Sunday 27 January 2013

அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் – புத்தகவிமர்சனம்

அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்  |  avargal ulle irukirarkal  |  
மனம் மயங்கும் மாலை அது. சூரியனின் காய்ச்சலுக்கு மேகங்கள் போட்ட பத்தைப் போல் மெத்தென்று இருந்தது வானம்.

புதிதாய்க் கட்டிய தாலியின் மஞ்சள் வாசம் அவனுக்குள் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியிருக்க, காதலுடன் அவள் கைகோர்த்துக் கேட்டாள் – ‘என்னை நிஜமாவே பிடிச்சுருக்கா?’. எல்லாப் பெண்களும் தன் கணவனிடம் கேட்கும் அதே முதல் கேள்வி. ‘என்னடி கேள்வி இது! பைத்தியம்’-அன்பின் கணவன்.

மூச்சு இரைக்க இரைக்க ஓடித் தன் தம்பியை விரட்டிப் பிடித்தே விட்டாள். ‘டேய் அந்த மிட்டாய் என் பங்கு. உனக்கு தான் அப்பா அப்பவே குடுத்துட்டார்ல! ஒழுங்கு மரியாதையா என் கிட்ட இத குடுத்திரு’ என்றிரைந்தாள். வசமாக மாட்டி விட்டான் சுட்டிப்பையன்-ஆனாலும் குறும்புக்காரன்-ஒரே விழுங்காக விழுங்கிவிட்டான்.’போடா! பைத்தியக்காரா!’-இது அக்கா!

‘இதோ பார்! அந்த வேலையெல்லாம் சரிப்பட்டு வராது.வேற என் தகுதிக்குத் தக்கன வேலையிருந்தால் சொல்லு.முயற்சி பண்றேன்’-என்றவன் போனபிறகு ‘சரியான பைத்தியம்டா இந்தாளு!’ – நண்பனின் கணிப்பு.

‘இந்த உலகம் நான் வாழத் தகுதியற்றது.இதன் ஒவ்வொரு விழுமியங்களும் சாமானியனுக்கு எதிரானவை. நான் எதிர்நோக்கும் உலகம் வேறு.அங்கு ஆசைகளைவிட அன்பே பிரதானமாகயிருக்கும். என் இல்லத்தைப் பொருட்களைவிட உணர்வுகள் ஆட்சி செய்யும்.அதைத் தேடி ஓடுகிறேன்.உங்கள் மொழியில் உயிர்துறக்கிறேன்!’ – கடிதம் கண்டு சுற்றம் சொன்னது ‘அவருக்கென்ன பைத்தியமா!’

இப்படி ஒவ்வொரு ‘பைத்தியமா’ என்ற கேள்விக்குள்ளும் ஒவ்வொரு கதை இருக்கும்.அதைத் தான் விளக்க முயற்சிக்கிறது இந்தப் புத்தகம். ஜெயகாந்தன் என்னும் பேராளுமையின் கைவண்ணத்தில் ஜொலிக்கிறது. மூன்று அத்தியாயங்களாகப் பிரிகிறது. விகடனில் வெளியான ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’, தினமணிக்கதிரில் எழுதிய ‘சிலர் உள்ளே இருக்கிறார்கள்’ மற்றும் ‘நான் சந்தித்த இவர்கள்’ என்ற கட்டுரைகளின் தொகுப்பு.

மனநோயாளிகளின்–நம் பாஷையில் பைத்தியங்களின்-வாழ்வைப் படம்பிடித்திருக்கிறார்.எதனால் அவர்கள் இப்படி ஆனார்கள், எந்த மாதிரியான சூழ்நிலை அவர்களை இப்படி மாற்றியது,இதிலிருந்து அவர்கள் விடுபட முடிகிறதா, இவர்கள் இப்படி ஆனதற்குச் சமுதாயமும் ஒரு காரணமா என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கிறது இந்த அத்தியாயத்தில். கண்ணியம் குறையாமல், அவர்களின் ஊர், பேர் தகவல்கள் வெளியிடாமல் சிறப்பாக எழுதியிருப்பது, ஆசிரியர் இதை ஒரு சமூகப்பணியெனச் சிரத்தை கொண்டு செய்திருப்பதற்கான சான்று.

போன அத்தியாயம் உள்ளே இருக்கும் பைத்தியங்கள் பற்றியது. அடுத்த அத்தியாயமான ‘சிலர் வெளியே இருக்கிறார்கள்’ என்பது வெளியிலிருக்கும் பைத்தியங்கள் பற்றியது. உள்ளே இருப்பவர்கள் செய்யும் அத்தனை செயல்களையும் வெளியே இருப்பவர்கள் செய்கிறார்கள்.ஒரு வித்தியாசம் என்னவென்றால் அவர்கள், தான் என்ன செய்கிறோமென்று தெரியாததால் பைத்தியமானவர்கள்.இவர்கள் எல்லாம் தெரிந்தும் செய்பவர்கள்.எல்லாரையும் சந்தேகப்படும்-சினிமா வாய்ப்பு தேடி அலையும் ஒருவர், எல்லாப் பெண்களும் தன்னை நேசிப்பதாய் நினைக்கும் ஒருவர், அடுத்தவர் தரும் காசிலேயே செம்மையாக வாழ்வோர், முதுமையின் பிடியில் அன்புக்கு ஏங்கும் தாத்தா, யார் இறப்புக்கும் ஒப்பாரி வைக்கும் அத்தை என்று சமூகத்தில் நாம் தினமும் பார்க்கும் அத்தனை மனிதர்களையும், அவர்தம் பைத்தியக்கார குணங்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ஆசிரியர்.

எளிமையிலும் மனம் பிறழாத மனிதர்கள், ஊருக்கு உதவுவதே லட்சியம் என்றிருக்கும் சாமானியர்கள், ஒற்றை ஆளாய் குடும்பத்தைத் தாங்கும் ஆயாக்கள், நல்ல காலம் வருமனென்ற நம்பிக்கையிலேயே காலத்தை ஓட்டும் குடும்பங்கள், விசுவாசம் பெரிதென்று வாழும் முந்தைய தலைமுறை உள்ளங்கள் ஆகிய நல்ல மனிதர்களின் பக்கங்களையும் ‘நான் சந்தித்த மனிதர்களில்’ எடுத்துரைத்திருப்பது புத்தகத்திற்கு கூடுதல் கனம் சேர்க்கிறது.

ஜெயகாந்தன் என்ற ஒரு விஷயமே போதும் இந்தப் புத்தகத்தை நம்பி வாங்குவற்கு. அவர் எப்பொழுதும் வாசகர்களை ஏமாற்றுவதில்லை-எனக்குத் தெரிந்தவரையில்! ஆனால் ஒன்று நிச்சயம்.இந்நூலைப் படித்த பின், தெருவில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் கண்டால், முந்தைய அருவெருப்பு நமக்கு வராது. குறைந்தபட்சம் ஏன் இந்த நிலைக்குப் போனார்கள் என்ற கேள்வியாவது எழும் 2 நிமிடம். இனி ‘பைத்தியம்’ என்ற வார்த்தையினை பிறரைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் போது மனதில் ஒரு குற்றஉணர்வு எழும். அத்தகைய ஆற்றல் நிறைந்த புத்தகம் – ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’

ஆசிரியர்: திரு.ஜெயகாந்தன்
விலை: ரூ.50/-
பதிப்பகம்: மீனாட்சி புத்தக நிலையம்

4 comments:

  1. புத்தக தேர்வு

    அதனை உள்வாங்கியது

    அதனை விமர்சனம் செய்தது

    அனைத்தும் -

    சிறப்பு

    ReplyDelete
  2. நண்பரே
    தளங்களை அறிமுகப்படுத்தும் ஒரு தளமாக இருக்கும் 'கன்னிமாரா' என்ற தளத்தில் நான் எழுதிய கட்டுரைக்குத் தொடர்புள்ளதாக இருந்ததால் உங்களின் இந்தப் பதிவின் சுட்டியை அங்கு இணைத்துள்ளேன்.
    சுட்டி: http://kannimaralibrary.co.in/thudi-014/
    உங்கள் கருத்துக்கள் எதுவும் இருப்பின் அங்கு பகிரலாம்.
    நன்றி
    துடிமன்னன்

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பருக்கு,

      வணக்கம். நீங்கள் அனுப்பிய இந்த லிங்க் ஓபன் ஆகவில்லை. மன்னிக்க.

      இராஜிசங்கர்

      Delete