Saturday, 8 March 2014

​உன்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று...!

                                 

​இன்று 101-ஆவது சர்வதேச மகளிர் தினமாம். அம்மாவிற்கு வாழ்த்துச் சொல்வோம் என்று காலையில் அழைத்தேன்.

'பிறந்த நாள் வாழ்த்து, பண்டிகை வாழ்த்து என்றால் பதிலுக்குச் சொல்லத் தெரியும். இதற்கு என்ன டி சொல்லணும்?' என்றாள்.

'சேம் டூ யூ'ன்னு சொல்லலாம் என்றேன்.

'சரி. இன்னைக்கு என்ன பண்ணணும்?' என்றாள்.

எத்தனை பெரிய கேள்வியை, எவ்வளவு சாதாரணமாகக் கேட்டு விட்டாள்?!

சரி. இன்னைக்கு என்ன தான் பண்ணணும்?

அநேகமாக எல்லா ஆபிஸிலும் lady employeeகளுக்கு பூ, சாக்லெட், உடல்நலம் பற்றிய உரையாடல் session நடந்திருக்கும்.

மால்களில் அழகு சாதனப் பொருட்களுக்கு ஏதேனும் சிறப்புச் சலுகைகள் தந்திருப்பார்கள்.

வார/மாதப் பத்திரிக்கைகள் 2,3 பக்கங்களுக்குப் பரபரப்பாகப் பெண்ணியம் பேசியிருக்கும். கூடவே ஆங்காங்கே குழந்தை வளர்ப்பும் வீட்டுப் பராமரிப்பும்.

இதெல்லாம் போதாதா என்கிறீர்களா? இன்றைக்குப் போதும். ஆனால் நாளையும் அவர்களைக் கொண்டாடும் மனம் இருக்கிறதா நம்மிடையே?

நாம் நிஜமாகவே பெண்மையைக் கொண்டாடுகிறோமா? அவளுக்குரிய இடத்தை மன நிறைவோடு அவளுக்குத் தந்திருக்கிறோமா?

ஆணுக்குப் பெண் சமம் என்பது ஆண் செய்யும் அனைத்தையும் பெண்களால் செய்ய முடியவேண்டும் என்பதல்ல. ஆணைப் போல பெண்ணையும் அறிவு ரீதியில் அணுக வேண்டும் என்பதே! அந்த இடத்திற்கு அருகிலாவது நாம் நெருங்கியிருக்கிறோமா?

இந்திய அளவில், 2001 ஆம் ஆண்டு 53.67%ஆக இருந்த பெண்களின் படிப்பறிவு விகிதம், 2010 ஆம் ஆண்டு 65.46%ஆக இருக்கிறது. 10ஆண்டுகளில் ஆண்களை விடப் பெண்களின் படிப்பறிவு விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இன்று அநேகமாக எல்லாத்துறைகளிலும் பெண்கள் புலமை பெற்று விளங்குகிறார்கள். கிராமங்களிலும் முன்பிருந்ததை விடக் கணிசமான அளவு பெண்கல்வி அதிகரித்து வருகிறது. ஆனால் இவையெல்லாம் வெகு சாதாரணமாக, இயல்பாக நடந்திருக்கிறதா? இன்னமும் போராட்டத்திற்குப் பின் தான் கிடைக்கிறதா?

நகரங்களில் பரவாயில்லை. ஆனால் வளர்நிலை நகரங்களிலும் கிராமங்களிலும் இன்னும் போராட்டமாகத் தான் இருக்கிறது - பெண்களுக்கு இல்லாவிட்டாலும், பெண்களைப் பெற்றவர்களுக்கு! அவ்விடங்களில் பெரும்பாலும் பெண்களைப் படிக்கப் போட்ட பெற்றோரிடம் சமுதாயம் எழுப்பும் கேள்வி 'பொண்ணப் படிக்கப் போட்டுட்ட? அதுக்குத் தக்கன மாப்ள பார்க்கணுமே? உன்னால முடியுமா?" என்பது தான். இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், ஒரு தயக்கத்திலேயோ, ஒரு குருட்டு நம்பிக்கையிலேயோ, பல பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யதார்த்தம். அந்தத் தைரியம் இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் தறிகாரியாக, தீப்பட்டித் தொழிலாளியாக, தினக்கூலியாகவே வாழ்ந்து முடிக்க வேண்டியிருக்கிறது. 

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், இப்பொழுதும் பெண்களின் படிப்பு என்பது அப்பா கையிலோ, மாமா கையிலோ தான் இருக்கிறது. நல்ல அப்பா வாய்க்கப் பெற்ற குழந்தைகள் படித்த தலைமுறையாகவும், அது கிடைக்கப் பெறாத குழந்தைகள் பாவப்பட்ட தலைமுறையாகவும், நம் முன்னே கிடக்கும் போது, எப்படிச் சொல்வது பெண்ணுக்கு உரித்தான இடத்தை நாம் தருகிறோம் என்று?!

பெண்கள் பாதுகாப்பின்மை என்பதை விடப் பெரிய அதிர்ச்சி தருவது அதற்கு ஆண்கள் தரும் காரணங்களும் தீர்வுகளும். பொதுவாக தப்பிழைத்தவனுக்குத் தண்டனையும் அறிவுரையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் வழங்குவது தான் வழக்கம். ஆனால் பெண்கள் பிரச்சனை என்றால் மட்டும் பாதிக்கப்பட்டவளுக்கே தண்டனையும், அறிவுரையும் வந்து சேர்கிறது. அவளுக்கு எது நேர்ந்தாலும் அதற்குக் காரணம் அவள் செயல்பாடுகள் தாம் என்று கண்ணை மூடிக் கொண்டு தீர்ப்பு எழுதிவிடும் நமக்கு அது குறித்த எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை. அதிகாரப்பூர்வமாகப் பெண்களின் பணி நேரத்தையும் அவள் வெளியே நடமாடும் நேரத்தையும் முறைப்படுத்துதல் என்ற போர்வைக்குள் சிறைப்படுத்தவே செய்யும் மனமிருக்கிறதே ஒழிய, அதன் பின்னான காரணங்களோ, ஆணின் வக்கிரங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற விவாதங்களோ கூட எழவில்லை என்ற நிலையில் எப்படிச் சொல்வது பெண்ணுக்குரிய இடத்தை நாம் தருகிறோம் என்று?!

பெண்கள் ஸ்பெஷல் என்று என்ன நடந்தாலும் அது அழகு, குடும்பம், பராமரிப்பு, உடல்நலம் இவற்றை மட்டுமே தொடர்புபடுத்தியிருப்பது ஏன்? (பெரும்பாலான)பெண்களுக்கான பத்திரிக்கைகள் கூட இவற்றை மட்டுமே பேசுகின்றன. அரசியல் பேசினால் என்ன? பொருளாதாரம் பேசினால் என்ன? ஆளுமை குறித்துப் பேசினால் என்ன? சுயமரியாதையைச் சொன்னால் என்ன? ஏன், பெண்களுக்காக இயங்கும் எதுவுமே உணர்வுத் தளத்தில் மட்டுமே இயங்குகிறது? அறிவுத் தளத்தில் இயங்க வேண்டிய அவசியம் இன்னுமா புரியவில்லை? அவளை ஒரு குடும்பத்திற்கானவளாகப் பார்ப்பது நமக்கு எளிதாகயிருக்கிறது. ஏன் அவளை ஒரு தேசத்திற்கானவளாகப் பார்க்கவே முடியவில்லை?! இதெல்லாம் இப்படியிருக்கும் போது, எப்படிச் சொல்வது பெண்களைக் கொண்டாடுகிறோம் என்று?!

போன வாரம் வரைக்கும் பெண்சிசுக் கொலை பற்றி மிகப் பெரிய தாக்கம் மனதில் இருந்ததில்லை. (இன்னமும் தர்மபுரி பகுதிகளில் இருக்கிறது என்று கேள்விப்பட்டாலும் கூட) அது outdated ஆகி விட்டது என்று தான் நினைத்திருந்தேன். பெண் குழந்தை பிறந்தாலும் அதை யாரும் வேறாக நினைப்பதில்லை என்று நான் நம்பிக் கொண்டிருந்த அத்தனையும் போன வாரம் உடைந்து நொருங்கியது.

உங்களுக்குத் தெரிந்திருக்கும், என் ஊர் நகரமுமல்ல, கிராமமுமல்ல, வளர்நிலை நகரம் என்று கூடச் சொல்லலாம். எல்லா வசதிகளும் ஊருக்குள்ளேயே இருக்கும். அப்படியான ஒரு இடம் தான். வழக்கம் போல, எங்கள் வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் சொத்துத் தகராறு உண்டு. அடிக்கொரு முறை வாய்ச்சண்டையாகப் போய்விடுவதும் நடக்கும். போன வாரச் சண்டையில் எதிராளி (அப்படித் தானே சொல்ல வேண்டும்?) - என் சித்தப்பா முறை தான் - சொன்னார், என் அப்பா ஆண்மையற்றவராம். காரணம் என்ன தெரியுமா? அவருக்கு இரண்டுமே பெண் குழந்தைகளாம். இந்த வாதம் அறிவியல் ரீதியில் லாஜிக் அற்றது என்ற போதும் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அதிர்ச்சிக்குக் காரணம் அவர் அநாகரீகமான வார்த்தைகளை என் அப்பாவிடம் வீசியதனால் அல்ல. அந்த மாதிரியான வார்த்தைகளைப் பேசுவதே பிறவிப்பலனாகக் கொண்டு பிறந்திருக்கும் சிலரைக் கண்டு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பெண் குழந்தைகளை இகழ்ச்சிக்குக் குறியீடாகக் கூட ஒருவரால் காட்ட முடியுமா என்பது தான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்! நான் வளர்ந்த சூழ்நிலை இதை நம்ப மறுக்கச் சொல்கிறது. 

எங்கள் மகிழ்ச்சி ஒன்றே தன் மகிழ்ச்சியென, எனக்கு எல்லாம் என் மகள் தான் -என்றிருக்கும் அப்பா என் சங்கர். சொல்லாத சொற்களின் அர்த்ததையும் புரிந்து கொண்டு தோள் கொடுத்து நிற்பவர் என் சங்கர். 

'பூரணமான வசதியிருந்தும் பெண்பிள்ளை இல்லாத வீடு ஒரு வீடா, வந்துட்டுப் போடா' என்று கெஞ்சிக் கெஞ்சி, நான் போகும் நேரமெல்லாம் என்னைத் தேவதை போல உணரச் செய்வார் என் சித்தப்பா.

'மலர் போலத் தூங்குவாள் என் மகள்' என்று என் உறக்கத்தில் கூட அவர் கண்பார்வைக்குள் என்னைக் காத்து நிற்கும் அன்பு நிறைந்த அப்பா எனக்குண்டு.

இப்படியெல்லாம் வளர்ந்த எனக்கு பெண் பிள்ளைகள் மேலிருக்கும் அந்தப் பங்காளியின் வார்த்தைகள் தூக்கி வாரிப் போட்டது. இத்தனைக்கும் அவருக்கும் ஒரு மகள் உண்டு. இரண்டாவது மகன். அந்தக் குழந்தையை நினைத்தால் எனக்குப் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. பெண் மட்டும் பெற்றவன் ஆண்மையற்றவன் என்று நம்பிக் கொண்டிருக்கும் அவர் வீட்டில் தன் தம்பிக்குக் கிடைக்கும் உரிமைகள் அவளுக்கு எப்படிக் கிடைக்கும்? வீட்டில் அடைத்து வைத்தால் மட்டும் தான் அடக்குமுறையா? இதுவும் பெண் அடக்குமுறை தானே?! பின் எப்படி சொல்வது பெண்கள் நாட்டின் கண்கள் என்று?!

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் வளர்ச்சிகள் இல்லாமலில்லை. ஆண்களைச் சாராமல் நிமிர்ந்து நிற்கும் வீரம் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. ஆணுக்கு பெண் அடிமையில்லை என்பது பெண்கள் மனதில் கனன்று கொண்டு தானிருக்கிறது. அவை தொடரட்டும். பெண்கள் வேண்டுவது 'ஐயோ பாவம்' என்ற சலுகைகள் அல்ல. நாங்கள் வேண்டுவதெல்லாம் வாய்ப்புகள். எங்களை நிரூபித்துக் கொள்ளும் வாய்ப்புகள். அவற்றை அடைய வழி செய்யும் சூழ்நிலைகள்.

கண்ணாடிப் பெட்டிக்குள் பூச்செடிகள் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அவற்றிற்குச் சுதந்திரம் கிடையாது. நாங்கள் வேண்டுவது கண்ணாடிப் பெட்டிகள் அல்ல. நிலைத்து நிற்கக் கொஞ்சம் நிலமும், ஊன்றி விட ஒரு கையும். புயலையும் மழையையும் சமாளிக்கும் திறன் எங்களுக்கு உண்டு. நம்புங்கள் இனியாவது.

மகளிர் தின வாழ்த்துகள்.

No comments:

Post a Comment