Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, 1 January 2014

இல்லாத தலைப்பு

நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன்
என்பது தெரியாமலே
இருக்கிறேன்

நான் இருப்பதைத்

தெரிந்துகொண்டபோது
நானும் நானும் இருந்தோம்

உண்மையான நானும்
உண்மை போன்ற நானும்
பேசிப்பேசி
உண்மை போன்ற நானாய்
நானாகிவிட்டேன்

உண்மையான நான்
அவ்வப்போது ஆவேன்
உண்மை போன்ற நான்
மறைந்திருக்கையில்

உண்மை போன்ற நான்
இல்லவே இல்லை என்று
உண்மையான நான் சொல்லும்

சரி என்று
உண்மை போன்ற நான்
ஆமோதிக்கும்

இதனைக் கவனித்த நான்
உண்மையான நானும் இல்லை
உண்மை போன்ற நானும் இல்லை
நான் மட்டும் இருக்கிறேன்
என்றுணர்ந்தேன்

நான் மட்டும் இருக்கையில்
அமைதியாய் இருந்தது

அமைதியாய் இருப்பதை
உணர்ந்தும்
நான் வேறு ஆகிவிட்டேன்

நானும் வேறான நானும் பொய்

நான் இல்லை


- ஆத்மாநாம்

ஒரு மழை வேண்டும்

ஒரு மழை வேண்டும்
சாலை விபத்தில் தப்பிப் பிழைத்தவன்
சிந்திய ரத்தத்தைத் துடைப்பதற்கு!

ஒரு மழை வேண்டும்
பூக்கவே செய்யாது என்று நினைத்திருந்த
ரோஜாச் செடிகள் பூப்பதற்கு!

ஒரு மழை வேண்டும்
உறக்கம் வரவில்லை என்று சொல்லி

ஜன்னல் திறந்து பார்ப்பதற்கு!

ஒரு மழை வேண்டும்
எதை எதை இழந்தோம் என்று
பட்டியல் இடுவதற்கு!

ஒரு மழை வேண்டும்
இனியாவது புழுக்கம் குறையும் என்று
நம்பிக்கை வைப்பதற்கு!

ஒரு மழை வேண்டும்
இவையெல்லாம் மழையால் தான்
மாறியது என்று காரணம் சொல்வதற்காகவாவது!

ஒரு மழை வேண்டும்!

Friday, 29 March 2013

கதவுகள்



காத்திருப்பின் குறியீடு - கதவுகள்;
கால்கடுக்கக் நிற்கிறேன் அதன் முன்னே!

கனக்க வைக்கும் கணங்கள் இவை!
நிராகரிப்பின் பிள்ளையார்சுழி இந்நிலை!

காயங்களைத் தடவிப்பார்க்கிறேன்
காலக்கனப்பில் கசப்பாகியிருந்தது!

இது மட்டும் நடந்து விட்டால்......
கற்பனை சுகத்தில் விரிகிறது இதழ்!

நடக்காவிட்டால் என்ன செய்வாய்?
வேதனைச் சூட்டில் சுருங்குகிறது மனது!

ஒன்று போனால் மற்றொன்று - நிமிர்கிறேன்
ஆதர்ஷ எழுத்தாளனின் வாசகனாய்!

மற்றொன்று எப்பொழுது - குலைகிறேன்
ஒரு யதார்த்தத்தின் நேசகனாய்!


காத்திருப்பின் குறியீடு - கதவுகள்;
கால்கடுக்கக் நிற்கிறேன் அதன் முன்னே!



Wednesday, 27 March 2013

வாழ்க்கை



மழையை எதிர்பார்த்திருந்தேன்
கிடைத்ததோ ஜலதோஷம்!

Thursday, 7 March 2013

செருப்புக் கடை

 
கண்ணைக் கவரும் கண்ணாடிப் பெட்டிக்குள்
கவர்ச்சியாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது - 500 ரூபாய் மதிப்புள்ளது;
ஆடித் தள்ளுபடியின் இடிபாடுகளுக்குள்
சிக்கிச் சிதைந்து கொண்டிருந்தது - 100 ரூபாய் மதிப்புள்ளது;
இரண்டுக்கும் தெரியுமா?
கடையைத் தாண்டினால் அவை 
நடக்கவிருப்பது - ஒரே அழுக்குப் பாதையில் தான் என்று!

Friday, 15 February 2013

ஆனாலும் நேசிக்கிறேன்....

ஒவ்வொரு முறையும்..
உன் வருகைக்காகவே  
வாசல் கதவைத் திறக்கிறேன்;
நீயோ - சாத்திய 
சாளரங்களைப் பார்த்தபடியே கடக்கிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் உதடசைவிற்காகவே 
உரையாடல்களைத் தொடங்குகிறேன்;
நீயோ - இதழ்களின்
இறுமாப்பில் இன்பம் காண்கிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் தோட்டப்பூக்களின்
தோற்றங்கள் வசீகரம் என்கிறேன்;
நீயோ -சருகுகளின் 
சன்னதியே சாரம் என்கிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் அருகில் 
அமர்வதே ஆனந்தம் என்கிறேன்;
நீயோ - தனிமையின் 
தவிப்பைத் தேடியே அலைகிறாய்;

ஒவ்வொரு முறையும்..
உன் இதயத்தை 
இன்றாவது திறப்பாயா என்கிறேன்;
நீயோ - ஏமாற்றச்சிறகினில் 
ஏற்றி அனுப்பி வைக்கிறாய்;

அடே அன்பா!
உனக்குத் தெரியுமா? 
முன்னைவிட உன்னை 
அதிகம் நேசிக்க வைப்பதும்  - இவைகள் தானென்று!

Sunday, 10 February 2013

காதல் என்றால்


காதல் என்றால்…

சொர்க்கத்தின் கள்ளச்சாவி;
ஈடில்லா ஆனந்தம் தரலாம்!

காதல் என்றால்…
கல்லறையின் கருகாமலர்;
பார்க்கப் படாமலே போகலாம்!

காதல் என்றால்…
உயிர்க்கற்றையின்  முதலிழை;
அறுபடக் கூடாததாக இருக்கலாம்!

காதல் என்றால்…
கைம்பெண்ணின் நெற்றித்திலகம்;
அத்தனை ரகசியமானதாக இருக்கலாம்!

காதல் என்றால்…
கொலைகாரனின் கருணைமனு;
இன்றும் ஏற்கப்படாமல் போகலாம்!


காதல் என்றால்…
இருள்களின் ரகசியஒப்பந்தம்;
வெளியில் வேறுவேஷத்தில் இருக்கலாம்!

காதல் என்றால்…
கனவுகளின் கைக்கூலி;
நியாயங்கள் இல்லாது இருக்கலாம்!

காதல் என்றால்…
உள்ளங்கை மச்சம்;
அதிர்ஷ்டத்தின் அழைப்பாய் இருக்கலாம்!

காதல் என்றால்…
குழந்தையின் வினாக்கள்;
விடைதெரிந்தும் பலநேரம் பதில்மறுக்கப்படலாம்!

காதல் என்றால்…
என்னவென்று துல்லியமாகச் சொல்ல முடியாது;
அது வார்த்தைக்குள் அடங்காத வடிவமாகவும் இருக்கலாம்!