'தாயகம் கடந்த தமிழ்' மாநாடு பற்றிச் சில வார்த்தைகள்
மிக மிக அருமையான மாநாடு. மிகச் சிறந்த ஏற்பாடு. முதலில் இந்த மாதிரியான மாநாடு நம் காலத்தில் நடக்க, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றதற்கு நாம்(ன்) நல்ல உள்ளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தனை சிறப்பு!
ஜனவரி 20, திங்கட்கிழமை மாலை தொடக்க விழா நடந்தது. உயர்நீதி மன்ற மாண்புமிகு நீதிபதி திரு.ராமசுப்ரமணியன் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தினார். முனைவர் ம.திருமலை மாநாட்டுக் கட்டுரைகளைக் கொண்ட, 'தாயகம் கடந்த தமிழ்' நூலை வெளியிட்டார். அன்றைய தினம் நம் மாலன் மற்றும் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் உரை நிகழ்த்தினர்.
அடுத்த இரண்டு நாட்கள் முழுக்க அமர்வுகள்.
முதலாம் அமர்வு: தாயகத்தைக் கடந்த தமிழ் இலக்கியங்கள் குறித்த ஓர் அறிமுகம். (இங்கு தாயகம் என வரையறை செய்யப்பட்டிருப்பது சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் ஈழ நாடும்) சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பியத் தமிழ் இலக்கியங்கள் குறித்தான மிகச் சிறந்த ஓர் அறிமுகமாக இருந்தது. அவைகள் தோற்றம் முதல் தற்காலம் வரை என்னென்ன மாற்றங்கள் பெற்றிருக்கின்றன என்பதை அறிய முடிந்தது.
இரண்டாம் அமர்வு: தாயகம் பெயர்தலில் இருந்த/இருக்கும் வலியையும் வாழ்வையும் இலக்கியங்களில் பதிவு செய்திருப்பது தொடர்பான அமர்வு. பொருள் தேடி தாயகத்தை விட்டுச் செல்வோர், அரசியல் நிர்பந்தம் காரணமாக தாயகத்தை விட்டுச் செல்வோர் என இரண்டு வகைகளாகப் பிரித்துக் கொண்டு, தலைப்பு குறித்த செழுமையான அறிமுகத்தோடு மாலன் தொடங்கி வைத்தார்.
மூன்றாம் அமர்வு: பெண்ணெழுத்து குறித்தான அமர்வு. பெண் எழுத்தாளர்களின் மொழி நடை, கருப்பொருள் தேர்வு, அவர்கள் முன்னுள்ள சவால்கள், உடைத்தெறிந்த/உடைபட வேண்டிய தடைகள் குறித்து ஆழமான பார்வையை முன்வைத்தது. இதில் அதிகம் ஈழ எழுத்துப் பின்புலம் இருந்தது சிறப்பு.
நான்காம் அமர்வு: தமிழ் வளர்ப்பில் தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள் பற்றியது. முரசு அஞ்சல், செல்லினம் கண்டுபிடிப்பாளர் முத்து நெடுமாறன் அவர்களின் பேச்சு, பார்வையாளர்களை அதிகம் கவர்ந்திழுத்தது எனலாம். e-book, video enabled e-book, virtual university பற்றிய ஆழமான புரிதலைக் கொடுத்தது அடுத்தடுத்த பேச்சாளர்களின் கட்டுரைகள்.
ஐந்தாம் அமர்வு: ஊடகத்தில் தமிழ் மொழி பற்றியது. வானொலி, பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையம் என்று அத்தனையிலும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது அழகு.
ஆறாம் அமர்வு: மொழிபெயர்ப்பு பற்றியது. தனிப்பட்ட முறையில் என்னை மிக மிக மிகக் கவர்ந்த அமர்வு இது எனலாம். மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் குறித்து எனக்கு நேற்று வரைக்கும் மிகப் பெரிய அபிமானம் இருந்ததில்லை. என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே அப்படிப்பட்ட புத்தகங்களைக் கையால் தொடுவேன். கர கர மொழியாக இருக்கும் என்பது, அதைப் படிக்காமலேயே அல்லது சரியான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்காததால், எனக்குள் இருந்த எண்ணம். அதையெல்லாம் புரட்டுப் போட்டு விட்ட அமர்வு இது. ஆற்றல் வாய்ந்த அறிஞர்கள் அத்தனை பேரும். 'ஆ'வென்று என்னை மறந்து வியந்திருந்த அமர்வு இது.
ஏழாம் அமர்வு: தாயகத்திற்கப்பால் தமிழ்க்கல்வி பற்றியது. ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறுபட்ட நாடுகளில் தமிழ்ப்பள்ளி நடத்துபவர்கள் தங்கள் அனுபவத்தையும் சவால்களையும் சில கேள்விகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.
மேலே சொன்னவைகள் அனைத்தும் மாநாடு குறித்த மிகச் சிறிய overview.
400 முதல் 500 பேர் மாநாட்டில் கலந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். இதில் கணிசமான அளவு இளைஞர்கள் இருந்தார்களா எப்படி எனத் தெரியவில்லை. நிறைய கல்லூரி மாணவர்கள் கண்ணில்பட்டார்கள். நிறைவு விழாவில் கருத்து கேட்கும் போது அவர்களிடமும் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் என்பது என் சின்ன மனக்குறை. இளைஞர்களை மையப்படுத்தி எப்பொழுதும் பேசியும் எழுதியும் வரும் மாலன், பேராசிரியர், படைப்பாளர்களிடம் கருத்துக் கேட்டது போல, ஒரு கல்லூரி மாணவரைப் பிடித்துக் கேட்டிருந்தால், இளைஞர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்திருக்க முடிந்திருக்கும். நேரமின்மை மட்டும் தான் இந்த விடுபடலுக்குக் காரணமாக இருந்திருக்கும் என்பது நாம் அறிந்ததே! பரவாயில்லை. அவர் வேறு ஏதேனும் வழிமுறைகள் மூலம் அவர்கள் கருத்தை அறிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.
இந்த மாநாடு ஏன் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்கு என்னிடம் சில காரணங்கள் இருக்கின்றன. (இங்கு இளைஞர் என்பதை என்னைப் போன்ற அல்லது நான் பார்த்த வரைக்குமான இளைஞர்கள் எனக் கொள்க)
1. ஒரு நிகழ்வை எப்படித் திட்டமிட வேண்டும் என்பதை நாம் இவர்களிடமிருந்து பயில வேண்டும். அமர்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்புகள், அடடா, அற்புதம். ஒரு பொருளின் கீழ் ஒட்டு மொத்த வகைகளையும் மையப்படுத்தி இருந்தது மிகச் சிறப்பு.
2. இலக்கியம் படிக்க ஆரம்பித்திருக்கும் இளைஞர்களுக்குப் பிற நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் குறித்தான ஒரு கழுகுப் பார்வையைக் கொடுத்தது.
3. புத்தகங்கள் என்பவை வெறும் கதையும் வார்த்தை விளையாட்டும் மட்டுமல்ல. அவை ஒரு சமூகத்தின் சிரிப்பு, கண்ணீர், துக்கம், போராட்டம், மௌனம், கோபம், பண்பாடு என்ற அத்தனையையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
4. மொழி வழிப் பிணைப்பு என்பது அரிதாகி வரும் இன்றைய ஐடி வாழ் சூழலில் அவை குறித்த அழகான சிந்தனைகளையும் பெருமிதத்தையும் தூண்டியிருக்கிறது.
5. திருவள்ளுவர், ஜெயகாந்தன், சுஜாதா எழுதியது மட்டும் கொண்டது எழுத்துலகம் அல்ல. அது அதை விடப் பெரிது மற்றும் ஆழமானது எனச் சிலர் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
6. எந்தவொன்றும் காலத்திற்கும் அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின், அது அறிவியல் வழி மட்டுமே முடியும் என்பது என் நம்பிக்கை. அந்த விதத்தில் தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள் நம்மை அடுத்த தளத்திற்குச் சிந்திக்க வைக்கின்றன.
7. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று அவன் எளிதாகச் சொல்லி விட்டான். அதிலிருக்கும் சவால்களை அவர்கள் கூறக் கேட்டு, எனக்குத் தமிழின் மீது பற்று பிய்த்துக் கொண்டு வருகிறது. அதிலும் குறுந்தொகை ஆங்கில மொழிபெயர்ப்பில் படும் பாட்டை முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கூறிய பின், அப்படிப்பட்ட அழகுத்தமிழை நாம் ஏன் இன்னமும் படிக்காமல் கிடக்கிறோம் என்ற குற்ற உணர்வு வந்து போவதைத் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டுரையில் மாலன் சொல்வார்: 'தமிழைப் பற்றி மிகைப்படப் பேசியிருக்கிறோம். ஆனால் அதன் நயங்களை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தியிருக்கிறோமா?' என்று! அது உண்மை தான் போல! எப்படி இவ்வளவு நாள் இது நம் கண்ணில் படாமல் போனது? போன தலைமுறைகளின் தலையில் உரிமையாக ஒரு குட்டு வைத்தால் நான் கொஞ்சம் நிம்மதியடைவேன்.
8. இன்னொரு சிறு நெருடல். பேசிய பேச்சாளர்களில் நிறையப் பேர், இக்காலத்து இளைய தலைமுறையின் மீது ஒரு அவநம்பிக்கையில் இருப்பது போலத் தெரிந்தது. அவர்கள் எண்ணம் ஓரளவுக்கு உண்மைதான் என்ற போதும், சில நேரத்தில் சங்கடமாக இருந்தது. இவ்வளவு அவநம்பிக்கை தேவையில்லை! நாங்கள் முட்டாள்கள் இல்லை. தமிழ் படிக்க விருப்பமில்லாதவர்கள் இல்லை. எங்களுக்கு தமிழ் குறித்து, அதன் நயம் குறித்துத் தெரியவில்லை. அவ்வளவு தான். தமிழறிஞர்கள் நீங்கள் அதை எங்களுக்குப் புரிய வைப்பது உங்கள் கடமை. அதன் பின்னும் நாங்கள் திருந்தவில்லை என்றால் அது எங்கள் தலையெழுத்து. அதாவது தேசத்தின் தலையெழுத்து. ஆனால் நாங்கள் அவ்வளவு தூரம் வேர்களைத் தூற்றுபவர்கள் கிடையாது என்ற நம்பிக்கையுடன் எங்களைத் திட்டுங்கள். ஏற்றுக் கொள்கிறோம். ஒவ்வொரு குட்டுக்கும் பின்னே எங்கள் மீதான வெறுப்புகள் வேண்டாம். நம்பிக்கை மட்டும் இருக்கட்டும் என்று மெல்லாமாய்க் கூறிக் கொண்டு ஓடி விடுகிறேன்.
மொத்தத்தில் மிக நல்ல வாய்ப்பு இது. மிகவும் சிறப்பாக அமைந்தது. மகிழ்வாகவும் அமைந்தது. அது சரி, மாலன் தொட்ட எது துலங்காமல் போனது, இது போவதற்கு! :)
No comments:
Post a Comment