வரும் புதன்கிழமையுடன் அனைத்துப் பிரிவுகளுக்கும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நிறைவடைகின்றன.
கல்லூரிச்
சேர்க்கை குறித்த டென்ஷன் பெரும்பாலும் அனைத்துக் குடும்பங்களிலும் வந்து
விட்டதைக் காண முடிகிறது. படிப்பு, காலேஜ், விண்ணப்பம் என்று பல
குழப்பங்கள் ஆரம்பமாகி விட்டன.
இந்த
நேரங்களில் குழப்பி விடுவதற்கேன்றே ஒரு க்ரூப் இருக்கும் - ஆண்களிலும்,
பெண்களிலும். தயவு செய்து அந்த மாதிரி மனிதர்களுடன் அன்னம், தண்ணி பொலங்க
வேண்டாம், குறைந்த பட்சம் கல்லூரியில் சேரும் வரையாவது. அவர்கள்
மாணவர்களின் வாழ்க்கையையே சீரழத்து விடும் விஷக்கிருமிகள்.
இன்று
கூட, எங்க ஊர்க்காரப் பெண்மணி ஒருவர், போனில் வருத்தமாகச் சொன்னார்.
மகளைப் படிக்க வைப்பது தொடர்பாக, யாரிடமோ பேசிய போது, 'எப்டி மேல படிக்க
வைக்கப் போற? இவ்ளோ தூரம் வந்ததே பெருசு, ரொம்பப் படிக்க வச்சா அதுக்குத்
தக்கன மாப்ள பார்க்கணும். எப்டி முடியும்?' என்று. இத்தனைக்கும் அவர் மகள்
நன்றாகப் படிப்பாள். அவரைச் சமாதானம் செய்வதற்குள், 50 சொந்த அனுபவங்கள்,
10, 15 எழுத்தாளர்களின் மேற்கோள்கள் என்று விளக்க வேண்டியதாயிற்று.
பெற்றோர்களே,
தயவுசெய்து இதையெல்லாம் நினைத்து மனதைக் குழப்புக் கொள்ளாதீர்கள். படிப்பு
தான் ஒரு தலைமுறையை மாற்றும். இன்றைக்கு நாம் கொஞ்சம் கஷ்டப்படத்
தயாராயிருந்தால் கூட போதும். நாளைக்கு நம் தலைமுறை நன்றாக வாழும். இன்று
நாம் கஷ்டப்பட்டு அடையும் இலக்குகள், நாளைய நம் தலைமுறைக்கு சாதாரண
தூரங்களாக இருக்கும். அப்படியே ஒவ்வொரு குடும்பத்திலும் மாற்றம் வரும்
போது, ஊர் மாறி விடும். அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கும்.
இந்த
மாப்ள, மண்ணாங்கட்டிப் பிரச்சனையெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமில்லை.
இப்பொழுதுதான் அது பெரிதாகத் தெரியும். நாளை குழந்தைகள் படித்து நல்ல
நிலைக்கு வரும் போது பெற்றோர்களாகிய உங்களை விட, அவர்களுக்கு எதிர்காலம்
குறித்த தெளிவும், புரிதலும் அதிகமாக இருக்கும். அதனால், இல்லாத பயத்தை
வள்ர்த்துக் கொண்டு, குழந்தைகளின் வளர்ச்சியை முடக்கி விடாதீர்கள். பள்ளிப்படிப்பு மட்டும் எதிர்காலத்திற்குப் பத்தாது. உங்கள் குழந்தை நன்றாகப் படிக்கிறதோ இல்லையோ, அவன் தகுதிகேற்ற/ஆசைக்கேற்ற படிப்பில் சேர்த்து விடுங்கள்.
இன்று நீங்கள் அதை செய்யத் தவறினால்:
* உங்கள் பெண் உங்களுடனே இருப்பாள்.
* கல்லூரிக்கு, வேலைக்கு என்று எங்கும் தனியாகச் செல்ல வேண்டியதில்லை.
*
கெட்டுக் கிடக்கும் உலகத்தில் நேரம் கெட்ட நேரத்தில் வீடு திரும்பும்
பணிச் சூழலால், நீங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு திரிய
வேண்டியதில்லை.
* நீங்கள் நினைத்த படி மணம் முடித்து வைக்கலாம்.
* குழந்தை குட்டியென்று அவளும், பேரன் பேத்தியென்று நீங்களும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டலாம்.
ஆனால்,
*
நீங்கள் போன கொஞ்ச நாளில் (அடுத்த தலைமுறையில்), அவள் பள்ளிப் படிப்பை
முடித்த போது நீங்கள் பயந்து பின் வாங்கிய ஒவ்வொன்றையும் தவிர்க்கவும்
முடியாமல் வெல்லவும் முடியாமல் போராடிக் கொண்டிருப்பாள்.
இப்போது
சொல்லுங்கள்: 'எது சம்மதம் உங்களுக்கு? யார் போராடப் போகிறீர்கள். இந்தத்
தலைமுறையில் நீங்களா? இல்லை, அடுத்த தலைமுறையில் உங்கள் பிள்ளைகளா?'
No comments:
Post a Comment