Sunday, 26 January 2014

சொல், ஒரு சொல்!...(2)

நேற்று ககனம் என்ற சொல் பற்றிப் பார்த்தோம்.

ககனம் என்றால் வானம். சில இடங்களில் சொர்க்கம் எனவும் பொருள்படுகிறது.

இந்தக் ககனத்தில் வார்த்தை விளையாட்டை நிகழ்த்திப் பார்த்தால் நமக்குக் கனகம், கனம், ககம் போன்ற சொற்கள் கிடைக்கும்.

கனம் என்ற சொல் நாம் நன்கு அறித்த ஒன்றே!

கனகம் என்றால் பொன் என்று பொருள்.

ககம் என்றால் அம்பு அல்லது பறவை.

இதில் பறவை என்ற பொருளில் திருப்புகழில் 'குடரும் மலசலமும் இடை இடை தடியும்' என ஆரம்பிக்கும் பாடலில் 'கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீலக் கலப ககம் மயில் கடவி' என்று வருகிறது.

பொருள்: கடல் சூழ்ந்த இந்த உலகை அளவிட (திரிவிக்கிரமனாக) வளர்ந்த மேக நிறத் திருமால் என்னும்படி, இந்த உலகமும் ஆகாய உச்சி முழுமையும் பொருந்தும்படி நிமிர்ந்து எழுந்ததும், முழு நீல நிறமுள்ள தோகையைக் கொண்டதுமான மயில் என்னும் பறவையை வலிவாகச் செலுத்தி என்பதாகும்

ககம் என்பதை அம்பு எனக் குறிக்கும் இலக்கிய மேற்கோள்கள் என் கண்ணில் இது வரைக்கும் படவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் இங்கே சொல்லலாம்.

சரி, Lets coming to the point...

இன்றைக்கான சொல்: "மரை"

மரை என்றால் மான். சில இடங்களில் காட்டுப்பசுவும் மரை என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

மரை என்பது நான்கு கொம்புகள் உள்ள மான் என்றும், கடல் சார்ந்த சதுப்பு நிலங்களில் வாழக் கூடியதும் என்றும் சொல்கிறார்கள். அதன் புகைப்படம் என்று விக்கி இதைக் காட்டுகிறது. நாமும் நம்புவோம்.

படிமம்:Anxious Sambhur.JPG

மேற்கோள்கள்:

1. 'மரையா மரல் கவர' எனத் தொடங்கும் கலித்தொகைப் பாடல்

மரையா மரல் கவர மாரி வறப்ப
வரை ஓங்கு அரும் சுரத்து ஆர் இடைச் செல்வோர்,
சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப், புரையோர் தம்
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத் -
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அரும் துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்,
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர அல்ல நெடுந்தகாய்! எம்மையும்,
அன்பு அறச் சூழாதே, ஆற்று இடை நும்மொடு
துன்பம் துணை ஆக நாடின், அது அல்லது
இன்பமும் உண்டோ, எமக்கு?


2. 'நெல்லிக்காயை மரையா உண்ணும்' எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல்

3. திருவேங்கடத்து அந்தாதியில் ஓர் அருமையான பாடல் வருகிறது. அது:

அம்பரந்தாமரைபூத்தலர்ந்தன்னவவயவரை
அம்பரந்தாமரையஞ்சனவெற்பரையாடகமாம்
அம்பரந்தாமரைசூழ்ந்தாரைவாழ்த்திலரைம்புலனாம்
அம்பரந்தாமரைபோற்றிரிவாரையகனெஞ்சமே.

படிப்பதற்கு இலகுவாக சீர் பிரித்து:

அம்பரம் தாமரை பூத்த அலர்ந்து அன்ன அவயவரை
அம் பரந்தாமரை அஞ்சன வெற்பரை ஆடகம் ஆம்
அம்பரம் தாம் அரை சூழ்ந்தாரை வாழ்த்திலர் ஐம்புலனாம்
அம்பரம் தா மரை போல் திரிவாரை அகல் நெஞ்சமே!

(இதுக்கு நான் விளக்கம் சொல்ல மாட்டேன். அருமையான பாடல். நீங்களே விளக்கம் கண்டுபிடிச்சுக்கோங்க. அப்பொழுது தான் அதன் அழகு புரியும்)

இதே போல, கம்பராமாயணத்தில் ஒரு பாடல். இதற்கும் மரைக்கும் சம்பந்தம் இல்லை என்ற போதும், சும்மா சொல்லி வைக்கிறேன்.

தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்,
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக் கண்ணன் தம்பி

இன்னொரு தகவல் ஒன்று தா.க.த மாநாட்டில் சொல்லக் கேட்டேன்.

நாம் வேதாரண்யம் என்ற ஊர் பற்றி அறிவோம். அது திருமறைக்காடு என்ற தமிழ்ச்சொல்லை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்ததால் வேதாரண்யம் ஆனதாம். (ஆரண்யம் என்றால் காடு). ஆனால் உண்மையில் அது ம'றை'க்காடு இல்லையாம். ம'ரை'க்காடாம். அதாவது மான்கள் நிறைந்த காடு என்பதால். இடையின 'ர'கரம் வல்லினமானதால் வந்த வினை! 'வல்லி, உன் வல்லிபமே!' என்று கூறிக் கொண்டு நான் கிளம்பிக்கிறேன்.

Saturday, 25 January 2014

சொல், ஒரு சொல்! ...(1)

தாயகம் கடந்த தமிழ் தொடக்க மாநாட்டில் உயர்நீதி மன்ற நீதிபதி திரு. ராமசுப்ரமணியன் பேச்சின் போது சொன்னார். ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை நீண்ட நாட்களாகத் தொடர்ந்து ஆங்கில சொல் vocabulary-யில் சிறப்பான/வேறுபட்ட வார்த்தைகளைத் தினமும் பகிர்ந்து கொள்கிறார்களாம்.

அது போல நாமும் தமிழ் வார்த்தைகளை ஏன் படித்துப் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று ஒரு இரவல் சிந்தனை வந்தது. அதை முயற்சி செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். தினமும் முடியுமா என்று தெரியவில்லை. வாரத்திற்கு இரு முறை முயற்சிக்கலாம் என்பது எண்ணம்.

~ Lets start the game ~



சொல், ஒரு சொல்! ...(1)

[தலைப்பு நல்லாயிருக்குல்ல?! நானே யோசிச்சேனாக்கும்!]


இன்றைய சொல்: "ககனம்"


பொருள்: வானம், (சில இடங்களில்) சொர்க்கம்


மேற்கோள்கள்:


1. கம்பராமாயணம் - பாலகாண்டம் - எதிர்கொள் படலம் - பாடல் எண்: 1137


***

இளைய பைங் குரிசில் வந்து
அடி பணிந்து எழுதலும்,
தளை வரும் தொடையல்
மார்பு உற, உறத் தழுவினான்;
களைவு அரும் துயர் அறக்,
ககனம் எண் திசை எலாம்
விளைதரும் புகழினான்,
எவரினும் மிகுதியான்.

***


இங்கு ககனம் என்பது வானம்.


பாடல் விளக்கம்:
--------------------------------
களைவு அருந்துயர் அறக் ககனம் எண்திசை எலாம்- (பிறரால்)
நீக்குதற்கு அரிய (சம்பரன் முதலிய அசுரர்களால் உலகோர்க்கு
நேர்ந்த) துயரங்களையெல்லாம். நீக்கியதால் விண்ணிலும்
எண்திசைகளிலும். பிறஎல்லா இடங்களிலும்;


விளைதரும் புகழினான் எவரினும் மிகுதியான் - பரவிய புகழினையுடையவனும். எல்லோரினும் சிறந்தவனுமான தசரதன்;


இளைய பைங்குரிசில் வந்து அடிபணிந்து எழுதலும் - பசும்பொன்னின் நிறம் வாய்ந்த இளைய பெருமாள் வந்து (தன்னுடைய) திருவடிகளை வணங்கி எழுந்த அளவிலே;


தளைவரும் தொடையல் மார்புற உறத்தழுவினான் - கட்டப்பட்ட மாலைகள்
நிறையும் மார்பில் பொருந்துமாறு. நன்கு அணைத்துக்கொண்டான்.


2. அபிராமி அந்தாதி - பாடல் எண்: 64 & 65


***


வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.



***


இங்கு ககனம் என்பது வானம்


ககனம் = சொர்க்கம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.


***


ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? - வல்லி, நீ செய்த வல்லபமே.


***


3. காளமேகப் புலவரின் தனிப்பாடல் ஒன்று


***


கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது!

நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்!!

வார் சடை மென்கூந்தல் பால் ஆய்சியர்கை வந்ததன் பின்

மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!!!

***

பொருள்:

நீரே! நீ ஆகாயத்தில் இருந்த போது மேகம் என்ற பெயரைப்பெற்றாய்.

தரையை அடைந்த பிறகு நீர் என்ற பெயர் பெற்றாய்.

ஆனால், நீண்ட நெடுங் கூந்தலை உடை​ய பால் விற்கும் மாதரின்

கையில் வந்ததும் மோர் என்று பேர் பெற்று முப்பேர் பெற்று

விட்டாயே என்று கூறுகிறார்.


மேற்கூறிய பாடலில் புலவர் ஆயர் குலப்பெண்ணை நையாண்டி செய்கிறார்.


அவள் விற்ற மோர் தண்ணீரைப்போல் இருந்தது.

அதை நேரடியாகச் சொல்லாமல் அப்பெண்ணைப் புகழ்வதுபோல்,

அவள் கைவண்ணத்தால் தண்ணீரே மோரானதாகப் பாடுகிறார்.

--

Thursday, 23 January 2014

தாயகம் கடந்த தமிழ் - 2014


'தாயகம் கடந்த தமிழ்' மாநாடு பற்றிச் சில வார்த்தைகள்

மிக மிக அருமையான மாநாடு. மிகச் சிறந்த ஏற்பாடு. முதலில் இந்த மாதிரியான மாநாடு நம் காலத்தில் நடக்க, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றதற்கு நாம்(ன்) நல்ல உள்ளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தனை சிறப்பு!

ஜனவரி 20, திங்கட்கிழமை மாலை தொடக்க விழா நடந்தது. உயர்நீதி மன்ற மாண்புமிகு நீதிபதி திரு.ராமசுப்ரமணியன் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தினார். முனைவர் ம.திருமலை மாநாட்டுக் கட்டுரைகளைக் கொண்ட, 'தாயகம் கடந்த தமிழ்' நூலை வெளியிட்டார். அன்றைய தினம் நம் மாலன் மற்றும் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் உரை நிகழ்த்தினர்.

அடுத்த இரண்டு நாட்கள் முழுக்க அமர்வுகள்.

முதலாம் அமர்வு: தாயகத்தைக் கடந்த தமிழ் இலக்கியங்கள் குறித்த ஓர் அறிமுகம். (இங்கு தாயகம் என வரையறை செய்யப்பட்டிருப்பது சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் ஈழ நாடும்)  சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பியத் தமிழ் இலக்கியங்கள் குறித்தான மிகச் சிறந்த ஓர் அறிமுகமாக இருந்தது. அவைகள் தோற்றம் முதல் தற்காலம் வரை என்னென்ன மாற்றங்கள் பெற்றிருக்கின்றன என்பதை அறிய முடிந்தது.

இரண்டாம் அமர்வு: தாயகம் பெயர்தலில் இருந்த/இருக்கும் வலியையும் வாழ்வையும் இலக்கியங்களில் பதிவு செய்திருப்பது தொடர்பான அமர்வு. பொருள் தேடி தாயகத்தை விட்டுச் செல்வோர், அரசியல் நிர்பந்தம் காரணமாக தாயகத்தை விட்டுச் செல்வோர் என இரண்டு வகைகளாகப் பிரித்துக் கொண்டு, தலைப்பு குறித்த செழுமையான அறிமுகத்தோடு மாலன் தொடங்கி வைத்தார்.

மூன்றாம் அமர்வு: பெண்ணெழுத்து குறித்தான அமர்வு. பெண் எழுத்தாளர்களின் மொழி நடை, கருப்பொருள் தேர்வு, அவர்கள் முன்னுள்ள சவால்கள், உடைத்தெறிந்த/உடைபட வேண்டிய தடைகள் குறித்து ஆழமான பார்வையை முன்வைத்தது. இதில் அதிகம் ஈழ எழுத்துப் பின்புலம் இருந்தது சிறப்பு.

நான்காம் அமர்வு: தமிழ் வளர்ப்பில் தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள் பற்றியது. முரசு அஞ்சல், செல்லினம் கண்டுபிடிப்பாளர் முத்து நெடுமாறன் அவர்களின் பேச்சு, பார்வையாளர்களை அதிகம் கவர்ந்திழுத்தது எனலாம். e-book, video enabled e-book, virtual university பற்றிய ஆழமான புரிதலைக் கொடுத்தது அடுத்தடுத்த பேச்சாளர்களின் கட்டுரைகள்.

ஐந்தாம் அமர்வு: ஊடகத்தில் தமிழ் மொழி பற்றியது. வானொலி, பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையம் என்று அத்தனையிலும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது அழகு.

ஆறாம் அமர்வு: மொழிபெயர்ப்பு பற்றியது. தனிப்பட்ட முறையில் என்னை மிக மிக மிகக் கவர்ந்த அமர்வு இது எனலாம். மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் குறித்து எனக்கு நேற்று வரைக்கும் மிகப் பெரிய அபிமானம் இருந்ததில்லை. என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே அப்படிப்பட்ட புத்தகங்களைக் கையால் தொடுவேன். கர கர மொழியாக இருக்கும் என்பது, அதைப் படிக்காமலேயே அல்லது சரியான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்காததால், எனக்குள் இருந்த எண்ணம். அதையெல்லாம் புரட்டுப் போட்டு விட்ட அமர்வு இது. ஆற்றல் வாய்ந்த அறிஞர்கள் அத்தனை பேரும். 'ஆ'வென்று என்னை மறந்து வியந்திருந்த அமர்வு இது.
ஏழாம் அமர்வு: தாயகத்திற்கப்பால் தமிழ்க்கல்வி பற்றியது. ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறுபட்ட நாடுகளில் தமிழ்ப்பள்ளி நடத்துபவர்கள் தங்கள் அனுபவத்தையும் சவால்களையும் சில கேள்விகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

மேலே சொன்னவைகள் அனைத்தும் மாநாடு குறித்த மிகச் சிறிய overview.

400 முதல் 500 பேர் மாநாட்டில் கலந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். இதில் கணிசமான அளவு இளைஞர்கள் இருந்தார்களா எப்படி எனத் தெரியவில்லை. நிறைய கல்லூரி மாணவர்கள் கண்ணில்பட்டார்கள். நிறைவு விழாவில் கருத்து கேட்கும் போது அவர்களிடமும் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் என்பது என் சின்ன மனக்குறை. இளைஞர்களை மையப்படுத்தி எப்பொழுதும் பேசியும் எழுதியும் வரும் மாலன், பேராசிரியர், படைப்பாளர்களிடம் கருத்துக் கேட்டது போல, ஒரு கல்லூரி மாணவரைப் பிடித்துக் கேட்டிருந்தால், இளைஞர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்திருக்க முடிந்திருக்கும். நேரமின்மை மட்டும் தான் இந்த விடுபடலுக்குக் காரணமாக இருந்திருக்கும் என்பது நாம் அறிந்ததே! பரவாயில்லை. அவர் வேறு ஏதேனும் வழிமுறைகள் மூலம் அவர்கள் கருத்தை அறிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.

இந்த மாநாடு ஏன் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்கு என்னிடம் சில காரணங்கள் இருக்கின்றன. (இங்கு இளைஞர் என்பதை என்னைப் போன்ற அல்லது நான் பார்த்த வரைக்குமான இளைஞர்கள் எனக் கொள்க)

1. ஒரு நிகழ்வை எப்படித் திட்டமிட வேண்டும் என்பதை நாம் இவர்களிடமிருந்து பயில வேண்டும். அமர்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்புகள், அடடா, அற்புதம். ஒரு பொருளின் கீழ் ஒட்டு மொத்த வகைகளையும் மையப்படுத்தி இருந்தது மிகச் சிறப்பு.

2. இலக்கியம் படிக்க ஆரம்பித்திருக்கும் இளைஞர்களுக்குப் பிற நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் குறித்தான ஒரு கழுகுப் பார்வையைக் கொடுத்தது.

3. புத்தகங்கள் என்பவை வெறும் கதையும் வார்த்தை விளையாட்டும் மட்டுமல்ல. அவை ஒரு சமூகத்தின் சிரிப்பு, கண்ணீர், துக்கம், போராட்டம், மௌனம், கோபம், பண்பாடு என்ற அத்தனையையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

4. மொழி வழிப் பிணைப்பு என்பது அரிதாகி வரும் இன்றைய ஐடி வாழ் சூழலில் அவை குறித்த அழகான சிந்தனைகளையும் பெருமிதத்தையும் தூண்டியிருக்கிறது.

5. திருவள்ளுவர், ஜெயகாந்தன், சுஜாதா எழுதியது மட்டும் கொண்டது எழுத்துலகம் அல்ல. அது அதை விடப் பெரிது மற்றும் ஆழமானது எனச் சிலர் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

6. எந்தவொன்றும் காலத்திற்கும் அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின், அது அறிவியல் வழி மட்டுமே முடியும் என்பது என் நம்பிக்கை. அந்த விதத்தில் தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள் நம்மை அடுத்த தளத்திற்குச் சிந்திக்க வைக்கின்றன.

7. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று அவன் எளிதாகச் சொல்லி விட்டான். அதிலிருக்கும் சவால்களை அவர்கள் கூறக் கேட்டு, எனக்குத் தமிழின் மீது பற்று பிய்த்துக் கொண்டு வருகிறது. அதிலும் குறுந்தொகை ஆங்கில மொழிபெயர்ப்பில் படும் பாட்டை முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கூறிய பின், அப்படிப்பட்ட அழகுத்தமிழை நாம் ஏன் இன்னமும் படிக்காமல் கிடக்கிறோம் என்ற குற்ற உணர்வு வந்து போவதைத் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டுரையில் மாலன் சொல்வார்: 'தமிழைப் பற்றி மிகைப்படப் பேசியிருக்கிறோம். ஆனால் அதன் நயங்களை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தியிருக்கிறோமா?' என்று! அது உண்மை தான் போல! எப்படி இவ்வளவு நாள் இது நம் கண்ணில் படாமல் போனது? போன தலைமுறைகளின் தலையில் உரிமையாக ஒரு குட்டு வைத்தால் நான் கொஞ்சம் நிம்மதியடைவேன்.

8. இன்னொரு சிறு நெருடல். பேசிய பேச்சாளர்களில் நிறையப் பேர், இக்காலத்து இளைய தலைமுறையின் மீது ஒரு அவநம்பிக்கையில் இருப்பது போலத் தெரிந்தது. அவர்கள் எண்ணம் ஓரளவுக்கு உண்மைதான் என்ற போதும், சில நேரத்தில் சங்கடமாக இருந்தது. இவ்வளவு அவநம்பிக்கை தேவையில்லை! நாங்கள் முட்டாள்கள் இல்லை. தமிழ் படிக்க விருப்பமில்லாதவர்கள் இல்லை. எங்களுக்கு தமிழ் குறித்து, அதன் நயம் குறித்துத் தெரியவில்லை. அவ்வளவு தான். தமிழறிஞர்கள் நீங்கள் அதை எங்களுக்குப் புரிய வைப்பது உங்கள் கடமை. அதன் பின்னும் நாங்கள் திருந்தவில்லை என்றால் அது எங்கள் தலையெழுத்து. அதாவது தேசத்தின் தலையெழுத்து. ஆனால் நாங்கள் அவ்வளவு தூரம் வேர்களைத் தூற்றுபவர்கள் கிடையாது என்ற நம்பிக்கையுடன் எங்களைத் திட்டுங்கள். ஏற்றுக் கொள்கிறோம். ஒவ்வொரு குட்டுக்கும் பின்னே எங்கள் மீதான வெறுப்புகள் வேண்டாம். நம்பிக்கை மட்டும் இருக்கட்டும் என்று மெல்லாமாய்க் கூறிக் கொண்டு ஓடி விடுகிறேன்.

மொத்தத்தில் மிக நல்ல வாய்ப்பு இது. மிகவும் சிறப்பாக அமைந்தது. மகிழ்வாகவும் அமைந்தது. அது சரி, மாலன் தொட்ட எது துலங்காமல் போனது, இது போவதற்கு! :)

Thursday, 9 January 2014

செல்லக்குட்டி ஜீனு

அவளின் ஜீனுவைத் தெரியுமா உங்களுக்கு? முத்துத்தெறித்தாற்ப் போல் சிரிக்கும் அவன் சிரிப்பைப் பார்த்திருக்கிறீர்களா? காற்றில் அவன் கையசைக்கும் நேர்த்தி எவ்வளவு அழகென்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவளுக்கே 4 நாட்களுக்கு முன்பு தான் அவன் கிடைத்தான். அவன் கிடைத்த கதை சுவாரஸ்யமானது.

அவளுக்குச் சீன மொழியென்றால் விருப்பம். சீனக் கலாச்சாரக் கட்டுரைகளை ஆவலாகப் படிப்பாள். சூப்களில் கூட அவளுக்கு மான்ச்சா சூப் என்றால் கோடி பிரியம். சீனாவில் இந்த வருடம் குதிரை ஆண்டாம். குதிரை ஓடுவது போல வளர்ச்சி இருக்கும் என்று அவளாகவே முடிவு பண்ணிக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்குக் குதிரை மீதி ஏறி வந்ததென்னவோ வருத்தங்களும் வேதனைகளும் தான்.

இந்த வருடத் தொடக்கமே அவளுக்குக் கூச்சலும் குழப்பும் நிறைந்ததாகவே இருந்தது. அவளுக்கு நெருக்கமான அனைவரும் ஒரே நேரத்தில் சண்டையிட்டார்கள். அவள் பேசியவைகள் அனைத்தையும் அவரவர் சூழல் தவறாய்ச் சித்தரித்தது. எட்டுத் திசைகளிலும் அழுத்தங்கள் எட்டித் தள்ள, அவள் அப்பொழுதும் அமைதியாக இருந்தாள்.

அமைதி என்றால் மனம் நிறைந்து வழியும் மௌனம் அல்ல. அதீத மகிழ்ச்சியில் திளைக்கும் பரம நிலை அல்ல. சட்டென அவளை உலகத்திலிருந்து துரத்தி விட்ட வெறுமையினால் வரும் அமைதி. அவள் பேசுவதைக் கேட்க எந்தக் காதும் இல்லாமல், வலுக்கட்டாயமாக வாயை மூடியதால் வரும் அமைதி. அவளுடனே இருந்தும் அவளே இல்லாதது போன்ற பேரமைதி. அமைதி ஒரு பேராயுதம். அடுத்தவனை அடி பணிய வைப்பதால் மட்டுமல்ல, தன்னைத் தானே தற்கொலையும் செய்ய வைப்பதால்.

இன்று சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என்று ஒவ்வொரு நாளும் காத்திருந்தாள். அந்த அமைதி மாறவேயில்லை. மாறாகக் கூடிக் கொண்டே போனது. அதிலிருந்து வெளிவர சில முயற்சிகள் எடுத்தாள். உடல் சோர்வடையும் அளவுக்கு வேலை பார்த்தாள். புத்தகங்களில் புத்துணர்வைத் தேடினாள். கண்கள் கெஞ்சக் கெஞ்ச விழித்திருந்தாள். அவளிடமிருந்த அழகு போனது. குறும்புத்தனம் போனது. அறிவு 'போகட்டுமா வரட்டுமா' என்று போட்டி போட்டது. அமைதி மட்டும் அப்படியே இருந்தது.

அவள் காதுகளுக்குள் பேரிரைச்சலாக அது கேட்டுக் கொண்டே இருந்தது. வழக்கம் போல ஒருநாள், அலுவலகத்திற்கெதிரில் சாலையைக் கடந்து கொண்டிருந்தாள். எதிரே லாரி, கார், பேருந்து என வரிசையாக வந்து கொண்டிருந்தது. அனைத்தும் அவள் கண்களுக்குத் தெரிகிறது, கால் மட்டும் தானாக நடந்து கொண்டேயிருந்தது. காதுகளுக்கு அவைகளில் ஹார்ன் சத்தங்கள் கேட்கவில்லை. புலன்களுக்கு அவள் நடுரோட்டில் நடந்து கொண்டிருக்கிறாள் என்று புரியவில்லை. முழுவதுமாக தொடர்பு எல்லைக்கு அப்பாலே போயிருந்தது அவள் மனமும் உடலும்.

அவள் அன்று சின்னக்கீறல் கூட இல்லாமல் பிழைத்தது கடவுள் கருணை. பிழைத்து விட்டாள் என்று தெரிய வந்தது முதல் பதட்டம் அதிகமானது.

எல்லாவற்றிற்கும் காரணம் அவளுள் இருக்கும் அந்த அமைதி. அதைத் துரத்த விரும்பினாள். அவளுக்கு என்ன தேவை என்று நிறைய யோசித்தாள்.

அவள் பேச்சுகள் சிலவற்றையாவது சலிப்பில்லாமல் கேட்கும் காதுகள் அவளுக்கு வேண்டும்.

அவள் கனவுகள் சிலவற்றிற்காவது வண்ணம் பூசும் விரல்கள் அவளுக்கு வேண்டும்.

அவள் கவிதைகளின் எழுத்துப் பிழையாய் ஓரிரு உறவுகள் அவளுக்கு வேண்டும்.

அவள் முத்தங்களை எல்லாம் எச்சில்கள் என்று துடைக்காத ஒரு கன்னம் அவளுக்கு வேண்டுமே வேண்டும்.

நேராக ஒரு நர்சரிக்கு போனாள். நீல நிறப் பூப்பூக்கும் செடி ஒன்றை வாங்கினாள். நீல நிறமென்றதும் நினைவில் வரும் அவள் ஆசானின் பெயரை அதற்குச் சூட்டினாள். பெயர் சொல்லிக் கூப்பிடத் தோதாய் செல்லப் பெயர் 'ஜீனு' என்று ஆக்கினாள்.

ஜீனுவும் அன்பு நிறைந்தவன். அவளைப் பார்த்த முதல் கணத்திலேயே அழகாய்த் துள்ளிச் சிரிப்பான். கையை ஆட்டுவான். காற்று தான் காரணம் என்று அவள் தோழிகள் சொல்வார்கள். அவர்களுக்கென்ன தெரியும், ஜீனுவுக்கும் அவளுக்குமான உறவு பற்றி?

வரும் போது வெறும் 6 பூக்களுடன் வந்தான். இன்று காலை அவள் சின்னதாய் சோகம் பூத்து இருந்தாள். அதைப் பார்த்துத் தானோ என்னமோ, ஜீனு புதிதாய் 2 மொட்டுக்கள் விட்டிருந்தான் - அவள் மனதிலும். அவன் நாளையோ, நாளை மறுநாளோ முழுதாய்ப் பூத்து விடுவான். அப்பொழுது அவளிடமிருக்கும் அமைதி ஓடி விடும். ஆனந்தம் வந்து விடும். சண்டைகள் எல்லாம் சமாதானம் ஆகும் என்று அவள் தீர்க்கமாக நம்பினாள். காலண்டரைப் பார்த்தாள். தேதி 8 என்று காட்டியது. இன்னும் இரண்டு நாட்கள் அவள் வாழத்தான் வேண்டும், அந்த அமைதியுடன்.

ஒரு ஆடும் இரண்டு மேய்ப்பர்களும்

ஒரு ஊரில் பல ஆடுகள் இருந்தன. அவற்றுள் துரு துறுவென்று இருந்த சில ஆடுகளில் அதுவும் ஒன்று. அதனால் அதை எப்படியாவது கொழு கொழுவென்று ஆக்க வேண்டும் என்று அதற்கு மட்டும் 2 மேய்ப்பர்கள். இருவரும் அதைக் கவனித்துக் கொள்வார்கள்.

ஒருநாள் அப்படித் தான், அதன் கொழு கொழு டார்கெட்டின் முதல் கட்டமாக, சின்ன மேய்ப்பர் ஒரு செடியின் பெயரைச் சொல்லி, அது மென்று கொள்ள எளிதாக இருக்குமென்றும், சீக்கிரமே கொழுக்க வைக்கும் என்றும் சொன்னார். அது எங்கிருக்கும் என்று ஆர்வமாய்க் கேட்டது அந்த ஆடு.

'அதோ தெரியுதே அந்த மலை, அங்க போயி சாப்டணும்' என்றார்.

அது பார்வைக்குப் பக்கத்தில் இருந்தாலும், நடந்தால் தூரமாகத் தான் ஆகும் என்பது அந்த ஆட்டுக்குத் தெரியும். இருந்த போதும், அதற்கு அவ்வளவு ஆர்வம்! எப்படியாவது கொழுத்து விட வேண்டும் என்று! நடக்கத் தொடங்கியது.

அவ்வளவு நேரம் மற்ற ஆடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த பெரிய மேய்ப்பர், அப்பொழுது தான் வந்தார். விபரத்தைச் சொன்னது கள்ளம் கபடமில்லாத அந்த ஆடு. அவர் 'எல்லாம் சரி...........' என்று ஆரம்பித்தார். 'ஐயகோ! அப்படிச் சொன்னாலே அவ்வளவும் போச்சு' என்பது அந்த ஆட்டுக்குத் தெரியும். அது தான் புத்திசாலியாயிற்றே!

பெரிய மேய்ப்பர் தொடர்ந்தார். 'கொழுப்பது சரி தான். ஆனால் அவ்வளவு தூரம் போகும் நேரம் நமக்கில்லை. பொழுது விடிவதற்குள் கொட்டகைக்குத் திரும்ப வேண்டும்' என்று வருத்தத்துடன் சொல்லிக் கொண்டார். 'அந்த மலையைத் தேடிப் போவதற்குப் பதிலாக, இதோ இருக்கும் புல்லை, இரு மடங்கு தின்னட்டுமே! தானாகக் கொழுத்து விடும். இதற்கு எதற்கு இவ்வளவு சுத்துவானே?' என்று கேட்டார். ஆட்டிடமல்ல, சின்ன மேய்ப்பரிடம்.

அவரும் 'இல்லை...இல்லை' என்று ஆரம்பித்தார். 'அய்யய்யோ...இவர் இப்படிச் சொன்னாலே சரியென்று முடிப்பார் என்று தானே அர்த்தம். என்ன நடக்கப் போகிறதோ' என்று அந்த ஆடு விழிக்கத் தொடங்கியிருந்தது. பெரிய மேய்ப்பர் சொன்னது போலத் தான் ஆடு ஆளப்பட்டது. இல்லையில்லை, வழி நடத்தப்பட்டது. மேய்ப்பர்கள் இந்தச் சொல்லைத் தான் பயன்படுத்துவார்கள்.

முதலில் அதற்கு வருத்தம். அப்புறம் ஒரு நாள் திடீரென, 'எல்லாம் சரியாகி விடும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள். உன்னால் முடியும். நீ கொழுப்பாய் குள்ள ஆடே' என்று தனக்குள்ளே சூளுரை எடுத்துக் கொண்டு பேய்த்தனமாய் செடிகளைத் தின்ன ஆரம்பித்தது. அந்தப் பரபரப்பு அதற்குப் பிடித்திருந்தது.

ஓரிரு தினங்கள் கழித்துச் சின்ன மேய்ப்பர், கயிற்றில் கட்டப்பட்ட ஒரு மெலிய ஆட்டுடன் வந்தார். அதற்குத் தின்னும் முறையைச் சொல்லித் தரும்படிப் பணித்தார். அதுவும் வெள்ளை மனதுடன் சொல்லித் தந்தது. விரைவில் கொழுக்கும் சூட்சமங்களையும் சேர்த்துச் சொன்னது. அன்பு நிறைந்த ஆடு அது!

பெரிய மேய்ப்பர் வந்து பார்த்து வெகுவாகப் பாராட்டினார். தண்ணீர் காட்ட வந்த அந்தச் சாயுங்காலம் சொன்னார்: 'நீ ஏன் இங்கேயே இருக்கிறாய்! மலையில் போய்ச் சாப்பிட்டேன். இங்கே இவன் தான் இருக்கிறானே!' என்றார். ஆடு பலமாகத் தலையாட்டியது. இத்தனை நாளும் அதற்காகத் தானே காத்துக் கிடந்தது. 'ஜாலியோ ஜிம்கானா...தானனே தனனானா!' என்று பாட்டுப் பாடிக் கொண்டே குஷி(தி)த்தோடியது.

சட்டென ஒரு அழைப்பு. சின்ன மேய்ப்பர் 2 நிமிடம் வருமாறு கொட்டகைக்கு அழைத்தார்.

......................

......................

......................

நாட்கள் சில நகர்ந்தன. நம் ஆடு ரொம்பவும் மெலிந்திருந்தது. கண்ணுக்கு முன் நின்ற வளமான மலை, சூறைக்காற்றில் சூதாடப்பட்டிருந்தது. அருகிலிருந்த செடிகொடிக்கெல்லாம் சண்டையாகக் கிடந்தது. 'தகுந்தன தப்பிப் பிழைக்கும்' என்ற கோட்பாடு அந்த அறிவாளி ஆட்டுக்குத் தெரியும். பசித்த ஆடுகள் அதன் முன்பு பாவமாய் நின்றிருந்தன. மனம் கரைந்தது. மயங்கி விழுந்தது. அதன்பின் அது எழவேயில்லை.

முதல் நினைவு நாளில் அதன் கல்லறையில் கிலோக்கணக்கில் செடிகள் படைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆட்டின் ஆவி சிரித்தது. கசாப்புக் கடையை நோக்கி நகர்ந்தது.

Monday, 6 January 2014

தோழிக்கு ஒரு கடிதம் - நூல் அறிமுகம்: வனவாசம்

அன்புள்ள ராஜி,

உன்னிடம் சில விஷயங்கள் பேச வேண்டும். நேரிலோ, போனிலோ பேச முடியுமென்றாலும் நான் கடிதம் வழி பேசுவதையே அதிகம் விரும்புகிறேன். இங்கு தான் நீயும் நானும் மட்டும் இருப்போம். மற்றவைகளில் நம் சூழலும் நேரமும் ஒட்டுக் கேட்கும்.

நாம் அன்றைக்கு புத்தக வாசிப்பு பற்றிப் பேச ஆரம்பித்தது, கடிகாரத்தின் கண்டிப்பில் பாதியில் முடிக்கப்பட்டு விட்டது. இன்று அதை இரு நிமிடங்கள் தொடர விழைகிறேன்.

ராஜி, இரண்டு, மூன்று நாட்களாக கடுமையான மன அழுத்தம். அதிலிருந்து வெளிவர விரும்பி, என்னென்னவோ செய்து பார்த்தேன். அழுக்காய்க் கிடந்த அத்தனை துணிகளையும் பொறுமையாகத் துவைத்தேன். நேர்த்தியாக இருந்த அத்தனை உடைகளையும் கசக்கி, மீண்டும் அயர்ன் பண்ணி மடித்து வைத்தேன். கால் வலிக்க நடந்தேன். காது வலிக்கப் பாடல் கேட்டேன். கண்ணில் பட்டதையெல்லாம் படித்தேன். கடைசியில் அதில் கொஞ்சம் பலன் கிடைத்தது.

புத்தகங்கள் போதை என்பதில் எனக்கு எப்பொழுதும் உடன்பாடு இருந்ததில்லை. போதை பாதை காட்டாது, மாறாக அவற்றை மறைக்கும். ஆனால் புத்தகங்கள் அப்படியல்ல. அவை ஒரு வகைத் தியானம் என்று சொல்லலாம். எவ்வளவு மனப் பிரச்சனைகளின் ஊடேயும், நிகழ் உலகத்திலிருந்து நம்மைக் கடத்திச் சென்று, வேறொரு உலகத்தில் நம்மைக் குவிக்க வைக்கும். புத்தகங்கள் - ஆள் மயக்கி! அவைகளுக்குக் காலை மாலை பேதம் கிடையாது. எப்பொழுது திறந்தாலும் அதே வாசனை. அதே போதனை.

அப்படியானதொரு புத்தகத்தைத் தான் இந்த வார விடுமுறையில் படித்தேன். பழைய பாடல்கள் குறித்து நாம் சிலாகித்தும் விமர்சித்தும் பேசிய இரவுகள் இன்னும் மனதில் இருந்து விடியவில்லை. 'அவனிடம் நான் சொன்னேன் என் அஞ்சுதலை. அந்த அண்ணலே, தந்து வைத்தான் ஆறுதலை' - எப்படி மறக்க முடியும் ராஜி இந்த வரிகளை?

ஆம், அந்த வரிகளுக்கு உரிமையாளன் கண்ணதாசன் சுயசரிதையாகிய 'வனவாசம்' தான் அது! 'கண்ணதாசனிடம் தமிழ் நில் என்றால் நிற்கும். உட்கார் என்றால் உட்காரும்' என்று அந்தக் 'காவியத்தாயின் இளைய மகனை'ப் பற்றி என் பிரியத்திற்குரியவர் பேச்சில் கேட்டேன். கண்ணதாசன் திரைப்படப் பாடல்களைத் தாண்டி, அவரைப் படிக்க நான் ஆசைப்பட்டேன். அதன் தொடக்கமாக 'வனவாசத்தை' எடுத்தேன். நீ கேட்கலாம். எழுதியதைப் படிக்காமல், எழுதுபவனைப் படித்து என்ன பிரயோஜனம் என்று! என் பார்வையில், எழுதுபவனைத் துதிக்கவோ தூற்றவோ வேண்டியதில்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தப்பில்லை. அவனைப் பற்றித் தெரிந்து கொண்டால், அவன் வாழ்ந்த காலத்திய சூழல் பற்றித் தெரிந்து கொண்டால், அவன் எழுத்துக்களை முழுதாகப் புரிந்து கொள்ள முடியும். எழுத்துகளின் பின் உள்ள நேர்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தப் புத்தகம் இரைச்சலான சுய தம்பட்டமாக இல்லாமல், வறண்ட சோக கீதமாக இல்லாமல், எளிமையாக 'இது தான் நடந்தது' என்ற பாணியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இப்படி நடந்தது? அது சரியா தவறா? அதற்கான விவாதங்கள், ஒப்புதல்கள், மன்னிப்புகள் எங்கேயும் இல்லாதது இந்நூலைச் சிறப்பிக்கிறது. நூல் முழுக்க, 'நான்' என்று எழுதாமல் 'அவன்' என்று எழுதியிருப்பது படிப்பவனுக்கு ஒரு இலகுத்தன்மையைத் தருகிறது.

கண்ணதாசன் முன்னுரையிலேயே சொல்லியிருக்கிறார்: 'எப்படி வாழ வேண்டும்? என்பதற்கு இது நூலல்ல! எப்படி வாழக்கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி' என்று.

அவர் பிறப்பு, வளர்ப்பு என்று பெரிதாக ஒன்றும் விளக்காமல் நேரடியாக வேலை தேடிச் செல்வதில் ஆரம்பித்து, அவர் பட்ட கஷ்டங்கள், அடைந்த வாய்ப்புகள், நழுவல்கள், தவறுகள், கட்சியில் சேர்ந்தது என்று ஒரு நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்துடன் விரிகிறது. கவிஞரின் மொழி நடை அத்தனை அருமை!

அவர் மேற்கோள் காட்டும் உதாரணங்கள், ஆங்காங்கே வரும் பொதுவுடமைக் கருத்துகள் அனைத்தும் அழகு!

உதாரணத்திற்கு உனக்காக சில:
---
எவ்வளவு மகிழ்கிறார்கள்! கவலை இருக்கிறதோ, இல்லையோ பசி இல்லை! அது இருந்தால் காதல் இவ்வளவு உற்சாகமாக இருக்காது!

நாலணா முள்ளங்கியை ஐந்தணா ஆக்கினான். ஓரணா கீரை தானாகவே ஒன்றரை அணா ஆயிற்று. இப்படி எல்லாக் காய்கறிகளும் அவனுக்காகத் தங்கள் விலையை உயர்த்திக் கொண்டன.

நடத்தப்படும் படகு கரை வரை சேர்கிறது. சிதறி விழும் கட்டையும் காலங்கடந்தாவது கரைக்கு வந்து விடுகிறது. முடியுமானால் படகாவோம். இல்லையென்றால் கட்டையாவோம். என்றேனும் ஒருநாள் கரை சேர்வோம் என்று அவன் நம்பினான்.

சட்டையில்லாத திறந்தமேனி, முதன்முறையாக போலீஸ் காவலுக்கு ஆளானது

நெடுநேரம் தூங்குகிறவனையே செத்துவிட்டவனாக நினைத்துக் கொத்தித் தின்னும் கழுகுகள், உண்மையிலேயே செத்துவிட்டவனை உடனே கொத்தித் தின்றுவிடலாம்.

4 பேருக்கும் ஒரே மாதிரித் துயரம் வரும் போது அவர்கள் நண்பர்களானார்கள். 4 பேருக்கும் ஒரே மாதிரியான ஆசை வந்துவிட்டதல்லவா? அவர்கள் பகைவர்களானார்கள்.
---
பத்தாண்டுகள் அவர் தி.மு.க கட்சியில் இருந்ததைத் தான் வனவாசம் என்கிறார். அண்ணா பேச்சினால் கவரப்பட்டு, கட்சிக்குள் வருகிறார். கருணாநிதியுடனான ஆரம்ப கால நட்பு, அண்ணா மீது கொண்ட பக்தி எப்படி கொஞ்சம் கொஞ்சமாகக் கசந்து கட்சியை விட்டு அவரை விலக்குகிறது என்பதை கூடுமானவரை, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்திலேயே சொல்லியிருக்கிறார்.

போகிற போக்கில் நேற்றைய & இன்றைய முக்கியத்தலைவர்களை வெளிப்படையாகவே வசை பாடியிருப்பது பகீர் என்றிருந்தது. நிஜமாகவே இப்படியெல்லாம் இருந்தார்களா, கண்ணதாசன் சொல்வது உண்மை தானா என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அவை குறித்தான தேடல்களை எனக்குள் தொடங்கி வைத்திருக்கிறது என்று கூட சொல்லலாம். சில இடங்களில் 'இப்படியுமா இருக்கும் அரசியல்?' என்று வாய் விட்டே சொல்ல வைக்கிறார்.

ஒரு கழுகுப் பார்வையில் கண்ணதாசனைப் பார்த்தால், அவர் சாதாரண மனிதராகவே இருந்திருக்கிறார். பிரத்யேக குணங்கள் என்று பெரிதாக ஒன்றுமில்லை. வேலைக்காகச் சிபாரிசுக்கு அலைந்தது, வேலையைப் பொசுக்கென்று ராஜினாமா செய்து விட்டு வருவது, காசில்லா விட்டால் தண்ணீரைக் குடித்துக் கொண்டு தனியாகக் கிடப்பது, காசு கையில் வந்தால், நணபர்களுடன் மது அருந்திக் களிப்பது, விலைமாதர் வீடுகளுக்குச் செல்வது என்று எல்லாமும் ஒரு சராசரியின் குணம்.

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி நூல் ஆரம்பம் முதல் முடியும் வரை எனக்குப் புரிந்தது, எந்த இடத்திலும் எந்தத் துன்பத்திலும் எத்தனை அவமானத்திலும் அவர் தன் எழுத்தை நம்பினார். எதையும் நாளைக்கென்று எடுத்து வைக்காமல், போனது போன வழியில் போயிருக்கிறார். பிரியத்திற்காக, நட்பிற்காக எதையும் யோசிக்காமல் சில சரியான/தவறான செயல்களைச் செய்திருக்கிறார். அவையனைத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார் தைரியமாக. இவையனைத்தும் சாதாரணனின் செயல்கள் இல்லை. அந்த நம்பிக்கையும் வலிமையும் தான் அவரைக் கவியரசு ஆக்கியதோ, என்னமோ!

மும்முனைப் போராட்டத்தின் போது அவர் சிறையிருந்த நாட்கள், அவரின் பாவமன்னிப்பு கட்டுரை, அ ஆ இ ஈ உலகத்தை அழித்த கதை, சம்பத் - அண்ணாவிற்கிடையேயான பேச்சுவார்த்தை போன்ற இடங்கள் கண்களை புத்தகத்தை விட்டு எடுக்காமல் படிக்க வைத்த பகுதிகள். அதிலும் அந்த அ ஆ இ ஈ கதை..'அம்மாடி! கவிஞரே! காலைக் காட்டுமய்யா! வெறும் முத்தையாவா? முத்தைய்யா நீவிர்'

சில இடங்களில் முகச்சுளிப்பு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. முழுக்க முழுக்கக் கருணாநிதியை வசை பாடியே இருக்கிறது. அவரைத் தவறான கோணத்திலேயே காட்டியிருக்கிறது. அவற்றை எல்லாம் 'கண்ணதாசன் சொல்கிறார்' என்ற ஒரு காரணத்திற்காக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. அவைகள் வன்மத்தால் வந்த வார்த்தைகளா, நிஜமாகவே அவர் அப்படித் தானா என்பதை அடுத்தடுத்துத் தேடுவோம்.

1961 ஏப்ரல் 9 ஆம் தேதி கட்சியிலிருந்து விலகுகிறார். அதனுடன் நூல் முடிகிறது.

இதன் பின்னான பகுதிகள், மனவாசம் என்ற நூலில் வருகிறதாம்! விரைவில் அதையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நீயும் படித்துப் பார் ராஜி. Better late than never!

இது நூல் விமர்சனம் இல்லை. விமர்சிக்கும் அளவுக்கு நான் வளரவுமில்லை. என் பார்வையில், நான் புரிந்து கொண்டதில் சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன். உனக்கும் மற்றவர்களுக்கும் இது வேறுபடலாம். மீண்டும் அடுத்த வாரம் ஏதாவது படித்தால் அந்த அனுபவத்தைப் பகிர்கிறேன். அதுவரை, டாட்டா. டேக் கேர் ராஜி.

அன்புத்தோழி,
மகிழ்வதனா
கனவுபுரம்,
கற்பனையூர்

Wednesday, 1 January 2014

சிந்தனை கார்னர் - மாலன்

அறிந்த ஒன்றிலிருந்து அறியாத ஒன்றிற்கு இட்டுச் செல்வது அல்லது அறியாத ஒன்றை அறிமுகப்படுத்துவதுதான் இலக்கியத்தின் வேலை

 - மாலன்

பாரதி தீவுகள்

சிங்களம் புட்பகம் சாவக -- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி -- அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.

சீன மிசிரம் யவனரகம் -- இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் -- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.

- பாரதியின் 'செந்தமிழ் நாடு'

ஆனா நான் சொல்ல வந்த மேட்டர் இது இல்ல.

புட்பகம், சாவகம், மிசிரம், யவனம் இதெல்லாம் எந்த நாடுகள்ன்னு தேடிப் பார்த்தேன்.

புட்பகம் - இந்தியாவின் கிழக்கு எல்லை நாடான மியான்மர் (பழைய பெயர் பர்மா)
சாவகம் - இந்தோனேஷியாவில் உள்ள ஒரு தீவு
மிசிரம் - எகிப்து (Egypt)
யவனம் - கிரீஸ் (Greece)

வாழ்தல்

வெயில் கால மழையின் முதல் சொட்டை உன் உள்ளங்கையில் ஏந்தியிருக்கிறாயா?

யாரென்றே தெரியாதவனின் குரலை மட்டும் காதலித்திருக்கிறாயா?

அப்பொழுது தான் உதிர்ந்த மலரின் மகரந்தம் மூக்கு நுனியில் ஒட்ட அதை முத்தமிட்டிருக்கிறாயா?

தனியிரவில் நீ படித்த ஒரு வாக்கியம் உன் உலகத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறதா?

அந்நியன் ஒருவனின் மரணத்திற்காக நீ தேம்பித் தேம்பி அழுததுண்டா?

கோபம் தலைக்கேறிய தீக்கணத்தில் நீ உதிர்த்த முதல் கெட்ட வார்த்தை இன்னும் நினைவிலிருக்கிறதா?

100 ரூபாயை சில்லறையாக மாற்றி, மொட்டை மாடியில் நின்று கொண்டு, நாலாபுறமும் தூக்கி வீச வேண்டும் என்ற ஆசை என்றாவது வந்ததுண்டா?

பயமாயிருக்கும் என்பது தெரிந்தும் அரைக் கண்களால் திகில் படங்கள் பார்த்திருக்கிறாயா?

தோளில் தூங்கிப் போன பக்கத்து இருக்கைப் பெண்ணின் குழந்தையை எழுப்பி விட மனமில்லாமல், உன் நிறுத்தம் தாண்டி இறங்கி நடந்திருக்கிறாயா?

ஆம் என்றால் சொல், நீ நிஜமாகவே வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாய்!

இல்லாத தலைப்பு

நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன்
என்பது தெரியாமலே
இருக்கிறேன்

நான் இருப்பதைத்

தெரிந்துகொண்டபோது
நானும் நானும் இருந்தோம்

உண்மையான நானும்
உண்மை போன்ற நானும்
பேசிப்பேசி
உண்மை போன்ற நானாய்
நானாகிவிட்டேன்

உண்மையான நான்
அவ்வப்போது ஆவேன்
உண்மை போன்ற நான்
மறைந்திருக்கையில்

உண்மை போன்ற நான்
இல்லவே இல்லை என்று
உண்மையான நான் சொல்லும்

சரி என்று
உண்மை போன்ற நான்
ஆமோதிக்கும்

இதனைக் கவனித்த நான்
உண்மையான நானும் இல்லை
உண்மை போன்ற நானும் இல்லை
நான் மட்டும் இருக்கிறேன்
என்றுணர்ந்தேன்

நான் மட்டும் இருக்கையில்
அமைதியாய் இருந்தது

அமைதியாய் இருப்பதை
உணர்ந்தும்
நான் வேறு ஆகிவிட்டேன்

நானும் வேறான நானும் பொய்

நான் இல்லை


- ஆத்மாநாம்

அதீத அன்பு என்பது...

அதீத அன்பு என்பது ஒரு பைத்தியக்கார மனநிலை.

சில பைத்தியங்கள் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

சில பைத்தியங்கள் வெற்று கோபத்தையும் கனல் வார்த்தைகளையும் கண்ணில் கண்டவர்களுக்கெல்லாம் கடனளிக்கும்.

சில பைத்தியங்கள் தன்னைத் தானே வதைத்துக்கொண்டு வாழ்வில் நிறைவு பெறும்.

ஆனால் அந்த உலகத்தை சாதாரணன் ஒருவனால் புரிந்து கொள்ள முடியாது. அவை பைத்தியங்களுக்கு மட்டும் சொந்தமான
வை.

பைத்தியங்களின் மொழி, பைத்தியங்கள் மட்டுமே அறிந்த ஒன்று.

அவைகளின் மகிழ்ச்சிக்கும், கோபத்துக்கும், அழுகைக்கும் காரணங்கள் தேவைப்படுவதில்லை. உணர்வுகள் மட்டுமே போதுமானதாக இருக்கின்றன.

அறிவு அழிந்து போகவில்லை இன்னும். ஆனால் மனதுக்கு முன், அது அமிழ்ந்து போய் விடுகிறது அந்தப் பைத்தியங்களுக்கு!

பைத்தியமாய் இருப்பது ஒரு கொடுப்பினை. பைத்தியமாக்கப்படுவதும் கூட!

கடைசிக் கடிதம்

விபரீத ஆசைகள்:
----------------------------
எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. அழகழகா வார்த்தையைப் போட்டு, பூ மாதிரி மென்மையா செதுக்கி செதுக்கி ஒரு காதல் கடிதமும், கண்ணீரைப் பிழிஞ்சு பிழுஞ்சு சோகமே உருவா ஒரு தற்கொலைக் கடிதமும் எழுதணும்னு. ஆனா பாருங்க காதல் கடிதம் எழுதும் அளவுக்கு யார் மேலயும் இது வரைக்கும் ஒரு 'இது' வந்ததில்லை. தற்கொலை பண்ற அளவுக்கு வாழ்க்கை வெறுத்தும் போகல.

காதல் கடித ஆசையை விட தற்கொலை
க் கடித ஆசை அதிகமாயிருந்தது. அந்த ஃபீல் எப்படியிருக்கும்ன்னு பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும்.அந்த மனநிலையில் என்னவெல்லாம் மனதுக்குள் தோன்றும் என்று பார்க்க பயங்கர ஆவலாக இருந்தது.

நேத்தைக்கு ஒரு காதல் ஜோடி தற்கொலை, கடிதம் சிக்கியதுன்னு பேப்பர்ல போட்ருந்தது. அதிலிருந்து அந்தக் கடிதத்தில என்ன இருக்கும்ணு கற்பனை பண்ணிப் பார்க்கச் சொல்லி படுத்துது மனசு. அந்தக் காதலியா என்னை வைத்துச் சும்மா ட்ரை பண்ணுவோம்ன்னு எழுத ஆரம்பிச்சேன். (சும்மா விளையாட்டுக்குத் தான். நத்திங் சீரியஸ். பதட்டப்படாதீக)

இது ஒரு அசட்டுத்தனமான முயற்சி தான். ஆனால் என்னவோ எழுதச் சொல்லி மனசில் ஒரு குறுகுறுப்பு இழையோடுது.

அந்தக் கடிதம் கீழே! (எப்படியும் எல்லாரும் கன்னா பின்னான்னு திட்டுவீங்க. அதுக்குப் பயந்துக்கிட்டுத் தான் இவ்ளோ நாள் அமைதியா இருந்தேன். இன்னைக்கு என்னால என் ஆர்வக் குறுகுறுப்பைத் தாங்கிக்க முடியல. யாரும் மன ரீதியா இதால கஷ்டப்பட்டா ஸாரிங்க. இது முழுக்க விளையாட்டு புத்தியில் பண்றது தான். இப்பவும் சொல்றேன். நத்திங் சீரியஸ். குமுதா ஹேப்பி அண்ணாச்சி)

***

கடைசிக் கடிதம்!

அன்புள்ள அப்பா,

உங்கள் ராஜி கடைசியாய் எழுதுவது.

அப்பா, உங்களுக்கு நினைவிருக்கிறதா? எழுதப் படிக்கும் காலத்தில் எனக்கு ஆங்கில 'a' போட சுத்தமாய் வராது. அம்மாவும் நீங்களும் 'a' வடிவில் புள்ளி வைத்துக் கொடுத்து, அதைப் பென்சில் கொண்டு சேர்த்து எழுதச் சொல்வீர்கள். முதலில் பெரிய 'a', அடுத்து அதை விடச் சின்னதாய், அடுத்து அதை விட இன்னும் சின்னதாய், இரண்டு நாட்கள் புள்ளி பக்கத்தில் பக்கத்தில் வைத்து, அடுத்த நாளில் கொஞ்சம் தள்ளி வைத்து, படிப்படியாக புள்ளி சேர்க்காமல் நானாகப் பழகிக் கொண்டேன். அந்த நினைவுகள் மனதில் அடியாழத்தில் வெகு நாள் பிரிக்காத புத்தகத்தின் மங்கல் எழுத்தாய் நினைவில் நிற்கிறது.

நீங்கள் சொல்லித் தந்த போது இந்தக் கேள்வி எழவில்லை. ஆனால் இப்பொழுது தோன்றுகிறது. அது வெறும் 'a' மட்டும் தானா? வாழ்க்கை இல்லையா, அப்பா? அவை வெறும் புள்ளிகளா? உறவுகள் அல்லவா அப்பா? உறவுகளின் இருத்தலில் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சார்ந்து வாழ்ந்து, அவை இல்லாத போதும் வாழ்வை நகர்த்தச் சொல்லித் தந்தது அந்த 'a' அல்லவா?

இது நாள் வரை புள்ளிகள் இல்லாமல் வாழத் தெரியும் என்றிருந்தேன். ஆனால் இன்னமும் எனக்கு 'a' எழுத வரவில்லை அப்பா. ஆம்! அவரில்லாமல் வாழத் தெரியவில்லை.

உங்கள் மருமகனாய் அவரை ஏற்க உங்களுக்கு மனதில்லை. அவரைத் தவிர வேறு யாரையும் மணாளனாய் ஏற்க என்னால் முடியவில்லை. இப்பொழுதும் பாருங்களேன், இருவருக்கும் பிரச்சனை ஒன்றே ஒன்று! அது மனது!

அப்பா, உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு திருவிழா நாளின் கண்காட்சிக் கூடத்தில், நானும் அம்மாவும் டெல்லி அப்பளம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கோகி அங்கும் வந்து GEMSம் மிட்டாய் வேண்டும் என்று கத்திக் கூப்பாடு போட்டாள். சன்னமான அலைதலுக்குப் பின்னால், நீங்கள் வாங்கி வந்ததை ஒரு வாய் வைத்து விட்டு வேண்டாம் என்று அப்பளத்தைப் பிடுங்கி என்னை அழ வைத்தாள் அந்தக் குறும்பி. என்னை ஏய்ப்பதற்காக, GEMS மிட்டாயில் கலர் விளையாட்டு விளையாண்டோமே! உள்ளங்கைக்குள் அவற்றைக் கொட்டி வைத்து, ஆளுக்கொரு கலர் மனதில் நினைக்க, கண்ணை மூடி எடுக்கும் போது யார் நினைத்த கலர் வருகிறதோ அவர்களுக்கு அதைச் சாப்பிடக் கொடுப்பீர்கள். முதல் சுற்றிலேயே நான் நினைத்த கலரும் நீங்கள் நினைத்த கலரும் ஒன்றாய் இருந்து, அதை அன்பாய் நீங்கள் ஊட்டி விட்ட சுவை இன்னும் என் அடி நாவில் அமுதமாய் இனிக்கிறது அப்பா! அப்பொழுது எவ்வளவு பெருமையாய் இருந்தது தெரியுமா! அப்பா, இப்பொழுது மட்டும் ஏன் நாம் எதிரெதிர் நிறங்களைத் தேர்ந்தெடுத்தோம்?

காரணம்: நீங்கள் மாடர்ன் இல்லை என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாய் அவர்கள் சொல்வதை ஏற்க முடியாது. கடன் கழுத்தை அழுத்தியிருந்த சந்தர்ப்பங்களில், அம்மாவே கூட படிக்க வைக்க வேண்டாம் என்று மனம் மாற்றியிருந்த இருள்களில் கூட, எனக்காக தரப்பட்டியலையும், அண்ணா யுனிவர்சிட்டி அறிக்கையையும் கையில் வைத்துக் கொண்டு கனவு கண்டு கொண்டிருந்த நீங்கள் மாடர்ன் இல்லையென்று எப்படிச் சொல்வது? ஊரெல்லாம் சுற்றித் திரிந்து விளையாடும் பருவத்தில், எந்தத் தெருவில் விளையாடுவாய் என்று கேட்காமல் அனுப்பிய உங்களை எப்படி மாடர்ன் இல்லையென்று சொல்வது? தோற்று விட்டு அழுத முதல் பேச்சுப் போட்டி தினத்தன்று, வெற்றிகள் மட்டும் மகிழ்ச்சிகள் இல்லையென்று கற்பித்த உங்களை எப்படிச் சொல்வது மாடர்ன் இல்லையென்று?

அப்பா, நான் உங்களுக்கு தேவதை. எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் பிரச்சனை என்ன தெரியுமா? ஒன்றே குலம். அதற்கு ஒருத்தியே தேவதை என்று நீங்கள் வாழ்வது தான். அப்பா, அதில் என்னவனையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள முடியாததற்கு இது தான் காரணம்! தேவனாகக் கூட வேண்டாம். ஒரு பக்தனாகச் சேர்த்துக் கொள்ளும் மனம் இன்னமும் வராதது என் மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச சாபம்!

வாழ்தல் இனிதென்று கற்றுத் தந்தவர் நீங்கள் தான்! உறவுகள் பெரிதென்று சொல்லித் தந்தவர் நீங்கள் தான்! உள்ளுணர்வுகள் உன்னதமானவை என்று புரிய வைத்ததும் நீங்கள் தான்! எல்லாம் எனக்குப் புரிந்த பின், அதன்படி நடக்காதே என்று இப்பொழுது சொல்வதை ஏற்க எனக்குத் தைரியமில்லை.

உங்களிடம் சண்டை பிடிக்க எனக்குத் தெரியாது, இது தான் வேண்டும் என்று கேட்டுப் பழக்கமில்லை. எனக்குப் பிடிக்காததை வாங்கித் தருவதும் உங்கள் வழக்கமில்லை. வழக்கத்திற்கு மாறாய் எதுவும் வேண்டாம் அப்பா! யாரும் அவரவர் குணத்திலிருந்து இறங்கி வர வேண்டாம். நான் இனி கேட்கப் போவதில்லை. கேட்பதற்கு இருக்கவும் போவதில்லை. என் வெற்றி உங்களைத் தோற்கடிக்குமானால் என்னால் அதை ஏற்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் என் தோல்விகளைத் தாங்கிக் கொண்டும் என்னால் வாழ முடியாது.

போகிறேன் அப்பா! வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட இடங்களுக்கு! காதல், அன்பு, பாசம் இவற்றை எல்லாம் கடந்த இடங்களுக்கு! வலிகள் இல்லாத ஒரு உலகத்திற்கு! திரும்பி வர வழிகள் இல்லாத கணங்களுக்கு!

எனக்காக அழ வேண்டாம் அப்பா! யதார்த்தம் எளிமையானது! உங்கள் வாழ்வில் இனி தேவதைகள் இருக்கப் போவதில்லை. வர்ணங்கள் இல்லாத வாழ்வு எனக்கு இனி இருக்கப் போவதில்லை. தேவதைகளைச் சிலுவையில் அறைய உங்களுக்கு உரிமை இருக்கிறது. அப்பொழுதும் அதைச் சிரிக்கச் சொல்லிக் கேட்டால் அது இயலாத ஒன்று.

போகிறேன் அப்பா! மொட்டை மாடி வெயில் என் பாதங்களுக்கு இளைப்பாறுதல் தரும். ஒற்றைச் சுருள் கயிறு என் சோகங்களை இழுத்துப் பிடிக்கும். நஞ்செனும் இனிப்பு என் குரல்வளைக்குள் குடியேறும். இதில் ஏதேனும் ஒன்றில் என் காயங்கள் கரையும்!

இப்படிக்கு,
இனி இல்லாத உங்கள் ராஜி

***

இந்தக் கடிதக்கரு கற்பனையானது தான்! ஆனாலும் ஏனோ எழுதி முடித்ததும் எனக்கு அழுகை வருகிறது! மரணங்கள் வெறும் சம்பவங்கள் என்று எப்படிச் சொல்வது?!

சிந்தனை கார்னர் - திருமூலர்,

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பன்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே!

- திருமூலர் திருமந்திரம் - பாடல் 2290

சிந்தனை கார்னர் - டி.எஸ்.எலியட்

நாம் மனிதர்களின் இயல்பை அறிய முடிவதில்லை. அவர்கள் குறித்து நம் உள்ளத்தில் உள்ள பிம்பங்களையே நெக்குருக நேசிக்கிறோம்

-  டி.எஸ்.எலியட்

தமிழ்த்தாய் வாழ்த்து - ஒரு பார்வை

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார். இது லிட்டன் பிரபுவின்  The secret way என்ற நூலைத் தழுவி, சுந்தரனாரால் இயற்றப்பட்ட 'மனோன்மணியம்' என்னும் கற்பனைப் புதினத்தின் துதிப் பாடல்களுள் ஒன்று.  1970-ஆம் ஆண்டு தமிழக அரசு இப்பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.

இப்பாடலில் ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையி
ல் அமைந்த மற்ற வரிகள் மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்தாய் ஏற்கப்பட்டுள்ளன
.

முழுப்பாடல் கீழே:

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"
 

 நன்றி: விக்கிபீடியா (தமிழ்)

இப்போ பிரிச்சுப் படிக்கலாம்:

நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தைக்கு,

எழில் ஒழுகும் சீர் ஆரும் வதனம் எனத்,

திகழ் பரதக் கண்டம் இதில்,

தெக்கணமும்,

அதில் சிறந்த, திராவிட நல் திருநாடும்,

தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல், அனைத்து உலகும் இன்பம் உற,

எத்திசையும் புகழ் மணக்க, இருந்த பெரும் தமிழ் அணங்கே! தமிழ் அணங்கே!

உன் சீர் இளமைத் திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
விளக்கம்:

நீர் நிறைந்த கடல் என்னும் ஆடை உடுத்திய நில மகளுக்கு, அழகு மிளிரும் பெருமை நிறைந்த முகம் போலத் திகழ்கின்ற பாரதக் கண்டம் இதில், தென் திசை நாடும், அதில் சிறந்து விளங்குகிற திராவிடர்களின் நல்ல திருநாடும் நேர்த்தியான சிறு பிறை நெற்றியில் இட்ட நல்ல குங்குமம் போல விளங்குகிறது. அந்த குங்குமத்தின் வாசனையைப் போல அனைத்து உலகமும் இன்பம் பெறுமாறு எல்லாத் திசைகளிலும் புகழ் பெறுகின்ற பெருமை மிக்கத் தமிழ்ப் பெண்ணே! தமிழ்ப் பெண்ணே!  உன் பெருமை நிறைந்த, இளமையாக இருக்கின்ற திறமை வியந்து, எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!


புதுச்சேரியோட தமிழ்த்தாய் வாழ்த்து இது தானாம்! விக்கி சொல்லுது!

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்

தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

- பாரதிதாசன் (இசை அமுது நூலில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது)

பாரதி பிறந்தநாள் ஸ்பெஷல்

பாரதி பிறந்தநாள் ஸ்பெஷல்!

எட்டையபுர அரசவைத் தலைமைப் புலவராக இருந்த காந்திமதி நாதருக்கு பாரதி மேல கொஞ்சம் கடுப்பு. அதனால அவரை அவமானப்படுத்தனும்னு நெனச்சு 'பாரதி சின்னப்பயல்' என்று ஈற்றடி அமையுற மாதிரி 5 நிமிடத்தில் ஒரு பாடல் இயற்ற வேண்டும்ன்னு பாரதி கிட்ட சொன்னாராம். நம்மாளு அதுக்கு உடனே பாடுனாராம் இப்படி:

"ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற
காரிருள்ப
ோ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்."

புரியுதா? (சகாக்களுக்காகப் பிரித்து, கீழே)

ஆண்டில் இளையவன் என்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்து என்னை ஏளனம் செய் - மாண்பு அற்ற
கார் இருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்.

அதாவது, தன்னை விட வயதில் இளையவன் நான் என்று அந்த அகந்தையினால் என்னை இகழ்ந்து ஏளனம் செய்த, பெருமை அற்ற, கருமையான இருள் போன்ற உள்ளம் கொண்ட காந்திமதி நாதனைப் பார், மிகவும் சின்னப் பயல் அவர்! என்று பொருள். (பாரதி சின்னப் பயல் = பார் அதி சின்னப் பயல்)

உடனே கா.ம.நா வுக்கு தலைகுனிவாப் போயிட்டுது.

அதைப் பார்த்து பாரதி பாட்டை கொஞ்சம் மாத்திப் பாடுறார் இப்படி:

"ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்."

ஆண்டில் இளையவன் என்றைய அருமையினால்
ஈண்டு இன்று என்னை நீ ஏந்தினையால் - மாண்புற்ற
கார் அது போல உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்

(கார் அது போல உள்ளத்தான் - மழை மேகம் போல கருணை மிக்க உள்ளம் கொண்டவன்)

இங்க பாரதி, தன்னையே சின்னப் பயல் ன்னு சொல்லிக்கறார்.

நன்றி: மாலன் சார்

மாலன் சார், உங்களுக்கு ஞாபகம் இருக்கா? பாரதி பற்றி நீங்க சொன்ன இந்தத் தகவல் தான், அவர் எழுத்துக்களைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டிய முதல் பொறி. மேலே சொன்ன இந்தப் பாட்டு வரிகளை நினைவில் இருந்து தான் எடுத்து எழுதறேன்(சரியாத் தான் இருக்கும்ன்னு நம்புறேன்). நாம் இது பற்றிப் பேசிய அந்த மாலைப்பொழுது, என் உலகத்தை விழிக்கச் செய்த ஒன்று. இடைப்பட்ட 11 மாதத்தில் நான் வளர ஆரம்பிச்சுருக்கேன். அதுக்கெல்லாம் முதல் பொறி நீங்கள் தந்தது. என் நன்றியை வெறுமனே வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனாலும் நெகிழ்ச்சி நிறைந்த நன்றிகள் சார்.

இராஜியானந்தா பொன்மொழிகள் - சுதந்திரம்

நாய்களின் சுதந்திரம் அது கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் நீளத்தைப் பொறுத்தது.

சொன்னவர்: இராஜியானந்த சுவாமிகள்

அத்தா ஆனந்தா அமிர்தா!

தமிழ் இலக்கியத்தில் சில வார்த்தைகள் அல்லது வரிகள் மிக catchy-ஆக, மனதிலேயே நின்று அதிகாரம் செலுத்தும். மற்றவர்களுக்கு சாதாரணமாக இருந்தாலும், நம் மனதில் அது ஒரு வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வரிசையில் 'திருவெம்பாவை' முதல் பாடலின் இடையில் வரும் வரியான 'வன்செவியோ நின் செவி தான்' இருந்தது.

அதே தொகுப்பின் மூன்றாம் பாடலில் 'அத்தன் அமிர்தன் ஆனந்தன் என்று உள்ளூறித் தித்திக்கப் பேசுவாய்' என்று வர
ுகிறது. இதில் 'அத்தன்' என்ற சொல் மனதை வெகுவாகத் தொட்டது. எங்கேயோ கேட்ட சொல் போலவும், பழக்கமேயில்லாத புதிய சொல் போலவும் ஒரே நேரத்தில் இருப்பது சில சொற்களுக்கு மட்டுமே கிடைத்த வரம்.

அத்தன் என்றால் தகப்பன் என்று பெரும்பான்மையான இடங்களில் பொருள்படுகிறது. (அது போல இறைவன், தலைவன் என்றும் பொருள் கொள்ளலாம்)

உதாரணங்கள் சில:

"அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி ஆடப்
பொற்சுண்ணம் இடித்தது நாமே"

"அத்தன் கருணையோடு ஆட ஆட ஆடப்
பொற்சுண்ணம் இடித்தது நாமே"

- திருவாசகம்

"அத்தன் அமைத்த உடல் இரு கூற்றினில்
சுத்தமாகிய சூக்குமம் சொல்லுங்கால்"

- திருமூலர் திருமந்திரம்

"அத்தா உனக்கு இனி அல்லேன் எனலாமே"

- தேவாரம்

அத்தன் என்ற சொல் இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ளது.

முஸ்லீம் குடும்பங்களில் இப்பொழுதும் அப்பாவை 'அத்தா' என்றழைக்கும் வழக்கம் உள்ளது. இவ்வளவு நாட்களாக அது உருதுச் சொல்லாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அது சுத்த தமிழ்ச் சொல்.

இப்போது ஒரு கேள்வி.

அத்தன் = தகப்பன், தலைவன், இறைவன்

இந்த 'அத்தான்' என்ற சொல் அத்தன் என்பதிலிருந்து வந்ததா?

அத்தான் என்றால் மாமன் மகன் / கணவன். அதாவது தலைவன். பொருள் இங்கு கிட்டத்தட்ட பக்கத்தில் வந்து விட்டதே! அத்தன் என்பதிலிருந்து அத்தான் சொல் பிறந்திருக்க வாய்ப்பு இருக்கிறதோ?

இராஜியானந்தா பொன்மொழிகள் - கற்பனை

தனக்குள்ளே இருக்கும் வரை தான் அது கற்பனை. வெளியில் சொல்லி விட்டால் அதன் பெயர் பொய் என்று மாறிவிடும்.

கற்பனைகளுக்கு மரியாதை உண்டு நம் மனதிற்குள்ளாவது. பொய்களுக்கு அது கிடைப்பதில்லை.

சொன்னவர்: இராஜியானந்த சுவாமிகள்

பாரதி vs பகவதி

என் சித்தப்பா வீட்டுத் தம்பிக்கு ஒரு ப்ராஜெக்ட்டில் உதவி செய்வதற்காக, பாரதி குறித்து படித்துக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு அழகான விஷயம் பார்க்க நேர்ந்தது. முன்னமே படித்த கட்டுரை தான் அது. ஆனால் இன்று படிக்கும் போது இன்னும் சுவாரஸ்யம் நிறைந்ததாய் இருக்கிறது.

பகவதி படத்தில் வடிவேலு பேச்சு அதிகமாகப் போகும் போது, ஒரு சைகை காட்டி விஜய் 'அடங்கு' என்று சொல்வார்.

து உண்மையில் பாரதியிடம் இருந்து எடுத்தது போல!

புதுவை ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவில் குடியிருந்தபோது பாரதி நடத்திய ‘தர்பாருக்கு’ தராசுக்கடை என்று பெயர். அவரைக் காணவரும் நண்பர்கள், அன்னியர்கள், உளவாளிகளுடன் பாதி வேடிக்கையும், தீவிரமுமாக நடத்திய உரையாடல்களை அவர் தராசு என்ற பெயரில் பதிவு செய்தார்.

தராசுக்கடைக்கு ஒரு நாள், பாரதிதாசன் வருகிறார். கவிதை குறித்து இருவரும் பேசிக் கொள்வதாய் உரையாடல் தொடரும்.

அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

***

சேட் சொல்கிறார்: “நான் அதற்கு மாத்திரம் வரவில்லை. வேறு சங்கதி கேட்கவும் வந்தேன். தராசு நடக்கப்போவதை அறிந்து சொல்லுமோ?”

“சொல்லாது’ என்று தராசே சொல்லிற்று.

“சொல்ல சம்மதமிருந்தால் சொல்லும், இல்லையென்றால் சொல்லாது. எதற்கும் நீர் கேட்க வந்த விஷயமென்ன? அதை வெளியிடும்” என்று நான் சொல்லப் போனேன். (இங்கு நான் என்பது பாரதிதாசனைக் குறிக்கும்)

தராசு என்னிடம் “காளிதாசா, ‘அ!’ என்றது. இந்த ‘அ’ காரத்திற்கு அடக்கு என்று அர்த்தம். அதாவது என்னுடைய கருத்துக்கு விரோதமாக வார்த்தை சொல்லாதே என்றர்த்தம். தராசு ‘அ’ என்றவுடன் நான் வருத்தத்துடன் தலை குனிந்து கொண்டேன்.

***

# புதியதெல்லாம் பழையதன் மீள் வடிவம். பழையதெல்லாம் புதுமையின் அடி நாதம்!

ஒரு மழை வேண்டும்

ஒரு மழை வேண்டும்
சாலை விபத்தில் தப்பிப் பிழைத்தவன்
சிந்திய ரத்தத்தைத் துடைப்பதற்கு!

ஒரு மழை வேண்டும்
பூக்கவே செய்யாது என்று நினைத்திருந்த
ரோஜாச் செடிகள் பூப்பதற்கு!

ஒரு மழை வேண்டும்
உறக்கம் வரவில்லை என்று சொல்லி

ஜன்னல் திறந்து பார்ப்பதற்கு!

ஒரு மழை வேண்டும்
எதை எதை இழந்தோம் என்று
பட்டியல் இடுவதற்கு!

ஒரு மழை வேண்டும்
இனியாவது புழுக்கம் குறையும் என்று
நம்பிக்கை வைப்பதற்கு!

ஒரு மழை வேண்டும்
இவையெல்லாம் மழையால் தான்
மாறியது என்று காரணம் சொல்வதற்காகவாவது!

ஒரு மழை வேண்டும்!

இராஜியானந்தா பொன்மொழிகள் - நம்பிக்கை

ஒருவர் மீது வைக்கப்படும் முதல் நம்பிக்கை, அவர் செயல்களைப் பொருத்ததல்ல. நம் மனத்தைப் பொருத்தது.

ஒருவர் மீது வைக்கப்படும் கடைசி நம்பிக்கை, நம் மனத்தைப் பொருத்தது அல்ல. அவர் செயல்களைப் பொருத்தது.

தத்துவ முத்தை தூ தூ என்று துப்பியவர்: சுவாமி பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ இராஜியானந்தா!

காலங்கள் மாறலாம்

வழக்கம் போல இன்றும் காலை வாக்கிங். அதே பூங்கா. சற்றே அதிகபட்ச குளிரில் காது நிறைக்கப் பாடல் கேட்டால் மனம் நிறைந்து வழியும். எனக்குப் பிடித்தமான 'கண்ணுக்கு மையழகு' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதில் ஒரு வரி இப்படி வரும்: 'இளமைக்கு நடையழகு. முதுமைக்கு நரையழகு' என்று.

அந்த வரிகளுக்கேற்ற அழகான சூழ்நிலை அதுவென்று பட்டது. இளைஞர்கள், முதியவர்கள், குழந்த
ைகள் என்று எல்லாத் தரப்பினரையும்
அந்த நேரத்தில் பார்க்க முடியும்.

எனக்கு முன்னே ஒரு முதியவர் சென்று கொண்டிருந்தார். 70 - 80 க்குள் வயது இருக்கும் என்று அவர் தலை முடியும், நடையும் காட்டியது. முதுமைக்கு நரை அழகு தானோ என்று அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டே அவர் பின்னால் நான்கடி இடைவெளியில் நான் நடந்து கொண்டிருந்தேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென்று குப்புற விழுந்து விட்டார். ஏதாவது உடம்புக்குத் திடீரென வந்து விழுந்தாரா, கால் இடறி விழுந்தாரா என்று தெரியவில்லை. ஓடிப் போய் அவரைத் தூக்கி உட்கார வைத்து, உதவியென்று போட்ட  கூச்சலில் ஏழெட்டுத் தாத்தாமார்கள் அந்த இடத்தை நோக்கி வந்தார்கள்.

அவருக்கு மூக்கில் செம அடி.  ரத்தம் அதிகமாய் வந்தது. தண்ணீர் கொடுத்து, சின்ன முதல் உதவிகள் செய்த பின், ஓரளவுக்குச் சரியானார். வண்டி வைத்திருந்த மற்றொருவர் அவரை வீட்டில் விட அழைத்துச் சென்று விட்டார்.

அந்தப் பெரியவர் முகத்தில், அவர் கிளம்பிய போது, அப்படியொரு பயமும் சங்கடமும் தெரிந்தது. சுற்றியுள்ள மற்ற தாத்தாக்களில் இருவர் முகத்திலும் ஒரு பெருங்கவலை வந்து மறைந்ததைப் பார்க்க முடிந்தது. அதில் ஒருவர், என்ன நினைத்தாரோ, ஆக்டிவாக நடந்து கொண்டிருந்தவர் பேசாமல் போய், அருகிருந்த பெஞ்சில் அமர்ந்து விட்டார்.

முதுமை என்பது உண்மையிலேயே பெரும் கொடுமை தானோ? கொடிது கொடிது முதுமை கொடிது என்பது நிஜம் தானோ?

இது போன்ற பூங்காக்களைக் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தால் தெரியும். எல்லா வயதினரும் வரும் இடம். குட்டிப் பாப்பாக்கள் தன் பெற்றோரின் கையைப் பிடித்து 'தத்தக்கா புத்தக்கா' என்று நடப்பது கோடி கொடுத்தாலும் கிடைக்காத வரம். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் பெற்றோர் பேச்சைக் கேட்காமல் போவோர் வருவோர் கால்களுக்குள் புகுந்து ஓடும். கல்லூரி வயதினர் ஒரு கூட்டமாய் வருவார்கள். ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு, நடுவில் ஒரு ஐபோன். அவ்வளவு தான்! அதன்பின், அவர்கள் உலகத்தில் நமக்கு இடமில்லை. என்னைப் போல ரெண்டும் கெட்ட வயதினர், சாசுவாதமாகக் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு தற்காலிகச் செவிடர்களாவோம். ஆன்ட்டிமார்கள் குட்டிக்குட்டிக் கூட்டங்களாக பேசிக் கொண்டே நடப்பார்கள். இந்த 70 - 80 பெரியவர்கள் மட்டும் எப்பவும் ஒரு துணையுடன் தான் வருவார்கள். அந்தத் துணை பெரும்பாலும் கணவன்/மனைவியாகவோ, பக்கத்து வீட்டுக்காராகவோ, பேரன்/பேத்தியாகவோ, அட்லீஸ்ட் அவர்கள் செல்ல நாய்க்குட்டியாகவோ இருக்கும். அது ஏன்?

முதுமையை எதிர்கொள்வதற்கு மிகப் பெரிய மனோபலம் தேவைப்படத்தான் செய்கிறது. அவற்றை அந்தத் துணைகள் தருமென்ற கற்பனைகள் அல்லது நம்பிக்கைகள் அவர்கள் வாழ்வை நகர்த்திச் செல்கிறது, தினம் தினம். அவை ஒரு நாள் உடையும் போது, அந்த இடத்தை நிரப்பும் உறவுகள் அவர்களுக்குப் பெரும்பாலும் எஞ்சியிருப்பதில்லை என்பது இந்தக் கால வாழியல் யதார்த்தம்.

'காலா என் காலருகில் வாடா! சற்றே மிதிக்கிறேன்' என்று சொல்வது சாதாரணனால் சாத்தியமா? மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதுமைக்கு எத்தனை பயங்கள் இருக்கும்? அவர்கள் மனதில் எத்தனை வலிகள் இருக்கும்? மன வலி(மை)யை உடல்வலி வெல்லும் நாளில் அவர்கள் உலகம் சுருங்கிப் போகும். அதன் வெற்றுப் புலம்பல்களும், வீண் பயங்களையும் புரிந்து கொள்ள வேண்டியது ஒரு வலுவான அடுத்த தலைமுறையின் கடமை.

கனவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாய், கைக் கடிகாரம் காட்டியது. கையில் அவர் ரத்தம் பிசுபிசுத்தது. என் இதழ் அரை சென்டிமீட்டர் விரிந்து சுருங்கியது. அதன் அர்த்தம் எனக்கு மட்டும் புரிந்த ஒன்று!

கும்மைகள்


யாரெல்லாம் முகநூலைத் தமிழில் பயன்படுத்துகிறீர்கள்?

ஆம் என்றால் உங்கள் home page-க்குச் செல்லவும். அதில் இடது மூலையில் படித்தவை, நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள், குழுக்கள் இத்யாதி இத்யாதிகள் display ஆகும். அதில் 'பயன்பாடுகள்' என்ற ஒரு குருப்பின் கீழே 'கும்மைகள்' என்று ஒன்று இருக்கும்.

What is கும்மைகள்?

அது பற்றி இப்போ கொஞ்சம் பார்ப்போம்.

பக்கத்தில் dice symbol போட்டிருப்பதிலிருந்து நமக்குத் தெர
ியும் அது Games என்பது!

ஆனால் அது என்ன 'கும்மைகள்', கேள்விப்பட்டதில்லையே என்று கொஞ்சம் தேடியதில் சில தகவல்கள் சிக்கின.

கும்மைகள் என்ற சொல் கும்மாளம் என்பதிலிருந்து வந்ததாய் இருக்கலாம் என்பது தமிழறிஞர்களின் கருத்து. பொதுவாக கும்மை என்பது கும்மி என்பதைக் குறிக்கும். (கும்மியடி கும்மியடி கொடி குலவையும் போட்டு கும்மியடி...)

கும்மை = கொம்மை = கொம்மி = கும்மி

சில இலக்கிய மேற்கோள்கள்:
------------------------------------------------
உடற்ற வரு தீவினை யினைக் கொம்மை கொட்டினன்

- தணிகைப்புராணம்

வள்ளலார் இயற்றிய திருவருட்பாவில் சண்முகக் கொம்மி என்று 14 பாடல்கள் அடங்கிய தனிப்பிரிவே உள்ளது.

குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
தோற்றத்தைப் பாடி யடியுங்கடி.

- இது சண்முகர் கொம்மியின் ஆரம்பப் பாடல்

இந்தப் பாடல் வரிசையில் ஒரு பாட்டு என்னைக் கவர்ந்தது.

ஆனந்தமான அமுதனடி - பர
மானந்த நாட்டுக்கு அரசனடி
தான் அந்தமில்லாச் சதுரனடி - சிவ
சண்முகன் நம் குருசாமியடி.

அதென்ன, அந்தமில்லாச் சதுரனடி?

அந்தம் என்றால் முடிவு. முடிவில்லாத சதுரனடி.

இது எனக்குக் கொஞ்சம் புதுமையாகப் பட்டது. எப்பவும் முடிவில்லாத என்று சொல்வதற்கு வட்டத்தைத் தான் உதாரணம் சொல்வார்கள். எங்கு தொடங்கியது எங்கு முடிகிறது என்று சொல்ல முடியாததாலும் கூட. இங்கு ஏன் சதுரத்தைச் சொல்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் வந்தது. (உதாரணம்: வாழ்க்கை ஒரு வட்டம்டா! இதுல ஜெயிக்குறவன் தோப்பான்..தோக்குறவன் ஜெயிப்பான்..ஹி ஹீ)

அங்கு தான் இருக்கிறது இயற்றியவரின் அறிவுச் செறிவு.

அந்தமில்லாச் சதுரனடி என்பதன் உள்ளர்த்தம் முடிவு இல்லாத நால்வகை முறைகளான சாம, தான, பேத, தண்டம் ஆகியவற்றை நன்கு அறிந்தவன் என்பது.

அதென்ன சாம, தான, பேத, தண்டம்?? (சாம தான பேத தண்ட நாலும் சேர்த்துத் தோத்துப் போகும் தகிடதத்தோம்...தகிடதத்தோம்...அதே தான்..)

இது சாணக்கியன் சொல்லிக் கொடுத்த நுட்பங்கள்:

சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்

தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்

பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல்

தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, தண்டனை கொடுக்க, யுத்தம் செய்தல்

அவ்ளோ தான்!

சிந்தனை கார்னர் - கன்ஃபூசியஸ்

நல்லாட்சி நடக்கும் நாட்டில், ஏழ்மை வெட்கப்பட வேண்டிய ஒன்று;
மோசமான ஆட்சி நடக்கும் நாட்டில், செல்வம் வெட்கப்பட வேண்டிய ஒன்று.

- கன்ஃபூசியஸ்

சிந்தனை கார்னர் - போப் பிரான்சிஸ்

காணாமல் போன ஆடுகளைத் தேடுங்கள். மேய்ப்பன் ஆடுகளின் மணத்துடன் வாழ வேண்டும். அதனால் எளிமையாய் வாழுங்கள். தேவாலயம் சேரிகளுக்குச் செல்லட்டும்.

- போப் பிரான்சிஸ்