Saturday, 8 February 2014

தோழிக்கு ஒரு கடிதம்: நூல் அறிமுகம் - செடல்

அன்புள்ள ராஜி,

உன்னுடன் பேசி மாதக்கணக்காகி விட்டது. நலம் தானே?

விஷயம் வேறு ஒன்றுமில்லை. வழக்கம் போல, நான் படித்த புத்தகம் பற்றிச் சில வார்த்தைகளை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 10, 12 நாட்களாக ஓர் அருமையான புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். நேற்றுக் காலையில் தான் முழுவதும் முடித்தேன். கையோடு உனக்குக் கடிதமும் எழுதி விட்டால் தான் படித்தது முழுமை பெறும்.

புத்தகத்தின் பெயர்: "செடல்"
ஆசிரியர்: இமையம்
வெளியீடு: க்ரியா பதிப்பகம்

                                                 

என்ன இது 'செடல்'? 'வித்தியாசமான பெயராக இருக்கிறதே' என்று உன் புருவங்கள் உச்சி தொட்டு இறங்கி வருவது எனக்குத் தெரிகிறது. செடல் என்றால் ராட்டினமாம். மெரீனா பீச்சில் பார்த்திருப்பாய்.

பொட்டுக்கட்டுதல் என்று அறியப்படும் தேவதாசி முறை பற்றி நீ அறிந்திருப்பாய். அப்படி பொட்டுக் கட்டி விடப்பட்ட தலித் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது.

கூத்தாடிக் குடும்பத்தைச் சேர்ந்த கோபால்-பூவரும்பு தம்பதிக்கு எட்டாவது மகளாகச் செடல் பிறக்கிறாள். மகனாக எதிர்பார்த்து மகளாகிப் போனதால் வேண்டாத பிள்ளையாக வளர்கிறாள். மழை தண்ணி பொழியாமல் அந்தக் கிராமம் வறண்டு கிடக்கிறது. அதற்குக் காரணம் பொட்டுக்கட்டி விடாதது தான் என்று சில "அறிவுஜீவிகள்" கண்டுபிடிக்கிறார்கள்.

பொதுவாக தலித் ஜாதியினரை, அதிலும் குறிப்பாக கூத்தாடிப் பரம்பரையைச் சேர்ந்த கன்னிப் பெண்களையோ அல்லது சிறுமிகளையோ தான் பொட்டுக் கட்டி விடுவார்களாம். அப்படிப் பொட்டுக் கட்டி விடப்பட்டவர்களுக்குத் திருமண வாழ்வு மறுக்கப்படுகிறது. அந்த ஊர்ச் செல்லியம்மன் கோவிலில் பள்ளுப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, திருவிழாவின் போது செல்லப் புள்ள ஆட்டம் எல்லாம் ஆட வேண்டுமாம். தங்கள் ஒரு கிராமத்துக்கு மட்டுமல்ல, சுற்றியுள்ள 18 கிராமங்களிலும் திருவிழாவிற்கு இவர்கள் தான் பள்ளுப் பாடி ஆரம்பிக்க வேண்டுமாம். அதுவும் போக, ஊரில் குழந்தைகள் பிறந்தால் தாலாட்டுப் பாடுவது, எழவு விழுந்தால் ஒப்பாரி வைப்பது, அம்மை நோய் கண்டவர்களுக்குப் பாடுவது போன்றவை அவர்களின் வேலைகள். அவர்களுக்குத் திருவிழாவின் போது, நெல், வரகு போன்ற தானியங்கள், துணிமணிகள், அரிசிச் சோறு போன்றவற்றை ஊர்க்காரர்கள் தர வேண்டுமாம். அது போல "விசேஷ" வீடுகளுக்குப் பாடப் போகும் போது, அந்தந்த வீட்டுக்காரர்கள் முடிந்ததைச் செய்வார்கள். இப்படித் தங்கள் ஒரு மகளாவது வயிறாற சாப்பிடட்டுமென்று தாங்களே முன்வந்து தங்கள் பிள்ளைகளை பொட்டுக் கட்டி விடுவார்களாம்.

கோபால்-பூவரும்பு சம்மதத்தையும் மீறி செடல் பொட்டுக் கட்டப்படுகிறாள். அதுவும் அவள் சிறுமியாக இருக்கும் போதே! தான் பொட்டுக் கட்டப்படுகிறோம் என்பதே அறியாதவளாக இருக்கிறாள். அவளைக் கோவிலுக்கருகில் ஒரு சிறு வீட்டில் போட்டு, ஒரு கிழவியின் கண்காணிப்பில் தனது தாய், தந்தை, உடன்பிறந்தவர்களிடமிருந்து பிரித்து வைக்கப்படுகிறாள். அங்கிருந்து ஆரம்பமாகிறது அவள் தனிமைப்பட்டு நிற்பது. நாவலின் கடைசி வரை எந்தப் பிடிமானமும் இல்லாமல் அவள் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனிமைப்படுத்தப்படுகிறாள்.

செடலிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவள் பெற்றோர்கள் பிழைப்புத் தேடிக் கண்டிக்குச் சென்று விடுகிறார்கள். அது நாள் முதல், கிழவியின் வசைகளுக்கு ஆளாகி, அது தான் விதி என்று ஏற்றுக் கொண்டு காலம் கழிகிறது.

கிழவி இறந்த பின்னான இரக்கமற்ற ஒரு மழை நாளில் செடல் பெரிய பெண்ணாகிறாள். அப்பொழுது பார்த்து அவள் வீடும் இடிந்து விழுந்து விடுகிறது. அவள் சொந்தக்காரர்களிடம் புகலிடம் கிடைக்கவில்லை. அண்டிக் கொள்ள இடம் தேடி, அறங்காவலர், கோவில் பூசாரி போன்ற ஆதிக்கக்காரர்களின் வீடுகளில் அவள் அலைவது கொடுமை. கோவில் பூசாரியிடம், தான் பெரியவளாய் ஆகி விட்டதை அவள் சொல்லுமிடத்தைப் படிக்கும் போது, மனதில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்ட கனம் இருந்தது.

தனிமை எவ்வளவு கொடுமையானது ராஜி. எல்லாரும் இருந்தும், எல்லாமும் இருந்தும், இன்னும் ஒவ்வொரு மாத வலிகளின் போதும் அப்பாவின் அரவணைப்பு என்ற ஒன்று எவ்வளவு அவசியப்படுகிறது நமக்கு! எனக்கெல்லாம் அவர் போனை எடுக்கக் கொஞ்சம் கால தாமதம் ஆனாலும் மரணத்தின் வாயிற் கதவைத் தட்டி விட்டு வரும் துன்பமிருக்கும். நமக்கு எல்லோரும் இருந்துமே இப்படியென்றால், யாருமில்லாத, எதுவுமில்லாத செடல் என்ன பாடுபட்டிருப்பாள்! இதை எழுதும் போதே எனக்குக் கையெல்லாம் நடுங்குகிறது ராஜி.

அந்த நேரம் பார்த்து அவளின் சொந்தக்காரனான பொன்னன் தன்னுடன் அழைக்கிறான். விரக்தியில் யாருக்கும் தெரியாமல் பொன்னனுடன் அவன் கிராமத்தை நோக்கி நடக்கிறாள். இத்துடன் நாவலின் முதல் பகுதி முடிகிறது.

முதல் பகுதி முழுவதும் சிறுமியாய் இருந்த செடல், இரண்டாம் பகுதியில் இளம் பெண்ணாக ஆகிறாள். அவளோடு சேர்ந்து அவள் பிரச்சனைகளும் வளர்கிறது. தவிர்க்க முடியாத சூழலில், 'கூத்தாடி' பொன்னனுக்கு உதவப் போக, கூத்து அவளை விடாமல் பிடித்துக் கொள்கிறது, அடுத்தடுத்த கட்டங்களில். 'பொன்னன் செட்டு' என்ற பெயர் போய் 'செடல் செட்டு' என்றாகிறது - அவள் திறமையாலும், பெண் என்ற பெயரினாலும்.

சின்னச் செடியாய் இருக்கும் போதே, பிடுங்கிப் போட நேரம் பார்க்கும் உலகம், கனி விளைந்த மரமாய் இருக்கும் போது கையைக் கட்டிக் கொண்டிருக்குமா? ஆடவர்களின் கண்களிலிருந்தும், கைகளிலிருந்தும் அவளைக் காத்துக் கொள்ளப் பெரும் போராட்டமாக இருக்கிறது. அவள் தனிமையை, வறுமையை, பாதுகாப்பின்மையைக் குறி வைத்து எத்தனை கோட்டான்கள்! அவற்றிற்கு, தன் உடல் தேவைகளுக்கு, உணர்வு மயக்கங்களுக்கு அவள் பலியாகாமல் 'தன்னைக்' காத்து வந்தாலும் அவளை நோக்கி எய்யப்பட்ட வசை அம்புகள் எத்தனை, எத்தனை! படிக்கும் நமக்கே அயற்சியாக இருக்கிறது. இந்தப் பகுதியில் தொப்பளான், ஆரான், விட்டம், விருத்தாம்பாள் என நிறைய கேரக்டர்கள். பொன்னன் இறந்து, 'செடல் செட்டு' இரண்டாய்ப் பிரிந்த பின், அவள் சகோதரியும் மகனும் பழையபடி கிராமத்துக்கே அழைக்கிறார்கள். வேறு வழியின்றி அவர்களுடன் புறப்படுகிறாள். அதனுடன் இரண்டாம் அத்தியாயம் முடிவு பெறுகிறது.

மீண்டும் சொந்த மண்ணில் ஜாதி ஜனங்களோடு இருக்கலாம் என்று தவிப்பில் வரும் செடலுக்குக் கிடைப்பதென்னவோ புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே! வனமயிலின் மகன் பரஞ்சோதியுடன் ஒரு பிடிமானத்திற்கு ஏங்கி நிற்கும் போது, அவனும் மாதா கோவிலில் சேர்ந்து கொள்கிறான். கிறிஸ்துவத்தின் அறிமுகம் தலித் மக்களிடம் எந்தெந்த சூழ்நிலைகளில் உள்நுழைகிறது என்பது நாவலில் ஆங்கங்கே ஊடு பாவாய் ஓடியிருக்கிறது. இப்படி யாருமற்றவளாய் இருக்கும் போது, தன்னைப் போன்ற பொட்டுக் கட்டி விடப்பட்ட உடல் நலமில்லாத கூத்தாடியான பாஞ்சாலியுடன் அவளது வாழ்க்கை தொடர்கிறது. சில நாட்கள் அவளுக்கு ஆறுதலாக இருக்கலாம். அதன் பின் அவள் என்னாவாள்? அவளின் எதிர்காலம் என்னவாகும்? இந்த நாவலின் பல கேரக்டர்கள் அடிக்கடி சொல்வது போல், அவள் கண்ணை மூடிய பின், அவளைக் குழியில் தள்ள யார் இருப்பார்கள்? இது போன்ற கேள்விகளைக் கேட்காமல் கேட்டு முடிகிறது நாவல்.

செடல் - வாழ்க்கை முழுக்க வெறுமையைச் சுமந்து கொண்டிருப்பவள் கதை; சமுதாயப் பழக்க வழக்கம் என்ற பெயரில் அவள் வாழ்வைச் சீர்குலைத்த கதை; ஆதிக்க வெறி தலித் மக்களின் மேல் அளவின்றிப் பொழிந்த கதை;

நாவலின் மொழி நடை பல இடங்களில் மனதைப் பிசையும். களங்களைக்  காட்சிப்படுத்துதலில் இமையத்தின் திறமை இமய அளவு. கூத்துப் பாட்டுக்கள் இரண்டாம் பகுதியில் அதிகம் வருகிறது. அவை நம்மைப் போன்ற 'கூத்து' என்பதை அறியாத தலைமுறையினருக்கு வித்தியாசமாகவும் ரசனையாகவும் இருக்கிறது.

படித்துப் பார்! உன் இதயத்தின் கதவுகள் அனைத்தையும் இறுக மூடிக் கொண்டு படித்தாலும், ஒரு கணமேனும் உன்னை உருக்குலைய வைக்கும் அவள் படும் பாடு!

அன்புடன்,
மகிழ்வதனா,
கற்பனையூர்

No comments:

Post a Comment