ஒவ்வொரு முறையும்..
உன் வருகைக்காகவே
வாசல் கதவைத் திறக்கிறேன்;
நீயோ - சாத்திய
சாளரங்களைப் பார்த்தபடியே கடக்கிறாய்;
ஒவ்வொரு முறையும்..
உன் உதடசைவிற்காகவே
உரையாடல்களைத் தொடங்குகிறேன்;
நீயோ - இதழ்களின்
இறுமாப்பில் இன்பம் காண்கிறாய்;
ஒவ்வொரு முறையும்..
உன் தோட்டப்பூக்களின்
தோற்றங்கள் வசீகரம் என்கிறேன்;
நீயோ -சருகுகளின்
சன்னதியே சாரம் என்கிறாய்;
ஒவ்வொரு முறையும்..
உன் அருகில்
அமர்வதே ஆனந்தம் என்கிறேன்;
நீயோ - தனிமையின்
தவிப்பைத் தேடியே அலைகிறாய்;
ஒவ்வொரு முறையும்..
உன் இதயத்தை
இன்றாவது திறப்பாயா என்கிறேன்;
நீயோ - ஏமாற்றச்சிறகினில்
ஏற்றி அனுப்பி வைக்கிறாய்;
அடே அன்பா!
உனக்குத் தெரியுமா?
முன்னைவிட உன்னை
அதிகம் நேசிக்க வைப்பதும் - இவைகள் தானென்று!
No comments:
Post a Comment