Sunday, 16 September 2012

கால்கள்

 
 
வணிக நோக்கில் வந்து 
வஞ்சம் செய்த அந்நியர்களுக்கு 
வந்தனம் செய்ய வளைந்த 
கால்கள் போன பாதையிது!

உயிரினையொரு பொருட்டாய் மதியாமல்
உரிமைப்போரில் களம் இறங்கி
உணர்ச்சிப்பிழம்பாய்   விறைத்து  நின்ற 
கால்கள் போன  பாதையிது!

தங்கத்தகட்டில் செதுக்கி வைத்து 
தாமரைப்பூவில் துடைத்து வைத்து 
தத்தித்தத்தி நடைபோடும் தளிர்பிஞ்சுக் 
கால்கள் போன  பாதையிது!

சீரும் சிறுத்தை வேகம் கொண்டு 
சீராய் நாளும் அடியெடுத்து 
சிட்டாய்ப் பறக்கும் பள்ளிச்சிறார்கள் 
கால்கள் போன  பாதையிது!

ஓய்வு அறியா உழைப்பினாலே 
ஓய்ந்து கிடந்த மனதிற்கு உரமூட்டி 
விடியும்விடியுமென உயிர்த்துநின்ற வீணாசைவிவசாயிகளின் 
கால்கள் போன  பாதையிது!

குடியைக் கெடுத்த குடிமகன்களின்
குடும்பத்தலைவிகள் விதியை நொந்து
வீடுவீடாய் வேலைபார்த்து ஓய்ந்துதிரும்பும் 
கால்கள் போன  பாதையிது!

கள்ளமில்லா உள்ளம் படைத்தும்
கடவுளவன் கஞ்சத்தனத்தினால் குறைகொண்டு
பிறந்திருந்தும் குணம்குறையா வல்லவர்களின் 
கால்கள் போன  பாதையிது!

ஆணாதிக்க சமுதாயத்தின் 
ஆணிவேர்களை அகற்றிடவே 
அடியெடுத்து முதல் வைத்த பெண்ணவளின் 
கால்கள் போன  பாதையிது!

திசைதெரியாமல் திணறித்திரியும் 
கால்களே! கேளுங்கள்!
பாதைகள் பலப்பல ஆயினும் 
சென்று சேரும் இடம் ஒன்றுதானென அறியுங்கள்!

முன்னேற்றப்பாதையில் முனைந்திருக்கும் 
கால்களே! கேளுங்கள்!
வீட்டை மட்டும் உயர்த்தவல்ல -
நாட்டையும் உயர்த்த நடைபழகுங்கள்!

நேரத்தின் சிறகிலேறிப்பயணிக்கும் 
கால்களே! கேளுங்கள்!
ஓட எத்தனிக்கும் முன்
உறுதியாய் நிற்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

முட்டி மோதிப் போராடும் 
கால்களே! கேளுங்கள்!
மனிதமென்ற நேர்பாதையில் செல்லுங்கள்!
வெற்றித்திருமகள் காத்திருப்பாள் விழிநிறைத்து வரவேற்க!

1 comment: