Thursday, 11 April 2013

அன்றொரு நாள் அதே நிலவில் - 2

தேவி பள்ளிக்கூடம் விட்டு வருவதற்குள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க வேண்டும். அதற்குள் வந்துவிட்டால் சேட்டை செய்ய ஆரம்பித்து விடுவாள்.

'இந்தாம்மா! காபி குடி'

'தேங்க்ஸ் அத்தை'

'முடிஞ்சதா'

'இன்னும் இந்த செல்ஃப் மட்டும் தான்'

'தேவி வரைந்த பேப்பரா தான் இருக்கும் இது முழுக்க'

'ஆமாத்தை. நாய்க்குட்டி..நல்லா கிறுக்குது'

இன்னும் தேவிக்குட்டிக்குப் பென்சிலைச் சரியாகப் பிடிக்க வரவில்லை. அதற்குள் என்னவெல்லாம் முயற்சிக்கிறாள். யானை, குதிரை, பேய், பென்-10 என்று. பள்ளி விடுமுறையென்றால் கலர் பென்சிலும் கையுமாகத் தான் இருப்பாள். நிலா வரைய முயன்றிருக்கிறாள். கோழி முட்டையை உடைத்து வைத்தது போல் இருந்தது.

அருணாவுக்கும் அப்படித் தானோ? நிலவென்று நினைத்து ரசித்திருந்தது, கடைசியில் கோழி முட்டையாக ஆகியிருந்தது.

பொறியியல் இளங்கலைப் படிப்பு முடித்த கையுடன் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

'பிறந்தோம். படித்தோம். திருமணம் செய்தோம் என்றெல்லாம் இருக்க முடியாது. எனது கனவுகள் வேறு. லட்சியங்கள் வேறு. கட்டாயப்படுத்தாதீர்கள்' - தீர்க்கமான வாதம். மூன்று ஆண்டுகள் எடுபட்டது - அதாவது அப்பாவிற்கு முதல் மாரடைப்பு வரும் வரை. அன்று முதல் குடும்பத்தில் அவள் முற்போக்கு எண்ணங்கள் பிடிவாதங்களெனப் பெயர் சூட்டப்பட்டன. கருத்துக்கள் திமிராய்த் திரிந்தன. கடைசியில் அவள் தான் இறங்கி வர வேண்டியிருந்தது.

நல்ல கலர். ஆறு இலக்கச் சம்பளம். அமெரிக்க மாப்பிள்ளை. திருமணத்திற்குப் பின் இங்கே - சென்னையில் செட்டில் ஆவதாய் முடிவு. தலையை ஆட்ட வைத்தது குடும்பச் சூழ்நிலை.

ஜிமெயிலில் 'சேட்'டினார்கள். ஸ்கைப்பில் சில நேரம் வீடியோ கால். அருணாவை விடக் கொஞ்சம் மார்டன். பிடிக்கவில்லை என்று சொல்லக் காரணங்கள் இல்லை. பிரசாத்தை ரசிக்க ஆரம்பித்திருந்தாள் - அது காலத்தின் கட்டாயமாகக் கூட இருந்திருக்கலாம். பொதுவாகத் தமிழ்ச் சூழலில் கணவனை மனைவிக்குப் பிடிக்க வேறு என்ன சிறப்பான காரணங்கள் வேண்டும்? அவன் 'கணவன்' என்பதே போதுமல்லவா? அப்படித் தானே பழக்கி வைத்திருக்கிறார்கள் நம் பெண்களை!

ஏகப்பட்ட முரண்பாடுகள் அவர்களுக்குள். அவள் சித்தாந்தங்களை ஆழமாகச் சீண்டாத வரை விட்டுக் கொடுத்திருந்தாள். சுடிதார் ஜீன்ஸ் ஆனது. தலைப் பின்னல் 'V' கட் ஆனது. விஜய் டீவி ஸ்டார் சீரிஸுக்குப் போனது. புளி சாதம் பீசாவானது. அவனுக்கு இது போதவில்லை. அவன் ரசிக்கும் 'பப்'கள் இவளுக்கு அலர்ஜித்தது. 'மாட்டேன்' என்று சொன்ன போது 'பட்டிக்காடு' என்ற வசையாடல்கள். ரசிக்க 1000 இருக்கிறது என்ற உபதேசங்கள்.

'நீங்க எவ்ளோ தான் சொன்னாலும் என்னால முடியாது பிரசாத். அந்தக் கலர் கலர் லைட். எல்லார் கையிலும் மதுப்புட்டி. மங்கிய வெளிச்சம். நீங்கள் ரசிக்கலாம். என்னால் முடியவில்லை பிரசாத். கட்டாயப்படுத்தாதீர்கள். நீங்க போய்ட்டு வாங்க. நோ ப்ராப்ளம். என்னைக் கூப்பிடாதீர்கள்'

'சோ, நீ வர மாட்ட?'

'நோ டௌட்'

'வந்துதான் ஆகணும்னு சொன்னா?'

அவனின் இந்தக் கேள்வியில் அதிர்ந்துதான் போய் விட்டாள். அவனுக்கு இப்படியொரு ஆணாதிக்க முகமிருக்கும் என்று இது வரை அவள் யோசித்தது கூட இல்லையே!

'கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று சொல்ல வேண்டியிருக்கும் - கணவன் என்ற போதிலும். எது வசதி?' - வார்த்தைகள் கொஞ்சம் சூடாகத் தான் வந்து விழுந்தன.

அதன் பிறகு இதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. அவன் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் இருந்தது.

ஹனி..குட் மார்னிங் ஸ்வீட்டி..பை டியர்..செல்லக் கொஞ்சல்கள் குறைந்திருந்தது. அவ்வப்போது சின்னச் சின்னதாய் பிரச்சனைகள். முடிவு காணாமலே முடிக்கப்பட்டிருந்தது - சில நேரம் இவர்களால், சில நேரம் அவன் அம்மா தலையீட்டால்.
அந்த நேரத்தில்தான் தேவி ஜனித்திருந்தாள். 'எல்லாம் சரியாகி விடும்' என்று நம்பிய இரவுகளில் ஏமாந்ததால் விளைந்த குழந்தை.

நிறைய மாறியிருந்தது. ஆனால் எல்லாமே எதிர்த்திசையில். அருணா பிரசவம் முடிந்து அம்மா வீட்டில் 3 மாதம் தங்கியிருந்து, திரும்பி வருவதற்குள் அவன் அந்நியனாகியிருந்தான். 'ரீட்டா' வின் பழக்கம் வேறு. சந்தேகிக்காத அளவுக்கு அவன் நடந்து கொள்ளவில்லை. விசாரித்தார்கள். சந்தேகம் சரியென அவனே ஒப்புக் கொண்டிருந்தான் - சிறிதும் குற்ற உணர்ச்சியில்லாமல்.

அன்றைக்கே தாய் வீடு திரும்பியிருந்திருப்பாள் - அந்த அத்தை மட்டும் அப்படி அழுது மயங்கி விழாமல் இருந்திருந்தால்; பாவம், பிரசாத்துக்கு 3 வயது இருக்கும் போது விபத்தில் மாமா இறந்து போக, ஒற்றை மனுஷியாய் இவ்வளவு தூரம் வளர்த்திருக்கிறாளே, அந்த மரியாதைக்காக அங்கேயே தங்கும் படி ஆனது. ஆம்.தங்கும்படி தான். வாழும்படி இல்லை.

***

'தேவிக்குட்டி..இந்தா இந்த ட்ரெஸை மாத்திட்டு பாட்டி கூட இரு. சேட்டை பண்ணாம சமத்துப் பிள்ளையா இருக்கணும். சரியா?'

'என்னம்மா! தலை வலிக்குதுன்னு தானே ஆபிஸ்க்கு லீவ் போட்ட? வெளில போய்ட்டு வந்தா இன்னும் கஷ்டமால்ல இருக்கும்?'

'பரவாயில்ல அத்தை. ஒரு முக்கியமான வேலை. போய்த்தான் ஆகணும். வர கொஞ்சம் லேட் ஆனாலும் ஆகும். டின்னடர்க்கு வெயிட் பண்ண வேண்டாம்த்தை'

அவள் ஸ்கூட்டி மெரினா பீச் நோக்கிப் பறந்தது.

(தொடரும்)

அன்றொரு நாள் அதே நிலவில் - 1

சுற்றியிருந்த மேகப் போர்வையை மெல்ல விலக்கி எட்டிப் பார்த்து நிலா. சூரியன் கிளம்பிக் கொண்டிருந்தான். பால் வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு, பணியைத் தொடர வந்தது நிலா. அதற்குத் தெரியும் இன்று அவர்கள் வாழ்வின் முக்கிய நாள் என்று.

***
'காற்றின் வழி தூது. உங்கள் கானக்குயில் 90.4கோடு. இன்றைய 'இளையதேசம்' நிகழ்ச்சியில் கருத்துரைத்த அன்பு உள்ளங்களுக்கும் கேட்டுச் சுவைத்த நேயர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். மீண்டும் சந்திக்கலாம் நாளை மாலை 5 மணிக்கு. சுகந்த வணக்கங்களுடன் உங்கள் சுதர்சன்.நன்றி நேயர்களே!'

'சுதர்..ஒன் அவர் வெயிட் பண்றயா? புரோக்ராம் முடிச்சுட்டு நானும் வந்துடறேன்.'

'சாரிடா மச்சி..ரூம்க்குப் போகல. மெரினா பீச் போறேன்'

'பீச்சுக்கா? என்னடா..உனக்கும் சுண்டல் சாப்பிட ஆசை வந்துருச்சா?'

'ஆமாடா..ஆசை தான்..அருணாவுடன் சாப்பிட ஆசை'

'கேரி ஆன் டா..ஆல் தி பெஸ்ட்'

'பை மச்சி'

அதிசயமாகத் தான் இருந்தது, அன்று பேருந்தில் இரண்டு காலும் வைத்து நிற்க இடம் கிடைத்தது. இதே போலொரு பேருந்துப் பயணத்தில் தான் அருணாவை முதன்முதலில் பார்த்தான். 6 மாதங்கள் பின்னோக்கிச் சென்றது அவன் நினைவுகள்.

4 மணியாகியும் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த முன்மாலை நேரம் அது. தீபாவளி சிறப்புப் பேட்டிக்காக அந்தப் புகழ் பெற்ற எழுத்தாளரைச் சந்தித்துத் திரும்பிக் கொண்டிருந்தான். அரை மணி நேரப் பேட்டிக்கு ஆயிரம் முறை அலைந்தாயிற்று. கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கும். அந்த தெய்வம் வண்டி பஞ்சரையும் சேர்த்துக் கொடுத்தது. பேச்சுக் கலை, குரல் வளம், அறிவுத் திறன் இருந்தும் என்ன பிரயோஜனம்? நம் சுதர்சன் சர்க்கஸும் கொஞ்சம் கற்றிருக்கலாம். பேருந்தில் ஏறுவதற்குள் பெரிய பாடாய் அல்லவா இருக்கிறது? ஒரு வழியாக கூட்டம் குறைந்த பேருந்தில் ஏறி, மிச்சமிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். பக்கத்தில் பள்ளிக்கூடச் சிறுவன்.

அடுத்த நிறுத்தத்தில் கைப்பையுடன் நீல நிறச் சுடிதார் சகிதம் அவள் ஏறினாள். அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது. சுதர்சனருகில் வந்து லாவகமாகக் கம்பியைப் பிடித்து நின்று கொண்டாள். துப்பட்டா காற்றின் வேகத்திற்கு பறந்து அவன் முகத்தில் மோதியது. 

'சாரி..சாரி' - கெஞ்சலுடன் துப்பட்டாவைப் பிடித்து சொருகிக் கொண்டாள்.

டிக்கெட்டுக்குப் பணம் எடுக்க கைப்பையைத் திறக்கும் போதும் துப்பட்டா பிடி நழுவி அவன் முகத்தை வருடியது.

மீண்டும் சாரி.

'ப்ளீஸ்..உக்காருங்க மேடம் இந்த சீட்ல'

'பரவாயில்ல சார்'

'கஷ்டப்படுறேங்களே! நான் நின்னுக்கறேன்! நீங்க உக்காருங்க!'

'பரவாயில்ல.தேங்க்யூ!'

'பாவம் பொம்பளைப் பிள்ள நீங்க!'

'சோ வாட்?'

'ரொம்ப நேரம் நிக்க கஷ்டமாயிருக்கும்ல?'

'சோ, நீங்க ஒரு இளக்காரத்துல தான் உக்காரச் சொல்றேங்கன்னு எடுத்துக்கலாமா?'

'இதுக்குப் பேரு இளக்காரம் இல்லைங்க. கருணை'

'அது ஏன் பெண்களைப் பார்த்தா மட்டும் வருது?'

'அன்பு தான்'

'இதுக்குப் பேரு அடக்குமுறை மிஸ்டர்........'

'சுதர்சன்'

'உங்களை விட எங்களைத் தாழ்வாக நினைப்பதால் வரும் ஆதிக்கம்ன்னு சொல்லலமா? உங்களை விட உடல் வலுவில் நாங்கள் சில விஷயங்களில் குறைவானவராக இருக்கலாம். ஆனால் இப்படி எங்களால் சொந்தக் காலில் நிற்கக் கூட முடியாது என்று எண்ண வேண்டாம் மிஸ்டர்.சுதர்சன்'

'சின்னச் சலுகை காட்டியது தப்பா?'

'ஆம் தப்புத் தான். சலுகைகள் எங்கு அறிமுகமாகிறதோ அங்கு தான் அடக்கு முறையும் உன்னை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணமும் சலுகை தருபவர்களிடம்  வருகிறது என்பது என் கருத்து'

'...'

என்ன மாதிரிப் பெண் இவள்? இதன் பெயர் தன்னம்பிக்கையா? திமிரா? ID கார்ட் IT நிறுவனத்தில் பணி புரிகிறாள் என்று சொல்கிறது. சாரியோ, நன்றியோ, எதிர்ப்போ கண்ணைப் பார்த்து பேசும் வலிமை. முகம் நிறைக்கும் அமைதி. பூவா புயலா என யோசிக்க வைக்கும் இதழ்கள்.  என்ன மாதிரிப் பெண் இவள்? சண்டைக்காரியா? தெளிவான சிந்தனைக்காரியா?

யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் இருக்கைக்கு வலப்புற இருக்கையில் அவளுக்கு இடம் கிடைத்தது.

எது எப்படியாயினும் மீண்டும் சென்று பேச வேண்டும் எனத் தோன்ற வைக்கும் கேரக்டர்.

'மேடத்துக்கு குத்துச் சண்டை தெரியுமா?'

சின்னச் சிரிப்புடன் இயல்பாக அவன் கேட்டது சூழலை லேசாக்கியிருந்தது.

'எக்சேக்டா தெரியாது. பிரச்சனையென்றால் தற்காத்துக் கொள்ளத் தெரியும்.' - 'ஏன் கேட்கிறாய்' என்பது போலப் புருவச் சுளிப்பு.

'இல்லை. மேரி கோம் சிஸ்டர் உங்க பேர் 'யூரி கோமா' என்று கேட்க நினைத்தேன்'

'ஹ..ஹா..எவ்வளவு நாசுக்காகப் என் பேரென்ன என்று கேட்கிறீர்கள் சுதர்சன்.ம்..பத்திரிக்கைக்காரரோ?'

'இல்லை.கானக்குயில் பண்பலையில் RJ'

'ஓ! 'இளையதேசம்' சுதர்சன்?'

'யெஸ்'

'அப்பொழுதே நினைத்தேன்..கேட்ட குரலாக இருக்கிறதே என்று'

'என்ன அதிசயம்?'

'என்ன?'

'இந்த இதழ்களுக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா?

'ஏன்? ஐயாவுக்கு பேருந்தில் நிற்க முடியாமல் அழும் பெண்கள் தான் தெரியுமோ ?சிரிக்கும் பெண்களைப் பார்த்ததே இல்லையோ?'

'சிறு திருத்தம்..சிரிக்கும் சிலைகளைப் பேருந்தில் பார்த்ததில்லை'

'அடடா..குத்துச் சண்டை படித்தால்தான் சரியா வரும் போல!'

'ஹ..ஹா..இல்லை இல்லை'

'சரி..என் ஸ்டாப் வந்து விட்டது..பார்க்கலாம்'

'அடுத்த ஒலிம்பிக்கிலா?

'ஹ..ஹா..மறக்க மாட்டீர்கள் போல?'

'நிச்சயமாக'

'அருணா'

'ஸ்வீட் நேம்'

'சி யூ'

'பை'

சில நாட்கள் கழித்து 'இளையதேசத்தில்' பேசினாள். செல்போன் வழி ஆரம்பித்த நட்பு. ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள். காலத்தின் ஓட்டத்தில் காதலாய்க் கனிந்திருந்தது இவனுள். இது அவளுக்குத் தெரியாது என்றில்லை. யதார்த்தமாக வெளிப்படுத்தியுமிருந்தான். யோசிக்கக் கொஞ்ச நாள் வேண்டுமென்றாள். சரியென்றுதான் இவனுக்கும் பட்டது.

திருமணத்திற்குப் பின் தேவி அவனுடன் இருப்பதில் அவனுக்கு ஒன்றும் கஷ்டமில்லை. இன்னும் சொன்னப் போனால் மகிழ்ச்சி தான். அருணாவைப் பார்ப்பதற்கு முன் அப்படித் தானே நினைத்திருந்தான்!

இன்று அருணா கடற்கரைக்கு வரச் சொல்லியிருக்கிறாள் இது பற்றி பேசுவதற்கு. என்ன சொல்லப் போகிறாள்? மனது கேட்டது இவனிடம்.

அவனைப் பார்த்து நிலவு புன்னகைத்தது - பேருந்தின் ஜன்னல் வழி.

(தொடரும்)

Friday, 29 March 2013

கதவுகள்



காத்திருப்பின் குறியீடு - கதவுகள்;
கால்கடுக்கக் நிற்கிறேன் அதன் முன்னே!

கனக்க வைக்கும் கணங்கள் இவை!
நிராகரிப்பின் பிள்ளையார்சுழி இந்நிலை!

காயங்களைத் தடவிப்பார்க்கிறேன்
காலக்கனப்பில் கசப்பாகியிருந்தது!

இது மட்டும் நடந்து விட்டால்......
கற்பனை சுகத்தில் விரிகிறது இதழ்!

நடக்காவிட்டால் என்ன செய்வாய்?
வேதனைச் சூட்டில் சுருங்குகிறது மனது!

ஒன்று போனால் மற்றொன்று - நிமிர்கிறேன்
ஆதர்ஷ எழுத்தாளனின் வாசகனாய்!

மற்றொன்று எப்பொழுது - குலைகிறேன்
ஒரு யதார்த்தத்தின் நேசகனாய்!


காத்திருப்பின் குறியீடு - கதவுகள்;
கால்கடுக்கக் நிற்கிறேன் அதன் முன்னே!



அறுவடைக் காலம் (5 வரிக் கதை)



அப்பா அப்பா, சித்தின்னா எப்டி இருப்பாங்க?

ஷு..சும்மா கெட..தொணதொணன்னு....

.......

ப்ரியா ப்ரியா, அந்தப் பையன் யாருமா?

ஷு..சும்மா கெடங்கப்பா..தொணதொணன்னு....

என் அறுவடைக் காலம் ஆரம்பமாகியிருந்தது.