Sunday, 6 July 2014

சொல், ஒரு சொல்...(7)


சின்னப் பசங்களோட உலகம் அழகான ஃபேன்டஸி நிறைந்ததாக இருக்கும். அவர்களுடன் பேசிப் பார்த்தால் ஆச்சர்யமான பல செய்கைகள் அவர்கள் பழக்கமாக இருக்கும். அவர்களின் கற்பனை நீளும் தூரத்தைக் கடக்கப் பெரியவர்​களால் முடியாது. அதில் சின்னச் சின்ன விளையாட்டுக்களும் சிறிதும் பெரிதுமான மூட நம்பிக்கைகளும் ஒருபுறம் இருக்கும். அவற்றில் ஒன்று ரெட்டை வால் குருவியை ஒற்றைப்படை எண்ணிக்கையில் பார்க்கக் கூடாது என்பது. நான் படிக்கும் காலத்தில் ரொம்பவும் சீரியஸாக இதை நம்புவார்கள். ரெட்டைவால் குருவியை ஒற்றையாய்ப் பார்த்த அன்று ஏதாவது டெஸ்ட் இருந்தால் பயந்து சாகும் நண்பர்கள் எனக்குண்டு. மற்றொன்றைக் காணும்வரை அவர்கள் மனமெல்லாம் அதில் தானிருக்கும்.

அது போல 'ஐயோ', 'ஐய்யய்யோ' என்றெல்லாம் சொன்னால் கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் என்றொரு சம்பிரதாயம் சிறுவர்களையும் தாண்டி பெரியவர்களுக்குக் கூட இருப்பதுண்டு. 'ஐயோ' என்பது எமனின் மனைவி பெயராம். யாராவது 'ஐயோ' என்றால் 'தன் மனைவியை யார் அழைக்கிறார்கள்' என்று பார்க்க எமன் வந்து விடுவானாம். இதை பள்ளிப் பருவத்தில் என் தோழி சொல்லிய மாலை நேரம் இன்னமும் மனதுக்குள் இருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்களில் எனக்குப் பொதுவாக நம்பிக்கை கிடையாது. அதனால் அன்றைக்கு பள்ளி முடிந்ததும் சைக்கிள் ஸ்டாண்டில் உட்கார்ந்து கொண்டு அது பற்றி பயங்கர ஆராய்ச்சி நடந்தது. 50 முறை 'ஐயோ' சொல்லி, 'நாளைக்குள் நான் இறந்து விட்டால் நீ ஜெயிச்ச! இல்லைன்னா நான் ஜெயிச்சேன்' என்று என் தோழியிடம் சவால் விட்டேன். 'வேணாம்டி வேணாம்டி ஐயோ சொல்லாதடி' என்று அவள் அப்படி அழுதாள். ஆசிரியரிடம் அடி வாங்கும் போது கூட 'போயா' என்று அசால்ட்டாக நிற்பவள் அழுததும் எனக்குமே உள்ளூர உதறல் தான். ஆனாலும் பெரிதாகச் சட்டம் பேசியாயிற்றே! 'அதெல்லாம் சும்மாடி ஒன்னும் ஆகாது' என்று அவளைச் சமாதானப்படுத்தி, 50 முறை 'ஐயோ' சொல்லி முடித்து வீட்டுக்குக் கிளம்பியாச்சு. அன்றைக்கு இரவெல்லாம் என் அப்பாவைக் கட்டிப் பிடித்துக்  கொண்டேன். ஒரே பயம். நான் இறந்து விட்டால் அம்மா எப்படியெல்லாம் அழுவாள் என்று மனதிற்குள் ஓடுகிறது. 'அம்மாவுக்காவது பரவாயில்ல, பாப்பா இருக்கா. அப்பா தான் பாவம்' என்று அவர் மேல் பரிதாபம் வேறு. இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

ஐயோ என்பதை எதிர்மறை வார்த்தையாகத் தான் நாம் இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது ஆச்சர்யத்தைக் குறிக்கும் வார்த்தையும் கூட! புதிய தலைமுறையில் மாலன் தனது சீனப் பயணக் கட்டுரைக்கு 'ஐயோ' என்று தலைப்பிட்டிருந்தார். ஆச்சர்யமாகவும் புதிராகவும் இருந்தது. கம்பரின் 'மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ இவன் வடிவு' என்பதை மேற்கோள் காட்டி அவர் எழுதுகிறார்: "ஐயோ! அது அவலச் சொல் அல்ல. அச்சத்தில் உதிர்க்கின்ற சொல் அல்ல. ஆச்சர்யத்தை அறிவிக்கின்ற, வியப்பை வெளிப்படுத்தும் சொல்லும் அது தான். அது ஒரு பழந்தமிழ்ச் சொல். கம்பனின் காலம் 12-ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். அப்படியானால் அது சுமாராக 1000 ஆண்டுகளாகவேனும் தமிழில் பயன்பாட்டில் இருக்க வேண்டும். அந்தத் தமிழ்ச் சொல் சீன மொழியிலும் உள்ளது. இன்றும் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது அதே அர்த்தத்தில். அதாவது அச்சத்தில் பதற்றத்தில் தானாக வந்து விழும் சொல்லாக உதிர்கிறது, ஐயோ!"

ஒரு வார்த்தைக்குள் என்னவெல்லாம் இருக்கிறது! இதைப் படித்த பிறகு தமிழ் இலக்கியத்தில் வேறு இடங்களில் எப்படி இந்தச் சொல் பயன்பட்டிருக்கிறது என்று பார்க்கும் ஆவலால் கொஞ்சம் தேடிப் பார்த்தேன்.

கம்பரைப் போலவே பாணர் ஆழ்வாரும் அழகை வர்ணிக்கும் போது 'ஐயோ'வைப் பயன்படுத்தியிருக்கிறார். "அரவின் அணை மிசை மேய மாயனார் செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!" என்றும் "நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே!" என்றும் சொல்கிறார்.

பாணருக்கு இளைத்தவரா திருமங்கை ஆழ்வார்? அச்சோ பதிகம் என்றே ஒன்றை எழுதி விட்டார். 10 பாடல்கள் வருகின்றன. தன்னைப் பெண்ணாகப் பாவித்து நாராயணன் அழகில் மயங்கிப் பாடும் பாடல்கள் அத்தனையும். ஒவ்வொரு பாடலும் 'அச்சோ ஓர் அழகிய ஆ!' என்று முடிகிறது.

வைணவர்கள் மட்டும் தான் ஆச்சர்யப்படுவார்களா? சைவர்கள் கை என்ன பூப்பறிக்காவா போகும்? விடுவாரா மாணிக்கவாசகர்? அதே மாதிரி அச்சோ பதிகம். அதே மாதிரி 10 பாடல்கள். நாராயணின் அழகில் ஆழ்வார் சொக்குகிறார். சிவன் அருளில் நாயன்மார் சொக்குகிறார். 'எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!' படிக்க இலகுவாகவும் பக்தி ரசம் சொட்டும் பாடல்களுமாக இருப்பது 'எப்டித்தான்யா இப்டி எழுதினீங்க? அச்சோவே!' என்று கத்தணும் போல இருக்கிறது.

பெரியாழ்வார் திருமொழியில் தாலப் பருவம், அம்புலிப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், தளர்நடைப் பருவம் என்று ஒவ்வொன்றாகச் சொல்லும் போது அச்சோப் பருவம் என்றும் ஒன்று வருகிறது. தாய் தனது குழந்தையை வாரி அணைத்துக் கொள்ள அழைக்கும் பருவம் தான் அச்சோப் பருவமாம். அதனால் அச்சோ என்பதை hug எனக் கொள்ளலாம்.

இவ்வளவு நேரம் பேசியது மேட்டர் இல்லை. இதிலிருந்து ஒரு புது வார்த்தை நான் கற்றுக் கொண்டேன். அது "பங்கி"

பங்கி என்றால் ஆண் தலைமுடியாம். 

பெரியாழ்ஸ் சொல்கிறார்: 

"செங்கமலப் பூவிற் தேன் உண்ணும் வண்டே போல் 
பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப 
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய 
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ 
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
"​

​பங்கி​..நல்லாருக்குல்ல?!

ஆண் தலைமுடிக்கு இன்னொரு பெயர் "சூளி" என்பதாம். ஆண் தலைமுடிக்கு ஒரு பெயர் இருந்தால் பெண் தலைமுடிக்கும் ஒரு பெயர் இருக்கும் தானே! அது "அளகம்". கம்பராமாயணத்தில் "அளகம் தரும் மதியின் பாகம்" என்று ஒரு வரி வரும். எழுத்தாளர் முத்துலிங்கம் கூட ஒரு கட்டுரையில் சூளி-அளகம் பற்றி எழுதியிருப்பார்.

எப்பேற்ப்பட்ட அழகு நம் மொழி! வியக்கிறேன்.​

5 comments:

  1. அருமை.. மன்னிக்கவும்... ஐயோ!

    ReplyDelete
  2. தங்கள் பகிர்வுக்கு நன்றி

    thanku
    latha

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சொல், ஒரு சொல்...பகிர்வுக்கு நன்றி...
    Joshva

    ReplyDelete