Sunday 4 January 2015

சக்கர வியூகம் - புத்தக விமர்சனம்

சிறு வயது முதல் எனக்கு ராஜா-ராணி கதைகள், ஏஞ்சல் கதைகள், ஆடு, மாடு, குரங்கெல்லாம் பேசும் பஞ்சதந்திரக் கதைகள் மீது ஈர்ப்பு உண்டு. அறிவனைத்தையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, கற்பனைக்கு எல்லைக் கோடு தீட்டாமல், மனதை இலகுவாக உணர வைத்து, நம் குழந்தைமையைச் சில கணங்கள் கண்முன் நிறுத்தி விடுவதால் எனக்கு மேற்சொன்னவைகள் மீது அன்பு கலந்த மரியாதை உண்டு.

கிட்டத்தட்ட மகாபாரதக் கதைகள் இப்படியானவை தான். ஒரு கதையைத் தொட்டு ஒரு கதை என் நீளும் அதன் அனுமார் வாலில் எத்தனை எத்தனை பாத்திரங்கள்! ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை! அவைகளுக்குள் இருக்கும் உறவுமுறை குறித்து இன்னமும் எனக்கு ஒரு தெளிவு இல்லை. ஆனால் ராஜா-ராணி கதைகளைப் போல், சிங்கம்-நரி கதைகளைப் போல் மகாபாரதக் கதைகளை மனதுக்கு நெருக்கமாக உணர்ந்ததில்லை. கதைகளின் கருவடர்த்தி அதற்குக் காரணமாக இருக்கலாம். ‘எது உண்மைஎன்று புரிந்து கொள்ள முடியாது, கொட்டிக் கிடக்கும் கிளைக்கதைகள் காரணமாக இருக்கலாம். பழைமையின் சாயம் ஒப்பீட்டளவில் அதிகமாக ஏறியிருக்கும் தன்மை என்னை அவைகளிலிருந்து தூர நிறுத்தியிருக்கலாம். ‘மகாபாரதம்என்ற பெயரில் வழவழவென்று டப்பிங் பேசும் வார இறுதி நாடகங்கள் என்னை பயமுறுத்தியிருக்கலாம்.

பாரதியின்பாஞ்சாலி சபதம்படித்த பின்பு மகாபாரத்தின் மீதான மனப்போக்கு கொஞ்சம் மாறியது உண்மை. பாஞ்சாலி சபதம் படித்து முடித்த ஏழெட்டு நாட்களில் நண்பர் ஐயப்பனிடமிருந்துசக்கர வியூகம்குறித்த தகவல் வந்தது. ‘வாவ்என்று சொல்ல நினைக்கும் முன்னே, ‘இது மகாபாரதக் கதைகள் சிலவற்றைப் புனைவாக வடித்து எழுதிய தொகுப்புஎன்று கேட்ட மாத்திரத்தில் அதுவவ்எனச் சுருங்கியது. ‘வசமாக மாட்டிக் கொண்டோம்என நினைத்துக் கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஐயப்பன் நம் மீது கருணை மழை பொழிந்திருக்கிறார். அத்தனையும் அருமையான கதைகள்.
 

மகாபாரதப் புனைவுஎன்ற பெரிய்ய்ய்ய பெயரில் இது பயமுறுத்தும் போதும், இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் மிகவும் எளிமையானவை. ‘எளிமை வசீகரமானதுஎன்று மாலன் சொல்வார். அவருக்குக் கோடி வணக்கங்கள். இந்தக் கதைகளும் வசீகரிக்கின்றன. நமக்குத் தெரிந்த லேசான கதைகள், நமக்கு அதிகம் பரிட்சயமான கதை மாந்தர்கள்இவை இந்தத் தொகுப்பின் பலம். அர்ஜூனனுக்கும், துரியோதனனுக்கும் உள்ள பகை, ராமனின் கால் தூசு பட்டு அகலிகை சாப விமோசனம் பெறுவது, ஏகலைவன் தன் கட்டை விரலைக் குருவுக்குக் காணிக்கையாக்குவது, குசேலன்-கண்ணன் நட்பு, அபிமன்யூ போரில் வீர மரணம் அடைவது………இந்தக் கதைகள் நமக்குப் பரிட்சயமானவை. ‘நமக்குத் தெரிந்ததையே திரும்பவும் எழுத ஐயப்பன் எதற்கு?’ என்று கேட்டால் அங்கு தான் அவரது ஆற்றல் முழுக்க வெளிப்படுகிறது.

சம்பவங்களைக் காட்சிகளாக கண்முன் நிறுத்துவது அசாத்திய சாதனை. அத்தகைய சாதனையைச் சத்தமில்லாமல் செய்திருக்கிறார் நூலாசிரியர் ஐயப்பன். ஒவ்வொரு கதையிலும் கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் உரையாடல் அத்தனை அற்புதம்! திரைப்படக் காட்சிகள் போல விறுவிறுவென்று கதை பின்னப்பட்டிருப்பது அதி அற்புதம்!

ஏகலைவன் துரோணருக்குத் தன் கட்டை விரலைக் காணிக்கையாக்கியதன் பின், என்ன நடந்திருக்கும் என்று நாம் யோசித்ததுண்டா? குசேலன்-கண்ணன் குழந்தைப் பருவ நட்பு எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்ததுண்டா? ராமனின் கால் தூசு பட்டு அகலிகை உயிர்த்தெழுந்த பின், அவள் என்ன உணர்ந்திருப்பாள் என்று நினைத்துப் பார்த்திருப்போமா? இவையெல்லாம் தான் இந்தக் கதைகள். நன்கு தெரிந்த ஒன்றிலிருந்து அதிகம் நாம் கவனித்திராத பகுதிகள் வழி கதையைக் கொண்டு சென்றிருப்பது ரசிக்க வைக்கிறது. இந்தப் பாணி வாசகனுக்கும், கதைகளுக்கும் இடையில் ஒரு இலகுத்தன்மை வரச் செய்கின்றன.

சக்கர வியூகம்கதையில் அபிமன்யூ போரிடும் காட்சிகள் வெகு சுவாரஸ்யமாக இருந்தன. சக்கர வியூகம், மகர வியூகம் பற்றியெல்லாம் படிக்கும் போதுஅட!’ என்று ஆச்சர்யமாக இருந்தது. அந்தக் கதைக்காக ஐயப்பனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.

மொத்தம் 7 கதைகள். அதில் முதல் ஆறும் மகாபாரதக் கதைகளின் புனைவு என்றும் கடைசிக் கதையானஎன் பெயர் பெண்முழுக்கப் புனைவு என்றும் நூலாசிரியர் சொல்கிறார். ஆனால் எனக்கு அது புனைவாகப் படவில்லை. கணவன் என்ற பெயருக்குள் தன் இன்பங்களைத் தொலைத்துக் கொண்டு, ஆசைகளைத் தியாகம் என்ற பெயருக்குள் எரித்துக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டவர்கள் ஓரிடத்தில் சந்திக்கும் போது இப்படித் தான் இருக்க முடியும்! அது எப்படிப் புனைவாகும்! இந்தஎன் பெயர் பெண்கதையைப் படிக்கும் போது புதுமைப்பித்தனின்சாப விமோசனம்கதை நினைவுக்கு வந்தது. ஐயப்பன் சற்றே இந்தக் கதையை நீட்டியிருப்பின்சாப விமோசனத் தரத்தில் வந்திருக்கும். எனினும் சிறப்பே.

ஆக மொத்தத்தில் ரொம்பவும் சுவாரஸ்யமான சிறுகதைத் தொகுப்பு. சற்றே வித்தியாசமான தொகுப்பும் கூட. ‘புரியுமா, புரியாதா, பிடிக்குமா, பிடிக்காதாபோன்ற எந்தக் கேள்விகளும் இல்லாமல் நன்றாக ரசிக்க வைக்கும். இது போல் ஐயப்பன் உற்சாகமாக மேலும் பல சிறுகதைத் தொகுப்புகள் எழுதுவதற்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.
          -    இராஜிசங்கர்
சக்கர வியூகம், ஆசிரியர்: ஐயப்பன் கிருஷ்ணன்,
அகநாழிகை பதிப்பகம்,

Rs. 80

No comments:

Post a Comment