நெய்தல் திணை என்பதால்))

ஒல்லா - பொருந்தாத


இது உரையில் இருக்கும் விளக்கம். இப்பாடலை நான் இப்படிக் கற்பனை பண்ணி ரசிக்கிறேன்.

குருகுவையும் தலைவியையும் அவள் ஒப்பிடுவது போல எனக்கு ஒரு கற்பனை.

தலைவனின் நாடு, கரையை உடைக்கின்ற அலைகளில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகளின் இனிமையால் நிறைந்திருக்கிறது. அது போல, தலைவன் உறைகின்ற அவளது மனது அவன் பிரிவால், நெஞ்சில் உண்டாகக் கூடிய அலைகளிலிருந்து தெறித்துக் கண்ணில் கண்ணீர்த்துளியாக இருக்கிறது. ஆனால் அவன் நாட்டில் அது இனிமையானதாகவும், இவளுக்கு இங்கே அது துயரம் தருவதாகவும் இருக்கிறது. ( கடல் அலைகள் vs நெஞ்சின் அலைகள். இதை நம்ம தலைவரும் சொல்லியிருக்கிறார். "நீலக் கடலலையோ நினது நெஞ்சின் அலைகளடி (எனக்கு ரொம்பப் பிடிச்ச பாரதி வரிகளுள் ஒன்று இது)" அலை தெறித்த துளி vs கண்ணீர்த்துளி)

அவன் நாட்டின்கண் இருக்கும் புன்னை மர நிழல்கள் நாரைகளைத் தூங்க வைக்கும் சுகம் தருகிறது. ஆனால் அவன் மீது இருக்கும் இவளது அன்போ, அவளைத் தூங்கவிடாமல் செய்கிறது. ( குருகு vs தலைவி )

இந்த மாதிரி கற்பனையில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நான் இப்படி நம்புகிறேன். இது பாடலின் அழகைத் தூக்கிக் காட்டுகிறது.

இந்த 'ஒல்லா' என்ற வார்த்தை 'கேட்சி'யாக இருக்கிறது அல்லவா!

திருக்குறளிலும் நிறைய இடங்களில் வருகிறது. அவற்றில் ஒன்று:

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. ( குறள் எண்: 870: அதிகாரம்: பகைமாட்சி)

(ஒல்லாவைத் தேடும் போது, வேறொன்று கண்ணில் பட்டது. மேலோட்டமாகத் தேடியதில், அதில் சில சுவாரஸ்யங்கள் இருக்கும் போலத் தெரிகிறது. அதை வாய்ப்பிருந்தால் அடுத்த ஞாயிறில் ஆழமாகப் படிப்போம் என்றிருக்கிறேன். அது ஒரு கில்பான்சி கிஜு கிஜா)

1 comment:

  1. Online Casino - Kadang Pintar
    With the launch of Kadang Casino in 2021, 1xbet korean it's important to note that you have kadangpintar to deposit and withdraw funds through Kadang Pintar. 바카라 사이트

    ReplyDelete