Wednesday, 28 January 2015

'பெண் ஏன் அடிமையானாள்' - புத்தக விமர்சனம்

 

பெண் ஏன் அடிமையானாள்? by E.V.Ramasamy Periyar

 

'பெண் ஏன் அடிமையானாள்' என்பதை 10 அத்தியாயங்களில் விளக்குகிறார் பெரியார். கற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் வேண்டும், விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத்தடை மற்றும் பெண்கள் விடுதலைக்கு 'ஆண்மை' அழிய வேண்டும் என்பன அந்த 10 அத்தியாயங்கள். 


பெரியாரிடம் நாம் லேசுபாசாக, சாந்தமாகச் சொல்லும் தன்மையை எதிர்பார்க்க முடியாது. அவருடையது எப்பொழுதும் கூர் கத்தி எழுத்து நடை. இந்தப் புத்தகமும் அப்படியே.


"கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்" என்றான் மகாகவி. அதனினும் ஒரு படி மேலே போய் "கற்பென்று" ஒன்றுமில்லை என்கிறார் பெரியார். காதல் குறித்த நமது புனிதங்களை அநாயசமாய் உடைத்துத் தள்ளுகிறார். அதற்கு அவர் காட்டும் உதாரணம் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. ஓர் அரசகுமாரி தோட்டத்தில் ஒருவனைப் பார்த்து காதல் கொள்கிறாள். அதன் பின் அவன் சேவகன் என்று தெரிய வருகிறது. அப்படியானால் அவன் மேல் அவள் கொண்ட காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாக வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகிறார். "எப்படிப்பட்ட காதலும் ஒரு சுயலட்சியத்தை, தனதிஷ்டத்தை - திருப்தியை கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை. ஆசையை விட, அன்பை விட, நட்பைவிட, காதல் என்பதாக வேறொன்றும் இல்லை." என்று சொல்லும் போது நமக்கு ஒரு jerk வந்த போதிலும் ஆழமாக யோசித்துப் பார்த்தால் அதை மறுக்க முடியாது.


விதவை மறுமண எதிர்ப்பை "சமுதாயத் தற்கொலை" என்று வர்ணித்தவர் இவர் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். விதவைகள் வாழ் சூழல் இயற்கையானது அல்ல, எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிப்பதேயாகும் என்கிறார்.


சொத்துரிமை அத்தியாயம் இன்னமும் நமக்குத் தேவையானதாகவே இருக்கிறது. இவ்வளவு வளர்ந்து விட்ட சமுதாயத்திலும், கல்வி கற்ற சூழலிலும் கூட சொத்துரிமை பெண்களுக்கு அவ்வளவு எளிதாக இன்றும் கிடைப்பதில்லை.


கர்ப்பத்தையும் குழந்தைப் பேறு பற்றியும் அவரது கருத்துகள் நிச்சயமாய் ரொம்பவும் மார்டன். 1942-ல் எழுதிய புத்தகம். 72 ஆண்டுகள் ஆன பின்னும் அவர் எதிர்த்த/மாற்ற நினைத்தவைகளில் இன்னும் மாற்றமில்லையோ என்றே தோன்றுகிறது. என்ன, அவர் காலத்தில் பெண் மீதான இந்த அடக்குமுறை வெளிப்படையாக நடந்திருக்கும். இன்று அவைகள் அழகான wrapper-இல் போர்த்தப்பட்டு நடக்கின்றன. இனியாவது இவைகள் மாறட்டும். ஐயாவின் எழுத்துக்கள் அதனைச் செய்யட்டும்.

 

- goodreads-ல் எழுதியது

1 comment: