Sunday, 17 February 2013

குழந்தையும் தெய்வமும்






அன்று அலுவலகத்தில் கையில் இனிப்புடனும் வாய் நிறையப் புன்னகையுடனும் என் பக்கத்து சீட் நண்பர் வந்திருந்தார். பெண் குழந்தை பிறந்திருக்கிறதாம். கொடுத்து வைத்த மனிதர். 7 மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருந்தார் பெண் குழந்தை தான் வேண்டும் என்று. அவர் மனம் படியே நடந்ததில் அடைந்த  மகிழ்ச்சி, அந்தச் சுற்றுவட்டாரம் முழுவதும் பிரதிபலித்தது. உறவுக்காரத் திருமணமொன்றில் என் அப்பாவிடம் ஒரு பாட்டி சொன்னார்: ‘இரண்டும் பெண் குழந்தைகளா? மகாலட்சுமி கடாட்சம் நிறைந்த வீடுடா என்று!’ ஆனால் இன்று அந்த ‘மகாலட்சுமி’க்கள் நிலை என்ன? செய்தித்தாளைத் திறந்தாலே மனம் பதைக்கிறது.

ஒவ்வொரு நாளும் ‘5 வயதுச் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை. 3 வயதுச் சிறுமியைச் சிதைத்தவன் கைது’ - இது போல் ஏகப்பட்ட செய்திகள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இந்தத் தேசத்தில்? குழந்தைகள் வாழும் சூழலைக் கொஞ்ச கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறோமோ? இந்தியாவின் மக்கள் தொகையில் 40% பேர் குழந்தைகள். அதாவது 44 கோடிக் குழந்தைகள் நிறைந்தது நம் தேசம். இப்படிப்பட்ட தேசத்தில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லையென்பது நம் தேசத்தின் அவமானம்.

 
3 வயதுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் அளவுக்கு வெறி பிடித்த மிருகங்கள் மலிந்ததா இந்தச் சமுதாயம்? என்ன கிடைத்து விடும் அந்தக் காமுகர்களுக்கு இதனால்? அந்தக் குழந்தைக்கு அவன் என்ன செய்கிறான் என்றாவது தெரியுமா? நினைத்தாலே நெஞ்சம் கொதிக்கிறது. எப்படிக் கற்றுத் தர முடியும், அந்த 3 வயதுக் குழந்தைக்கு சரியான தொடுதல் எது? தவறான தொடுதல் எது என்று?

தன் பிள்ளையைத் தானே சிதைக்கும் கொடூரங்களும் ஆங்காங்கே நடந்தேறுகின்றன. அந்தக் கயவர்களுக்கு அது தன் ரத்தம் என்ற உணர்வு கொஞ்சம் கூடவா இல்லை? தன்னைத் தானே பாலியல் வக்கிரத்திற்கு ஆளாக்கிக் கொள்வதற்கு ஒப்பல்லவா இது? ஒரு முறை கூட, அவர்கள் தன் பிள்ளையென்ற பெருமிதத்தில் உச்சி முகர்ந்திருக்க மாட்டார்களா? ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இருக்கும் பாச, நேசம் கூடவா இல்லாமல் போயிருக்கும்? அன்பிற்கும் நேசத்திற்கும் பிறக்காமல், ஆசைக்கும் காமத்திற்கும் பிறந்த குழந்தைகளோ அவர்கள்? இல்லை, உடல் தேவைகள் பிள்ளைப் பாசத்தையும் மீறச் சொல்கிறதா? அவ்வளவு கேடு கெட்ட உடலமைப்பையா நமக்கு இயற்கை கொடுத்திருக்கிறது?


30% குழந்தைகள் தந்தை, உடன் பிறந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள் மூலம் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றார்கள். 60% குழந்தைகள் குடும்ப நண்பர்கள், குழந்தைக் காப்பாளர்கள், அண்டை வீட்டினர் போன்ற குடும்பத்தில் தினசரி புழங்கும் நபர்கள் மூலம் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றார்கள். மீதமுள்ள 10% தான் அறியாதவர்களால் இந்நிலையை அடைகிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. குடும்பக்கட்டமைப்பை உலகுக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் தேசத்தில்தான் இந்தச் சம்பவங்களும் நடந்து வருகிறது என்பது எத்தனை பெரிய அவமானம்! மாலன் சார் சொல்வது போல் ‘அடிப்படையில் தவறா? இல்லை அடிப்படையே தவறா?’

செய்திகளிலிருந்து:


மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை சார்பில் 2012 ல் குழந்தைகள் என்ற தலைப்பில் நாடு தழுவிய சர்வே நடத்தப்பட்டது. இதில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:


கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளன. குழந்தை கடத்தல் என்பது 43 சதவீதம்கற்பழிப்பு 30 சதவீதம் என்று உயர்ந்துள்ளன. நடப்பாண்டில் மட்டும் 6406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து இதுவரை நாடெங்கிலும் மொத்தம் 33,100 வழக்குகள் பதிவாகியுள்ளன.


உத்தர பிரதேசத்தில்தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. இங்கு 16.6 சதவீதமும்மத்தியபிரதேசத்தில் 13.2 சதவீதமும்டெல்லியில் 12.8 சதவீதமும்பீகாரில் 6.7 சதவீதம்ஆந்திராவில் 6.7 சதவீதம் என குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன.


உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் குழந்தை கடத்தல் அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசத்தில் குழந்தை கற்பழிப்பு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. 


மகாராஷ்டிராசட்டீஸ்கர் மாநிலங்களில் சிசுக்கொலைகள் அதிகளவில் நடக்கின்றன.


பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பெண் குழந்தையை வாங்குவதில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இங்கு பதிவாகும் வழக்குகளில் 74 சதவீத வழக்குகள் பெண் குழந்தையை வாங்கிய வழக்குகள்தான்.கற்பழிப்பு சம்பவங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்த மாநிலமாக மேற்கு வங்கம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 298 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.

திருமணமான தம்பதிகள் படுக்கையறையில் தெய்வத்தின் படங்களை வைத்திருப்பதை வீட்டுப் பெரியவர்கள் கண்டிப்பார்கள். ஆனால் அந்தத் தெய்வங்களையே பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகின்றனரே! இதைக் கண்டித்து  ‘நாட்டுப் பெரியவர்கள்’ என்ன செய்யப் போகிறார்கள்?

3 comments:

  1. மிகவும் எழுசிகரமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் இருக்கிறது.. வாழ்த்துக்கள்.

    இது தீவிரவாதத்தை காட்டிலும் கொடுமையானது.. ஏதேனும் அறியப்படாத புதிய நோயை கண்டறிந்திருந்தால் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தலாம். இதற்கெல்லாமா நடத்த முடியும் ? அது தேசத்திற்கே பெருத்த அவமானம். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற நிலைமை தான் இதற்கும். அந்த திருடனை கூட மன்னிக்க முயற்சிக்கலாம். ஆனால் இந்த வெறியர்களை கருணை பிரபுவாகிய இறைவனும் மன்னிக்க மாட்டார்.

    அவரவர் புரிந்து உணர்ந்தால் மட்டுமே இதிலிருந்து நம் தேசத்திற்கு விமோசனம் கிடைக்கும்.

    ReplyDelete
  2. கொடுமையிலும் கொடுமை...தன் பிள்ளையை தானே சிதைக்கும் கொடுமையே!!!

    ReplyDelete