Monday, 25 February 2013

நேரமாச்சு



எங்கிருந்துதான் வருமோ, இந்தத் திங்கட்கிழமை வந்தாலே மனதிற்குள் ஒரு சோம்பல் சம்மணமிட்டு விடுகிறது. அன்று அலுவலகமே வறண்டுபோய் இருக்கும். ‘தர்மர் கண்ணுக்கு அனைவரும் நல்லவர்களாகத் தெரிந்தார்களாம். துரியோதனன் கண்ணுக்கு அனைவரும் கெட்டவர்களாகத் தெரிந்தார்களாம்’. நான் தர்மர் வம்சமா? துரியோதனன் வம்சமா? என்று ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் அவள் - என் அலுவலகத் தோழி - வந்தாள். முகம் நிறைய கவலைக் கோடுகள். புன்னகை வற்றிய உதடுகள். பெரும்பாலும் அவளது திங்கட்கிழமைகள் அப்படியானவை தான். அதிலும் அவள் குழந்தை பெற்றெடுத்த இந்த 2 வருடங்களாக ரொம்பவும் மாறிப்போய் விட்டாள். முன்பு பூங்கொத்து போல் எந்நேரமும் புத்துணர்வு பொங்கிக்கொண்டிருக்கும் முகம். அவளது செல்லச் செல்லக் குறும்புகளுக்காகவே ஒரு கூட்டம் அவளைச் சுற்றி வரும். இப்பொழுதெல்லாம் முகத்தில் வயதான முதிர்ச்சி தெரிகிறது. 3 ஆண்டுகளில் ஒருவர் இப்படி ஆக முடியுமா? ஆச்சரியமாக இருக்கிறது - கூடவே வேதனையாகவும்.
                            
எனக்குத் தெரிந்து, திருமணமானபின் வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானவர்கள் இவள் வகைதான். அதிலும் குழந்தை, முகம் பார்க்கத் தொடங்கியபின் பணிக்கு வருவது கொடுமையிலும் கொடுமை. வேலைக்குச் செல்லும் பெண்களின் காலை நேரம் எத்தனை கொடிது என்பது உடன் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். துணைக்கு ஆள் இல்லாத – சம்பளத்துக்கு ஆள் வைக்க முடியாத – வேலைக்குச் சென்றே ஆக வேண்டிய சூழலில் இருக்கும் குடும்பத்தலைவிகள் படும்பாடு சொல்லி மாயாது.

கல்லூரி 3ஆம் வருடத்தில் இன்டர்வியூவிற்காக ஆங்கிலப் பேச்சுப்புலமையை வளப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வாரமும் ‘debate’ நடத்துவது வழக்கம். அந்த வார விவாதத் தலைப்பு ‘பெண்களுக்கான இட ஒதுக்கீடு’ பற்றியது. பெண்கள் ஆதரித்தும், ஆண்கள் எதிர்த்தும் இரு அணியாகப் பேசினோம். பேச்சு அப்படியே கல்லூரியில் படிப்பது, வேலைக்குச் செல்வது பற்றித் தொடர்ந்தது. அப்பொழுது ஒரு நண்பன் சொன்னான்: “பெண்கள் கல்லூரிப்படிப்பு படிச்சு பெருசா என்ன சாதிக்கப் போறீங்க? கொஞ்ச நாள் வேலைக்குப் போவேங்களா? அப்புறம் குடும்பம் குழந்தைன்னு பார்த்துக்கிட்டு வீட்ல தான் இருக்கப் போறேங்க? இதுக்கு எதுக்கு காலேஜ்ல ஒரு சீட்டை வேஸ்ட் பண்ணனும்?” என்று. அன்றைய தினம் அது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அவன் மன்னிப்பு கேட்கும் வரை விடாப்பிடியாக வாதாடிய தருணங்கள் கண்முன்னே வந்து போகிறது. இப்பொழுது நினைத்துப் பார்த்தால் நம் காலப் பெண்கள் இப்படித்தான் இருக்கிறோமோ என்றொரு எண்ணம் எழுகிறது. குடும்பம் குட்டி என்றான பின் ஏன் பணியைத் தொடர முடிவதில்லை? படித்த பெண்கள் அனைவரும் வேலைக்குப் போய் சொந்தக் காலில் நிற்பதை ஒரு பாதுகாப்பாகவும் பெருமையாகவும் தான் எண்ணுவார்கள். பின் எது அவர்களைத் தடுக்கிறது? சோம்பலா? நிச்சயமாக இல்லை. குடும்பச் சூழலா என்று சிந்தித்துப் பார்த்தால் ஒரு வகையில் ‘ஆம்’ என்றே விடை கிடைக்கிறது.

மத்திய ரகக் குடும்பங்களின் கட்டமைப்பு, மாக்கோலம் போல் அழகும் சிக்கல்களும் நிறைந்தவை. அம்மா தான் எல்லாம் செய்தாக வேண்டும். காலையில் கண் திறக்கும் போதிலிருந்து இரவில் பால் குடித்துப் படுக்கும் வரை அம்மா இல்லாமல் என்ன காரியம் நம்மால் செய்ய முடியும்? ஒரு நாள் அம்மா ஊருக்குப் போயிருக்கட்டும், வீடே அல்லோலகல்லோலப் படும். என்னதான் குழந்தைகளிடம் ‘எல்லாம் நான் தான் பண்ணனுமா?’ என்று சலித்துக் கொண்டாலும் அம்மாக்கள் அதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இதனால்தான் வேலைக்குச் செல்லும் அம்மாமார்கள் கஷ்டப்படுகிறார்களோ என்று தோன்றுகிறது. நினைத்தபடி குழந்தையைக் கவனிக்க முடிவதில்லை. ‘பரவாயில்லை, விடு’ என்று விடவும் தாய்மை இடம் தரவில்லை. இதில் தான் சிக்கல் ஆரம்பமாகிறது. அதிலும் கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் படும்பாடு மனதைப் பிசையும்.


கிராமத்திலும் பெண்கள் வேலைக்குச் செல்வார்கள். ஆனால் அவர்கள் குழந்தைகளைத் தங்களுடன் தூக்கிச் செல்லும் வாய்ப்பு பெற்ற பாக்கியசாலிகள். கடுமையான வேலையை அவர்கள் செய்யும் போதும்கூட, பெற்ற பிள்ளைகள் கண்முன் இருக்கும் திருப்தி அவர்களுக்கு இருக்கும். ஆனால் படித்த, நல்ல சம்பளம் பெருகிற, சுகமாய் அமர்ந்து வேலை செய்கிற நிலையில் இருக்கும் பெண்களுக்கு இந்தத் திருப்தி இருக்கிறதா? பொதுவாக IT துறையில் இருப்பவர்களுக்கு பெண் என்ற சலுகை எங்கும் கிடையாது. ஆணுக்கு இழைத்தது தான் பெண்ணுக்கும். வரவேற்கக்கூடிய நடைமுறை. எங்கு சலுகைகள் அறிமுகப்படுத்தப்படுகிறதோ அங்கு அடிமைத்தனம் தலைவிரிக்க ஆரம்பிக்கும் என்பது என் எண்ணம். ஆனால் தாய்மைக்குக் கொஞ்சம் சலுகை கொடுக்கலாம். தவறில்லை. நம் குடும்பக் கட்டமைப்பு தாய்மையுடன் பிணைந்த ஒன்றல்லவா? குறைந்த பட்சம் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லும் வரையாவது.

வேறொன்றும் பெரிதாய்ச் செய்துவிட வேண்டியதில்லை. பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வேலைக்கு வருவதற்கு அனுமதித்தால் என்ன? குழந்தைகளுக்காக ஒரு அறை, கவனித்துக் கொள்ள ஒருவர் என இருந்தால் போதும். இதைச் செய்ய முடியாதா? அழும் போது உணவூட்ட, தூங்கியாச்சா என்று பார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு அந்த ‘அம்மா’விற்குக் கொடுத்தால் என்ன! இதற்குத் தனியாகக் கூட நேரம் ஒதுக்க வேண்டாம். சாதரண உணவு இடைவேளையே போதுமே! இதை விட என்ன கேட்கப் போகிறாள் ஒரு தாய்! குழந்தைகள் நம் கண்முன் இருப்பதுவே ஒரு புத்துணர்ச்சி தருமல்லவா? வேலை ஜரூராக ஓடுமே?

சில IT நிறுவனங்களில் இந்த வசதி உள்ளது. ஆனால் அவையெல்லாம் 100 க்கு 1 கணக்கில்தான் இருக்கும். அலுவலகங்களில் கேண்டீன் போல், பாத்ரூம் போல் ஏன் இந்த ‘crush’களும் அத்தியாவசியத் தேவைகளாக்கப்படக் கூடாது? ஏன் அனைத்து நிறுவனங்களும், அரசு அலுவலகங்களும் இதை யோசிக்கக்கூடாது? எது எதற்கோ செலவு செய்கிறார்கள், இது போல் ஒரு நல்ல காரியத்திற்குக் கொஞ்சம் செலவளித்தால்தான் என்ன! இது செலவு என்பது கூட இல்லை. பிசினஸ் மூளையுடன் பார்த்தால் ‘முதலீடு’ என்று கூடச் சொல்லலாம். 6 மணி அடித்ததும் பெண்கள் அவசரமாகக் கிளம்ப  வேண்டியிருக்காது. திங்கட்கிழமைகளில் வீட்டை நினைத்து மனம் நொந்து போக வேண்டியிருக்காது. குழந்தைக்கு ஒன்றென்றால் விடுப்பு எடுக்க வேண்டியிருக்காது. என்ன செய்கிறதோ குழந்தை என்ற தவிதவிப்பு இருக்காது. இவையனைத்தும் இல்லாதிருந்தால் அத்தனை கவனமும் வேலையில்தானே குவியப்போகிறது? Productivity தானாகக் கூடும். நிறுவனத்திற்கும் லாபம். வேலை பார்ப்பவர்களுக்கும் லாபம். ஒரே கல்லில் 2 மாங்காய்.


இந்த உணர்வு சார்ந்த பிரச்சனையை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டால் புண்ணியம். அந்த நிலை ஏற்படாத வரை திங்கட்கிழமைச் சோர்வுகள் தெளிவாகாது. ‘படிச்சும் வேலைக்குப் போக மாட்டேங்குறா’ என்ற மாமியாரின் வசையாடல்கள் தீராது. ‘என் கூட எப்பம்மா இருப்ப?’ என்ற குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது. ‘நேரமாச்சு..நேரமாச்சு’ என்று அலுவலகத்திலும் வீட்டிலும் கடிகாரத்தின்பின் ஓடிக்கொண்டிருக்கும் பெண்மணிகளின் பதற்றமும் அடங்காது.

பெண்களுக்குக் கல்வி தருவதுடன் நம் கடமை முடிந்து விடுவதில்லை. அவள் கற்ற கல்வியைப் பயன்படுத்தும் அல்லது கற்ற கல்வியால் அவள் பயன்பெறும் சூழலை அமைத்துக் கொடுப்பதும் நம் கடமையே! கடமையை எப்பொழுது நிறைவேற்றப் போகிறோம்?

2 comments:

  1. ந(ச்)ற்சிந்தனை

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த ஊக்கமூட்டலுக்கு மிக்க நன்றி ஸ்டாலின்

      Delete