Thursday, 10 January 2013

பயணங்கள் முடிவதில்லை

சென்ற வாரம் புதிய தலைமுறை இதழில் மறுபக்கம் பகுதியில் வெளியான 'தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் பணியாளர்கள்' பற்றிய கட்டுரையைப் படித்தேன். ஓட்டுநர்கள், நடத்துனர்கள் படும் இன்னல்களை நல்லவிதமாக எடுத்துக்காட்டிய கட்டுரை அருமை. ஆனால் இவர்களின் மறுபக்கத்தையும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம் என்று தோன்றியது. ஏனோ இவர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் கொஞ்சம் கசப்பானது தான்.



போன தீபாவளிக்கு ஊருக்குப் போவதற்கு பெங்களூர் - தூத்துக்குடி SETC வண்டியில் online booking செய்திருந்தேன். அருப்புக்கோட்டை வழியாகத்தான் அந்த வண்டி செல்லும் என்பதால் அருப்புகோட்டை வரை புக் செய்திருந்தேன். என் கெட்ட நேரம். பெண்கள் இருக்கை எனக்குக் கிடைக்கவில்லை. தனியார் வண்டியிலும் இடம் கிடைப்பது அரிது என்பதால் வேறு வழியில்லாமல் 36-ஆம் எண் ஜன்னலோர இருக்கையில் புக் செய்தேன். நான் புக் செய்யும் போது என் பக்கத்துக்கு இருக்கை காலியாகத் தான் இருந்தது. எல்லாம் சுபம்.டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் ஊருக்கு இறக்கை கட்டிக் கொண்டு ஆனந்தமாகக் கிளம்பிய எனக்கு பேருந்தில் ஏறியதும் அதிர்ச்சி. பக்கத்துக்கு இருக்கையை ஒரு ஆண் புக் செய்திருந்தார். இருக்கையைக் கொஞ்சம் மாற்றச் சொல்லி நடத்துனரிடம் கேட்டதற்கு கேவலமாகத் திட்டி விட்டார். 'online-ல புக் பண்ணிட்டு வந்து என் உயிரை வாங்குது...போ..போய் உக்காரு...கொஞ்ச தூரம் போன பெறகு பார்ப்போம்' அது இதுன்னு திட்டு விட்டார்..சரி திட்டினால் கூட பரவாயில்லை..சீட் மாற்றி விட்டால் சரியென்று அமைதியாக இருந்தேன்.அடுத்த ஆப்பு அருப்புகோட்டை வடிவில். டிக்கெட் பரிசோதிக்கும் போது destination அருப்புக்கோட்டை என்று இருந்தது. அதைப் பார்த்ததுமே அவர் டென்ஷன் ஆகி விட்டார். என் ஒருத்திக்காக அருப்புக்கோட்டையிலெல்லாம் நின்று இறக்க வேண்டியிருக்கிறதாம்.இதனாலேயே தூத்துக்குடி செல்வதற்கு நேரம் ஆகி விடுகிறதாம்.'வந்துருவாளுங்க இம்சை பண்றதுக்கே.' மீண்டும் அதே திட்டு. என்னடா இது.யார் முகத்தில் இன்று முழித்தோம் என்று எரிச்சல் ஆகி விட்டது. 

கோபம், ஆத்திரம், இயலாமை எல்லாம் சேர்ந்து அழுகை தான் வந்தது அவர் பேச்சைக் கேட்டு.மன்னிக்கவும்..அது பேச்சல்ல.திட்டு.மனத்தைக் கஷ்டப்பட வைக்கும் கேவலமான முகபாவத்துடன் கூடிய சரியான வசை மாரி. நான் புக் செய்ததில் என்ன தவறென்று இன்னும் எனக்கு விளங்கவில்லை. 

2 இருக்கைகள் மட்டும் பெண்களுக்காக ஒதுக்கியிருக்கிரார்களே? 60 சீட் உள்ள பேருந்தில் இரண்டே இரண்டு பெண்கள் மட்டும் தான் தனியாக வருவார்கள் என்ற எண்ணமா நிர்வாகத்திற்கு? சரி அவர்கள் இருக்கைகள் கூட  அதிகம் ஒதுக்க வேண்டாம். சில தனியார் புக்கிங் சைட் போல பெண்கள் புக் பண்ணியிருந்தால் அங்கு ஆண்களால் புக் பண்ண முடியாத படி சாப்ட்வேர்-ஐ மாற்றலாம் தானே! அருப்புக்கோட்டையில் இறக்கி விட முடியாது என்றால் பின்னே எதற்காக destination-ல் அந்த option வருகிறது? அது வரவே இல்லை என்றால் நாங்கள் அருப்புக்கோட்டையில் நிறுத்தித்தான் ஆகவேண்டும் என்று சொல்லப் போகிறோமா? அந்த நடத்துனர் சொன்னது போல் online booking ஏன் வைத்தார்கள்? வைக்காமல் இருந்திருந்தால் அவர் 'உயிரை' நான் வாங்கிருக்க மாட்டேன் அல்லவா?
 

எவ்வளவு சந்தோசமாகத் செல்ல வேண்டிய பயணம் அவ்வளவு கொடுமையாக இருந்தது அன்று. தெய்வாதீனமாக என் அலுவலகத்தில் பணி புரியும் நண்பர் ஒருவரும் பெயரறியா தோழி ஒருவராலும் பெண்கள் இருக்கைக்கு மாறி உட்கார்ந்தேன். அத்துடனும் கொடுமை முடிந்த பாடில்லை. மதுரை வந்ததும் திடீரென்று என்னிடம் வந்து 'எறங்கு முதல்ல' என்றார். அருப்புக்கோட்டை தான் வரவில்லையே, எதற்கு இறங்க வேண்டும் என்று கேட்டதற்கு, திரும்பவும் அதே மாதிரி (திரும்பத் திரும்ப சொல்ற நீ பாணியில்!) 'எறங்கு முதல்ல'.எனக்கு பயங்கர பதற்றம் ஆகி விட்டது.அவர் கத்திய கத்தில் நானும் எனது லக்கேஜ் சகிதம் இறங்கி விட்டேன். ஆனாலும் எனக்கு பதற்றம் அடங்கிய பாடில்லை. பின் கெட்டதுக்குள்ளும் ஒரு நல்லதாய் வேறு ஒரு விளாத்திகுளம் SETC பேருந்தில் ஏற்றி விட்டார்.அதைச் சொல்லி என்னை இறங்கச் சொல்லியிருந்தால் நான் ஒன்றும் மாட்டேன் என்று சொல்லி விடப்போவதில்லை.எனக்குத் தேவை நான் ஊர் போய்ச் சேர்வது.அது எந்தப் பேருந்தில் இருந்தால் எனக்கென்ன? வீணாக ஏன் பதற்றப்படுத்த வேண்டும்? அந்தப் பதற்றம் ஒரு மணி நேரம் கழித்தும் கூட கொஞ்சமும் குறையவில்லை. அதனால் ஊரில் இறங்கும் போது  தடுமாறிக் கை காலில் புதையல் எடுத்தது தான் மிச்சம்! 

ஓட்டுநர்களே! நடத்துனர்களே! நாங்கள் ஒன்றும் எங்களிடம் அன்பைப் பொலியச் சொல்லி கேட்கவில்லை. குறைந்த பட்சம் இப்படி கண்ட கருமமாகத் திட்டுவதையாவது விட்டு விடுங்கள். யார் கண்டது! உங்களுக்கும் கூட ஒரு நாளில் உங்கள் மகளோ பேத்தியோ பெங்களூரிலோ சென்னையிலோ வேலையின் பொருட்டு தனியாகப் பயணம் செய்ய நேரலாம். அவளுக்கும் பெண்கள் இருக்கை கிடைக்காமல் உங்களைப் போன்ற ஏதோ ஒரு நடந்துனரின் வார்த்தைகளைக் கேட்டு கையைப் பிசைந்து செய்வதறியாது கண்ணீரும் விடலாம்!

இப்படிக்கு,
இத்தனை  நடந்தும் பொருளாதாரம் கையை கடிப்பதனால் பொங்கலுக்கும் SETC - யிலேயே டிக்கெட் போட்டு விட்டு இன்றிலிருந்தே என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கும் பிரஜை இராஜிசங்கர்.

1 comment:

  1. இந்த மாதிரி குரைக்கும் நாய்கள் நிரைய ஆ. போ .கழகத்தில் இருக்கின்றன! இதை அப்பிடியே முதலமைச்சர் cell க்கு அனுப்பி வைக்கவும்

    ReplyDelete