Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, 23 January 2014

தாயகம் கடந்த தமிழ் - 2014


'தாயகம் கடந்த தமிழ்' மாநாடு பற்றிச் சில வார்த்தைகள்

மிக மிக அருமையான மாநாடு. மிகச் சிறந்த ஏற்பாடு. முதலில் இந்த மாதிரியான மாநாடு நம் காலத்தில் நடக்க, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றதற்கு நாம்(ன்) நல்ல உள்ளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தனை சிறப்பு!

ஜனவரி 20, திங்கட்கிழமை மாலை தொடக்க விழா நடந்தது. உயர்நீதி மன்ற மாண்புமிகு நீதிபதி திரு.ராமசுப்ரமணியன் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தினார். முனைவர் ம.திருமலை மாநாட்டுக் கட்டுரைகளைக் கொண்ட, 'தாயகம் கடந்த தமிழ்' நூலை வெளியிட்டார். அன்றைய தினம் நம் மாலன் மற்றும் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் உரை நிகழ்த்தினர்.

அடுத்த இரண்டு நாட்கள் முழுக்க அமர்வுகள்.

முதலாம் அமர்வு: தாயகத்தைக் கடந்த தமிழ் இலக்கியங்கள் குறித்த ஓர் அறிமுகம். (இங்கு தாயகம் என வரையறை செய்யப்பட்டிருப்பது சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் ஈழ நாடும்)  சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பியத் தமிழ் இலக்கியங்கள் குறித்தான மிகச் சிறந்த ஓர் அறிமுகமாக இருந்தது. அவைகள் தோற்றம் முதல் தற்காலம் வரை என்னென்ன மாற்றங்கள் பெற்றிருக்கின்றன என்பதை அறிய முடிந்தது.

இரண்டாம் அமர்வு: தாயகம் பெயர்தலில் இருந்த/இருக்கும் வலியையும் வாழ்வையும் இலக்கியங்களில் பதிவு செய்திருப்பது தொடர்பான அமர்வு. பொருள் தேடி தாயகத்தை விட்டுச் செல்வோர், அரசியல் நிர்பந்தம் காரணமாக தாயகத்தை விட்டுச் செல்வோர் என இரண்டு வகைகளாகப் பிரித்துக் கொண்டு, தலைப்பு குறித்த செழுமையான அறிமுகத்தோடு மாலன் தொடங்கி வைத்தார்.

மூன்றாம் அமர்வு: பெண்ணெழுத்து குறித்தான அமர்வு. பெண் எழுத்தாளர்களின் மொழி நடை, கருப்பொருள் தேர்வு, அவர்கள் முன்னுள்ள சவால்கள், உடைத்தெறிந்த/உடைபட வேண்டிய தடைகள் குறித்து ஆழமான பார்வையை முன்வைத்தது. இதில் அதிகம் ஈழ எழுத்துப் பின்புலம் இருந்தது சிறப்பு.

நான்காம் அமர்வு: தமிழ் வளர்ப்பில் தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள் பற்றியது. முரசு அஞ்சல், செல்லினம் கண்டுபிடிப்பாளர் முத்து நெடுமாறன் அவர்களின் பேச்சு, பார்வையாளர்களை அதிகம் கவர்ந்திழுத்தது எனலாம். e-book, video enabled e-book, virtual university பற்றிய ஆழமான புரிதலைக் கொடுத்தது அடுத்தடுத்த பேச்சாளர்களின் கட்டுரைகள்.

ஐந்தாம் அமர்வு: ஊடகத்தில் தமிழ் மொழி பற்றியது. வானொலி, பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையம் என்று அத்தனையிலும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது அழகு.

ஆறாம் அமர்வு: மொழிபெயர்ப்பு பற்றியது. தனிப்பட்ட முறையில் என்னை மிக மிக மிகக் கவர்ந்த அமர்வு இது எனலாம். மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் குறித்து எனக்கு நேற்று வரைக்கும் மிகப் பெரிய அபிமானம் இருந்ததில்லை. என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே அப்படிப்பட்ட புத்தகங்களைக் கையால் தொடுவேன். கர கர மொழியாக இருக்கும் என்பது, அதைப் படிக்காமலேயே அல்லது சரியான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்காததால், எனக்குள் இருந்த எண்ணம். அதையெல்லாம் புரட்டுப் போட்டு விட்ட அமர்வு இது. ஆற்றல் வாய்ந்த அறிஞர்கள் அத்தனை பேரும். 'ஆ'வென்று என்னை மறந்து வியந்திருந்த அமர்வு இது.
ஏழாம் அமர்வு: தாயகத்திற்கப்பால் தமிழ்க்கல்வி பற்றியது. ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறுபட்ட நாடுகளில் தமிழ்ப்பள்ளி நடத்துபவர்கள் தங்கள் அனுபவத்தையும் சவால்களையும் சில கேள்விகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

மேலே சொன்னவைகள் அனைத்தும் மாநாடு குறித்த மிகச் சிறிய overview.

400 முதல் 500 பேர் மாநாட்டில் கலந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். இதில் கணிசமான அளவு இளைஞர்கள் இருந்தார்களா எப்படி எனத் தெரியவில்லை. நிறைய கல்லூரி மாணவர்கள் கண்ணில்பட்டார்கள். நிறைவு விழாவில் கருத்து கேட்கும் போது அவர்களிடமும் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் என்பது என் சின்ன மனக்குறை. இளைஞர்களை மையப்படுத்தி எப்பொழுதும் பேசியும் எழுதியும் வரும் மாலன், பேராசிரியர், படைப்பாளர்களிடம் கருத்துக் கேட்டது போல, ஒரு கல்லூரி மாணவரைப் பிடித்துக் கேட்டிருந்தால், இளைஞர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்திருக்க முடிந்திருக்கும். நேரமின்மை மட்டும் தான் இந்த விடுபடலுக்குக் காரணமாக இருந்திருக்கும் என்பது நாம் அறிந்ததே! பரவாயில்லை. அவர் வேறு ஏதேனும் வழிமுறைகள் மூலம் அவர்கள் கருத்தை அறிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.

இந்த மாநாடு ஏன் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்கு என்னிடம் சில காரணங்கள் இருக்கின்றன. (இங்கு இளைஞர் என்பதை என்னைப் போன்ற அல்லது நான் பார்த்த வரைக்குமான இளைஞர்கள் எனக் கொள்க)

1. ஒரு நிகழ்வை எப்படித் திட்டமிட வேண்டும் என்பதை நாம் இவர்களிடமிருந்து பயில வேண்டும். அமர்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்புகள், அடடா, அற்புதம். ஒரு பொருளின் கீழ் ஒட்டு மொத்த வகைகளையும் மையப்படுத்தி இருந்தது மிகச் சிறப்பு.

2. இலக்கியம் படிக்க ஆரம்பித்திருக்கும் இளைஞர்களுக்குப் பிற நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் குறித்தான ஒரு கழுகுப் பார்வையைக் கொடுத்தது.

3. புத்தகங்கள் என்பவை வெறும் கதையும் வார்த்தை விளையாட்டும் மட்டுமல்ல. அவை ஒரு சமூகத்தின் சிரிப்பு, கண்ணீர், துக்கம், போராட்டம், மௌனம், கோபம், பண்பாடு என்ற அத்தனையையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

4. மொழி வழிப் பிணைப்பு என்பது அரிதாகி வரும் இன்றைய ஐடி வாழ் சூழலில் அவை குறித்த அழகான சிந்தனைகளையும் பெருமிதத்தையும் தூண்டியிருக்கிறது.

5. திருவள்ளுவர், ஜெயகாந்தன், சுஜாதா எழுதியது மட்டும் கொண்டது எழுத்துலகம் அல்ல. அது அதை விடப் பெரிது மற்றும் ஆழமானது எனச் சிலர் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

6. எந்தவொன்றும் காலத்திற்கும் அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின், அது அறிவியல் வழி மட்டுமே முடியும் என்பது என் நம்பிக்கை. அந்த விதத்தில் தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள் நம்மை அடுத்த தளத்திற்குச் சிந்திக்க வைக்கின்றன.

7. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று அவன் எளிதாகச் சொல்லி விட்டான். அதிலிருக்கும் சவால்களை அவர்கள் கூறக் கேட்டு, எனக்குத் தமிழின் மீது பற்று பிய்த்துக் கொண்டு வருகிறது. அதிலும் குறுந்தொகை ஆங்கில மொழிபெயர்ப்பில் படும் பாட்டை முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கூறிய பின், அப்படிப்பட்ட அழகுத்தமிழை நாம் ஏன் இன்னமும் படிக்காமல் கிடக்கிறோம் என்ற குற்ற உணர்வு வந்து போவதைத் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டுரையில் மாலன் சொல்வார்: 'தமிழைப் பற்றி மிகைப்படப் பேசியிருக்கிறோம். ஆனால் அதன் நயங்களை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தியிருக்கிறோமா?' என்று! அது உண்மை தான் போல! எப்படி இவ்வளவு நாள் இது நம் கண்ணில் படாமல் போனது? போன தலைமுறைகளின் தலையில் உரிமையாக ஒரு குட்டு வைத்தால் நான் கொஞ்சம் நிம்மதியடைவேன்.

8. இன்னொரு சிறு நெருடல். பேசிய பேச்சாளர்களில் நிறையப் பேர், இக்காலத்து இளைய தலைமுறையின் மீது ஒரு அவநம்பிக்கையில் இருப்பது போலத் தெரிந்தது. அவர்கள் எண்ணம் ஓரளவுக்கு உண்மைதான் என்ற போதும், சில நேரத்தில் சங்கடமாக இருந்தது. இவ்வளவு அவநம்பிக்கை தேவையில்லை! நாங்கள் முட்டாள்கள் இல்லை. தமிழ் படிக்க விருப்பமில்லாதவர்கள் இல்லை. எங்களுக்கு தமிழ் குறித்து, அதன் நயம் குறித்துத் தெரியவில்லை. அவ்வளவு தான். தமிழறிஞர்கள் நீங்கள் அதை எங்களுக்குப் புரிய வைப்பது உங்கள் கடமை. அதன் பின்னும் நாங்கள் திருந்தவில்லை என்றால் அது எங்கள் தலையெழுத்து. அதாவது தேசத்தின் தலையெழுத்து. ஆனால் நாங்கள் அவ்வளவு தூரம் வேர்களைத் தூற்றுபவர்கள் கிடையாது என்ற நம்பிக்கையுடன் எங்களைத் திட்டுங்கள். ஏற்றுக் கொள்கிறோம். ஒவ்வொரு குட்டுக்கும் பின்னே எங்கள் மீதான வெறுப்புகள் வேண்டாம். நம்பிக்கை மட்டும் இருக்கட்டும் என்று மெல்லாமாய்க் கூறிக் கொண்டு ஓடி விடுகிறேன்.

மொத்தத்தில் மிக நல்ல வாய்ப்பு இது. மிகவும் சிறப்பாக அமைந்தது. மகிழ்வாகவும் அமைந்தது. அது சரி, மாலன் தொட்ட எது துலங்காமல் போனது, இது போவதற்கு! :)

Wednesday, 27 March 2013

ஓடி விளையாடு பாப்பா

 
அப்பப்பா! இந்த விலைவாசி இப்படியா உயரும்! Touch Screen, FM Radio with Recording, Bluetooth, Music Player, Camera, Wi-Fi என்று சகல வசதிகளும் கொண்ட மொபைல் போன்கள் மலிவு விலைக்குக் கிடைக்கிறது. ஆப்பிள் பழங்களும், மாதுளைப் பழங்களும் ஏன் யானை விலைக்கும் குதிரை விலைக்கும் விற்கப்படுகிறது? இருந்தாலும் வாங்கித் தான் ஆக வேண்டியிருக்கிறது. எல்லாம் வாங்கிக் கொண்டு என் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். ஜிமெயில் சாட்களிலும், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸிலும் மட்டும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் வாழ்வியல் முறையில் இம்மாதிரியான சந்திப்புகள் நெகிழ்ச்சியைக் கொடுப்பதாகவே இருக்கிறது.

அவள் என் ஒன்றுவிட்ட அக்கா முறை. கணவர், 2 குழந்தைகள் – 8 வயதில் ஒன்று, 5 வயதில் ஒன்று - என்ற அழகான, அளவான குடும்பம். சாக்லேட் தரும் போது வாங்கிக் கொண்டு ‘தேங்க்ஸ் சித்தி’ என்று சொல்லிச் சென்ற குழந்தைகள், அதன் பின் என் பக்கமே வரவில்லை. விடாப்படியாய் இழுத்து வைத்துப் பேசினாலும், கேட்ட கேள்வியைத் தவிர வேறு எந்த உரையாடல்களும் இல்லை. ஏன் எப்போதும் இந்தக் காலத்துக் குழந்தைகள் தனி உலகத்திலேயே இருக்கிறார்கள்? நாம் அப்படியா இருந்தோம் நம் குழந்தைப் பருவத்தில்?


இன்றும் நினைவிருக்கிறது. அப்போது வீட்டிற்கு ஒரு தாத்தா வருவார். என்ன உறவுமுறை என்றெல்லாம் தெரியாது. அவர் தாத்தா. அவ்வளவு தான் தெரியும். ஆனால் வரும் போதெல்லாம் தவறாது அந்த மிட்டாய்ப் பாக்கெட் வாங்கி வருவார். தேங்காய் மிட்டாய். உள்ளூர்க் கடைகளில் அதை நான் பார்த்ததில்லை. அதன் சுவையும் மணமும் இன்றும் நினைவில் இருக்கிறது. அவர் எப்போது வந்தாலும் சுற்றி அமர்ந்து கொள்வோம். மிட்டாயில் ஆரம்பித்து, பள்ளி, குளங்கள், யானை, பூனை என்று அவரிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருக்கும். அவரும் சலிக்காமல் பதில் சொல்வதில் கில்லாடி. அந்தத் தாத்தாதான் என்றில்லை, வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களைப் பிடிக்கிறதோ இல்லையோ கேட்பதற்கு வண்டி வண்டியாய்க் கேள்விகள் இருக்கும் -  பிடித்திருந்தால் சிரிப்புடனும், பிடிக்காவிட்டால் பயத்துடனும் என்று. குழந்தைப் பருவத்தில் அந்த மாதிரிப் புது மனிதர்கள் பல முகங்களை முதன்முதலில் நமக்கு அறிமுகம் செய்தவர்கள். அம்மா அதட்டும் வரை ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கும் – கேட்பதற்கும், பதிலளிப்பதற்கும். உறவுகளின் மேல் ஒரு  நெருக்கம் தோன்ற ஆரம்பித்த தருணங்கள் அவை!

இன்றைக்கு இப்படியான வரவுகள் சுருங்கி விட்டது, குழந்தைகள் உறவுக்காரர்களிடம் ஒட்டாதிருக்க ஒரு காரணமோ? பெரும்பாலும் நகர்ச்சூழலில் அம்மா, அப்பா, உடன்பிறந்த தம்பி/தங்கை என்று ஒரு சிறிய வட்டம் மட்டுமே அவர்களுக்கானது, என்று விபரம் தெரிந்த நாளிலிருந்து அறிமுகம் செய்யப்படுகிறது. மிஞ்சி மிஞ்சிப் போனால் பள்ளியில் சில நண்பர்கள், அப்பார்ட்மென்ட்டில் சில கிரிக்கெட் தோழர்கள் என்ற அளவில் தான் அவர்களின் வெளியுலக அனுபவம். இப்படி அதிகம் வெளிமனிதப் பழக்கம் இல்லாதது தான் ‘யாருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன?’ என்று திரியும் மனப்பான்மை வளரக் காரணமோ? சமூகத்தில் கலந்து பழகாத, சமூக கஷ்ட நஷ்டங்கள் தெரியாத ஒரு குழந்தைக்கு எப்படிச் சமுதாயம் நோக்கிய சிந்தனை வரும்? சுயநலமிகளாக அடுத்த தலைமுறை மாறி விடும் அபாயம் உள்ளதல்லவா? இதில் அவர்களைக் குறைபட்டு என்ன பிரயோசனம்? சுயநலச் சூழலைத் தானே அவர்களுக்கு நாம் பழக்கி வைத்திருக்கிறோம்? அவரை விதைத்த இடத்தில் துவரையா முளைக்கும்?

அதிலும் குழந்தையைச் செல்லமாக, வசதியாக வளர்க்கிறேன் என்று A, B, C, D தெரிந்தவுடனேயே கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அது பின்னே என்ன பண்ணும்? நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை விட BEN10-ஐயும் Bheem- ஐயும் நெருக்கமானவர்களாக உணரும். விளைவு, கார்ட்டூன் சேனல்களிலும், கம்ப்யூட்டர் கேம்களிலும் கவனம் குவியும். இந்திய இளைஞர்கள் குறித்து IT துறையில் ஒரு கருத்து சொல்வார்கள். அது ‘இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவரவர் துறையில் தனித்தனியான அறிவுஜீவிகள். ஆனால் கூட்டாகச் சாதிக்க இன்னும் அவர்கள் பழகவில்லை’ என்று. இந்த வாக்கியம் கசப்பாய் இருந்தாலும் அதன் உண்மைத்தன்மை பற்றி சந்தேகமில்லை. அப்படித்தான் இருக்கிறோம் நாம் எல்லாத்துறையிலும். இதற்கான ஆணிவேர் நம் சிறுவயதிலிருந்தே விதைக்கப்பட்டுவிடுகிறது. என்றைக்கு மற்ற பிள்ளைகளிடமிருந்து பிரிந்து வீடியோ கேம், கம்ப்யூட்டர் விளையாட்டு என்று கூட்டு விளையாட்டு முறையிலிருந்து தனி விளையாட்டு முறைக்கு மாற்றினோமோ அது தான் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பூதாகரமான பிரச்சனையாக வளர்ந்து நிற்கிறது. பின் Resource Management, Team Work Spirit என்று கட்டணம் கொடுத்து கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டியிருக்கிறது.

 
 
இக்காலக் குழந்தைகளுக்கு தெருவில் விளையாடுவது என்றால் என்ன என்றாவது தெரியுமா? எப்போது பழகுவார்கள் இவர்கள் சமூகத்தின் அனைத்து ஜாதி வகுப்பினரிடையும்? இப்படிப் பழகவே வாய்ப்பளிக்காத ஒரு சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோமே, இவர்கள் எப்படிச் சொல்வார்கள் ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்று? அடுத்தவர் மேல் ஒரு மரியாதையும், சமூகத்தின் மீதான தார்மீகப் கோபமும் எப்படி வளரும் அவர்களுக்கு?விளையாட்டு என்பது உடல்நலம், மனநலம் இரண்டை  மட்டுமா சொல்லித் தருகிறது? இல்லை. நம் சமூகத்தை, நம் க்ரியேட்டிவ் சிந்தனைகளை, நம் மொழி நடையை அத்தனையையும் சொல்லித் தருகிறது.

இன்றைய குழந்தைகளிடம் நான் பார்க்கும் மற்றொரு பிரச்சனை – எதையும் வாய் விட்டுச் சொல்வதில்லை. உரக்கப் பேசுவதில்லை. 11, 12ஆம் வகுப்பில் தமிழாசிரியர் துணைப்பாடக் கதைகளை வாசிக்கச் சொல்வார். பெரும்பாலான மாணவர்கள் (இருபாலரும்) வாசிக்கும் போது, அத்தனை தூரம் கூச்சப்படுவார்கள். அப்படி நெளிவார்கள். தெரியாத மொழி என்றால் கூடப் பரவாயில்லை. நாம் பிறந்தது முதல் பழகிய நம் தாய்மொழி, அதிலும் கவிதை, உரைநடை என்றால் கூட கவிஞர்கள் வெளுத்து வாங்கியிருப்பது புரிபடாமல் வாசிப்பதில் தயக்கம் ஏற்படுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வாசிப்பதோ தி.ஜா வின் சிறுகதை. அதிலென்ன கஷ்டமான மொழிப்பிரவேகம் இருந்து விடப் போகிறது? அதற்கு ஏன் இப்படித் தயங்க வேண்டும்? சபையில் பேசுவதற்குக் கூச்சம் யார் தந்து வந்தது?

 
 
இதற்கு விடையாக நான் நினைப்பது நம் தெருவோர விளையாட்டுகளைப் பழகாத நம் வாழ்க்கை முறை என்று. ‘ஒரு கொடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்துச்சு’, ‘ரெண்டு கொடம் தண்ணியெடுத்து ரெண்டு பூ பூத்துச்சு’ இவற்றை நாக்கு உச்சரிக்காதது ஒரு காரணம் தானோ? இதே போல் இன்னொரு விளையாட்டு. இரு அணிகளாகப் பிரிந்து கொள்வார்கள்.
ஒரு அணி முதலில் இப்படிப் பாடும். ‘பூப்பறிக்க வருகிறோம்.. பூப்பறிக்க வருகிறோம்..’
இரண்டாம் அணி: ‘என்ன பூவைப் பறிக்கிறீர்கள்? என்ன பூவைப் பறிக்கிறீர்கள்?’
இரண்டாம் அணியில் உள்ள ஒருவரின் பேர் சொல்லி, முதல் அணி: ‘சந்தோஷ் பூவைப் பறிக்கிறாம். ‘சந்தோஷ் பூவைப் பறிக்கிறாம்.’
இரண்டாம் அணி: ‘யாரை வைத்துப் பறிக்கிறீர்கள்? ‘யாரை வைத்துப் பறிக்கிறீர்கள்?’
முதல் அணியில் உள்ள ஒருவரின் பேர் சொல்லி: ‘கோகி வைத்துப் பறிக்கிறோம்.. கோகி வைத்துப் பறிக்கிறோம்’ என்று அனைவரும் சேர்ந்து பாடி முடித்தவுடன் சந்தோஷையும் கோகியையும் கயிறு இழுக்கும் போட்டி போல் இழுப்பார்கள். யார் மறுபுறம் விழுகிறோமோ அவர்கள் ‘அவுட்’

இந்த விளையாட்டின் அழகே பாடல் போல் பாடுவது தான். குதூகலமாக இருக்கும். இப்படியெல்லாம் விளையாடக் கற்றுக் கொடுத்திருந்தால் ஏன் அந்தத் தயக்கம் வரப் போகிறது பொதுவெளியில் பேசும் போது!


நிறம் கண்டுபிடிக்கும் ‘கலர் கலர் என்ன கலர்’ விளையாட்டு, துரிதமான செயல் திறனை அதிகரிக்கும் ‘கல்லா? மண்ணா?’ விளையாட்டு, திருடன்-போலிஸ், ஐஸ் நம்பர் என்று இந்த விளையாட்டுகள் கற்றுத் தரும் ஆளுமைத்திறனை எந்தப் புத்தகமும் கற்றுத் தருவதில்லை. ஊரின் அத்தனை ஜாதிக் குழந்தைகளும் புழுதிக்காட்டில் புரண்டு திரியும் இந்த சமத்துவத்தை எந்தக் கல்வியும் கற்றுத் தருவதில்லை.

குழந்தைகள் களிமண் போல. பிள்ளையார் பிடித்தால் பிள்ளையார் வரும், குரங்கு பிடித்தால் குரங்கு தான் வரும். பெரியவர்கள் நமக்கு என்றைக்கு இவை புரியப் போகிறது? கார் ரேஸ், Angry Birds தாண்டி அழகான விளையாட்டு உலகத்தை என்றைக்குக் காட்டப் போகிறோம் அவர்களுக்கு?

குழந்தைகள் உலகம் மகிழ்ச்சிகளும் ரசனைகளும் நிறைந்தது. அதில் வீடியோ கேம்மையும், பென்-10ஐயும் நுழைத்து அவர்கள் குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து திருடிக் கொண்டிருக்கிருக்கிறோமே அதற்கு நாம் என்ன பிராயச்சித்தம் செய்யப் போகிறோம்? சரியான நேரத்தில் சரிபடுத்தாத தவறுகள் சரியச் செய்து விடும் – ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சியையும்! அதற்கு நாம் சரிப்பட்டு வருவோமா?