Sunday, 30 December 2012

புத்தக விமர்சனம் - உயிரே உயிரே

 

"உயிரே உயிரே " புதிய தலைமுறை ஆசிரியர் திரு.மாலன் அவர்கள் எழுதிய புத்தகம். வரலாற்றில் இடம்பெற்ற காதல் சம்பவங்களின் தொகுப்பு.புதிய தலைமுறை இதழில் 2011/2012 களில்  ஒவ்வொரு வாரமும் கட்டுரையாக வெளிவந்தது. அரசியல், தலையங்கம், சினிமா, நுண் சம்பவங்கள், சிறுகதைகள் என மாலன் அவர்களின் எழுத்துக்கள் நம்மில் அநேகப்பேருக்குப் பரிட்சயம். மாலன் அவர்களின் காதல் சார்ந்த படைப்புகள் எப்படியிருக்கும் என்ற ஒரு குருகுறுப்பே போதும் இந்தப் புத்தகத்தைக் கடைக்குச் சென்று வாங்கி வர.

சிலருக்குக் காதல் ஒரு வீரம்.சோர்ந்து கிடந்த மனதிற்கு உரமூட்டி புயலனெப் புறப்பட வைக்கும். சிலருக்குக் காதல் ஒரு கோழைத்தனம். பற்பல வெற்றிகளைக் கடந்தவனையும் கால் இடறிப் பாதாளத்தில் தள்ளும். சிலருக்குக் காதல் ஒரு வேதம். ஒன்றுமறியா உயிரையும் ஓர் உன்னத நிலைக்கு உயர வைக்கும். சிலருக்குக் காதல் ஒரு வக்கிரம். அறிவின் கண்கள் அனைத்தையும் கணப்பொழுதில் பூட்டிவிடும். காதல்-மார்கழியின் பனிக்காலையில் தேநீர்க்கோப்பையின் இதம் சிலருக்கு. அக்னி நட்சத்திரத்தின் வெம்மை சிலருக்கு. காதல் ஒரு காக்டெயில். இன்பம், ஏக்கம், சோகம், கோபம், உன்னதம், இயலாமை எல்லாம் சரிபங்கு இருக்கும் அதற்குள். இன்று நேற்று இல்லை.காதலென்றால் எப்பொழுதும் இப்படித்தான் என்று அறிய முடிகிறது இந்நூல் வாயிலாக.

அழகின் வனப்பிலும், இளமையின் ஊக்கத்திலும் காதலில் விழுந்து, பின் காரணமேயில்லாமல் பிரிய நேர்ந்த காதலையும் வரலாற்றில் காண முடிகிறது. வயது மதம் தாண்டி முன் இருபதுகளும், பின் நாற்பதுகளுக்கும் முளைத்த ருட்டி-ஜின்னா  காதல், அரசியல் ஈடுபாடுகளால் அழிந்து விட்டதோவென்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, 'நான் உன்னை இன்னும் கொஞ்சம் குறைவாக நேசித்தால் ஒரு வேளை உன்னுடனேயே இருந்திருப்பேனோ, என்னவோ?' என்ற வரிகளின் மூலம் இல்லையென நிரூபிக்கின்றது. 14 ஆண்டுகளாய் தாமரையிலை நீராய் ஒட்டாது இருந்த நேருவின் காதல், கமலாவின் தைரியத்திலும், விடுதலைப்போராட்ட சுய சிந்தனைகளிலும் உடலோடு உயிராய் கடைசி வரை கலந்து நின்றதைப் படிக்கப் படிக்க சிலிர்க்கிறது. உண்மையான அன்புக்காக ஏங்கிக்கொண்டிருந்த வான்காவின் மனம், அவன் அன்புத்தேவதை 'கீ' காதலை மறுத்த போது பட்டிருக்கும் ரணத்தை உணர முடிகிறது ஆசிரியரின் எழுத்து நடையில். ஆபிரஹாம், ஜின்னா, நேரு, ஹிட்லர், மேரி, மண்டேலா, பீத்தோவன், நெப்போலியன், இந்திரா காந்தி என்று நாம் அறிந்த பிம்பங்களுக்கும் அவர்கள் கொண்ட காதலின் பிம்பங்களுக்கும் நிறைய முரண். ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது பெரும்பாலும் அனைத்துச் சம்பவங்களும்.

உயிரையும் தேசத்தையும் அதிகாரத்தையும் பெரிதாகப் பொருட்படுத்தாத காதல்கள், பிரிவின் துயரம் தாங்காது உடலை மரித்து உணர்வுகளை உயிர்த்து விட்ட காதல்கள், பாலைவன வெம்மையில் இறந்துகொண்டிருப்பவனுக்கு தொண்டையில் இறங்கிய முதல் குவளை நீராய் உயிரை உற்சாகமூட்டிய காதல்கள், சூழ்நிலைக்கைதிகளாய் சிறை பிடிக்கப்பட்ட காதல்கள், மோசமான வறுமையிலும் இம்மியளவு மெலியாத காதல்கள், அதீத அன்பும் உரிமை உணர்வும் இணைக்குப் புரியாமல் சோகமிழைத்து விட்ட காதல்கள், கட்டுப்பாடுகளைக் கடந்து தடைகளைத் தகர்த்தெறிந்துவிட்ட  காதல்கள், பாலென்று நினைத்துக் கள்ளாய் மாறிவிட்ட காதல்கள் எனக் காதலின் அத்தனை பரிணாமங்களையும் தொகுத்திருக்கும் ஆசிரியருக்கு 'சபாஷ்' சொல்ல வைக்கிறது.

மாலன் அவர்களைப் போலவே அவரின் எழுத்துக்களும் எளிமை மற்றும் ரசனைக்குரியது. ஆரம்பப் பக்கங்களைப் படிக்கும் போது, இரவில் படிக்க ஏற்றதாகச் சற்றுப் பெரிய எழுத்துரு இருந்தால் நன்றாகயிருக்கும் என்ற சின்னச்சஞ்சலம் கூட மறந்து போகிறது அடுத்தடுத்த பக்கங்களில் ஆசிரியரின் எழுத்து நடையில்.

இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் வாசகரின் இதழில் லேசான புன்னகை நிச்சயம் அரும்பும். அதில் இனிமை இருக்கலாம். சோகம் இருக்கலாம். வியப்பு இருக்கலாம். காதலின் மீதுள்ள வெறுப்பு இருக்கலாம். 'இவ்வளவு தான் காதலா' என்ற ஏக்கம் இருக்கலாம். மரியாதை கலந்த ஆசிகள் இருக்கலாம். ஆனால் இவற்றில் ஒன்று கட்டாயம் இருக்கும்.

தூங்கப்பிடிக்காத இரவுகளுக்கு இனிய துணை இந்த 'உயிரே உயிரே'

ஆசிரியர்: திரு.மாலன் 
பதிப்பு:     புதியதலைமுறை பதிப்பகம் 
விலை:    Rs.160/-

No comments:

Post a Comment