Sunday, 16 September 2012

மகள்

வெற்றுநிலத்தில் பூத்திட்ட என் சிறு செடியே!
வேராய் இருந்து எந்தன் உயிர்க்கொடி காத்தவளே!
மலடென்ற பெயர் மாற்றி மறுவாழ்வு தந்தவளே!
மகிழ்ச்சி என்பதை முதன்முதலாய் அறிமுகம் செய்தவளே!


கண்கொண்டு இவள்பார்க்கும் போதே கவலைகள் பறக்குதடி!
கட்டிக்கரும்பு வாய்நீரில் அமுதம் மணக்குதடி!
வெண்கலமணிச் சிரிப்பினிலே வேதங்கள் பாடம் படிக்குதடி!
வெண்ணெய் தின்ன கண்ணனவன் பெண் அவதரமடி!

சுடுநீர் கூட வைக்கத் தெரியாது 
சுட்டுப்பட்டு அந்தப் பக்கம் வருவதே கிடையாது 
சுடச்சுட வைதாலும் காதில் போகாது
சும்மா கிடவென புதுத்தத்துவம் பேசுவாயே என் மகளே!

என்ன செய்கிறாயோ புகுந்த வீட்டில் 
என்றெண்ணி ஓடி வருவேன் என் மனம் கேளாமல்;
எப்படியடி கற்றுக்கொண்டாய் எல்லா வித்தைகளையும்
என் அம்மா கைமணம் மாறாமல் அப்படியே!

அவர்கூட சண்டையென்பது உன் 
அழகு விழியில் தெரிந்து விடும்;
அப்படியும் சொல்ல மாட்டாய் 
அம்மா மனம் வாடுமென்று !

என் கண்ணீர் கணம் தாளாமல்
நெஞ்சோடு அணைத்துக் கொள்வாயே!
பெற்றதனால் மகளானாயோ! - இல்லையெனைப் 
பெற்றவளே மகளானாயோ!!

1 comment: