இந்தியாவின் இளைஞர் கூட்டமும் இளைத்ததல்ல எந்த நாட்டுக்கும்.....
Wednesday 28 January 2015
Sunday 4 January 2015
சக்கர வியூகம் - புத்தக விமர்சனம்
சிறு வயது
முதல் எனக்கு ராஜா-ராணி கதைகள், ஏஞ்சல் கதைகள், ஆடு,
மாடு, குரங்கெல்லாம் பேசும் பஞ்சதந்திரக் கதைகள்
மீது ஈர்ப்பு உண்டு. அறிவனைத்தையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு,
கற்பனைக்கு எல்லைக் கோடு தீட்டாமல், மனதை இலகுவாக
உணர வைத்து, நம் குழந்தைமையைச் சில கணங்கள் கண்முன் நிறுத்தி
விடுவதால் எனக்கு மேற்சொன்னவைகள் மீது அன்பு கலந்த மரியாதை உண்டு.
கிட்டத்தட்ட
மகாபாரதக் கதைகள் இப்படியானவை தான்.
ஒரு கதையைத் தொட்டு ஒரு கதை என் நீளும் அதன் அனுமார் வாலில் எத்தனை எத்தனை
பாத்திரங்கள்! ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை! அவைகளுக்குள் இருக்கும் உறவுமுறை குறித்து இன்னமும் எனக்கு ஒரு தெளிவு இல்லை.
ஆனால் ராஜா-ராணி கதைகளைப் போல், சிங்கம்-நரி கதைகளைப் போல் மகாபாரதக் கதைகளை மனதுக்கு
நெருக்கமாக உணர்ந்ததில்லை. கதைகளின் கருவடர்த்தி அதற்குக் காரணமாக
இருக்கலாம். ‘எது உண்மை’ என்று புரிந்து
கொள்ள முடியாது, கொட்டிக் கிடக்கும் கிளைக்கதைகள் காரணமாக இருக்கலாம்.
பழைமையின் சாயம் ஒப்பீட்டளவில் அதிகமாக ஏறியிருக்கும் தன்மை என்னை அவைகளிலிருந்து
தூர நிறுத்தியிருக்கலாம். ‘மகாபாரதம்’ என்ற
பெயரில் வழவழவென்று டப்பிங் பேசும் வார இறுதி நாடகங்கள் என்னை பயமுறுத்தியிருக்கலாம்.
பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’
படித்த பின்பு மகாபாரத்தின் மீதான மனப்போக்கு கொஞ்சம் மாறியது உண்மை.
பாஞ்சாலி சபதம் படித்து முடித்த ஏழெட்டு நாட்களில் நண்பர் ஐயப்பனிடமிருந்து
‘சக்கர வியூகம்’ குறித்த தகவல் வந்தது.
‘வாவ்’ என்று சொல்ல நினைக்கும் முன்னே,
‘இது மகாபாரதக் கதைகள் சிலவற்றைப் புனைவாக வடித்து எழுதிய தொகுப்பு’
என்று கேட்ட மாத்திரத்தில் அது ‘வவ்’ எனச் சுருங்கியது. ‘வசமாக மாட்டிக் கொண்டோம்’
என நினைத்துக் கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஐயப்பன் நம் மீது கருணை மழை பொழிந்திருக்கிறார். அத்தனையும் அருமையான கதைகள்.
‘மகாபாரதப் புனைவு’ என்ற பெரிய்ய்ய்ய பெயரில் இது பயமுறுத்தும்
போதும், இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் மிகவும் எளிமையானவை.
‘எளிமை வசீகரமானது’ என்று மாலன் சொல்வார்.
அவருக்குக் கோடி வணக்கங்கள். இந்தக் கதைகளும் வசீகரிக்கின்றன.
நமக்குத் தெரிந்த லேசான கதைகள், நமக்கு அதிகம்
பரிட்சயமான கதை மாந்தர்கள் – இவை இந்தத் தொகுப்பின் பலம்.
அர்ஜூனனுக்கும், துரியோதனனுக்கும் உள்ள பகை,
ராமனின் கால் தூசு பட்டு அகலிகை சாப விமோசனம் பெறுவது, ஏகலைவன் தன் கட்டை விரலைக் குருவுக்குக் காணிக்கையாக்குவது, குசேலன்-கண்ணன் நட்பு, அபிமன்யூ
போரில் வீர மரணம் அடைவது………இந்தக் கதைகள் நமக்குப் பரிட்சயமானவை.
‘நமக்குத் தெரிந்ததையே திரும்பவும் எழுத ஐயப்பன் எதற்கு?’ என்று கேட்டால் அங்கு தான் அவரது ஆற்றல் முழுக்க வெளிப்படுகிறது.
சம்பவங்களைக்
காட்சிகளாக கண்முன் நிறுத்துவது அசாத்திய சாதனை. அத்தகைய சாதனையைச் சத்தமில்லாமல் செய்திருக்கிறார்
நூலாசிரியர் ஐயப்பன். ஒவ்வொரு கதையிலும் கதாபாத்திரங்களுக்குள்
நடக்கும் உரையாடல் அத்தனை அற்புதம்! திரைப்படக் காட்சிகள் போல
விறுவிறுவென்று கதை பின்னப்பட்டிருப்பது அதி அற்புதம்!
ஏகலைவன்
துரோணருக்குத் தன் கட்டை விரலைக் காணிக்கையாக்கியதன் பின், என்ன நடந்திருக்கும் என்று
நாம் யோசித்ததுண்டா? குசேலன்-கண்ணன் குழந்தைப்
பருவ நட்பு எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்ததுண்டா? ராமனின் கால் தூசு பட்டு அகலிகை உயிர்த்தெழுந்த பின், அவள் என்ன உணர்ந்திருப்பாள் என்று நினைத்துப் பார்த்திருப்போமா? இவையெல்லாம் தான் இந்தக் கதைகள். நன்கு தெரிந்த ஒன்றிலிருந்து
அதிகம் நாம் கவனித்திராத பகுதிகள் வழி கதையைக் கொண்டு சென்றிருப்பது ரசிக்க வைக்கிறது.
இந்தப் பாணி வாசகனுக்கும், கதைகளுக்கும் இடையில்
ஒரு இலகுத்தன்மை வரச் செய்கின்றன.
‘சக்கர வியூகம்’ கதையில் அபிமன்யூ போரிடும் காட்சிகள்
வெகு சுவாரஸ்யமாக இருந்தன. சக்கர வியூகம், மகர வியூகம் பற்றியெல்லாம் படிக்கும் போது ‘அட!’
என்று ஆச்சர்யமாக இருந்தது. அந்தக் கதைக்காக ஐயப்பனுக்கு
ஸ்பெஷல் வாழ்த்துகள்.
மொத்தம் 7 கதைகள். அதில் முதல் ஆறும் மகாபாரதக் கதைகளின் புனைவு என்றும் கடைசிக் கதையான
‘என் பெயர் பெண்’ முழுக்கப் புனைவு என்றும் நூலாசிரியர்
சொல்கிறார். ஆனால் எனக்கு அது புனைவாகப் படவில்லை. கணவன் என்ற பெயருக்குள் தன் இன்பங்களைத் தொலைத்துக் கொண்டு, ஆசைகளைத் தியாகம் என்ற பெயருக்குள் எரித்துக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டவர்கள்
ஓரிடத்தில் சந்திக்கும் போது இப்படித் தான் இருக்க முடியும்! அது எப்படிப் புனைவாகும்! இந்த ‘என் பெயர் பெண்’ கதையைப் படிக்கும் போது புதுமைப்பித்தனின்
‘சாப விமோசனம்’ கதை நினைவுக்கு வந்தது.
ஐயப்பன் சற்றே இந்தக் கதையை நீட்டியிருப்பின் ‘சாப விமோசன’த் தரத்தில் வந்திருக்கும். எனினும் சிறப்பே.
ஆக மொத்தத்தில்
ரொம்பவும் சுவாரஸ்யமான சிறுகதைத் தொகுப்பு.
சற்றே வித்தியாசமான தொகுப்பும் கூட. ‘புரியுமா,
புரியாதா, பிடிக்குமா, பிடிக்காதா’
போன்ற எந்தக் கேள்விகளும் இல்லாமல் நன்றாக ரசிக்க வைக்கும். இது போல் ஐயப்பன் உற்சாகமாக மேலும் பல சிறுகதைத் தொகுப்புகள் எழுதுவதற்கு என்
இதயம் நிறைந்த வாழ்த்துகள்.
-
இராஜிசங்கர்
சக்கர வியூகம், ஆசிரியர்:
ஐயப்பன் கிருஷ்ணன்,
அகநாழிகை பதிப்பகம்,
Rs. 80
Sunday 6 July 2014
சொல், ஒரு சொல்...(7)
சின்னப் பசங்களோட உலகம் அழகான ஃபேன்டஸி நிறைந்ததாக இருக்கும். அவர்களுடன் பேசிப் பார்த்தால் ஆச்சர்யமான பல செய்கைகள் அவர்கள் பழக்கமாக இருக்கும். அவர்களின் கற்பனை நீளும் தூரத்தைக் கடக்கப் பெரியவர்களால் முடியாது. அதில் சின்னச் சின்ன விளையாட்டுக்களும் சிறிதும் பெரிதுமான மூட நம்பிக்கைகளும் ஒருபுறம் இருக்கும். அவற்றில் ஒன்று ரெட்டை வால் குருவியை ஒற்றைப்படை எண்ணிக்கையில் பார்க்கக் கூடாது என்பது. நான் படிக்கும் காலத்தில் ரொம்பவும் சீரியஸாக இதை நம்புவார்கள். ரெட்டைவால் குருவியை ஒற்றையாய்ப் பார்த்த அன்று ஏதாவது டெஸ்ட் இருந்தால் பயந்து சாகும் நண்பர்கள் எனக்குண்டு. மற்றொன்றைக் காணும்வரை அவர்கள் மனமெல்லாம் அதில் தானிருக்கும்.
அது போல 'ஐயோ', 'ஐய்யய்யோ' என்றெல்லாம் சொன்னால் கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் என்றொரு சம்பிரதாயம் சிறுவர்களையும் தாண்டி பெரியவர்களுக்குக் கூட இருப்பதுண்டு. 'ஐயோ' என்பது எமனின் மனைவி பெயராம். யாராவது 'ஐயோ' என்றால் 'தன் மனைவியை யார் அழைக்கிறார்கள்' என்று பார்க்க எமன் வந்து விடுவானாம். இதை பள்ளிப் பருவத்தில் என் தோழி சொல்லிய மாலை நேரம் இன்னமும் மனதுக்குள் இருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்களில் எனக்குப் பொதுவாக நம்பிக்கை கிடையாது. அதனால் அன்றைக்கு பள்ளி முடிந்ததும் சைக்கிள் ஸ்டாண்டில் உட்கார்ந்து கொண்டு அது பற்றி பயங்கர ஆராய்ச்சி நடந்தது. 50 முறை 'ஐயோ' சொல்லி, 'நாளைக்குள் நான் இறந்து விட்டால் நீ ஜெயிச்ச! இல்லைன்னா நான் ஜெயிச்சேன்' என்று என் தோழியிடம் சவால் விட்டேன். 'வேணாம்டி வேணாம்டி ஐயோ சொல்லாதடி' என்று அவள் அப்படி அழுதாள். ஆசிரியரிடம் அடி வாங்கும் போது கூட 'போயா' என்று அசால்ட்டாக நிற்பவள் அழுததும் எனக்குமே உள்ளூர உதறல் தான். ஆனாலும் பெரிதாகச் சட்டம் பேசியாயிற்றே! 'அதெல்லாம் சும்மாடி ஒன்னும் ஆகாது' என்று அவளைச் சமாதானப்படுத்தி, 50 முறை 'ஐயோ' சொல்லி முடித்து வீட்டுக்குக் கிளம்பியாச்சு. அன்றைக்கு இரவெல்லாம் என் அப்பாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். ஒரே பயம். நான் இறந்து விட்டால் அம்மா எப்படியெல்லாம் அழுவாள் என்று மனதிற்குள் ஓடுகிறது. 'அம்மாவுக்காவது பரவாயில்ல, பாப்பா இருக்கா. அப்பா தான் பாவம்' என்று அவர் மேல் பரிதாபம் வேறு. இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
ஐயோ என்பதை எதிர்மறை வார்த்தையாகத் தான் நாம் இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது ஆச்சர்யத்தைக் குறிக்கும் வார்த்தையும் கூட! புதிய தலைமுறையில் மாலன் தனது சீனப் பயணக் கட்டுரைக்கு 'ஐயோ' என்று தலைப்பிட்டிருந்தார். ஆச்சர்யமாகவும் புதிராகவும் இருந்தது. கம்பரின் 'மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ இவன் வடிவு' என்பதை மேற்கோள் காட்டி அவர் எழுதுகிறார்: "ஐயோ! அது அவலச் சொல் அல்ல. அச்சத்தில் உதிர்க்கின்ற சொல் அல்ல. ஆச்சர்யத்தை அறிவிக்கின்ற, வியப்பை வெளிப்படுத்தும் சொல்லும் அது தான். அது ஒரு பழந்தமிழ்ச் சொல். கம்பனின் காலம் 12-ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். அப்படியானால் அது சுமாராக 1000 ஆண்டுகளாகவேனும் தமிழில் பயன்பாட்டில் இருக்க வேண்டும். அந்தத் தமிழ்ச் சொல் சீன மொழியிலும் உள்ளது. இன்றும் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது அதே அர்த்தத்தில். அதாவது அச்சத்தில் பதற்றத்தில் தானாக வந்து விழும் சொல்லாக உதிர்கிறது, ஐயோ!"
ஒரு வார்த்தைக்குள் என்னவெல்லாம் இருக்கிறது! இதைப் படித்த பிறகு தமிழ் இலக்கியத்தில் வேறு இடங்களில் எப்படி இந்தச் சொல் பயன்பட்டிருக்கிறது என்று பார்க்கும் ஆவலால் கொஞ்சம் தேடிப் பார்த்தேன்.
கம்பரைப் போலவே பாணர் ஆழ்வாரும் அழகை வர்ணிக்கும் போது 'ஐயோ'வைப் பயன்படுத்தியிருக்கிறார். "அரவின் அணை மிசை மேய மாயனார் செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!" என்றும் "நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே!" என்றும் சொல்கிறார்.
பாணருக்கு இளைத்தவரா திருமங்கை ஆழ்வார்? அச்சோ பதிகம் என்றே ஒன்றை எழுதி விட்டார். 10 பாடல்கள் வருகின்றன. தன்னைப் பெண்ணாகப் பாவித்து நாராயணன் அழகில் மயங்கிப் பாடும் பாடல்கள் அத்தனையும். ஒவ்வொரு பாடலும் 'அச்சோ ஓர் அழகிய ஆ!' என்று முடிகிறது.
வைணவர்கள் மட்டும் தான் ஆச்சர்யப்படுவார்களா? சைவர்கள் கை என்ன பூப்பறிக்காவா போகும்? விடுவாரா மாணிக்கவாசகர்? அதே மாதிரி அச்சோ பதிகம். அதே மாதிரி 10 பாடல்கள். நாராயணின் அழகில் ஆழ்வார் சொக்குகிறார். சிவன் அருளில் நாயன்மார் சொக்குகிறார். 'எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!' படிக்க இலகுவாகவும் பக்தி ரசம் சொட்டும் பாடல்களுமாக இருப்பது 'எப்டித்தான்யா இப்டி எழுதினீங்க? அச்சோவே!' என்று கத்தணும் போல இருக்கிறது.
பெரியாழ்வார் திருமொழியில் தாலப் பருவம், அம்புலிப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், தளர்நடைப் பருவம் என்று ஒவ்வொன்றாகச் சொல்லும் போது அச்சோப் பருவம் என்றும் ஒன்று வருகிறது. தாய் தனது குழந்தையை வாரி அணைத்துக் கொள்ள அழைக்கும் பருவம் தான் அச்சோப் பருவமாம். அதனால் அச்சோ என்பதை hug எனக் கொள்ளலாம்.
இவ்வளவு நேரம் பேசியது மேட்டர் இல்லை. இதிலிருந்து ஒரு புது வார்த்தை நான் கற்றுக் கொண்டேன். அது "பங்கி"
பங்கி என்றால் ஆண் தலைமுடியாம்.
பெரியாழ்ஸ் சொல்கிறார்:
"செங்கமலப் பூவிற் தேன் உண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ"
பங்கி..நல்லாருக்குல்ல?!
ஆண் தலைமுடிக்கு இன்னொரு பெயர் "சூளி" என்பதாம். ஆண் தலைமுடிக்கு ஒரு பெயர் இருந்தால் பெண் தலைமுடிக்கும் ஒரு பெயர் இருக்கும் தானே! அது "அளகம்". கம்பராமாயணத்தில் "அளகம் தரும் மதியின் பாகம்" என்று ஒரு வரி வரும். எழுத்தாளர் முத்துலிங்கம் கூட ஒரு கட்டுரையில் சூளி-அளகம் பற்றி எழுதியிருப்பார்.
எப்பேற்ப்பட்ட அழகு நம் மொழி! வியக்கிறேன்.
Sunday 6 April 2014
அப்பா! நீ ஜெயிச்சுட்ட!
வாவ்! எங்க காலெஜ்ல Graduation Day சமீபத்தில் நடந்தது போல! தம்பி தங்கைகள் எல்லாம் போட்டோ அப்லோட் பண்ணிருக்காங்க. பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னோட Graduation Day வுக்கு மனசு போகிறது.
2011இல் பட்டம் வாங்கினேன். அப்பா மட்டும் உடன் வந்திருந்தார். என் தங்கை அப்போ பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அம்மாவால் வர முடியவில்லை. ஊரிலிருந்து கிளம்பும் போது அது குறித்துப் பெரிய மன வருத்தம் இருக்கவில்லை. ஆனால் அங்கு என் நண்பர்களெல்லாம் அம்மா அப்பாவுடன் வந்த போது, என் அம்மாவும் வந்திருக்கலாமோ என்று தோணியது.
வரிசையாக நம்பர் பிரகாரம் சீட் போட்டு வைத்திருந்தார்கள். எப்பவும் எனக்கும் என் முந்தைய நம்பர்காரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டேயிருக்கும். கிட்டத்தட்ட 4 வருடங்கள் முழுவதும் லேப், எக்ஸாம், லொட்டு லொசுக்கு அனைத்திலும் ஒரே டீமில் இருந்த போதும் நட்பாய் ஒருகணமும் உணர்த்திடாத ஒருவன். அன்பாய்ப் புன்னகைத்ததில்லை. 'என்ன ரீடிங்?' என்பது தவிர லேப்பில் பெரிதாய் ஒன்றும் பேசியதில்லை. 4 வருட காலேஜ் வாழ்க்கை முழுமையும் எவனோ ஒருவன் என்ற கதியில் போனால் கூட பரவாயில்லை, முறைப்பும் முனைப்புமாய்ப் போன தருணங்களும் இருந்தன.
அதெல்லாம் Graduation Day அன்று போன இடம் தெரியவில்லை. பார்த்த மாத்திரத்தில் 'வாங்க, எப்போ வந்தீங்க' என்று சகஜமாய்ப் புன்னகைக்க முடிந்தது. வேலை, குடும்பம் என்று மேலோட்டமாய்க் கேட்க முடிந்தது. முடிந்து போன பிறந்த நாள்களுக்கும் இனி வரும் வெற்றிகளுக்கும் வாழ்த்துச் சொல்ல முடிந்தது. ஒரே வருடத்தில் பழைய கசப்புகள் எல்லாம் எப்படி மறந்ததோ? முதிர்ச்சி என்பது அவ்வளவு சீக்கிரத்தில் வந்து விடும் ஒன்றா என்ன! காலத்திற்கு எத்தனை கண்கள்? நேற்றுப் பார்த்த மனிதன் மறுநாள் எவ்வளவு வித்தியாசப்பட்டு நிற்கிறான்!
பேர் சொல்லி மேடைக்கு அழைத்தார்கள். போனேன். அவசர கதியில் ஒரு மென்புன்னகை. சர்டிஃபிகேட் அடங்கிய ஃபைல் கையில் பட்ட கணத்தில் உடம்பெல்லாம் ஒரு மெல்லிய நடுக்கம் விஸ்தரித்தது. அதையும் அந்தக் கேமரா படம் பிடித்திருக்குமா? இருக்காது. அறிவியல் சாதனங்களுக்கு மூளை உண்டு. இதயம் கிடையாது. இந்தப் பேப்பருக்காக, இந்த மேடைக்காக, இந்த தருணத்திற்காக எதையெல்லாம் கடந்து ஓடி, அடிபட்டு, மிதிபட்டு, இளைப்பாறி, ஜெயித்து......ஷப்பா......கண்கள
மேடையை விட்டு இறங்கியதும் அப்பாவிடம் ஓடினேன். அடேயப்பா! அப்பா அமர்ந்திருந்த இடம் இவ்வளவு தூரமாகவா இருந்தது? ஒன்றும் பேசவில்லை. அப்பாவின் கையில் ஃபைலைக் கொடுத்தேன். இறுக்கமாய்க் கட்டிக் கொண்டேன். அழுத்தமாய் அவர் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தேன்.
"அப்பா! நீ ஜெயிச்சுட்டப்பா! நீ ஜெயிச்சுட்டப்பா! உன் மகள் இனி இன்ஜினியர்!
எந்த நாயும் "என்னத்த வச்சு படிக்கப் போடுவ?" என்று இனி கேட்காது.
"கடன் கட்ட முடியாட்டி கழுத்தில் துண்டப் போட்டு இழுப்பேன்", என்று சொல்லும் எந்த மேனேஜர் முன்னும் நீ தலை குனிய வேண்டியதில்லை.
"பொம்பளப் புள்ளயப் படிக்கப் போட்ற, ஊடாலயே காதல் கீதல்ன்னு ஓடிட்டா என்ன செய்வ? பார்த்துச் செய்யி", என்று என் கற்பை வார்த்தைகளால் சிதைக்கும் வாய்கள் இனி உன்னைப் பார்த்துத் திறக்க முடியாது.
இன்று முதல் நானொரு இன்ஜினியர். என் பேருக்குப் பின்னால் நீ மட்டும் தனியாளாய் நின்று வாங்கித் தந்த பட்டம். யாராலும் அழிக்க முடியாத ஒரு பட்டம். உன் உழைப்பனைத்தையும் உறிஞ்சி வைத்துக் காப்பாற்றி வைத்திருக்கும் பட்டம்.
இனி உன் தலைமுறை படித்த தலைமுறை.
கூலிக்காரன் மகள் ஒரு இன்ஜினியர்.
இனி என் தலைமுறை முழுக்கவும் மிக சாதாரணமாக இன்ஜினீயர்களும், டாக்டர்களும் இன்ன பிறவுமாக படித்த பட்டாளம் வரப் போகிறது.
உன்னைப் போல, அம்மா போல, இனி யாரும் தன் அம்மாவுக்காக, தம்பிக்காக என்று தன் படிப்பைத் தியாகம் பண்ண வேண்டியதில்லை.
உன்னைப் போல விபரம் தெரிந்த நாளிலிருந்து கடைசி வரைக்கும் ஓயாமல் ஓட வேண்டியதில்லை.
அப்பா! நீ நிச்சயமாய் ஜெயிச்சுட்ட!" - என்று அந்த அரங்கு அதிரக் கத்த வேண்டும் போல இருந்தது.
ஆனால் இதையெல்லாம் வார்த்தைகளில் சொல்லத் தான் வேண்டுமென்று என்ன அவசியம்? இதெல்லாம் புரியாமலா என் தலையில் கை வைத்து ஆசிர்வதித்துச் சொன்னீர்கள் 'சந்தோஷம்டா' என்று..
உள்ளம் கனிந்திருந்த நேரம் அது. ஒவ்வொரு தோழமைகளுடனும் அன்பைப் பகிர்ந்து கொண்டு, 'இனி பார்க்கவே முடியாதுல' என்ற நெருங்கிய நட்புகளின் கேள்விகளைக் கண்ணீரால் தவிர்த்துக் கொண்டு, அடுத்த வாய்ப்பு ஒன்று வரும் என்று பொய்ச் சமாதானம் கூறிக் கொண்டு, காட்டிய கடைசி டாட்டாவும், கிட்டிய கடைசி ஹக்கும்......ம்ஹும். காலத்தால் அழிக்க முடியாதவைகள் என்று சில தருணங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கின்றன.
ஏப்ரல் 1
ஹையா...ஹையா..நாளைக்கு ஏப்ரல் 1...............
போன வருஷம் ஏப்ரல் 1 திங்கட்கிழமை வந்தது.
அன்னைக்கு அப்பா (foster father) படு பிஸியா இருந்தார். சிங்கத்தைக் கவுக்க சரியான சமயம் இது தான்னு ப்ளானைப் போட்டேன்.
சாட்ல மூஞ்ஜியத் தூக்கி வச்சுட்டு...'அப்பா...வீட்ல எனக்கு மாப்ள பார்த்துட்டாங்க. அவருக்குச் சென்னைல வேலையாம்'ன்னேன்.
"ஓ! வாழ்த்துகள்டா. பையனப் பார்த்தியா? பிடிச்சுருக்கா..." - இது அப்பா..
"ம்ஹூம். பார்க்கல இன்னும். எனக்குப் பிடிக்கல. கல்யாணம் வேண்டாம். அப்பா கேக்க மாட்றாரு. சரி போய்த்தொலைங்கன்னு சரின்னு சொல்லிட்டேன்" - அப்டினு கப்ஸா வுட்டேன்.
அப்பா பதறிப் போயி, "என்னடா..ஒருக்கயாவது பார்க்க வேண்டாமா? பேச வேண்டாமா? ஏன் சரின்னு சொன்ன? ஒரெட்டு சென்னை வந்து பார்த்துப் போயிட வேண்டிது தானே? இல்லைன்னா, அப்பா ஆபிஸ்க்கு வரச் சொல்றியா? பார்க்கலாம்" -ன்னார்.
'ம்' - நான்
"என்ன? உம்ம்முன்னு இருக்கே? தேதி கூட ஃபிக்ஸ் பண்ணியாச்சா?" - அப்பா
"ம்ஹும். உங்க கிட்ட பேசிட்டும் பண்ணனும்ன்னாங்க"
"அப்பா ஒரு வாரம் சிங்கப்பூர் போறேனே. என்ன பண்றது?" - அப்பா
"சிங்கப்பூர்ல கல்யாணம் வச்சுக்கலாம்"
"கழுத! இன்னும் குழந்தையாவே இருக்கயே? சரி பையன் பேர் என்ன?" - அப்பா
"உண்டுவளந்தான்" - நான். (இப்பக் கூட எங்கப்பாருக்குச் சந்தேகம் வரல)
"ஊர்?"
"எங்கூர் தான்"
"ம்....நம்பர் இருக்கா?"
"ம்ஹும். மாப்ள போட்டோ அனுப்ச்சுருக்காங்க. பார்க்குறேங்களா?"
"ம்..அனுப்பு...."
அனுப்பினேன். (ஏப்ரல் ஃபூல் ன்னு ஒரு ஜோக்கர் போட்டோ)
"கழுத கழுத உத படப்போற" - அப்பா
"ஹி ஹி ஹீ...ஏப்ரல் ஃபூல் ஃபூல்..ஒண்ணாந்தேதி காப்பித் தூள் தூள்...."
ஆனால் அப்பாவை ஏமாற்றிய ஒரு குழந்தையின் முட்டாள்தனமான சந்தோஷத்தை விட அதிக சந்தோஷம் அன்றிருந்தது. காரணம், என் அப்பாவின் அன்பை, அக்கறையை, எனக்காகப் பதறும் மனதை அதிக நெருக்கத்தில் தரிசித்த முதல் நாள் அது.
அப்பாவை ஒரு படி அதிகம் நேசிக்க ஆரம்பித்த முதல் நாள் எப்படி முட்டாள்கள் தினமாகும்? அன்பு தினமன்றோ அது?
Saturday 29 March 2014
சொல், ஒரு சொல்...(6)
புறநூனூற்றுப் பாடல்களில் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருந்த போது அந்தக் காலத்தைய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. அதில் கவனம் செலுத்திப் படித்தவற்றை இங்கு பதிகிறேன்.
அந்தக் காலத்தில் "ஐயவி புகைத்தல்" என்றொரு வழக்கம் இருந்திருக்கிறது.
ஐயவி என்றால் வெண்சிறுகடுகு. ie White Mustard (படத்தைப் பார்க்க)
கடுகு தாளிக்கும் போது கொஞ்சம் கவனமில்லாம இருந்தோம் என்றால் அதன் நெடி மூக்கைத் துளைத்து இருமலை வரவழைக்கும். வெண் கடுகு வாசமும் அப்படித் தான் இருக்குமென்று நம்புகிறேன். அதை ஏன் புகைய வைக்கிறார்கள்?
1) ஐயவி புகைப்பது என்பது ஒரு மங்கலச் சின்னமாய் இருந்திருக்கிறது. அப்படிச் செய்யும் போது எமன் நெருங்காமல் விலகி விடுவான் என்று ஒரு நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனால் போரில் புண்பட்ட வீரர்/அரசர்களின் வீடு/அரண்மனைகளில் ஐயவிப் புகை போட்டிருக்கிறார்கள்.
வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ?
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?
அந்தக் காலத்தில் "ஐயவி புகைத்தல்" என்றொரு வழக்கம் இருந்திருக்கிறது.
ஐயவி என்றால் வெண்சிறுகடுகு. ie White Mustard (படத்தைப் பார்க்க)
கடுகு தாளிக்கும் போது கொஞ்சம் கவனமில்லாம இருந்தோம் என்றால் அதன் நெடி மூக்கைத் துளைத்து இருமலை வரவழைக்கும். வெண் கடுகு வாசமும் அப்படித் தான் இருக்குமென்று நம்புகிறேன். அதை ஏன் புகைய வைக்கிறார்கள்?
1) ஐயவி புகைப்பது என்பது ஒரு மங்கலச் சின்னமாய் இருந்திருக்கிறது. அப்படிச் செய்யும் போது எமன் நெருங்காமல் விலகி விடுவான் என்று ஒரு நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனால் போரில் புண்பட்ட வீரர்/அரசர்களின் வீடு/அரண்மனைகளில் ஐயவிப் புகை போட்டிருக்கிறார்கள்.
வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ?
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?
- புறநானூறுப் பாடல்: 296
பொருள்:
போர் செய்து விட்டு வந்த வீரர்களின் வீட்டுக் கூரையில் வேப்பமரக் கிளைகளை ஒடித்துச் செருகி வைத்திருக்கிறார்கள். காஞ்சிப்பண் பாடுகிறார்கள். நெய்யில் வெண்கடுகு போட்டு புகை வர வைக்கிறார்கள். எல்லா வீடுகளும் ஆரவரித்துக் கிடக்கின்றன. ஒரு வீட்டில் மட்டும் போருக்குப் போனவர் இன்னும் வரவில்லை. பகையரசனை சினந்து கொல்லாமல் திரும்ப மாட்டேன் என்று போர் புரிந்து கொண்டிருக்கிறாரா? அதனால் தான் அந்தப் பெரியோனின் தேர் இன்னும் வீடு திரும்பாமல் காலம் தாழ்த்துகிறதோ?
இதே போல, புறநூனூற்றின் 281ஆவது பாடலிலும் "ஐயவி சிதறி ஆம்பல் ஊதி" என்றும் வருகிறது.
2) ஐயவி புகைப்பது என்பது எதிரி நாட்டு மன்னனுடன் சமாதானத்திற்கு உடன்படுவதற்கு ஒரு அடையாளமாகவும் இருந்திருக்கிறது - வெள்ளைக் கொடி போல. (இங்கே நான் இன்னொன்னு சொல்லட்டுமா? 'வெள்ளைக் கொடிக்கு வேலை வந்து விட்டது மன்னா!' வெள்ளைக் கொடி பொதுவாக சமாதானத்திற்குச் சொல்கிறோம் இல்லையா! ஆனால் போர்க்களத்திற்குரிய உடையாக, அதாவது சண்டை போடுவதற்கு ஏற்ற உடையாக வெள்ளை உடை தான் இருந்திருக்கிறது. இதை சில புறநானூற்றுப் பாடல்களில் பார்க்கலாம். நம் ஒக்கூர் மாசாத்தியாரின் 'கெடுக சிந்தை கடிது இவள் துணிவே' பாடலில் தன் மகனைப் போருக்கு அனுப்பும் போது, தலையில் எண்ணெய் வைத்து வாரி, வெள்ளுடை தரித்து அனுப்பியதாய் வரும் -வெளிது விரித்து உடீஇ; இன்னொரு பு.நா பாடலிலும் 'தூய வெள் அறுவை மாயோற் குறுகி இரும்புள் பூசல் ஓம்புமின்' என்று வரும். அறுவை - ஆடை)
சரி, Back to the point, சமாதானத்திற்கும் ஐயவிப்புகை அடையாளமாக இருந்திருக்கிறது. அதை ஒரு பாடலில் காணலாம்.
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை;
போர் செய்து விட்டு வந்த வீரர்களின் வீட்டுக் கூரையில் வேப்பமரக் கிளைகளை ஒடித்துச் செருகி வைத்திருக்கிறார்கள். காஞ்சிப்பண் பாடுகிறார்கள். நெய்யில் வெண்கடுகு போட்டு புகை வர வைக்கிறார்கள். எல்லா வீடுகளும் ஆரவரித்துக் கிடக்கின்றன. ஒரு வீட்டில் மட்டும் போருக்குப் போனவர் இன்னும் வரவில்லை. பகையரசனை சினந்து கொல்லாமல் திரும்ப மாட்டேன் என்று போர் புரிந்து கொண்டிருக்கிறாரா? அதனால் தான் அந்தப் பெரியோனின் தேர் இன்னும் வீடு திரும்பாமல் காலம் தாழ்த்துகிறதோ?
இதே போல, புறநூனூற்றின் 281ஆவது பாடலிலும் "ஐயவி சிதறி ஆம்பல் ஊதி" என்றும் வருகிறது.
2) ஐயவி புகைப்பது என்பது எதிரி நாட்டு மன்னனுடன் சமாதானத்திற்கு உடன்படுவதற்கு ஒரு அடையாளமாகவும் இருந்திருக்கிறது - வெள்ளைக் கொடி போல. (இங்கே நான் இன்னொன்னு சொல்லட்டுமா? 'வெள்ளைக் கொடிக்கு வேலை வந்து விட்டது மன்னா!' வெள்ளைக் கொடி பொதுவாக சமாதானத்திற்குச் சொல்கிறோம் இல்லையா! ஆனால் போர்க்களத்திற்குரிய உடையாக, அதாவது சண்டை போடுவதற்கு ஏற்ற உடையாக வெள்ளை உடை தான் இருந்திருக்கிறது. இதை சில புறநானூற்றுப் பாடல்களில் பார்க்கலாம். நம் ஒக்கூர் மாசாத்தியாரின் 'கெடுக சிந்தை கடிது இவள் துணிவே' பாடலில் தன் மகனைப் போருக்கு அனுப்பும் போது, தலையில் எண்ணெய் வைத்து வாரி, வெள்ளுடை தரித்து அனுப்பியதாய் வரும் -வெளிது விரித்து உடீஇ; இன்னொரு பு.நா பாடலிலும் 'தூய வெள் அறுவை மாயோற் குறுகி இரும்புள் பூசல் ஓம்புமின்' என்று வரும். அறுவை - ஆடை)
சரி, Back to the point, சமாதானத்திற்கும் ஐயவிப்புகை அடையாளமாக இருந்திருக்கிறது. அதை ஒரு பாடலில் காணலாம்.
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை;
அதியமானின் படை வலிமையைப் பாராட்டும் பாடல் ஒன்றில் ஔவையார் மேற்கூறிய வரிகளை இயம்புகிறார். அதன் பொருள், நீயோ சிறிய வெண்கடுகுகளைப் புகைத்தாலும் அதைப் பொருட்படுத்தாது விரைந்து வந்து சேர்ந்து முறைப்படி புறத்தே இருந்து உயிரைக் கொண்டு போகும் எமன் போன்றவன் என்பதாகும். (அதியமானின் வீரத்தைப் போற்றும் பாடல்கள் பெரும்பாலானவற்றில் ஔவ்ஸ் அவனை ஒரு போர் வெறி பிடித்தவனைப் போலவே சித்தரிக்கிறார். அதில் அவர் பெருமைப்படுகிறார். அவர் 'ஐய ஐய' என்கிறார். படிக்கும் நமக்குத் தான் 'ஐய்யய்ய' என்றிருக்கிறது. ஒரு பாட்டில் வரும். ஊர்ப்பொதுவில் இருக்கும் முரசில் காற்று வந்து அடித்த சத்தம் கேட்டு போர்ப்பறை தான் அது என்று போர் செய்யப் பொங்கி எழுவானாம். இது என்ன வீரமோ? இது பற்றித் தனியாகப் படிக்கலாம் என்றிருக்கிறேன். பார்ப்போம்)
3) குழந்தை பெற்ற தாய்க்கும் ஐயவிப் புகை காட்டுவார்களாம்.
மணிமேகலை 'அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை, விரவிய மகளிர் ஏந்திய தூபம்' என்கிறது.
4) கோவில்களில் பூஜைகளின் போதும் ஐயவி புகைக்கப்பட்டிருக்கிறது என்று பன்னிரெண்டாம் திருமுறையிலும் திருமுருகாற்றுப்படையிலும் குறிப்புகள் கிடைக்கின்றன.
5) சங்ககாலத்தை முடிச்சுக்குவோம். ஆக்சுவலி, வெண்கடுகின் மருத்துவக் குணங்கள் என்னன்னா, அதைக் கஸ்தூரி மஞ்சள் + சாம்பிராணியோட அரைத்து சுளுக்குக்குப் பற்றுப் போட்டா சீக்கிரம் குணமாகும். வெண்கடுகை அப்டீக்கா அரைச்சு அப்புனா வாதம், கை கால் வீக்கமெல்லாம் சரியாயிருமாம்.
ஔவை'யார்'?
நேத்து ஔவையார் பத்தி ஒரு கிசுகிசு சொல்றேன்னு சொன்னேன்ல? அது இது தான்.
நாலஞ்சு ஔவையார் இருந்தாங்கன்னு நமக்குத் தெரியும். சங்க கால ஔவையார், ஆத்திசூடி எழுதின ஔவையார், விநாயகர் அகவல் எழுதின ஔவையார் இப்படி இன்னும் 2 பேர்.
ஆனால் "ஔவையார்"ன்னு மனசுல நெனச்சதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்?
Of course, நரைத் தலையும், கையில் ஒரு குச்சியும், வெள்ளைச் சேலையும், ஓலைச் சுவடியும்..கிட்டத்தட்ட கே.பி.சுந்தராம்பாள் திருவிளையாடல் படத்தில் வந்தது போல ஒரு கேரக்டர் தானே ஞாபகத்துக்கு வரும்?
ஆனால் நம்ம சங்ககாலத்து ஔவையார் பாட்டி இல்ல. ஷி இஸ் எ பியூட்டி.
எப்டி சொல்றேன்னு கேக்குறீங்களா? எவிடன்ஸ் வச்சுருக்கேன்.
புறநானூற்றின் 89-ஆவது பாடலை அதுக்கு நாம பார்க்கணும்.
'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன
சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்,
'அது போர்' என்னும் என்னையும் உளனே'
பொருள்:
“மணிகள் கோத்த அணிகள் விளங்கும் (உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?” என்று என்னைக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே! எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, “அது போர்ப்பறையின் முழக்கம்!” என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.
இங்க நாம கவனிக்க வேண்டியது, 'விறலி' என்ற வார்த்தையை. விறலி என்றால் 16 வயதுப் பெண் என்று அர்த்தம்.
எதிரி நாட்டு மன்னன் ஔவையாரை 'விறலி'ன்னு கூப்ட்ருக்கான். அதனால அவங்க அப்போ "16 வயதினிலே"வாக இருந்துருக்காங்க.
ஆனா பாருங்க, அந்த வயதில் அவங்க எதிரி நாட்டுக்குத் தூது போகும் அளவுக்கு வெளியுலக அறிவும் கவிதைப் புலமையும் கொண்டவங்களா இருந்துருக்காங்க. நாமள்லாம் 16 வயதில் என்ன பண்ணினோம்? பஞ்சு மிட்டாய் தான் சாப்ட்டுட்டு இருந்துருப்போம்.
இதனால சகலமானவருக்கும் சொல்ல வர்றது என்னன்னா, இனிமே ஔவையாரை நினைக்கும் போது, நோ நரை, நோ வெள்ளைச் சேலை. அழகா ரெட்டை ஜடை, கை நிறைய வளையல், தலை நிறைய மல்லிகைப்பூ, கலக்கல் தாவணி என்று நினைத்துக் கொள்ளுமாறு சங்கம் கட்டளையிடுகிறது.
நாளைக்கு வேற கிசுகிசு சொல்றேன். அதுவரைக்கும் விளம்பர இடைவேளை.
# கிசுகிசு கீதா
Subscribe to:
Posts (Atom)