அப்பப்பா! இந்த
விலைவாசி இப்படியா உயரும்! Touch Screen, FM Radio with Recording, Bluetooth,
Music Player, Camera, Wi-Fi என்று சகல வசதிகளும் கொண்ட மொபைல் போன்கள் மலிவு விலைக்குக்
கிடைக்கிறது. ஆப்பிள் பழங்களும், மாதுளைப் பழங்களும் ஏன் யானை விலைக்கும் குதிரை விலைக்கும்
விற்கப்படுகிறது? இருந்தாலும் வாங்கித் தான் ஆக வேண்டியிருக்கிறது. எல்லாம் வாங்கிக்
கொண்டு என் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். ஜிமெயில் சாட்களிலும், ஃபேஸ்புக்
ஸ்டேட்டஸிலும் மட்டும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும்
வாழ்வியல் முறையில் இம்மாதிரியான சந்திப்புகள் நெகிழ்ச்சியைக் கொடுப்பதாகவே இருக்கிறது.
அவள் என் ஒன்றுவிட்ட
அக்கா முறை. கணவர், 2 குழந்தைகள் – 8 வயதில் ஒன்று, 5 வயதில் ஒன்று - என்ற அழகான, அளவான
குடும்பம். சாக்லேட் தரும் போது வாங்கிக் கொண்டு ‘தேங்க்ஸ் சித்தி’ என்று சொல்லிச்
சென்ற குழந்தைகள், அதன் பின் என் பக்கமே வரவில்லை. விடாப்படியாய் இழுத்து வைத்துப்
பேசினாலும், கேட்ட கேள்வியைத் தவிர வேறு எந்த உரையாடல்களும் இல்லை. ஏன் எப்போதும் இந்தக்
காலத்துக் குழந்தைகள் தனி உலகத்திலேயே இருக்கிறார்கள்? நாம் அப்படியா இருந்தோம் நம்
குழந்தைப் பருவத்தில்?
இன்றும் நினைவிருக்கிறது.
அப்போது வீட்டிற்கு ஒரு தாத்தா வருவார். என்ன உறவுமுறை என்றெல்லாம் தெரியாது. அவர்
தாத்தா. அவ்வளவு தான் தெரியும். ஆனால் வரும் போதெல்லாம் தவறாது அந்த மிட்டாய்ப் பாக்கெட்
வாங்கி வருவார். தேங்காய் மிட்டாய். உள்ளூர்க் கடைகளில் அதை நான் பார்த்ததில்லை. அதன்
சுவையும் மணமும் இன்றும் நினைவில் இருக்கிறது. அவர் எப்போது வந்தாலும் சுற்றி அமர்ந்து
கொள்வோம். மிட்டாயில் ஆரம்பித்து, பள்ளி, குளங்கள், யானை, பூனை என்று அவரிடம் கேட்பதற்கு
ஆயிரம் கேள்விகள் இருக்கும். அவரும் சலிக்காமல் பதில் சொல்வதில் கில்லாடி. அந்தத் தாத்தாதான்
என்றில்லை, வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களைப் பிடிக்கிறதோ இல்லையோ கேட்பதற்கு வண்டி
வண்டியாய்க் கேள்விகள் இருக்கும் - பிடித்திருந்தால்
சிரிப்புடனும், பிடிக்காவிட்டால் பயத்துடனும் என்று. குழந்தைப் பருவத்தில் அந்த மாதிரிப்
புது மனிதர்கள் பல முகங்களை முதன்முதலில் நமக்கு அறிமுகம் செய்தவர்கள். அம்மா அதட்டும்
வரை ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கும் – கேட்பதற்கும், பதிலளிப்பதற்கும். உறவுகளின்
மேல் ஒரு நெருக்கம் தோன்ற ஆரம்பித்த தருணங்கள்
அவை!
இன்றைக்கு இப்படியான
வரவுகள் சுருங்கி விட்டது, குழந்தைகள் உறவுக்காரர்களிடம் ஒட்டாதிருக்க ஒரு காரணமோ?
பெரும்பாலும் நகர்ச்சூழலில் அம்மா, அப்பா, உடன்பிறந்த தம்பி/தங்கை என்று ஒரு சிறிய
வட்டம் மட்டுமே அவர்களுக்கானது, என்று விபரம் தெரிந்த நாளிலிருந்து அறிமுகம் செய்யப்படுகிறது.
மிஞ்சி மிஞ்சிப் போனால் பள்ளியில் சில நண்பர்கள், அப்பார்ட்மென்ட்டில் சில கிரிக்கெட்
தோழர்கள் என்ற அளவில் தான் அவர்களின் வெளியுலக அனுபவம். இப்படி அதிகம் வெளிமனிதப் பழக்கம்
இல்லாதது தான் ‘யாருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன?’ என்று திரியும் மனப்பான்மை வளரக்
காரணமோ? சமூகத்தில் கலந்து பழகாத, சமூக கஷ்ட நஷ்டங்கள் தெரியாத ஒரு குழந்தைக்கு எப்படிச்
சமுதாயம் நோக்கிய சிந்தனை வரும்? சுயநலமிகளாக அடுத்த தலைமுறை மாறி விடும் அபாயம் உள்ளதல்லவா?
இதில் அவர்களைக் குறைபட்டு என்ன பிரயோசனம்? சுயநலச் சூழலைத் தானே அவர்களுக்கு நாம்
பழக்கி வைத்திருக்கிறோம்? அவரை விதைத்த இடத்தில் துவரையா முளைக்கும்?
அதிலும் குழந்தையைச்
செல்லமாக, வசதியாக வளர்க்கிறேன் என்று A, B, C, D தெரிந்தவுடனேயே கம்ப்யூட்டர் வாங்கிக்
கொடுத்திருக்கிறோம். அது பின்னே என்ன பண்ணும்? நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை
விட BEN10-ஐயும் Bheem- ஐயும் நெருக்கமானவர்களாக உணரும். விளைவு, கார்ட்டூன் சேனல்களிலும்,
கம்ப்யூட்டர் கேம்களிலும் கவனம் குவியும். இந்திய இளைஞர்கள் குறித்து IT துறையில் ஒரு
கருத்து சொல்வார்கள். அது ‘இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவரவர் துறையில் தனித்தனியான
அறிவுஜீவிகள். ஆனால் கூட்டாகச் சாதிக்க இன்னும் அவர்கள் பழகவில்லை’ என்று. இந்த வாக்கியம்
கசப்பாய் இருந்தாலும் அதன் உண்மைத்தன்மை பற்றி சந்தேகமில்லை. அப்படித்தான் இருக்கிறோம்
நாம் எல்லாத்துறையிலும். இதற்கான ஆணிவேர் நம் சிறுவயதிலிருந்தே விதைக்கப்பட்டுவிடுகிறது.
என்றைக்கு மற்ற பிள்ளைகளிடமிருந்து பிரிந்து வீடியோ கேம், கம்ப்யூட்டர் விளையாட்டு
என்று கூட்டு விளையாட்டு முறையிலிருந்து தனி விளையாட்டு முறைக்கு மாற்றினோமோ அது தான்
அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பூதாகரமான பிரச்சனையாக வளர்ந்து நிற்கிறது. பின்
Resource Management, Team Work Spirit என்று கட்டணம் கொடுத்து கல்வி நிறுவனங்களில்
படிக்க வேண்டியிருக்கிறது.
இக்காலக் குழந்தைகளுக்கு
தெருவில் விளையாடுவது என்றால் என்ன என்றாவது தெரியுமா? எப்போது பழகுவார்கள் இவர்கள்
சமூகத்தின் அனைத்து ஜாதி வகுப்பினரிடையும்? இப்படிப் பழகவே வாய்ப்பளிக்காத ஒரு சமூகத்தை
உருவாக்கி வைத்திருக்கிறோமே, இவர்கள் எப்படிச் சொல்வார்கள் ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’
என்று? அடுத்தவர் மேல் ஒரு மரியாதையும், சமூகத்தின் மீதான தார்மீகப் கோபமும் எப்படி
வளரும் அவர்களுக்கு?விளையாட்டு என்பது உடல்நலம், மனநலம் இரண்டை மட்டுமா சொல்லித் தருகிறது? இல்லை. நம் சமூகத்தை,
நம் க்ரியேட்டிவ் சிந்தனைகளை, நம் மொழி நடையை அத்தனையையும் சொல்லித் தருகிறது.
இன்றைய குழந்தைகளிடம்
நான் பார்க்கும் மற்றொரு பிரச்சனை – எதையும் வாய் விட்டுச் சொல்வதில்லை. உரக்கப் பேசுவதில்லை.
11, 12ஆம் வகுப்பில் தமிழாசிரியர் துணைப்பாடக் கதைகளை வாசிக்கச் சொல்வார். பெரும்பாலான
மாணவர்கள் (இருபாலரும்) வாசிக்கும் போது, அத்தனை தூரம் கூச்சப்படுவார்கள். அப்படி நெளிவார்கள்.
தெரியாத மொழி என்றால் கூடப் பரவாயில்லை. நாம் பிறந்தது முதல் பழகிய நம் தாய்மொழி, அதிலும்
கவிதை, உரைநடை என்றால் கூட கவிஞர்கள் வெளுத்து வாங்கியிருப்பது புரிபடாமல் வாசிப்பதில்
தயக்கம் ஏற்படுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வாசிப்பதோ தி.ஜா வின் சிறுகதை.
அதிலென்ன கஷ்டமான மொழிப்பிரவேகம் இருந்து விடப் போகிறது? அதற்கு ஏன் இப்படித் தயங்க
வேண்டும்? சபையில் பேசுவதற்குக் கூச்சம் யார் தந்து வந்தது?
இதற்கு விடையாக
நான் நினைப்பது நம் தெருவோர விளையாட்டுகளைப் பழகாத நம் வாழ்க்கை முறை என்று. ‘ஒரு கொடம்
தண்ணியெடுத்து ஒரு பூ பூத்துச்சு’, ‘ரெண்டு கொடம் தண்ணியெடுத்து ரெண்டு பூ பூத்துச்சு’
இவற்றை நாக்கு உச்சரிக்காதது ஒரு காரணம் தானோ? இதே போல் இன்னொரு விளையாட்டு. இரு அணிகளாகப்
பிரிந்து கொள்வார்கள்.
ஒரு அணி முதலில்
இப்படிப் பாடும். ‘பூப்பறிக்க வருகிறோம்.. பூப்பறிக்க வருகிறோம்..’
இரண்டாம் அணி:
‘என்ன பூவைப் பறிக்கிறீர்கள்? என்ன பூவைப் பறிக்கிறீர்கள்?’
இரண்டாம் அணியில்
உள்ள ஒருவரின் பேர் சொல்லி, முதல் அணி: ‘சந்தோஷ் பூவைப் பறிக்கிறாம். ‘சந்தோஷ் பூவைப்
பறிக்கிறாம்.’
இரண்டாம் அணி:
‘யாரை வைத்துப் பறிக்கிறீர்கள்? ‘யாரை வைத்துப் பறிக்கிறீர்கள்?’
முதல் அணியில்
உள்ள ஒருவரின் பேர் சொல்லி: ‘கோகி வைத்துப் பறிக்கிறோம்.. கோகி வைத்துப் பறிக்கிறோம்’
என்று அனைவரும் சேர்ந்து பாடி முடித்தவுடன் சந்தோஷையும் கோகியையும் கயிறு இழுக்கும்
போட்டி போல் இழுப்பார்கள். யார் மறுபுறம் விழுகிறோமோ அவர்கள் ‘அவுட்’
இந்த விளையாட்டின்
அழகே பாடல் போல் பாடுவது தான். குதூகலமாக இருக்கும். இப்படியெல்லாம் விளையாடக் கற்றுக்
கொடுத்திருந்தால் ஏன் அந்தத் தயக்கம் வரப் போகிறது பொதுவெளியில் பேசும் போது!
நிறம் கண்டுபிடிக்கும்
‘கலர் கலர் என்ன கலர்’ விளையாட்டு, துரிதமான செயல் திறனை அதிகரிக்கும் ‘கல்லா? மண்ணா?’
விளையாட்டு, திருடன்-போலிஸ், ஐஸ் நம்பர் என்று இந்த விளையாட்டுகள் கற்றுத் தரும் ஆளுமைத்திறனை
எந்தப் புத்தகமும் கற்றுத் தருவதில்லை. ஊரின் அத்தனை ஜாதிக் குழந்தைகளும் புழுதிக்காட்டில்
புரண்டு திரியும் இந்த சமத்துவத்தை எந்தக் கல்வியும் கற்றுத் தருவதில்லை.
குழந்தைகள் களிமண்
போல. பிள்ளையார் பிடித்தால் பிள்ளையார் வரும், குரங்கு பிடித்தால் குரங்கு தான் வரும்.
பெரியவர்கள் நமக்கு என்றைக்கு இவை புரியப் போகிறது? கார் ரேஸ், Angry Birds தாண்டி
அழகான விளையாட்டு உலகத்தை என்றைக்குக் காட்டப் போகிறோம் அவர்களுக்கு?
குழந்தைகள் உலகம்
மகிழ்ச்சிகளும் ரசனைகளும் நிறைந்தது. அதில் வீடியோ கேம்மையும், பென்-10ஐயும் நுழைத்து
அவர்கள் குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து திருடிக் கொண்டிருக்கிருக்கிறோமே அதற்கு
நாம் என்ன பிராயச்சித்தம் செய்யப் போகிறோம்? சரியான நேரத்தில் சரிபடுத்தாத தவறுகள்
சரியச் செய்து விடும் – ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சியையும்! அதற்கு நாம் சரிப்பட்டு
வருவோமா?
No comments:
Post a Comment