Sunday 20 January 2013

அவள் என் தேவதை


பன்னிரெண்டு மணி நேரப் பேருந்துப்பயணம் கூட அத்தனை கடினமில்லை. விடுதியிலிருந்து ‘தாயகம்’(!) திரும்புவதற்கு சாந்திநகர் பேருந்துநிலையம் வந்து சேர்வதற்குள் ஆறு கடல்கள், ஏழு மலைகள் தாண்ட, செய்யும் அத்தனை சாகசங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது-இந்த பாழாய்ப் போன பெங்களூரில். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சாலைகளைக் கடந்து, அவசரமாய் உரசிச் செல்லும் கார்களிலிருந்து லாவகமாய் விலகி, ஆட்டோக்காரர்களிடம் சமாதான உடன்படிக்கை செய்து, வெள்ளிக்கிழமை மாலைகளில் பேருந்துநிலையம் வந்து சேர்வதற்குள் பர்ஸும் உசிரும் மெலிந்துபோய் விடுகிறது.

அன்றும் அதேபோல் ஒரு பேருந்துப்பயணம்.எனக்கென ஒதுக்கப்பட்ட  இருக்கையில் உட்கார்ந்த பின்புதான் ‘உஸ்’ஸென்று மூச்சுவிட முடிந்தது.அந்தப் பேருந்தில் அம்மா-அப்பா-6 வயதுக் குழந்தை கொண்ட ஒரு குடும்பம் ஏறியது.நசநசவென்று பேசிக்கொண்டிருந்த குழந்தை அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.குழந்தைகளின் உலகம்தான் எத்தனை ரசிப்பிற்குரியது! அடுத்த நிறுத்தத்தில் ஏறிய நரை விழுந்து, தோல் சுருங்கிய மூதாட்டி ஒருவர் அந்தக் குழந்தைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தார். அவ்வளவுதான். அக்குழந்தையின் குதூகலம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. இந்தக் குழந்தை என்றில்லை, இக்காலத்துக் குழந்தைகள் பெரும்பாலும் மூத்த குடிமக்களிடம் இலகுவாகப் பழகுவதில்லை. ஏன் இந்த நிலை?தலைமுறை இடைவெளி காரணமா?வேலையின் பொருட்டு, திருமணமானது முதல் தனிக்குடித்தனமாகவே இருந்ததால் அவர்கள் பிள்ளைகளுக்குத் தாத்தா, பாட்டிகள் முக்கியத்துவம் தெரியவில்லையா?கார்ட்டூன் சேனல்களுக்கும் வீடியோ கேம்களுக்கும் இடையே தாத்தா, பாட்டிகளைக் கண்டுகொள்ள நேரமில்லையா?
என் குழந்தைப் பருவம் அப்படியில்லை.தாத்தாக்களும் பாட்டிகளும் நிறைந்த பருவமாய்த் தான் இருந்தது.கதை சொல்லும் பாட்டிகள், காமெடி பண்ணும் பாட்டிகள், கண்ணில் படுவோரையெல்லாம் வசைபாடும் பாட்டிகள், எப்பொழுதும் சோகமாகவே இருக்கும் பாட்டிகள், வயது தடையாயில்லாமல் மாடாய் உழைக்கும் பாட்டிகள், வம்புச் சண்டை பேசியே நேரம் போக்கும் பாட்டிகள் என்று பாட்டிகளில் தான் எத்தனை வகைகள்! என் (அம்மா)பாட்டி உமையாள் பார்வதி இவையெல்லாம் சேர்ந்த கலவை.அள்ளி முடித்த கொண்டையும் கொசுவம் வைத்த சேலையும் கட்டி அவள் இளவயதில் நடந்து வரும் அழகை இன்னும் பக்கத்துவீட்டுப் பெரியம்மா சொல்வார்.அவளைப் பற்றி ஏனோ எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.
என் சிறுவயதில் அத்தனை பிணைப்பு இருந்ததில்லை எனக்கும் என் பாட்டிக்குமிடையே! நான், என் தங்கை கோகி, என் மாமன்மார்கள் தவம், ரவி அனைவரும் ஒன்றாய்தான் வளர்ந்தோம்.ஒரு குறிப்பிட்ட வயது வரை நானும் என் தங்கையும் அவளுக்குப் பெரிய தலைவலியாகத் தான் இருந்திருந்தோம்.இரண்டும் பெண்பிள்ளைகளாய்ப் போனதில் அவளுக்கு உள்ளூர ஒரு வருத்தம் இருந்திருக்கலாம்.இல்லை நாங்கள் பண்ணும் சேட்டைகளில் மனம் சலித்துப்போய் இருக்கலாம்.நாங்கள் வளர வளர அவள் நேசமும் வளர்ந்து விட்டது.குறிப்பாக நான் பெரிய பெண்ணாய் ஆன பிறகு, என் மேல் எத்தனை பாசம் வைத்திருந்தாள்! சரியாக வேலை செய்வதெல்லாம் கிடையாது.எப்பவும் இதற்காக என் தாத்தாவிடம் திட்டு வாங்கிக்கொண்டிருப்பாள்.’காப்பி’ வாங்கி வர பத்து ருபாய் எடுத்துச் சென்றால் மீதி 6 ரூபாய் தாத்தாவிற்குத் திரும்பவே திரும்பாது எக்காலமும்.அப்படிச் சேர்த்துவைத்த காசுகள் எல்லாம் பழமோ, பூவோ ஏதோ ஒரு வடிவில் எங்களைத்தான் வந்தடையும்.வேண்டாமென்று எத்தனை முறை அம்மா சொன்னாலும் கண்டுகொள்ளவே மாட்டாள்.பண்டிகை நாள் என்றால் போதும் கடையில் கடன் சொல்லி பாவாடை சட்டை எடுத்துக் கொண்டு வந்துவிடுவாள்.சுடிதார் போட ஆரம்பித்தபின்பு தான் அந்த வழக்கம் குறைந்தது.
பாட்டிவீட்டில் விளையாடிவிட்டு 7 மணி ஆனதும் அங்கேயே தூங்கிவிடுவோம்.இரவு அப்பா தூக்கத்தில் எழுப்பி கூட்டிச்செல்ல வருவார்.அப்பாகூடத்தான் வீடு திரும்புவேன்.இருப்பினும் துணைக்கு வீடு வரை என் மாமனை அனுப்பி விடுவாள்.அவ்வளவு கரிசனம் இருக்கும் அவள் செய்கைகளில்.நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். போதாக்குறைக்கு கீழே விழுந்து கால் ஒடிந்து கிடந்தாள்-கடைசிக்காலங்களில்.அப்பொழுது நடந்த ஒரு சம்பவம் எங்களால் என்றுமே மறக்க முடியாதது.ஆஸ்பத்திரிச் செலவு, குடும்பச்செலவு என்று அந்த மாதம் சரியான பணக்கஷ்டம் எங்கள் இருவர் குடும்பத்திலும்.கடுகு டப்பா, அஞ்சரைப்பெட்டிகளில் சில்லறைக்காசு பதுக்கிவைக்கும் பழக்கம் என் பாட்டிக்கு இருந்தது(சிறுவயதில் அது தான் எங்கள் கருவூலம் – அம்மாவுக்குத் தெரியாத ஐஸ்களுக்கும், சோப்புநுரை டப்பாக்களுக்கும்).ஏதேச்சையாக அப்படித் தேடியதில் சிக்கியது ஒரு மஞ்சள் பையில் சில ரூபாய் நோட்டுக்கள்.எண்ணிப்பார்த்தோம் ஐநூறும் சொச்சமும் இருந்தது.6, 6 ருபாயாகச் சேமித்தாலும் இவ்வளவு வரும் வரை என்றைக்கும் பொறுத்திருக்க மாட்டாள்.கொஞ்சம் சேர்ந்ததும் ஏதாவது ஒரு பண்டம் வந்து விடும் வீடுதேடி.ஏன் இவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறாய் என்ற கேள்விக்கு பதில் சொன்னாலே பார்க்காலாம். ‘ ராசிக்கு (அருப்புக்கோட்டையில் போன தலைமுறைக்கு நான் இன்னும் ‘ராசி’தான்.’ராஜி’ வராது அவர்களுக்கு) வயசு ஆகுதுல்ல,அதான் ஒரு நகை நட்டு செஞ்சு போடலாம்ன்னு ரொம்ப நாள் முன்னாடி இருந்தே சேர்த்துக்கிட்டு வரேன்’ – என்றாள். 500 ருபாய்க்கு நகை நட்டு வாங்க முடியும் என்று நம்பியிருந்தாள் போல! என்ன வெள்ளந்தியான மனது! அத்தனை கஷ்டத்திலும் தாத்தாவிற்குக் கூடத் தெரியாமல் சேர்த்துவைக்க வேண்டிய அவசியம் என்ன?இத்தனைக்கும் என் அப்பா இப்படியெல்லாம் ஒன்றும் என் அம்மா வீட்டிலிருந்து எதிர்பார்ப்பவர் இல்லை.எவ்வளவு பிரியம் வைத்திருந்தாள் என் மேல்! குழாயடியில் சண்டை எல்லாம் போடுபவள் தான்.ஆனால் குணக்காரி!
அவளின் கடைசிக்காலங்களை என்னால் மறக்கவே முடியாது.நீரிழிவு நோய் வந்தால்தான் போதுமே, மற்ற அத்தனை நோய்களையும் அதுவே இழுத்துவைத்து விடும். மாரடைப்பு, மூச்சுத் திணறல் என்று பல பிரச்சனைகளுக்காக மருத்துவமனை சென்று வந்திருக்கிறாள்.அபாயக் கண்டங்களையெல்லாம் தாண்டி பிழைத்து வந்து விடுவாள்-ஒவ்வொரு முறையும்.கால் ஒடிந்து நடக்க முடியாமல் போனது அவள் மனதில் சோர்வை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.அதன் பிறகு அவளுக்குள் ஒரு வெறுமையை என்னால் உணர முடிந்தது.தைரியம் சொல்லியும் கேலி பேசியும் நான் இருக்கும் நேரங்களில் எல்லாம் புன்னகையைக் கொண்டுவர முயன்றுகொண்டிருந்தேன்.

என் பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதி நாட்களில் – திருப்புதல் தேர்வு நடந்து கொண்டிருந்த நாட்களில் – எப்பொழுதும்போல் அவளுக்கு மூச்சுத்திணறல்.டியூசன் சென்டருக்கு பக்கத்திலுள்ள மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.’அடிக்கடி வருவதுதானே’ என்று சேர்க்கும்போது சாதாரணமாகத்தான் சேர்த்தோம்.போனமுறை போலல்லாது இந்த முறை ஆட்டோவாகட்டும் இரத்தமாகட்டும் எல்லாமே எந்த அலைச்சலுமின்றி இலகுவாகவே கிடைத்தது. நானும் கோகியும் பள்ளிமுடித்து மதியம் சென்று பார்த்தோம் (அம்மா, அப்பா அனைவரும் மருத்துவமனையில் இருந்தார்கள்).முந்தைய நாட்களை விட உடல்நலத்தில் முன்னேற்றம்  இருந்தது.சாப்பாடு வாய்க்கு விளங்கவில்லை என்று யார் சொன்னாலும் சாப்பிட மறுத்துக்கொண்டிருந்தாள்.என்னிடம் தட்டவில்லை.நான் தான் ஊட்டினேன்.அப்போதும் ‘விடு.நானாகவே சாப்பிடுகிறேன்’ என்று சொன்னவளை இழுத்து பிடித்து ஊட்டிக்கொண்டும் கிண்டல் பேசிக்கொண்டும் இருந்தோம்.பொக்கை வாய்ச் சிரிப்பு சிரிப்பாள். (லட்சுமி கடாட்சமாக இருக்கும் அந்தப் பொக்கைச் சிரிப்பு)அதற்காகவே அவளை வீண்வம்புக்கு இழுப்பது எங்கள் வழக்கம். வீட்டில் அனைவரும் அன்று மிக்க மகிழ்ச்சியில் இருந்தோம்.சரியாகி விடுவாள்.நாளை வீடு திரும்பிவிடலாம் என்று.மறுநாள் எனக்கு தாவரவியல் செய்முறைத்தேர்வு இருந்ததால் 4 மணிக்கு நானும் கோகியும் வீடு திரும்பி விட்டோம்.
இடையில் என்ன ஆனதோ தெரியாது 6 மணிக்கு எல்லாம் முடிந்து விட்டிருந்தது.கொஞ்ச நேரம் முன்பு சிரித்து விளையாடிய அந்த முகம் கலையிழந்து கிடந்தது.சில்லிட்ட அவள் கைகள் எனக்குள் ஏதோ பண்ணின.அப்பொழுது எனக்கு அழுகை வரவில்லை.அதிர்ச்சியாகத் தான் இருந்தது.அம்மா அழுத அழுகையைப் பார்த்து அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம். தவமும் ரவியும் என்ன ஆவார்கள் என்ற சோகம்.அம்மாவைச் சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயம்.இவையெல்லாம் சேர்த்து என்னை அழ விடவில்லை.எங்கள் குடும்பத்தில் என் நினைவு தெரிந்து நடந்த முதல் இற(ழ)ப்பு.அதிலிருந்து மீண்டு வர என் அம்மாவிற்கு நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டன.என் மாமா பையன் சந்தோஷ் பிறந்த பிறகுதான் அந்த இழப்பிலிருந்து முழுதாய் வெளிவந்தாள் எனலாம்.

ஆனால் என்னால் இன்னும் அவள் இறப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.அவள் இருக்கும்வரை குடும்பம் கொண்டாட்டம் நிறைந்ததாக இருந்தது.கால் ஒடிந்து ஒரு பயனுமின்றிக் கிடந்தவள் தான்.ஆனால் அவள் இருக்கும் வரை குடும்பம் ஒரு கட்டுக்கோப்பாக இருந்தது.இன்று ஆளுக்கு ஒரு திசையில்!எத்தனை பண்டிகைகள்! எத்தனை மகிழ்ச்சிகள்! அவள் இருக்கும் போது.இன்று என்ன நிலை! ஒருவர்க்கொருவர் அன்பாய்ப் பிணைந்திருந்த நாட்கள் அவை!அவள் பொக்கைவாய்ச் சிரிப்பை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் – நண்பர்களின் பாட்டிகளிடத்தும், மருத்துவமனைகளின் காத்திருப்புப் பகுதிகளிலும், குழாயடிச் சண்டைகளிலும், கோயில் கருவறைகளிலும்.

இன்றும் பண்டிகை இருக்கிறது-அவள் தரும் பாவாடைகள் இல்லாமல்;அஞ்சரைப்பெட்டி இருக்கிறது–அந்த அன்புப்புதையல் இல்லாமல்;பசி நிறைந்த தூக்கம் இருக்கிறது–தூக்கத்தில் எழுப்பி அவள் தரும் பால்குவளை இல்லாமல்;வம்புப்பேச்சுகள் இருக்கிறது–அவள் பொக்கைவாய்ச் சிரிப்பில்லாமல்;இரவு நேர இல்லம் திரும்புதல்கள் இருக்கிறது–அவள் அக்கறைகள் இல்லாமல். அடுத்த மாதம் நினைவு தினம்.6 வருடங்கள் ஆகிவிட்டது-அவள் இல்லாமல் நாங்கள் வாழப்பழகி.
நம் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள் மறுபிறப்பில் வீட்டில் குழந்தைகளாகப் பிறப்பார்களாமே!நீ குழந்தையாக வேண்டாம்.அதே பொக்குவாய்ப் பாட்டியாகத் திரும்பி வா – குறைந்தபட்சம் கனவிலாவது!

2 comments:

  1. என் கனவிலும் உங்கள் பாட்டி வருவார்கள் போல .. அத்தகைய அழுத்தமான பதிவு... இன்றளவில் தங்களுடைய மாஸ்டர் பீஸ் இந்த பதிவு.

    ReplyDelete