Sunday, 9 February 2014

தோழிக்கு ஒரு கடிதம்: நூல் அறிமுகம் - அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

அன்புள்ள ராஜி,

இன்று ஒரே சிட்டிங்-இல் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தேன். அந்த அனுபவத்தை வார்த்தைகளில் வடிப்பதில் நான் நிச்சயம் தோற்றுத் தான் போவேன். இருந்தாலும் உன்னிடம் சில வார்த்தைகளிலாவது சொல்லித் தான் ஆக வேண்டும். புத்தகத்தைப் படித்து முடிக்க என்னவோ இரண்டரை மணி நேரம் தான் ஆகியது. ஆனால் இது சொல்லும் விஷயங்களைப் புரிந்து கொள்ளவும் கிரகிக்கவும் வருடங்கள் பிடிக்கும். ஏன், நம்மால் புரிந்து கொள்ளப்படாமலே கூட போகலாம். அப்படியானதொரு புத்தகம் இது.

புத்தகத்தின் பெயர்: அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

ஆசிரியர்: மிகைல் நைமி. தமிழில்: கவிஞர் புவியரசு

வெளியீடு: விஜயா பதிப்பகம்
                                                                     

இந்தப் புத்தகத்தை எந்த வகைக்குள் சேர்ப்பது என்பதில் எனக்குப் பெரும் குழப்பம் இருக்கிறது. இது நாவலா, கதையா, சித்தாந்த நூலா, உண்மைச் சம்பவமா, புனைவா? தெரியவில்லை. வேண்டுமென்றால் புரிந்து கொள்வதற்கு எளிதாக 'வாழ்க்கை குறித்தான தேடல்' எனச் சொல்வது ஓரளவு பொருந்தும்.

நைமி லெபனான் நாட்டு எழுத்தாளர். அவருக்கு ஊரை விட்டு ஓடி வந்து டீ பாரில் வேலை பார்த்த அம்மை முகத்தான் ஒருவனின் நாட்குறிப்பு கிடைக்கிறது. அதில் காணப்படும் சம்பவங்களும், எண்ணவோட்டங்களும், தேடல்களுமே இந்தப் புத்தகம். (The Pitted face என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம்)

எல்லாம் அறிந்தவர்களின் மொழி மௌனம் என்று ஓஷோ சொல்கிறார். இங்கு எல்லாம் தேடுபவர்களின் மொழியும் மௌனம் என்று அம்மை முகத்தான் வாயிலாக நமக்குத் தெரிகிறது.

தான் யார்? என்ற கேள்வியின் வழி, வாழ்க்கைக் கூறுகளைத் தனக்குள்- தன் மௌனத்திற்குள் - விவாதிக்கிறான், அம்மை முகத்தான்(இனி, அ.மு என வரும்).

"மற்றவர்கள் மகிழ்ச்சிப்படுவது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பது ஆச்சர்யமல்ல. மற்றவர்கள் துக்கப்படுவதும் தனக்குத் துக்கம் தரவில்லை" என்று உலகத்திலிருந்தும், "மனதைக் கொண்டிருக்கும் ஓர் உடலல்ல நான், மாறாக ஓர் உடலைக் கொண்டிருக்கும் மனம்" என்று தன்னிடமிருந்தும் தனித்து நிற்கிறான். எதன் மீதும் ஒரு பற்றில்லாமல், அதே நேரத்தில் அனைத்தையும் சமமாய் அன்பு பாவிக்கும் ஆத்மாவாக அ.முவின் எண்ணங்கள் இருக்கின்றன.

மனிதர்களின் மனத்தில் எல்லைக்கோட்டைப் போடும் தேசங்களின் பிரிவினை குறித்த அவனது சிந்தனை சாதாரணர்களுக்கு வாய்க்காது. நாடு என்ற வரையறைக்குள் நின்று கொள்ள அவன் தயாரில்லை. இந்த பிரபஞ்சம் முழுதும் அவனுக்கானது என்கிறான். அதே நேரத்தில் தன் ஆத்மாவும் உடலும் கூட தன்னுடையதில்லை, தன் இரத்தம், தசை, உணர்ச்சிகள் எல்லாவற்றிலும் உலகத்தவர் பங்கும் உள்ளது என்று சொல்வது என்ன அழகான சிந்தனை!

எதன் மீதும் பற்றுக் கொள்ளாதவனான அவனுக்குமே ஒரு கட்டத்தில் அந்த பாருக்கு வரும் சென்னா செரிப் என்பவருடன் ஒரு சின்ன இணக்கம் ஏற்படுகிறது. தன் அறையில் இருக்கும் பூனையையும் தோழனாய்ப் பாவிக்கும் மனமும் இருக்கிறது. நூலின் இந்த மாதிரியான இடங்கள் பெரும் சிந்தனைக்குரியவை. அவற்றை வார்த்தைகளில் விளக்கவே முடியாது.

வாழ்க்கை போர்க்களம் என்று சொல்லித் திரியும் நமக்கு அது உலைக்களமில்லையா என்று எதிர்வாதம் வைக்கிறான். போர்க்களங்கள் மரணத்தைக் கொண்டு செலுத்தும். உலைக்களங்கள் உலோகத்தின் அழுக்கையெல்லாம் களைந்து புதியவைகளைக் கொண்டு வருமல்லவா என்பது வாழ்க்கை குறித்த வேறுபட்ட, நுட்பமான கோணம்.

மொழி மனிதனுக்கானது. அவற்றை மனிதன் தான் ஆள வேண்டும். அது மனிதனை ஆளும் நிலை வரக்கூடாது என்கிறான்.

மரணத்திற்கும் அ.மு க்கும் மற்றும் அ.முவிற்கும் பூனைக்குமிடையே நிகழும் மரணம் பற்றிய உரையாடல்கள் அர்த்தம் நிறைந்தவை. அவற்றை முழுதாய்ப் புரிந்து கொள்ள எனக்கு முதிர்ச்சி பத்தாது. ஆனால் அவனது ஒரு கேள்வி மிகவும் முக்கியமானது. 'மரணத்துடன் ஏன் வேதனை தொடர்பு கொண்டதாக இருக்கிறது? வேதனையைத் தவிர, வேறு ஒரு படைத்தலைவன் மரணத்திடம் இருந்தால், அதனைக் கண்டு உலகம் இவ்வளவு அச்சப்படாது. இவ்வளவு வெறுப்புக் காட்டாது' என்கிறான். இதே கருத்தை எளிய நடையில், 'பிரச்சனை மரணமல்ல, வலிகள்' என்று மாலன் எழுதியிருப்பார்.

'உன் உயிலை எழுதிவிடு' - இந்த 3 வார்த்தைகளுக்குள் எவ்வளவு அர்த்தங்கள்!

இறுதியாக அவன் தன் உயிலைப் புழுக்களுக்கு எழுதி வைக்கிறான். நூலில் அந்த இடம், அடடா! அத்தனை அற்புதம்! பொதுவாக மனதைத் தொட்ட வரிகளுக்கு அடிக்கோடிட்டு வைப்பது என் வழக்கம். புத்தகம் இந்த ஐந்தாறு பக்கங்களுக்கு ரூல்டு நோட்டாகத் தான் மாறிப் போனது.

இறுதியில் ஒரு சின்ன முடிச்சுடன் நூல் முடிகிறது. அதெல்லாம் உண்மையா, புனைவா என்னவென்று தெளிவுபடுத்தப்படவில்லை. சொல்லப் போனால் அந்தத் தெளிவு தேவையுமில்லை.

மொத்தத்தில் இந்த நூல், வாழ்க்கையை - அதன் கூறுகளை - ஞானி மனநிலையில் ஆராய்கிறது. சில விஷயங்கள் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சில கருத்துக்கள் அதன் அடர்த்தி காரணமாக முழுதாகப் புரிந்து கொள்ள முடியவிலலை. அது தவறில்லை. இது ஒரு இரவில் வாசித்து, படித்ததாய் முடித்து விடும் நூல் அல்ல. மாடு அசைபோடுவது போல், மெல்ல மெல்ல மனம் அசை போட்டுப் பார்க்க வேண்டிய பெட்டகம் இது. இன்று எனக்குப் புரியாதவைகள், அடுத்த வாசிப்பில் புரியலாம். முழுதாய்ப் புரிய முதிர்ந்த மனம் வேண்டும். அது நம் வாழ்நாளில் கிடைக்குமாயின் நாம் புண்ணியாத்மாக்கள்.

நான் முதலிலேயே சொன்னது போல, இந்த நூல் அனுபவம் குறித்து என் மனதில் எழுந்ததையெல்லாம் என்னால் வார்த்தைகளில் விளக்கும் பக்குவம் எனக்கு இருக்கவில்லை. அதையும் நைமியின் வரிகளிலேயே சொன்னால்,

'வெளிப்பாடு தான் நோக்கத்தைத் திருத்தி ஏமாற்றி விடுகிறது. நான் நினைத்தது இதுவல்ல'

அன்புடன்,
மகிழ்வதனா,
கற்பனையூர்
 

No comments:

Post a Comment