மதங்கள் எதற்குப்
படைக்கப்பட்டன? மதங்களை நமக்கு முதலில் கற்றுக்கொடுத்தவர்கள் யார்? எத்தனை பிரச்சனைகள்
இந்த மதங்களின் பெயரால்! இன்று நேற்று இல்லை, பண்டைக்காலம் முதல் எவ்வளவு ரத்தம் சிந்தியாகிவிட்டது
‘மதம்’ பிடித்த மனிதர்களின் வெறிச்செயல்களால். திரைப்படங்களிலிருந்து அரசியல் வரைக்கும்
ஒரு ஆட்டம் காட்டிவிடும் வல்லமையை ஏன் கொடுத்தோம் அதற்கு? ‘மதச்சார்பின்மை பற்றிய அறிவை
மதத்தின் வழியாகத் தரவேண்டும்’ என்கிறாரே விவேகானந்தர். எத்தனை குருமார்கள் அதைக் கடைபிடிக்கின்றனர்?
மதங்களின் பெயரால் இழந்ததைப் பட்டியலிட முடியுமா? பட்டியலிட்டால் முதலில் நிற்பது காந்திஜி
கொலை தான். எளிமையும் உறுதியும் அஹிம்சையுமாய் சுதந்திரம் வாங்கித் தந்த மகானைக் கொன்றது
நம் சொந்த மண்ணே!
புதிய தலைமுறை
ஆசிரியர் திரு.மாலன் அவர்கள் எழுதிய இந்த ‘ஜனகணமன’ நாவல், காந்திஜி கொலையுண்ட சம்பவத்தை
விளக்கியுள்ளது,. தன் மகன் சுகனுக்கு காந்திஜியைச் சுட்ட கதையை சொல்வது போல் நாவல்
ஆரம்பமாகிறது. கோட்சே, ஆப்தே, கார்க்கரே, கோபால், பாட்கே, மதன்லால் இவர்கள் அனைவரும்
எதற்காகக் காந்தியைக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்பதை சுவாரஸ்யமான நடையில் விளக்கியிருக்கும்
ஆசிரியரின் எழுத்து நடைக்கு ‘சபாஷ்’. ஒரு வரலாற்றுப் பிண்ணனியை, நாவல் என்ற வடிவில்
எழுதுவதென்பது புதிய முயற்சி. அது சிறப்பாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். போலீஸ் அதிகாரி
ரமணனைத் தவிர இந்த நாவலில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் உண்மை. தேவையற்ற விஷயங்கள்
எதுவும் சேர்க்காமல் வரலாற்றை அப்படியே விறுவிறு நடையில் தொகுத்திருப்பது கூடுதல் அழகு.
சம்பாஷணைகள் கொஞ்சம் கற்பனை கலந்திருக்கலாம், ஆனால் சம்பவங்கள் அனைத்தும் உண்மையானவையே
என்பது திரு.’கல்கி’ராஜேந்திரன் எழுதியிருக்கும் முன்னுரையில் தெரிகிறது. பாடநூலில்
வரலாற்றைப் படிப்பதற்கும், அப்பா மடிசாய்ந்து அதே பாடம் கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது
அல்லவா? இந்நூல் இரண்டாம் வகை.
கடைசியாக நாவலுக்கு
எழுதிய முடிவுரை அருமை. ‘காந்தியின் தத்துவங்கள் விஞ்ஞானப்பூர்வமானதா? நம்பிக்கைகள்
நடைமுறைச் சாத்தியமானவையா, இல்லையா என்று யோசித்துப் பார்ப்பது உன் பிரச்சனை. நீயாகத்தான்
செய்ய வேண்டும் அதை, நானல்ல’ என்று முடித்திருப்பார். அது முற்றிலும் உண்மை. காந்தியம்
பற்றிய ஒரு தேடலை எனக்குள் ஆரம்பித்து வைத்திருக்கும் புத்தகம். உங்களுக்கும் கூட அப்படி
இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் முயற்சித்துப் பாருங்கள்.
ஆசிரியர்: திரு.மாலன்
விலை: ரூ.60/-
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன்
No comments:
Post a Comment