Monday, 31 December 2012

கல்லிலே கலை வண்ணம் கண்டேன் - பயணக்கட்டுரை



'சிவகாமியின் சபதம்' படித்ததிலிருந்து ஒரு முறையாவது மாமல்லபுரம் சென்று வர வேண்டுமென்பது என் கனவாக இருந்தது. கல்கியின் வர்ணணைகள் எனக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.அதற்கான சந்தர்ப்பம் நேற்றுத் தான் கிடைத்தது.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் கார் பயணித்துக் கொண்டிருக்கும் போதே மனதிற்குள் ஒரே குஷி. வந்து விட்டேன் பல்லவா! இன்னும் கொஞ்சத் தூரம் தான்! நீ வளர்த்த கலைகளை என் விழிகளுக்குள் சிறை பிடிக்க இதோ வந்து விட்டேன். முதலில் நாங்கள் இறங்கியது கடற்கரைக் கோயில்.

கடற்கரைக் கோயில்:

கடற்கரைக் கோயிலைப் பார்ப்பதற்கு அனுமதிக் கட்டணம்- இந்தியர்களுக்கு ரூபாய் 10/- அயல்நாட்டவர்களுக்கு ரூபாய் 250/-. இந்தச் சீட்டு பஞ்சரதம் பார்ப்பதற்கும் அவசியம் என்பதால் பத்திரமாக வைத்திருக்கவும்.

இரண்டு சிவன் கோயில்களை உள்ளடக்கிய கடற்கரைக் கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்மனால் கி.பி 700-750-இல் கட்டப்பட்டது. நான்கு அடுக்குகளுடன் கூடிய விமானம் ஒன்றும் இரண்டு அடுக்குகளுடன் கூடிய விமானம் ஒன்றும் அடுத்தடுத்து அமைந்திருந்தன. தூரத்திலிருந்து பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சி. சுத்தமாகப் பராமரிக்கப்பட்ட நடைபாதைகளைக் காணும் போது தொல்லியல் துறைக்கு ஒரு 'சபாஷ்' போடலாம்.

அருகே நெருங்க நெருங்க ஆர்வம் கரை புரண்டோடியது. கோபுரத்தை நெருங்கிய எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். கோபுர விமானத்திலமைந்த சிற்பங்கள் அனைத்தும் சிதிலமடைந்த நிலையிலேயே காணப்பட்டன. சிலைகளின் உருவம் மட்டும் தான் தெரிகிறது, மற்றபடி அதன் கலைநேர்த்தி தெரியாத அளவுக்குச் சிதிலமைடைந்திருந்தது மனதை ஏதோ சங்கடப்படுத்தியது. இன்னும் கொஞ்சம் நாம் பத்திரமாகப் பார்த்திருக்கலாமோவென்ற குற்ற உணர்வு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. ஏதாவது ஒரு சிற்பமாவது முழுதாக இருக்குமா என்று தேடிய எனக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான். இவ்வளவாவது மிச்சம் இருப்பதே பெருமையென்று ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டே மேற்கு நோக்கிய இரண்டடுக்கு கொண்ட கோபுரத்தின் கருவறையில் ஏறினேன். சிவன், பார்வதி, தேவதூதர்கள் பறப்பது போல் ஒரு சிற்ப வேலைப்பாடு அமைந்திருந்தது. மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட கருவறை அது. அதனால் சில தள்ளுமுள்ளுகளைக் கடந்து தான் அதனைக் காண முடிந்தது. பின் அப்படியே சுற்றி வந்தால் கிழக்கு நோக்கிய நான்கடுக்கு விமானம் கொண்ட கோபுரம் ஒன்று காணப்பட்டது. கோயில் கருவறைக்குச் செல்ல இங்கேயும் சற்று உயரமான படிகளாகவே இருந்தன. படிகளின் அகலமும் அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. வயது முதிர்ந்தவர்கள் சில பல சர்க்கஸ் சாகசங்கள் செய்து தான் இறைவனைத் தரிசிக்க முடிகிறது.கருவறையினுள்ளே தாராலிங்கங்கமும், சோமாஸ்கந்தரும் காணப்பட்டனர். நேர்த்தியென்றால் அதுவல்லவா நேர்த்தி! என்னவொரு கலை ரசனை பல்லவனுக்கு என்று வாழ்த்த ஆசை தான். ஆனால் பாவம், அதனுள்ளே என்ன சிற்பம் இருந்தது என்று தான் பார்க்க முடிந்ததே தவிர, எப்படி இருந்தது என்று பார்க்கும் சக்தி என் கண்களுக்கு இல்லை. நாங்கள் சென்றது 3.30 மணி என்ற போதும் கோயில் கருவறை முழுதும் ஒரே இருள். 'கருவறை என்றால் இருள் தானே' என்ற லாஜிக்கை உணர்த்துவதற்க்காகத் தொல்லியல் துறை அப்படியே விட்டு விட்டதா என்பது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. அப்படியே அந்தப் பிரகாரத்தை ஓர் அரைச்சுற்று சுத்தி வந்தால் ஒரு சின்னச் சன்னதி மாதிரித் தெரிந்தது. பெருமாள் சன்னதியென்று சொன்னார்கள். சோமாஸ்கந்தர் சன்னதியிலாவது என்ன சிற்பம் என்று தெரிந்தது. இங்கே அது கூடத் தெரியவில்லை. பெருமாள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். அடியார் கண்களுக்கு மட்டும்தான் காட்சி கொடுப்பாரோ? இவர் நவீனப்பெருமாள் போலும்! கைபேசியில் 'torch light' வசதி வைத்திருக்கும் 'பக்தர்களுக்கு' மட்டும் காட்சியளித்தார். அந்த அருள் எங்களுக்கும் வாய்த்தது. பெருமாளே! உன் கருணையோ கருணை! அழகாகவே இருந்தார் அனந்தசயனர். கிடந்த கோலத்தில் கிடந்த பெருமாள் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாம். பெருமாள் எனக்கு மூச்சுப்பயிற்சியும் கற்றுக்கொடுத்தார். சரியான கூட்டம் அந்தத் சிறிய சன்னதிக்குள். அதே தள்ளுமுள்ளுப் போராட்டம் தான் இங்கேயும். ஓர் அதிதீவிர பக்தர் பெருமாளைப் பார்க்கும் பரவசத்தில் என்னை ஓர் இடி இடித்தார். பெருமானின் கைகளில் போய் விழுந்தேன். அப்போதும் பெருமாள் புன்னகையுடன் ஆசி வழங்கினார். விழுந்த அவமானத்தை பக்திப்பரவசமாக மாற்றிய வெற்றி எனக்கு! அந்த மக்கள்வெள்ளத்தில் நீந்தி வெளியில் வந்த பார்த்த பின்பு தான் மகிழ்ச்சி. 'அப்பாடா! கையும் காலும் கைப்பையும்(இது ரொம்ப முக்கியம்) என்னுடனேயே மொத்தமாக இருந்தது. மீதிச் சுற்றையும் சுற்றி முடித்து வெளியே வந்து பார்த்தால் சிங்க முகம் கொண்ட தூண் ஒன்று நின்று கொண்டிருந்தது, அதன் இதயப்பகுதியில் மாடம் போல் துளையிட்டு, உள்ளே ஒரு சிற்பம் இருந்தது. என்ன சிற்பம் என்று தெரியவில்லை. ஆனால் எப்படிக் கை மட்டும் நுழையும் சின்ன மாடத்தில் இவ்வளவு நேர்த்தியாகச் செதுக்கமுடிந்ததோவென்ற ஆச்சரியம் வருகிறது. அதன் வலப்புறம் - இரண்டடுக்கு கோபுரத்திற்கு அடுத்து- படித்துறைகளுடன் கூடிய சிறிய நீரூற்று போல் காணப்பட்டது. அதனுடன் பாதி சிதைந்து - காலை நுகர்வது போல் அமைந்த மாட்டின் சிலை, ஒரு பெரிய கல்லாலான கொடி மரம், வட்டவடிவிலமைந்த சின்ன நீரூற்று போன்றவை காணப்பட்டன. புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடம். கோயிலைச் சுற்றிக் கோட்டை அமைந்திருந்தது. கோட்டையில் காவல் காப்பதுபோல் வரிசையாக நிறைய நந்தி சிலைகள் அடுக்கப்பட்டிருந்தன. வெளியில் செல்லும் நடைபாதைகளில் நடக்கும் போது வேலிக்கு அந்தப்புறம் கடலின் அழகை ரசித்தவாறே அரைக்கால்சட்டை அணிந்த பக்கா தமிழ்நாட்டுப்பெண்களையும் சேலையணிந்த வெள்ளைக்காரப்பெண்களையும் சரளமாகக் காண முடிந்தது. கலாச்சார முரண்! (நடக்கட்டும்....நடக்கட்டும்) நாட்டிய விழா நடந்து கொண்டிருந்தது போலும்! மேடைகள் தயாராகிக்கொண்டிருந்தன.

வெளியே வந்தால் சுற்றிலும் கடைகண்ணிகள் தான். சிலைகள், சிற்பங்கள், கலைப்பொருட்கள், விளையாட்டுச் சாமான்கள், புல்லாங்குழல் என அனைத்தும் கிடைக்கிறது. சங்கில் பெயரெழுதும் கடைகளில் செம விற்பனை. பெரும்பாலும் அனைத்து கடைக்காரர்களும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலான பல மொழிகளில் பிளந்து கட்டுவதைப் பார்ப்பது பெருமையாக இருந்தது. சாதாரண அடித்தட்டு மக்கள் தான் பெரும்பாலான கடைக்கார்ரகள். எப்படி இத்தனை மொழிகளைக் கற்றுக்கொண்டார்கள் என்பது பல ஆச்சர்யங்களை அள்ளித் தெளிக்கிறது. தேவையென்று வரும் போது சுதாரிப்பு தானாகவே வந்து விடுமோ?

அங்கு மனதை நெருடிய இன்னொரு விஷயம் பிச்சையெடுக்கும் சிறுவர்/சிறுமிகளும், பாசி விற்கும் குழந்தைத் தொழிலாளர்களும்தான். கையில் பாசி மாலையுடன் ‘3 பத்து ரூபாய் வாங்கிக்கோங்கக்கா! வேணும்ன்னா 4 பத்து ரூபாய்க்கு தரேன்க்கா!’ எனக் கெஞ்சும் குழந்தைகளைக் காணும் போது பரிதாபமாக இருந்தது. அதிகாரிகள் அடிக்கடி வந்து போகும் இடம்தான். நாட்டிய விழாக்களுக்காக்ச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்து போய்க் கொண்டிருக்கும் இடம் தான்! அவர்கள் கண்ணில் எல்லாம் இந்தக் குழந்தைகள் படமாட்டார்களா? அவர்கள் பாஷையில் குழந்தைத் தொழிலாளர்கள் என்றால், செங்கல் சுமப்பவர்களுக்கும், பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மட்டும் தானா? இவர்களெல்லாம் அந்த வகையில் சேர மாட்டார்களா? மாமல்லபுரத்தில் மட்டுமல்ல, அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் இதே நிலை தான். சுற்றுலாத்தலமென்றால் அரசாங்கத்திற்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கும் இடங்கள் மட்டும்தான் என்ற கண்ணோட்டம் மாறினால் நல்லது.

சிற்ப மண்டபம்:
கடற்கரைக் கோயில் சாலையைக் கடந்து, எதிரே இருக்கும் சாலை மறுமுனை வரை நடந்து சென்றோம். 2 மண்டபங்கள் வரிசையாகக் காட்சியளித்தன.முதல் மண்டபத்தில் ஏறிப்பார்த்தோம். அடடா! அற்புதமான கலைவண்ணம் கடற்கரைக் கோயில் போலல்லாது இங்கே கலை இன்னும் உயிர்ப்பித்திருந்தது. கொஞ்சம் கூடச் சிதையாத சிற்பங்கள் கொள்ளை அழகைக் கொட்டிக்கொண்டிருந்தன. பாறையிலேயே செதுக்கப்பட்ட சிற்பங்கள் அத்தனையும் சின்னச் சிம்மம் சிற்பத்துடன் ஆரம்பமாகிறது. அதற்கடுத்தாற்போல் மனிதத்தலையும் சிங்க உடலும் கொண்ட சிலை கருத்தைக் கவர்ந்த்து. நிறைய எருமை மாட்டுத் தலைகளை ஆங்காங்கே செதுக்கியிருந்தார்கள். ஆணும் பெண்ணும் கைகோர்த்து ஆடும் சிற்பம் அழகுற அமைந்திருந்தது. சிற்பியின் குறும்பும் அதில் தென்பட்டது(No more questions on this!). பசுவின் மடியில் பால் கறக்கும் கோனார் சிலை குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. என்னை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்த சிற்பம் அதற்கடுத்து இருந்தது. ராஜா மாதிரி ஒரு கிரீடமெல்லாம் தரித்து கம்பீரத்துடன் நிற்கும் ஒருவன், தன் இடக்கையை சேவகன் போல் பணிவுடன் நிற்கும் ஒருவனது தோளில் உரிமையுடன் போட்டு நிற்பது போல் ஒரு சிற்பம்! அதைச் செதுக்கிய சிற்பியின் கைகளுக்கு கோடி முத்தங்கள் பரிசளிக்கலாம். ராஜாவிற்கே உரிய கம்பீரமும் வீரமும், சேவகனுக்கே உரிய பணிவும், அத்தனை பெரிய ராஜா தன் தோளில் கைவைத்து நிற்பதால் உண்டான கூச்சமும் சந்தோஷமும் அத்தனை தத்ரூபமாக இருந்தது அந்தச் சிற்பத்தில்! பக்கம் பக்கமாகப் பேசாமல், நாட்டைக் காக்க வந்த தலைவரே!, செம்மலேயென்று பிளக்ஸ் பேனர்கள் வைக்காமல், கண்ணீர் மல்கும் உணர்ச்சிப்பூர்வக் கதையைப் படம் பிடிக்காமல், ஐந்தடிச் சிற்பத்தில் மேற்சொன்ன அத்தனையும் செய்து விட்டு அமைதியாய் சமத்துவமும் சகோதரத்துவமும் பேசும் அந்தச் சிற்பத்தை விட்டு எப்படி நம் கண்களை எடுப்பது? எத்தனை நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேனோ தெரியாது. ‘புகைப்படம் எடுக்க வேண்டும், கொஞ்சம் விலகுகிறீர்களே?’ என்ற குரல் கேட்டுத்தான் அடுத்த சிற்பம் பார்க்க நகர்ந்தேன். ஆண், பெண், நந்தி முதலிய சிற்பங்கள் ஆக்கிரமித்திருந்தன அடுத்தடுத்த வரிசையில்.

இந்த மண்டபத்துக்கு அடுத்து அமைந்திருந்த மண்டபத்தில் சிற்பங்கள் ஒன்றும் காணப்படவில்லை. ஒருவேளை அது சிற்பிகளோ பொது மக்களோ வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்கி நிற்பதற்காகக் கட்டப்பட்டதாக இருக்கலாம்.

அர்ஜுனன் தவம்:
இரண்டு பெரிய பாறை முழுவதும் அர்ஜுனன் தவம் செய்யும் காட்சி செதுக்கப்பட்டிருந்தது கொள்ளை அழகு! ஆனால் பக்கத்தில் சென்று பார்க்க முடியாது. பெரிய பள்ளம் தோண்டி வைத்திருந்தார்கள் அந்தப் பாறைக்கு முன்னே. சாலையில் நின்றபடிதான் பார்க்க முடியும். முதல் பாறையின் வலப்புறம் எலும்பும் தோலுமாய் ஜடாமுடி தரித்து, ஒற்றைக் காலில் நின்று கொண்டு, இரு கைகளையும் வான்நோக்கி ஒன்றாகக் குவித்து, நினைத்ததைச் செய்து முடிக்கும் திடத்துடன் அர்ஜுனன் தவம் செய்து கொண்டிருப்பது வெகுவாக மனதைக் கவர்ந்தது. அவன் பக்கத்தில் முருகன் வேலுடன் நின்ற சிற்பம், கீழே சின்னக்கோவில், முனிவர்கள் யாகம் செய்துகொண்டிருக்கும் காட்சி, தேவதூதர்கள் கையில் மாலைகள் சகிதம் பறந்து வந்து கொண்டிருக்கும் காட்சி, குள்ளமான பூதகணங்கள் இரண்டு இரண்டாய் ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் காட்சியென விரிகிறது அந்த அற்புதம். இரண்டாவது பாறையின் அடிப்புறம் ஒன்றன்பின் ஒன்றாய் நடைபோடும் இரு யானைகள் சிற்பம் குதூகலத்தைக் கொண்டு வருகின்றன. கவனித்துப்பார்த்தால் முதல் யானையின் வயிற்றுப்புறத்திற்குக் கீழே இன்னும் 3 யானைத் தலைகளும், துதிக்கைக்கும் முன்னங்கால்களுக்கும் கீழே மேலுமொரு யானைத்தலையும் இருப்பது குழந்தைகளுக்கு மற்ற சிலைகளையும் உற்றுநோக்கும் ஆர்வத்தை வரவழைத்துக் கொண்டிருந்தன. அதற்கடுத்து அமைந்த பாறையில் ஒரு குரங்கு இன்னொரு குரங்குக்கு பேன் பார்ப்பது போல் அமைந்த சிலையைக் கண்டதும் மனது உற்சாகக் கூச்சலிட்டது. அச்சிலை பாறையிலேயே செதுக்கியது போல் தெரியவில்லை. எங்கோ இருந்து பெயர்த்தெடுத்து, பாறைக்கு மேல் காட்சிக்கு வைத்திருப்பது போல் ஒரு செயற்கை.


இரண்டு பாறைகளுக்கு இடையில் இரு ஜோடிப்பாம்புகள் பின்னியிருந்த காட்சி அழகாகச் செதுக்கப்பட்டிருந்தது. அந்த முழுப்பாறையையும் focus செய்து(நம்மையும் சேர்த்துத்தான்), இரண்டே நிமிடங்களில் படமாய்க் கையில் தரும் புகைப்படக்காரர்கள் வசதியும் இருக்கிறது. இங்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை. அர்ஜுனன் தவம் பார்க்கும் ஆர்வத்தில் மிகவும் மெய்மறந்து விடாதீர்கள். கொஞ்சம் எச்சரிக்கையாகச் சாலையோரம் நின்றே கலையை ரசியுங்கள். மிகக்குறுகலான சாலை. பேருந்துகளும் கார்களும் அடிக்கடி வந்து போகும் சாலை. ஒதுங்கக்கூட கொஞ்சம் சிரமமான இடம்தான். குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தச் சிலை வரிசைகள் எல்லாம் பத்மசயனப் பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருந்தன. அந்தக் கோயிலுக்கு முன்புறம் தான் கார் பார்க்கிங். கோயில் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஏற்கனவே கடற்கரைக்கோயிலில் பெருமாள் பலமாக(இரத்தமெல்லாம் வரவில்லை.பெருமாள் கருணை மிகுந்தவர்) ஆசிர்வதித்திருப்பதால், மீண்டும் மீண்டும் அவரைச் சோர்வடையச் செய்ய விரும்பவில்லை.அப்பவே மணி 5.15 ஆகிவிட்டிருந்தது. 6 மணிக்கு வெளியே துரத்திவிடுவார்கள் என்பதால் பஞ்சரதங்கள் பார்க்கப் புறப்பட்டோம்.

பஞ்சரதங்கள்:
கலங்கரை விளக்கத்தைக் கடந்து கொஞ்ச நேரம் சென்றால் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த பஞ்சரதச்சிற்பங்கள் வந்து விடும். காரில் சென்றால் சற்று வெளியேவே நிறுத்தி விடுவது நல்லது. அங்கேயும் குறுகலான சாலைதான். எதிர்ப்புறம் வாகனம் வந்தால் எங்கும் விலக முடியாது. கவனம் தேவை! சிற்பம், கலைப்பொருட்கள் விற்கும் கடைகள், அரிசியில் பெயரெழுதும் கடைகள் வரிசையாகக் காட்சியளிக்கின்றன.

கடற்கரைக் கோயிலில் எடுத்த டிக்கெட்டைத் தான் இங்கேயும் காட்டி உள்ளே செல்ல அனுமதி பெற வேண்டும். 5 ரதங்களும் ஒரு பெரிய யானை சிலையும் இருந்தன. அருமையான சிற்ப வேலைப்பாடு, அழகான வடிவமைப்பு, சொர்க்கத்தில் நின்று கொண்டிருந்ததைப் போல் ஒரு உணர்வு. ஒவ்வொரு ரதங்களிலும் அமைந்த வேலைப்பாடுகள் நம் கருத்தைக் கவர்ந்தன. புகைப்படம் எடுப்பதற்கு உகந்த இடம். இந்த ரதங்களை விட பிஸியாக இருந்தது யானை தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனருகில் நின்று புகைப்படம் எடுக்க எவ்வளவு ஆவல்!(நமக்குத் தான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை). குழந்தைகளும் பெரியவர்களும் மகிழ்ச்சியுடன் வளைய வந்தது மனதிற்கு மகிழ்ச்சியளித்தது.மகேந்திர பல்லவனும் நரசிம்ம பல்லவனும் சிவகாமியும் ஆயனரும் ஒரு காலத்தில் இங்கே காலடி வைத்திருப்பார்களோ? இங்கே அமர்ந்திருப்பார்களோ? இந்தத் தூணில் சாய்ந்திருப்பார்களோ? ஆயிரம் எண்ணங்கள் மகிழ்ச்சியலைகளை மனதிற்குள் நிரப்பிக்கொண்டிருந்தன. புகைப்படங்கள் எடுத்தோம். 6 மணிக்கு விசில் அடித்து வெளியே அனுப்பிவிட்டார்கள் காவலர்கள்.


மிகச்சிறப்பான அனுபவமாக அமைந்திருந்தது. ஆனால் இன்னொரு உறுத்தல் என்னவென்றால், மாமல்லபுரத்தின் எல்லா இடங்களிலும் பெரியவர்கள் கலையை ரசித்த அளவுக்கு இந்தத் தலைமுறைப் பெற்றோர்களும் குழந்தைகளும் ரசிக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. புகைப்படம் எடுக்க மட்டும் அனைத்துக் கலைச்சிற்பங்களும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது வேதனை. புகைப்படக்கருவியின் வழியே அழகனைத்தையும் சிறைபிடித்துவிட்டு, பொறுமையாக வீட்டுக்குப்போய் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனோபாவம் மாற வேண்டும். புகைப்படம் எடுக்க மட்டுமா இந்த சுற்றுலாத்தலங்கள்? சுற்றுலாத்தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவதன்மூலம் உறவுகளுக்குள் இருக்கும் சிறுசிறு மனவிலக்கல்கள் மறையும். குடும்பத்துடன் அந்நியோன்யம் அதிகரிக்க இவை நல்ல சந்தர்ப்பங்கள். 4 சுவர்களுக்குள் அடைபட்டிருக்கும் குடும்பத்தலைவிகள், தங்கள் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு இடையில் கொஞ்சம் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியும். கணினிக்குள் கட்டுண்டு கிடக்கும் குழந்தைகளுக்கு தொழில்நுட்பம், விளையாட்டு, படிப்பு மட்டும் வாழ்க்கையல்ல, வாழ்க்கை ஆழமானது, நம்மைச் சுற்றி ரசிப்பதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன என சொல்லித்தரும் இயற்கைப்பள்ளிகள் இந்த சுற்றுலாத்தலங்கள்.

சுற்றுலாத்தலங்களையும் இயற்கையழகையும் முதலில் கண்களாலும் மனதாலும் ரசிப்போம். வாழ்க்கைச்சறுக்கல்களிலும் மனம் துவண்ட நேரங்களிலும் மகிழ்வை மறந்து போகாதிருப்பதற்காகப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வோம் - கண்களாலும் மனதாலும் ரசித்து முடித்த பிறகு. பேருந்து வசதிகளும் உணவு விடுதிகளும் நன்றாகவே இருக்கின்றன. குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கலைத்தாகத்துடனும் சென்று வரச் சிறப்பான இடம் – மாமல்லபுரம்.

1 comment:

  1. "அவர்கள் பாஷையில் குழந்தைத் தொழிலாளர்கள் என்றால், செங்கல் சுமப்பவர்களுக்கும், பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மட்டும் தானா?" - மிக்க நன்று

    ReplyDelete