Saturday, 8 March 2014

பெண்ணே! பெண்ணே!


இந்த வருடம் (வரும் சனிக்கிழமை) 101-ஆவது சர்வதேச மகளிர் தினமாமே! நேற்றைக்குத் திடீரென்று ஒரு யோசனை. சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் எழுதிய பாடல்களைப் படித்து அதில் ஒரு ஆராய்ச்சி பண்ணி அட்ராசிட்டி பண்ணினால் என்ன என்று! ஆனாலும் இது 3 நாளுக்கு முன்னாடி புத்தியில் உரைத்தால் ஒரு பயனும் தராது. ஹ்ம். அடுத்து நேரம் கிடைக்கும் போது இதை முயற்சிக்கிறேன். இருந்தாலும் Better late than never என்ற கோட்பாட்டிற்கிணங்க முடிந்த வரைக்கும் முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால்,  நான் செலெக்ட் பண்ணி வைத்திருக்கும் 5 பெண்பாற் புலவர்களின் ஒவ்வொரு sample பாடல்களைத் தெரிந்து கொள்வோம். அவர்கள்,

1. ஔவையார்
2. ஆண்டாள்
3. வெள்ளி வீதியார்
4. காக்கைப் பாடினியார்
5. காரைக்கால் அம்மையார்

Lets start the Dhamakka!


***

ஔவையார்

சங்ககால, இடைக்கால, சோழர் கால, சமய, பிற்கால(1 & 2) என்று 6 ஔவையார்கள் இருந்தார்கள் என்பது நமக்குத் தெரியும். இங்கு நாம் பார்க்கப் போவது சங்ககால ஔவையார் எழுதிய புறநானூற்றுப் பாடல் ஒன்று.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே



(புறநானூற்றுப் பாடல் எண் - 187 )

இந்தப் பாடலை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் வெப்சைட் ஹோம் பேஜில் தான் முதல் முறை பார்த்தேன். என்னெவென்று படித்துப் பார்த்தவுடன் நிரம்பவே பிடித்திருந்தது. நன்றிங்க முத்துலிங்கம் சார்.

விளக்கம்:

நிலமே! நீ ஓரிடத்தில் நாடாக இருக்கிறாய்! ஓரிடத்தில் காடாக இருக்கிறாய்! பள்ளமாக இருக்கிறாய்! மேடாகவும் இருக்கிறாய்! எது எவ்வாறாயினும் நல்லவர் உறையுமிடத்து நீ நல்ல நிலமாகவும், தீயவர் உறையுமிடத்து நீ தீய நிலமாகவும் இருக்கிறாய். உன்னில் உறைபவர்களை வைத்தே நீ உயர்வும் தாழ்வும் அடைகிறாய்! அது தவிர உனக்கென்று ஒரு நலமுமில்லை.

அவல் - பள்ளம்
மிசை - மேடு

இதை அப்டியே மாற்றி 2 பேர் சொல்றாங்க. ஔவ்ஸ் நிலத்திற்கு ஒரு இயல்புமில்லை, அங்கன யார் இருக்காங்களோ அவங்கள வச்சுத் தான் நன்னிலம் என்பதும் தீநிலம் என்பதும்ன்னு சொல்றாங்க. ஆனா வள்ளுவர் நிலத்தின் தன்மையால் அங்கு இருக்கும் நீரின் இயல்பு மாறுதுங்கறார். அதுவும் கரெக்ட் தான்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.


( திருக்குறள் - சிற்றினஞ்சேராமை - குறள் எண்: 452 )

கலைஞர் உரை:


சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.

இன்னொரு குறளில்,

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.


( திருக்குறள் - புகழ் - குறள் எண்: 239 )

கலைஞர் உரை: 

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

பாரதியார் 'நிலத்தின் தன்மை பயிர்க்குளதாகுமாம்' என்று சொல்கிறார்.

மூணு பேர் சொல்றதும் கரெக்ட் தான்! 


***

ஆண்டாள்

சூடித் தந்த சுடர்கொடியாள். இவள் தமிழுக்கும் காதலுக்கும் ஆண்டவன் மணாளனாய் ஆனது ஒன்றும் அதிசயமேயில்லை. அந்தத் தகுதி அவளுக்கு இருக்கிறது.

12 வைஷ்ணவ ஆழ்வார்களில் இவள் ஒருத்தியே பெண். மகளிர் தினத்தில் இவளைக் கொண்டாட இந்த ஒரு காரணம் நமக்குப் போதும் தானே!

திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் ஆண்டாள் எழுதியது.

திருப்பாவையை மார்கழி மாதத்தில் பிரித்து மேய்ந்தோம். அதன் அழகு தான் நாச்சியார் திருமொழியைப் படிக்கச் சொல்லித் தூண்டியது. கொஞ்சமே கொஞ்சம் படித்தேன். பக்தி இலக்கியங்கள் மேல் அவ்வளவு ஈர்ப்பில்லை என்ற போதும், இவற்றை வெறும் பக்தி என்ற கட்டுக்குள் சுருக்கி வைக்க முடியாது. ஆண்டாள் தமிழின் அழகென்ன, சொல்லும் உவமைகள் என்ன, அதன் பின்னுள்ள உணர்ச்சி என்ன! அப்பப்பா! காதலனே ஆனாலும் இப்படியெல்லாம் நேசிக்க முடியுமா என்பது கேள்வியாய் எழுந்து வியப்பாய் உறைந்தது. அதனால் தான் "தெய்வீகக் காதல்" என்ற சொல்லாடல் வந்ததோ என்னவோ!

Coming to the main point , ஆண்டாள் பாடல்கள் அத்தனையும் அழகு என்றாலும், ஒரே ஒரு பாடலை இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

பாடல்:

என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள்
இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர்
தோணி பெறாது உழல்கின்றேன்
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
நீயும் அறிதி குயிலே
பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப்
புண்ணியனை வரக் கூவாய்


- நாச்சியார் திருமொழி - குயிற் பத்து

(இந்தப் பாடலை "New India"வில் பாரதியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பார்)

விளக்கம்:

குயிலே! நாராயணனைக் காணாததால் ஏற்பட்ட தவிப்பால், எலும்புகள் உருகியது. வேல் போன்ற கண்களின் இமை மூடவில்லை. துன்பக் கடலில் புகுந்து, வைகுந்தன் என்ற ஒரு தோணி கிடைக்காது தடுமாறிக் கொண்டிருக்கிறேன். அன்பு உடையோரைப் பிரிவதால் உண்டாகும் துக்கத்தை நீயும் அறிவாய் தானே குயிலே! பொன்னாலான மேனியுடையவனும், கருடக் கொடியும் கொண்டவனான புண்ணியன் நாராயாணன் வரும்படி கூவுவாயாக!

இங்கு தவிப்பினால் எலும்பு உருகியது என்கிறாள்.

கம்பர் அன்பால் எலும்பு உருகுவதாய் எழுதியிருப்பார். ராமனை முதன்முதலில் கண்ணால் கண்ட போது, அனுமனுக்கு எலும்பு உருகியதாம்.

"ஐய! என் ஆக்கை, என்பு தோன்றல உருகின எனின், பிறிது எவனோ?" என்று கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு பாடலில் வரும்.

இன்னொரு இடத்தில், ராமனைக் கண்ட எல்லோருக்கும் எலும்பு உருகியது என்றும் ஒரு இடத்தில் சொல்கிறார்.

"மின் பொருவு தேரின்மிசை
வீரன் வரு போழ்தில்,
தன் பொருவு இல் கன்று தனி
தாவி வரல் கண்டாங்கு
அன்பு உருகு சிந்தையொடும்
ஆ உருகுமாபோல்,
என்பு உருகி, நெஞ்சு உருகி,
யார் உருககில்லார்?
"

மாணிக்கவாசரும் கூட "என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி" வணங்குகிறார்.

இங்கு எலும்பு உருகியது என்பதை நேரடியாகப் பொருள் கொள்ளக் கூடாது. எலும்பு உருகியது போல வலிமை தோன்றாமல் அன்பின் காரணமாக உடல் நெகிழ்ந்ததாம். அப்படி...

நேரடியாக அர்த்தம் பண்ணினா, அது எலும்புருக்கி நோய் ஆயிரும். அப்டினா ரிக்கெட்ஸ் நோய். எப்பவும் பள்ளித் தேர்வில் 2 மார்க் கேள்வியில் இந்தக் கேள்வி தவறாமல் வந்துரும். 


***

வெள்ளிவீதியார்

சங்ககாலப் புலவர். அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய தொகுப்புகளில் 13 பாடல்களை எழுதியுள்ளார்.

பெரும்பாலானாவை விட்டுச் சென்ற தலைவனை நினைத்து உருகி, மருகி எழுதிய பாடல்களாக இருக்கின்றன. அவருக்கு என்ன கஷ்டமோ!

அவரது பாடல்களுள் ஒன்று வித்தியாசமாக இருந்தது. தலைவனும் தலைவியும் பிரிந்து இருக்கிறார்கள். அவர்களைச் சேர்த்து வைக்கத் தலைவன் வீட்டிலிருந்து சிலர் தலைவி வீட்டுக்கு வருகிறார்கள். இவர்கள் என்ன சொல்வார்களோ என்று தலைவி டென்ஷனாக இருக்கிறாள். அதைக் கண்டு தோழி, 'அதெல்லாம் ஒண்ணுமில்ல. நல்லாத் தான் பேசிட்டு இருக்கானுவ!' என்று தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள். அதற்குத் தலைவி பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கவென்று முதியோர் சிலர் உள்ளனர் என்று கூறி மகிழ்கிறாள். ஹ்ம். இதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் முதியோர்கள் தான் காதல் திருமணப் பேச்சுக்களை முறித்து வைப்பவர்களாக இருக்கிறார்கள். என்னத்தச் சொல்ல!

பாடல்:

அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
''நன்றுநன்று'' என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே


- குறுந்தொகை - பாடல் எண்: 146

விளக்கம்:

தோழி! கேட்பாயாக! அவ்விடத்திலுள்ள நம்மைச் சேர்ந்த குழுவிலுள்ளவர்கள், தண்டைப் பிடித்த கையோடு, கிழிந்த கந்தல் துணி போல நரைத்தலையையும் உடைய பெரியவர்கள், நன்று நன்று என்று கூறும் தலைவன் கூட்டத்தாரோடு, இந்நாள் நீங்கள் இங்கு வரப் பெற்றமையால் பெருமையுடையதானதென்று முகமன் கூறுவர். நமது ஊரின்கண் பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போரும் இருந்தனர்.

"வெண்தலைச் சிதவலர்" - வழுக்கைத் தலை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்!

தலையில் கிழிந்த துணியைக் கவிழ்த்து வைத்தது மாதிரி, நரையுடன் வழுக்கையும் இருக்கிறதாம். (எர்வோமெர்டின் ஞாபகத்துக்கு வருதா?) க்ளாஸ்!

நம்ம ஔவையாரும் இந்தம்மாவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் போல! ஔவ்ஸ் எழுதிய 'ஓங்கு மலைச் சிலம்பில்' என்ற அகநானூற்றுப் பாடலில் பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைவனை வெள்ளி வீதியாரைப் போலப் போய்த் தேடப் போவதாய் எழுதுகிறார்.


***

காக்கைப்பாடினியார்

சங்ககாலப் புலவர். இவரது இயற்பெயர் நச்செள்ளையார். 

ஒன்பதாம் வகுப்பில் ஒரு பாடல் வந்திருக்கும். அதைச் சொன்னால் எல்லாருக்கும் இவர் ஞாபகம் வந்து விடுவார். 

தாய் ஒருத்தி போருக்குத் தன் பச்சிளம் மகனை அனுப்புகிறாள். அவன் போரில் முதுகில் புண்பட்டு இறந்து விட்டான் என்று ஊரார் சொல்கிறார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற அவள், அது மட்டும் உண்மையென்றால் அவன் பாலுண்ட முலைகளை வெட்டி எறிந்து விடுவேன் என்று ஆவேசத்துடன் கையில் வாளுடன் போர்க்களம் செல்கிறாள். அங்கு பிணங்களைப் புரட்டிப் பார்த்து தன் மகனைத் தேடுகிறாள். அவன் மார்பின் விழுப்புண் பட்டு செத்துக் கிடப்பதைக் கண்டு, அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியுற்றாள். 

இப்போ ஞாபகம் வந்துட்டா? எத்தனவாட்டி 5 மார்க் கேள்வியில் எழுதியிருப்போம். (இதே மாதிரி இன்னொரு பாட்டும் எனக்கும் ஞாபகம் வருது. கெடுக சிந்தை, கடிதிவள் துணிவே. அருமையான வீரப்பாடல். இதை எழுதியது ஓக்கூர் மாசாத்தியார்) 

காக்கை குறித்து இவர் எழுதிய குறுந்தொகைப் பாடலால் காக்கைப் பாடினியார் என்ற பெயர் பெற்றார். அந்தப் பாடல் கீழே!

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே


- குறுந்தொகை - பாடல் எண்: 210

களம்:

பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைமகன் திரும்பி வந்த பிறகு, 'தலைவியை நன்றாக ஆற்றுவித்தாய்' என்று தோழிக்கு நன்றி கூறுகிறான். அதற்குத் தோழி 'இதில் நான் செய்தது ஒன்றுமில்லை. விருந்தினர் வருவார் என்று தினமும் கரைந்த காக்கையினால் தான் என்னால் ஆற்றுப்படுத்த முடிந்தது' என்று தலைவனிடம் கூறியதாகப் பாடப்பட்ட பாடல்.

விளக்கம்:

திண்மையுடைய தேரினைக் கொண்ட, நள்ளி என்னும் வேந்தனது காட்டில் வாழும் அண்டர்கள் வளர்க்கும் பல பசுக்களின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யும், தொண்டி என்னும் ஊரில் விளைந்த வெண்மையான நெல்லினால் சமைக்கப்பட்ட சுடுசோற்றையும், ஏழு கலத்தில் ஏந்தி வைத்துக் கொடுத்தாலும், என் தோழியாகிய தலைவியுடைய பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு விருந்தினர் வரக் கரைந்த காக்கைக்கு அப்பலியானது சிறிதேயாகும்.

வளை நெகிழ்தல், பசலை படர்தல் தெரியும். அதென்ன தோள் நெகிழ்தல்?

அகநானூற்றில் கூட 'சிறந்த வேய் மருள் பணைத் தோள் நெகிழ' என்று வருகிறது.

உறுப்பு நலனழிதலில் வள்ளுவரும் 'தொடியொடு தோள் நெகிழ நோவல்' என்கிறார். தோள் நெகிழ்தல் என்றால் மெலிதல் என்று அர்த்தமாகயிருக்கும் என நினைக்கிறேன்.

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இன்னொரு காக்கைப்பாடினியார் இருந்தார். அவர் பெருங்காக்கைப் பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம் போன்ற கணித நூல்களை எழுதியவர்.

ஒரு உதாரணம்: வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் சொல்லுங்க பார்ப்போம்.

யெஸ்.. C = 2 * pi * r 

(pi = 22/7; r - ஆரம்)

இதை கா.பா எளிமையாகச் சொல்கிறார். 'விட்டமோர் ஏழு செய்துதிகைவர நான்கு சேர்த்து சட்டென இரட்டி செயின் திகைப்பன சுற்றுத்தானே' - So simple!


***

காரைக்கால் அம்மையார்

ஔவையார், ஆண்டாள், வெள்ளி வீதியார், காக்கைப் பாடினியார் வரிசையில் காரைக்கால் அம்மையாரையும் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் உண்டு.

  • மூன்று பெண் நாயன்மார்களில் முதல்வரும் மூத்தவரும்
  • ஈசன் வாயாலேயே அம்மையே என்று அழைக்கப்பட்டப் புகழுடையவர்
  • அந்தாதிப் பாடல்களை முதன்முதலில் இயற்றியவர்
  • பெண்ணுடலை விடுத்துப் பேய் உருவை விரும்பிப் பெற்றவர். சிவன் உறையும் கயிலாய மலையில் காலால் நடப்பது பாவம் என்பதால் தலைகீழாகக் கையால் நடந்து சென்றவர்

எனக்கு அவர் பற்றிச் சொல்கின்ற மாங்கனிக் கதையில் அவ்வளவு ஈர்ப்பில்லை என்ற போதும், டெடிகேஷன் என்பதன் முழு அர்த்தம் இவர் பாடல்களில் தொனிக்கும். அதை நாம் கொண்டாடித் தான் ஆக வேண்டும்.

அவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதியிலிருந்து ஒரு பாடல்:

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்

ஒன்றேஎன் உள்ளத்தி னுள்ளடைத்தேன் - ஒன்றே காண்

கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர்

அங்கையாற் காளாம் அது

No comments:

Post a Comment