வாவ்! எங்க காலெஜ்ல Graduation Day சமீபத்தில் நடந்தது போல! தம்பி தங்கைகள் எல்லாம் போட்டோ அப்லோட் பண்ணிருக்காங்க. பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னோட Graduation Day வுக்கு மனசு போகிறது.
2011இல் பட்டம் வாங்கினேன். அப்பா மட்டும் உடன் வந்திருந்தார். என் தங்கை அப்போ பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அம்மாவால் வர முடியவில்லை. ஊரிலிருந்து கிளம்பும் போது அது குறித்துப் பெரிய மன வருத்தம் இருக்கவில்லை. ஆனால் அங்கு என் நண்பர்களெல்லாம் அம்மா அப்பாவுடன் வந்த போது, என் அம்மாவும் வந்திருக்கலாமோ என்று தோணியது.
வரிசையாக நம்பர் பிரகாரம் சீட் போட்டு வைத்திருந்தார்கள். எப்பவும் எனக்கும் என் முந்தைய நம்பர்காரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டேயிருக்கும். கிட்டத்தட்ட 4 வருடங்கள் முழுவதும் லேப், எக்ஸாம், லொட்டு லொசுக்கு அனைத்திலும் ஒரே டீமில் இருந்த போதும் நட்பாய் ஒருகணமும் உணர்த்திடாத ஒருவன். அன்பாய்ப் புன்னகைத்ததில்லை. 'என்ன ரீடிங்?' என்பது தவிர லேப்பில் பெரிதாய் ஒன்றும் பேசியதில்லை. 4 வருட காலேஜ் வாழ்க்கை முழுமையும் எவனோ ஒருவன் என்ற கதியில் போனால் கூட பரவாயில்லை, முறைப்பும் முனைப்புமாய்ப் போன தருணங்களும் இருந்தன.
அதெல்லாம் Graduation Day அன்று போன இடம் தெரியவில்லை. பார்த்த மாத்திரத்தில் 'வாங்க, எப்போ வந்தீங்க' என்று சகஜமாய்ப் புன்னகைக்க முடிந்தது. வேலை, குடும்பம் என்று மேலோட்டமாய்க் கேட்க முடிந்தது. முடிந்து போன பிறந்த நாள்களுக்கும் இனி வரும் வெற்றிகளுக்கும் வாழ்த்துச் சொல்ல முடிந்தது. ஒரே வருடத்தில் பழைய கசப்புகள் எல்லாம் எப்படி மறந்ததோ? முதிர்ச்சி என்பது அவ்வளவு சீக்கிரத்தில் வந்து விடும் ஒன்றா என்ன! காலத்திற்கு எத்தனை கண்கள்? நேற்றுப் பார்த்த மனிதன் மறுநாள் எவ்வளவு வித்தியாசப்பட்டு நிற்கிறான்!
பேர் சொல்லி மேடைக்கு அழைத்தார்கள். போனேன். அவசர கதியில் ஒரு மென்புன்னகை. சர்டிஃபிகேட் அடங்கிய ஃபைல் கையில் பட்ட கணத்தில் உடம்பெல்லாம் ஒரு மெல்லிய நடுக்கம் விஸ்தரித்தது. அதையும் அந்தக் கேமரா படம் பிடித்திருக்குமா? இருக்காது. அறிவியல் சாதனங்களுக்கு மூளை உண்டு. இதயம் கிடையாது. இந்தப் பேப்பருக்காக, இந்த மேடைக்காக, இந்த தருணத்திற்காக எதையெல்லாம் கடந்து ஓடி, அடிபட்டு, மிதிபட்டு, இளைப்பாறி, ஜெயித்து......ஷப்பா......கண்கள
மேடையை விட்டு இறங்கியதும் அப்பாவிடம் ஓடினேன். அடேயப்பா! அப்பா அமர்ந்திருந்த இடம் இவ்வளவு தூரமாகவா இருந்தது? ஒன்றும் பேசவில்லை. அப்பாவின் கையில் ஃபைலைக் கொடுத்தேன். இறுக்கமாய்க் கட்டிக் கொண்டேன். அழுத்தமாய் அவர் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தேன்.
"அப்பா! நீ ஜெயிச்சுட்டப்பா! நீ ஜெயிச்சுட்டப்பா! உன் மகள் இனி இன்ஜினியர்!
எந்த நாயும் "என்னத்த வச்சு படிக்கப் போடுவ?" என்று இனி கேட்காது.
"கடன் கட்ட முடியாட்டி கழுத்தில் துண்டப் போட்டு இழுப்பேன்", என்று சொல்லும் எந்த மேனேஜர் முன்னும் நீ தலை குனிய வேண்டியதில்லை.
"பொம்பளப் புள்ளயப் படிக்கப் போட்ற, ஊடாலயே காதல் கீதல்ன்னு ஓடிட்டா என்ன செய்வ? பார்த்துச் செய்யி", என்று என் கற்பை வார்த்தைகளால் சிதைக்கும் வாய்கள் இனி உன்னைப் பார்த்துத் திறக்க முடியாது.
இன்று முதல் நானொரு இன்ஜினியர். என் பேருக்குப் பின்னால் நீ மட்டும் தனியாளாய் நின்று வாங்கித் தந்த பட்டம். யாராலும் அழிக்க முடியாத ஒரு பட்டம். உன் உழைப்பனைத்தையும் உறிஞ்சி வைத்துக் காப்பாற்றி வைத்திருக்கும் பட்டம்.
இனி உன் தலைமுறை படித்த தலைமுறை.
கூலிக்காரன் மகள் ஒரு இன்ஜினியர்.
இனி என் தலைமுறை முழுக்கவும் மிக சாதாரணமாக இன்ஜினீயர்களும், டாக்டர்களும் இன்ன பிறவுமாக படித்த பட்டாளம் வரப் போகிறது.
உன்னைப் போல, அம்மா போல, இனி யாரும் தன் அம்மாவுக்காக, தம்பிக்காக என்று தன் படிப்பைத் தியாகம் பண்ண வேண்டியதில்லை.
உன்னைப் போல விபரம் தெரிந்த நாளிலிருந்து கடைசி வரைக்கும் ஓயாமல் ஓட வேண்டியதில்லை.
அப்பா! நீ நிச்சயமாய் ஜெயிச்சுட்ட!" - என்று அந்த அரங்கு அதிரக் கத்த வேண்டும் போல இருந்தது.
ஆனால் இதையெல்லாம் வார்த்தைகளில் சொல்லத் தான் வேண்டுமென்று என்ன அவசியம்? இதெல்லாம் புரியாமலா என் தலையில் கை வைத்து ஆசிர்வதித்துச் சொன்னீர்கள் 'சந்தோஷம்டா' என்று..
உள்ளம் கனிந்திருந்த நேரம் அது. ஒவ்வொரு தோழமைகளுடனும் அன்பைப் பகிர்ந்து கொண்டு, 'இனி பார்க்கவே முடியாதுல' என்ற நெருங்கிய நட்புகளின் கேள்விகளைக் கண்ணீரால் தவிர்த்துக் கொண்டு, அடுத்த வாய்ப்பு ஒன்று வரும் என்று பொய்ச் சமாதானம் கூறிக் கொண்டு, காட்டிய கடைசி டாட்டாவும், கிட்டிய கடைசி ஹக்கும்......ம்ஹும். காலத்தால் அழிக்க முடியாதவைகள் என்று சில தருணங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கின்றன.