Saturday, 5 January 2013

கும்மாளம்! கொண்டாட்டம்! கொடூரம்!


இந்த ஆண்டு ஆரம்பம் இனிமையாவே இருந்தது.எதிர்பார்த்த ஆசைகள் எதிர்பாரா நேரங்களில் நடந்து முடிந்த மகிழ்ச்சியுடன் எனது நாள் ஆரம்பமானது.நெருங்கிய நண்பர்களின் அழைப்புகள், உறவுகளின் வருகைகள், அண்டைஅயலாரின் புன்முருவல்கள், தயங்கித் தயங்கிச் சொன்ன வாழ்த்துக்கள் என்று மனம் முழுவதும் மஞ்சள் மலர்கள்
.
பழைய துன்பங்கள், சோகங்கள், இயலாமைகள் எல்லாம் மறைந்து நல்லதொரு நாளை பிறக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நிறைந்து கிடந்தது நிறையப்பேர்களின் ‘Happy New Year’-களுக்குள். என் குருநாதர் சொல்வதைப்போல் புதுக்காலண்டர் மாற்றி விடுவதால்மட்டும் புதிதாய் ஒன்றும் நடந்துவிடாது. நேற்றைகளின் தொடர்ச்சியாகத்தான் நாளைகள் இருக்கும்என்பது நமக்குத் தெரியும்.ஆனாலும் ஒரு நம்பிக்கைபுத்தாண்டு பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று!ஒவ்வொரு புத்தாண்டிலும் குறைந்தது 3 சபதங்களாவது(சில சிவகாமியின் சபதம் ரேஞ்சுக்குக்கூட இருக்கும்) எடுத்திருப்போம்.பெரும்பாலும் 2 மாதங்களுக்குமேல் அவை உயிருடனிருப்பதில்லை.ஆனாலும் அந்தச் சபதம் ஆண்டுக்கடைசி வரை நினைவிருக்கும்.’சே!இப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்று நினைத்திருந்தோமே?இப்படிச் செய்திருக்கலாமோ?சரி விடு.அடுத்த வருடம் மாற்றி விடுவோம்!’ – இப்படிப் பலமாற்றிவிடுவோம்கள் இருக்கும் என்னைப் போன்ற சாமானியர்களுக்கு ஒவ்வொரு வருட நிறைவிலும்.அதிலும் ஒரு சுகமிருக்கத்தான் செய்கிறது.
                   
எப்போதும் எனக்கொரு எண்ணம் தோன்றுவதுண்டு.இந்நாளில் எல்லா மக்களும் இப்படித்தான் குதூகலித்திருப்பார்களா என்று.

என்ன சார் புத்தாண்டு.புடலங்கா ஆண்டு!அது வந்து என்ன மாறுதல் வந்து விடப் போகிறது?நல்ல நாள் பொல்ல நாள் என்றால் செலவு தான்!” என்று குறைபடும் கூட்டம் ஒருபுறமிருக்கும்.

இன்னைக்காவது அம்மா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச்சொன்னேன்.எங்க காது குடுத்துக் கேக்குறாரு அந்த மனுஷன்?”என்று சலிப்படையும் குடும்பத்தலைவிகள் ஒருபுறமிருப்பர்.

நேத்து நைட்டு போனவருங்க.இன்னும் வீடு திரும்பல.குடிச்சிட்டு எங்க விழுந்து கிடக்காரோ?சாதாரண நாள் என்றால் மெயின்ரோட்டுக் கடையில்தான் கிடப்பாரு.பையனைக் கூட்டிட்டுப் போயி தூக்கியாந்துருவேன்.புதுவருஷம்ன்னு எங்க போய்க் குடிச்சுட்டுக் கெடக்கோ?” – ஆள் முழுதாக வருவானோ மாட்டானோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருக்கும் மனைவிகள்.

ஏன் புத்தாண்டு என்றால் குடிகளும், விபத்துக்களும் சர்வசாதாரணமாய் நடந்து விடுகிறது நம் தேசத்தில்?பெரும்பாலான ஆண்கள்இளைஞர்களும் சரிமத்திய வயதானவர்களும் சரிபுதியஆண்டை மதுப்புட்டிகளுடந்தான் கொண்டாடுகின்றனர். அவரவர் சக்திக்கேற்றாற்போல் குடிக்கும் பழக்கம் இன்று இயல்பாகிவிட்டது.முன்பெல்லாம்நான் குடிப்பேன்என்று சொல்லும்போது ஒரு குற்றஉணர்வு இருக்கும்.இப்பொழுதெல்லாம் மதுக்கடைகளில் குடித்துக்கொண்டிருப்பதைப் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது ஒரு பேஷனாக இருக்கிறது இளைஞர்கள் மத்தியில்.இப்படிப்பட்ட புகைப்படங்களுக்கு நண்பர்கள்(இருபாலர்கள்) மத்தியில் அத்தனை வரவேற்பு!
                       
இதையெல்லாம் பார்க்கும்போது இளையசமுதாயம் எதைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற கேள்வி ழுகிறது. முன்பு தவறெனத் தெரிந்து செய்தவர்கள் இன்று எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் அதைச் செய்கிறார்கள்.’நான் என்ன தொடர் குடிகாரனா? சும்மா ஒரு ஜாலிக்கு அவ்வப்போது குடிக்கிறேன்,இதெலென்ன தப்பு!’-என்றுமொரு  வாதம்.
இன்றைய தலைமுறை மிகவும் சுறுசுறுப்பு மிக்கது.எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆவல் பெருகியிருக்கிறது.அது தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, போதைப்பொருளாக இருந்தாலும் சரி.எப்படியிருக்குமெனப் பார்த்துவிடும் ஆவல் பொதுவாக 16 முதல் 25 வயதுள்ள இளைஞர்களுக்கு அதிகம்.இப்படிச்சும்மாஆரம்பிக்கப்பட்ட பழக்கங்கள் நாளடைவில் அவர்களை முழுவதும் ஆட்கொண்டு விடுகிறது. (திருமணமென்றாலும்தண்ணிப்பார்ட்டி’.காதல் பிரிந்தாலும்தண்ணிப்பார்ட்டி’.என்ன லாஜிக்கோ?)‘களவும் கற்று மற!’ என்ற வாசகத்தில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை.இன்று குடிப்பது என்பது ஒரு ‘status symbol’. குடிப்பவன் நாகரிகம் தெரிந்தவன்.குடிக்காதவன் பட்டிக்காட்டான்.
                   
புத்தாண்டு பிறந்தாலே உள்ளூர்ப் புரோட்டாக்கடைகளுக்கும், நகர உணவு விடுதிகளுக்கும், நட்சத்திர ஹோட்டல்களுக்கும் நல்ல லாபம். ஹோட்டல்காரர்களின் ‘குடி’யைக் காக்கும் கருணை மிக்க ‘குடி’காரர்கள்.சென்னையில் ஒரு ஹோட்டலின் புத்தாண்டுக் கொண்டாட்ட விளம்பரம். தலைக்கு 5000 ரூபாய். குழந்தைகள் என்றால் 1500 ரூபாய்(புத்தாண்டுத் தள்ளுபடி).9 மணியிலிருந்து விடிய விடிய நிகழ்ச்சிகள். பக்கத்தில் பல வண்ணங்களில் சிறியதும் பெரியதுமான மதுப்புட்டிகள். அடக்கொடுமையே! குழந்தை குட்டிகளுடன் குடும்பத்தோடு சென்று குடித்துவிட்டு ஆடுவது ஒரு கொண்டாட்டமா?இவை போன்ற விளம்பரங்ளையெல்லாம் இன்று சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் சரியென மக்கள் அங்கீகரித்துவிட்டார்களா?ஏன் இவைகண்டு நமக்கு ஒரு அறுவெறுப்பு தோன்றவில்லை?
                    
குடிப்பது எத்தனை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது தனக்கும் சமுதாயத்திற்கும்!உடல்நோய்கள், விபத்துக்கள், பாலியல் குற்றங்கள் என்று.உடல்நோயைப் பற்றி இங்கு பேசப்போவதில்லை.அது அவனவன் பாடு.வாழ வேண்டும் என்று நினைத்தால் குடியைவிட்டு இருக்கட்டும்.ஒருவன் தன்னை மட்டும் அழித்துக்கொள்ளவே உரிமை உள்ளது.என்ன தைரியத்தில் அல்லது உரிமையில் அவன் சமுதாயத்தை வதைக்கிறான்?

கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி, ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் குடிபோதையினால் பிரதான சாலைகளில் சிறியதோ பெரியதோ குறைந்தபட்சம் ஒரு விபத்தாவது ஏற்பட்டுவிடுகிறது.இவையெல்லாம் தேவைதானா?என்ன கிடைத்துவிடப்போகிறது இந்தக்குடியினால்?நம் கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடப் போகிறதா?வருமானம் அதிகமாகிவிடப் போகிறதா?நீண்ட நாட்களாகக் காதலை ஏற்றுக்கொள்ளாதிருக்கும் எதிர்வீட்டுப்பெண் சம்மதம் சொல்லிவிடப் போகிறாளா?ஒருவேளை பிரச்சனைகளைச் சிறிதுநேரம் மறக்கலாம்.ஆனால் அது கனவுலகம்.போதை தெளிந்ததும் பிரச்சனைகள் அப்படியேதான் இருக்கும்.பூனை, தனக்கு ஏதாவது ஆபத்து நேரும்போது கொஞ்சநேரம் போராடிப் பார்க்குமாம்.ஆபத்து நெருங்கிவிட்டால் தன் கண்களை மூடிக்கொள்வதன் மூலம் ஆபத்திலிருந்து விலகிவிட்டதாக நினைக்குமாம்.இப்படிதான் பூனை உத்தியுடன் நம்மில் பலர் இருக்கின்றோம்.பிரச்சனைகளைச் சமாளிக்க இருக்கும்வழி, கண்ணை மூடிக்கொள்வதல்ல-பிரச்சனைகளுக்கான காரணத்தையும் கையாளும் வழிமுறைகளையும் ஆராய்வது.

யோசிப்போம் இளையதலைமுறையே! நிறைய தேடுவோம். தேடல்களில்தான் வாழ்க்கை இருக்கிறது.அதை ஆழ்ந்த அறிவின் வெளிச்சத்தில் தேடுவோம்.மதுப்புட்டிகளின் நாற்றங்களில் வேண்டாம்!

No comments:

Post a Comment