Saturday, 29 March 2014

ஞாபகம் வருதே


நேத்து லஞ்ச் டைம்ல என் colleague கிட்ட 'குழந்தைகளுக்குப் பரிட்சை என்னைக்கு?' ன்னு பேசிட்டு இருந்தேன். குட்டிப் பசங்க தான் அவங்களுக்கு. 6 வது படிக்குற பையன் ஒண்ணு. 3வது ஒண்ணுன்னு நினைக்கிறேன். அதுக்குப் பதில் சொல்லிட்டுச் சொன்னாங்க 'பிள்ளைங்களை லீவுக்கு எங்க அனுப்புறதுன்னு தெரியலை'. நான் 'ஓ! பாட்டி வீடா? மாமா வீடான்னு கன்பியூசனா?' என்றேன். 'ச்சே! அதெல்லாம் இல்ல ராஜி. சின்னவளை ஸ்கேட்டிங் அனுப்பலாம்னு இருக்கேன். பெரியவன் தான் அதுக்கு ஒத்துக்க மாட்றான். அவன் தெருப் பசங்களோட விளையாடுரதுக்குத் தான் விரும்புறான். அதுக்காக அப்டி விட்ற முடியுமா?' என்றார். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

நான் கோடை விடுமுறையில் என்ன செய்தேன் என்று மனம் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தது.

ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் ஒரு கோரிக்கை இருக்கும். டைப் ரைட்டிங், தையல், கூடை முடைதல் (அப்போவெல்லாம் கம்ப்யூட்டர் என்ற ஒன்று பற்றித் தெரியாது), ஹிந்தி கற்றல் இப்படி நிறைய. ஆனால் எல்லாமும் கோரிக்கையாக மட்டுமே நின்று போயிருக்கும். அதைச் செயலாக்க பொருளாதாரம் வாய்த்ததில்லை.

அதனால் கால்வாசிப் பொழுது நீதிக்கதைகளுடன் லைப்ரேரியில் தான் கழிந்திருக்கும். மீதிப் பொழுதில் தார் சுற்ற வேண்டும். எனக்கு என்றில்லை, பொதுவாகவே எஞ்சொட்டு நண்பர்களுக்கு இப்படித் தான் விடுமுறை கழியும்.

எங்கள் தறிகாரக் குடும்பங்களில் தார் சுற்றுவது என்பது இல்லத்தரசிகள், நடக்க முடியாமல் போன பாட்டி தாத்தாக்கள், பள்ளி படிக்க வாய்ப்பில்லாத பிள்ளைகள், கோடை விடுமுறையிலிருக்கும் குழந்தைகள் இவர்களுக்கு நேர்ந்து விடப்பட்ட வேலை.

ஒரு கழியில் 12 சட்டமோ என்னமோ இருக்கும். கழிக்கு இவ்வளவு ரூபாய் என்று கணக்கு(4 ரூபாயோ 5 ரூபாயோ துல்லியமாக நினைவிலில்லை). அந்த வருமானத்தை வைத்துத் தான் அடுத்த வருடத்திற்கு நோட்டுகள் வாங்க வேண்டும்.

அப்பொழுது என் அப்பா பட்டுத்தறி நெய்து கொண்டிருந்தார். அதற்குத் தார் சுற்ற வெளியில் தருவதில்லை. அம்மா தான் செய்வார். சம்மர் லீவில் அந்த வேலை எனக்கு. காட்டன் நூலை விட பட்டு நூலைத் தாராக சுற்றுவதில் கஷ்டங்ள் இருக்கும். காட்டன் என்றால் அதிகம் விரலை அறுக்காது. பட்டு பயங்கரமா அறுக்கும். அறுத்து ரத்தம் வருவதற்குள் நாம் சுதாகரிக்க வேண்டும். இல்லையென்றால் புடவையில் கறை பட்டுவிடும். இப்படிப் பல சாமர்த்தியங்கள் வேண்டும்.

எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. முதன்முதலாக விரலில் ரத்தமும் கண்ணில் கண்ணீருமாய் அப்பாவிடம் போய் நின்ற நாள். எனக்கு ஒன்றென்றால் அப்பாவால் தாங்கவே முடியாது. 'நீ இதெல்லாம் பண்ணாதே! அம்மாவுக்கு முடியாட்டி நானே சுத்திக்கறேன். போ போயி அந்தக் கதையைப் படிச்சு அப்பாவுக்குச் சொல்லு' என்பார். முழு லீவுக்காலமும் என் அப்பாவுடனேயே ஒட்டிக் கொண்டே திரிவேன்.

அப்புறம் கொஞ்சம் விவரம், வீட்டு நிலை தெரிய ஆரம்பிக்கவும், அவருக்குத் துணையாக 'நாடாப் போடப்' போய் விடுவேன். நாடா என்பது தறியில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போகும் ஒரு குழல் போன்ற அமைப்பு. அதை வலது புறம் விட்டு இடது புறம் எடுக்க வேண்டும். அதே போல திரும்பவும் இடது-வலது என்று தொடரும். நாடாப் போட யாராவது இருந்தால் புடவை கொஞ்சம் வேகமாக வளரும். அதுவும் போக அப்பா பக்கத்திலேயே ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கொள்ளலாம். அவருடன் பேசிக் கொண்டே இருக்கலாம். அதற்காகவே நான் அதை விரும்புவேன்.

ஒரு பக்கம் ரேடியோ, ஒரு பக்கம் அப்பா. அவ்வளவு இனிமையாக இப்பொழுது கூட வாழ்க்கை இருக்கவில்லை. அப்பா ரொம்பவும் ஜாலியான ஆள். அவருக்கும் எனக்குமாய் பிடித்த பாட்டு எத்தனையிருக்கும்! அவர் ஒரு வரி, நான் ஒரு வரி என்று ஓராயிரம் பாட்டுக்களாவது பாடியிருப்போம். அவ்வளவு சந்தோசத்திலும் பக்கத்துத் தெருக்காரி தையல் கிளாஸ் போவதைப் பார்க்கும் போது, மனதில் சின்னதாய் ஒரு ஏக்கம் எழும்பி மங்கும். அன்னைக்கு மட்டும் பாட்டு சத்தம் வரவே செய்யாது.

ஒன்பதாம் வகுப்பு விடுமுறை என்று நினைக்கிறேன். அப்பொழுது ஒரு சம்பவம். தறியில் விசைக்கம்பு என்று ஒன்று இருக்கும். ஒரு தட்டையான கம்பில் ரெண்டு புறமும் முள் மாதிரி கூர்மையான குண்டூசிகள் குத்தியிருக்கும். அது தான் புடவையின் stiffnessக்கு உதவும். ஒவ்வொரு முழம் புடவை நெய்து விட்டும் அதை எடுத்துக் கொஞ்சம் தள்ளிக் குத்த வேண்டும். அப்படி ஒருமுறை அப்பா செய்யும் போது புடவைக்குப் பதில் தவறிப் போய் அவர் விரலில் குத்தி விட்டது. சலசலவென்று ரத்தம். வெள்ளைப்பட்டில் சிவப்பு பார்டர் புடவை அப்போ தறியில் கிடந்தது. நல்லவேளையாக புடவையில் தெறிக்கும் முன்னர் அப்பா கையை எடுத்து விட்டார். எனக்கு இரத்தத்தைப் பார்த்துப் பதறிப் போய் விட்டது. அப்பா கூலாகச் சொன்னார்: 'பார்த்தியா, அப்பா உன்னை ரத்தம் சிந்திப் படிக்க வைக்குறேன்'. அவர் சொன்னது என்னமோ விளையாட்டுப் பேசி என்னை சிரிக்க வைக்க வேண்டுமென்று தான். ஆனால் இது வரையிலான என் மிக நீண்ட அழுகைகளுள் அதுவும் ஒன்று. அந்தக் கலர் புடவையை எங்கு பார்த்தாலும் இன்னமும் எனக்கு இந்தச் சம்பவம் தான் ஞாபகம் வரும். அதன் பின் எனக்குக் கோடைக் கோரிக்கைகள் இருந்ததேயில்லை. "போன லீவுக்கே ஆசைப்பட்டல்ல! இந்த லீவுக்குப் போறியாடா? அப்பா, சங்கத்துல காசு கேட்டுப் பார்க்கட்டுமா?" என்பார். "இல்லப்பா. நான் அடுத்த கிளாசுக்கு வீட்ல இருந்து படிக்கப் போறேன். நேரமில்ல" என்று மறுத்து விடுவேன்.

காலையில் லைப்ரேரி, பகல் முழுக்கத் தறி, மாலையில் பாட்டி வீடு என்று இருந்த பொழுதுகள் கொடுத்த மகிழ்ச்சி கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. எது எதற்கோ ஏங்கியது உண்டு. ஆனால் ஒருமுறை கூட அன்புக்காக ஏங்கியதில்லை. அம்மா, அப்பா அருகில் இருக்க முடியவில்லை என்று ஏங்கியதேயில்லை.

நம் அப்பா-அம்மாக்களுக்கும் குழந்தைக்கு அந்த நேரத்தில் எது அவசியம் என்று புரிந்திருந்தது. குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்கத் தெரிந்திருந்தது. இந்தக் காலத்து இளம் பெற்றோர்களிடம் இது மிஸ்ஸிங். அவர்கள் குழந்தைகளை சூப்பர் மேனாக ஆக்கப் பார்க்கிறார்கள், அவர்கள் குழந்தைத்தனங்களை எல்லாம் கொன்று விட்டு!

No comments:

Post a Comment