எனக்கொரு நண்பர் இருக்கிறார். சாகர் என்று பெயர். அவர் நட்பு கிடைத்தது என் வாழ்வின் அழகான தருணங்களுள் ஒன்று.
சாகர் டெல்லிவாலா. எப்படியும் 60+ வயதிருக்கும். அவர் ஒரு டாக்டர். பல மருத்துவ நிறுவனங்களில் Managing Director ஆக இருந்து விட்டு, ஒய்வுக்குப் பின், தன் மகன், மருமகள், பேரனுடன் இங்கே பெங்களூரில் தங்கியிருக்கிறார். அவர் எனக்கு Walking-mate(schoolmate, roommate போல). அதெப்படி, அருப்புக்கோட்டைக்கும் - டெல்லிக்கும் ஒரு இணக்கம் என்று நீங்கள் கேட்டால், அதற்கு ஒரு கதை இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அவர் என் அப்பா போல நிறம், நெற்றி, மூக்கு, ஹேர் ஸ்டைல் கொண்டவர். இவை போதாதா, அவர் மீது அன்பு கொள்வதற்கு!
அவருக்கும் இது தெரியும். அவர் மீது நான் கொண்ட நட்பு, என் அப்பா மீது கொண்ட பேரன்பில் சிதறிய மிச்ச சொச்சம் என்று! சில அல்லது பல நேரங்களில் அவரிடம் என் அப்பாவைத் தேடுவதுண்டு. ஆயிரம் தான் இருந்தாலும் என் அப்பாவுக்கு மாற்றாக வர முடியாது. அப்படி இருந்தாலும், என் அப்பாவின் நற்குணங்கள் கொஞ்சம் அவரிடமும் இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் என் அப்பாவின் தோற்றத்தைக் கடன் வாங்கியிருப்பது என்பது என் நம்பிக்கை!
அவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்கள். டெல்லியில் மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். என் அப்பாவை நான் அவரிடம் தேடுவது போல, சில சமயங்களில் தன் மகளை அவர் என்னிடம் தேடுவார். அட ராமா! அன்பு என்பது எப்படியாகப்பட்ட குணம் கொண்டது பாருங்கள்! எல்லைக் கோடுகளை அழித்து எவரோ இருவர் ஒரு புள்ளியில் அல்லது ஒரு உணர்வில் இணைகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது முட்டாள்தனமாக, என் அப்பா சொல்வது போல, அசட்டுத்தனமாக இருக்கும். ஆனால் அதனுள் இருக்கும் பரிபூரணம் எனக்கும் சாகர் அங்கிளுக்கும் மட்டும் புரியும்.
நாலைந்து நாட்களாக அவரைப் பார்க்கவில்லை. இடையில் எனக்குக் காய்ச்சலாக இருந்ததால், 2 நாட்கள் போகவில்லை. அவருக்காக கஷ்டப்பட்டுக் காய்ச்சலோடு போன நாட்களில் அவர் தாமதமாக வந்ததால் பார்க்க முடியவில்லை. கடவுள் கருணை, இன்று பார்த்தோம்.
நான்கு நாட்களாகப் பேசாதது அனைத்தையும் சேர்த்து வைத்துப் பேசினோம். முதல் நாள் போட்ட தும்மலிலிருந்து முந்தைய நாள் படித்த புத்தகம் வரை அவ்வளவையும் பேசியாகி விட்டது. அவரும் அது போலவே! ஜலதோஷத்தில் ஆரம்பித்து பிரணாப் முகர்ஜியில் போய் தான் முடித்தார்.
பேசும் போது இடையில் ஒரு வார்த்தை சொன்னார். கல்வெட்டில் பொறித்து வைத்துக் கொள்ளலாம்: 'எப்பேர்ப்பட்ட அப்பாக்களும் மகள்களுக்கு மென்மையானவர்கள் மை டியர்' என்று ஆங்கிலத்தில் சொன்னார்.
மேற்சொன்னவையெல்லாம் என் சாகர் அங்கிளின் அறிமுகம் மட்டுமே! ஆனால் நான் சொல்ல வந்த விஷயமே வேறு!
சாகர் அங்கிளுக்கு 'வாடா என் நல்ல பெண்ணே!' என்பதைத் தவிர வேறு தமிழ் தெரியாது. எனக்கு 'மேரே நாம் கியா ஹே' என்பதைத் தவிர வேறு இந்தி தெரியாது.
பலமொழிகள் கற்றுக் கொள்வதைப் பற்றி (ஆங்கிலத்தில்) பேசிக் கொண்டிருக்கும் போது கேட்டார்: "Baby! Do you know 'SUBRAMANYA BHARATHI'?" என்றார். எனக்கு ஒரு கணம் பூமி காலடியில் நழுவியது. 'என்ன கேட்டேங்க அங்கிள்?' என்றேன். அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டுத் தொடர்ந்தார். 'How many languages he knew?' என்று என்னமோ தொடர்ந்தார். நான் விழிகள் வியக்க அவர் வாயையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். 'What baby?' என்ற பிறகு தான் பிரக்ஞ்யே வந்தது.
தமிழ் என்பதே தெரியாத ஒருவருக்குப் பாரதி தெரிகிறது. அப்படியானால் தமிழர்கள் நமக்கு அவனைப் பற்றி எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? ஹ்ம்ம்..
சாகர் என்றால் கடல் என்று பொருள். உண்மை தான். என் சாகர் ஓர் அறிவுக் கடல். அது மட்டுமல்லாமல் அவர் அன்பிலும் கடல். கடலின் எல்லை கண்களுக்குப் புலப்படாது. நான் அதனுள்ளே போக முடியாது. கரையில் நின்றே ரசிக்க முடியும். ஆனால் அவர் அன்பலைகள் எனை வந்து போகும் ஓய்வில்லாமல். என் கரை நனைந்து கிடக்கும் சோர்வில்லாமல்.
அடச்சீ! இதென்ன அதிசயமா? அவர் அறிவும் அன்பும் எப்படி வந்ததாம்? என் அப்பாவின் தோற்றம் தந்ததல்லவா அது! இல்லையா பின்னே?!
No comments:
Post a Comment