Thursday, 11 April 2013

அன்றொரு நாள் அதே நிலவில் - 3


பிரசாத்தின் சேம்சங் க்ராண்ட் சிணுங்கியது.

'ஹாய்..ஸ்வீட்ஹார்ட்'

'எங்க இருக்கேங்க பேபி?'

'வீட்ல'

'எப்போ டார்லிங் இங்க வருவேங்க? நான் அப்பவே வந்துட்டேன்'

'வித் இன் 30 மினிட்ஸ் ஐ வில் பி தேர் டியர்'

'ம்..ஒகே..தென்?'

'தென், உனக்கொரு கிஃப்ட் இருக்கு டுடே'

'ஓ! இஸ் இட்? என்ன?'

'கெஸ் இட்'

'ரிங்?'

'நோ'

'ரோஸ்'

'நோ'

'க்ரீட்டிங்க்ஸ்'

'சில்லி'

'சாக்லேட்ஸ்'

'ம்ம்ஹும்'

'ஹே.............நாட்டி'

'அதுவும் இல்ல'

'தென், வாட்?'

'தேட் இஸ் சஸ்பென்ஸ்..பீச்சில் வச்சு தான் தருவேன்'

'ஓகே ஹனி..சி யூ.வெய்ட்டிங் ஃபார் யூ'

'ஷ்யர்டா..லவ் யூ ஸ்வீட் ரீட்'

'மி டூ பிரசாத்'

டீவியை அணைக்க ரெமோட் எடுத்தான். 'மூன் வாக்' பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சம்பந்தமில்லாமல் 5 வருடங்களுக்கு முந்தைய நினைவுகள் அவன் மனதில் நடை போடத் தொடங்கின.

***

'அம்மா..முடியாது போம்மா!'

...

'நோ'

...


'தமிழ்நாட்டிலா? அதுவும் சென்னையிலா? சான்சே இல்ல!'

...

'அம்மா! நான் சொல்றதக் கொஞ்சம் கேளு'

...

'எத்தனை தடவ தான் நான் சொல்றது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோயேன்'

...

'அம்!!!!!!'

...

இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. 

ஏன் இந்த அம்மாக்கள் இன்னும் மாறவே இல்லை. கல்யாணம் பண்ணச் சொல்லிக் கழுத்தருக்கிறார்கள். மாதாமாதம் பணம், வீட்டுக்கு வேண்டிய பொருட்கள், பார்த்துக்க வேலையாட்கள், வசதியான வாழ்க்கை. இதை விட என்ன பெரிதாய் வேண்டும்? ஜாலியாக வாழ வேண்டியது தானே? இதை விட்டு விட்டு கொள்ளி வைக்க பேரன், ஜல்லி கொட்ட மருமகள் என்று ஒரே ரோதனையாக இருக்கிறது. எரிச்சலில் அடித்த ஜின்னும் ஜீவ்வென்று இறங்கியிருந்தது அவனுக்கு.

மறுநாள் அருணாவென்ற பெயர் தாங்கியபடி போட்டோ மெயிலில் வந்தது. லட்சணமான முகம், விற்புருவம், செதுக்கி வைத்தது போல் மூக்கு, அளவாய் சிரித்த இதழ்கள், ஸ்காட்சில் ஐஸ் துண்டு தெறித்தது போன்ற கன்னக்குழி - நிச்சயமாய் அழகி தான்! கலர் மட்டும் அவனை விடக் கொஞ்சம் கம்மி.

'இங்கேயே வந்து விடு'. அம்மாவின் அழுகையில் இதுவும் ஒன்று. கடைசியில் வேறு வழியில்லாமல் அவள் அழுகை தான் ஜெயித்தது.

முதல் கொஞ்ச நாட்கள் அவளை ரசிக்கத்தான் செய்தான். விருந்து மருந்தெல்லாம் முடிந்த பின், 'இவள் எனக்கேற்றவள் இல்லையோ' எனத் தோணத் தொடங்கியது. IT பார்க்கில் வேலைக்குப் போகிறாள். அதென்ன அசிங்கமாய் சுடிதார் போட்டுக் கொண்டு. ஜீன்ஸ் தான் போடேன். சொன்னவுடன் நிற்காமல் எடுத்தும் கொடுத்தான். இப்படி மாற்றிய பட்டியல் பெரிது.

நிறைய மாறியிருந்தும் இன்னும் இடைவெளி இருப்பதாகவே அவனுக்குப் பட்டது.

ரொம்பப் பழசாய் இருக்கிறாளோ?

இன்னும் திருக்குறளும், பாரதியும் படித்துக் கொண்டு.

சே குவாரா தெரிகிறது. கார்ல் மார்க்ஸ் தெரிகிறது. ஹாரி பாட்டர் தெரியவில்லையே?

'பப்' வருவதற்கு ஏன் இப்படிச் சண்டை பிடிக்கிறாள்? நான் என்ன அவளைக் குடிக்கவா சொன்னேன்?

இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே கோபம் தலைக்கேறியது.

அன்று என்ன வார்த்தை சொன்னாள்? ராட்சசி! நினைவுகளில் தோய்ந்தான்.

'இது தான் உங்க முடிவா பிரசாத்?'

'ஆமா'

'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே?'

'என்னன்னு?'

'அமெரிக்கா திரும்ப போகணும்னு சொல்றேங்கல்ல! அதைப்பற்றி'

'இங்க பாரு அருணா! நான் முடிவு பண்ணிட்டேன். எனக்கு இங்க ஒத்து வரல. இந்த க்ளைமேட், ட்ராஃபிக், கரண்ட் கட், மனிதர்கள், அழுக்கு எதுவுமே பிடிக்கல. என்னால இங்க இருக்க முடியாது'

'அதை இப்போ சொன்னா எப்டி? இங்க செட்டில் ஆக ஒத்துக்கிட்டு தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேங்க? இப்போ இப்டி சொன்னா என்ன பண்றது? அதுவும் இந்த மாதிரி சமயத்துல, அம்மா இல்லாம நான் என்ன பண்ண முடியும் பிரசாத்?'

'அதெல்லாம் எனக்குத் தெரியாது. இங்க வர்றதுக்கே மனசில்லாம தான் வந்தேன். ஈவன் உன்னை கட்டிக்கிட்டது கூட! இதுக்கு மேல ரெண்டையும் என்னால பொறுத்துக்க முடியாது'

அவன் வார்த்தை முடிவதற்குள் அவள் இதயத்திற்குள் அவனுக்கென - அவனுக்கு மட்டுமென எழுப்பிய கோட்டைகள் இடிந்து விழுந்தன.

யார் யாரோ சமாதானம் பண்ணிப் பார்த்தார்கள். அவன் அமெரிக்கா திரும்பும் முடிவில் எந்த மாறுதலுமில்லை.

'வேணும்னா அவளையும் கெளம்பச் சொல்லுங்க. கூட்டிடுப் போறேன். உங்க இந்தியாவை விட அங்கு ஆஸ்பத்திரிகள் அதிகம் தான். அங்கேயே குழந்தை பெத்துக்கலாம். அடுத்த லீவ்ல கூட்டிட்டு வரேன்'

'இவன் என்ன எனக்குப் பிச்சை போடுவது? பொறுக்க முடியாது என்று சொன்ன பின் எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு கூட்டிட்டுப் போறேன் என்கிறான்? பெண்ணென்றால் அவ்வளவு இளப்பமாய்ப் போய் விட்டதா?' - விம்மிப் புடைத்த கேள்விகள். கேட்க முடியாத சூழ்நிலை. இவள் இப்பொழுது தனியாள் இல்லையே? இவளுக்குள் இன்னொரு உயிர் துடித்துக் கொண்டிருக்கிறதே? அவனால் பொறுக்க முடியாவிட்டாலும், அதன் அப்பா அவனல்லவா? அதை மாற்ற முடியாதே?

'சரி பிரசாத். கொஞ்ச நாள் டைம் கொடுங்களேன். ஒரு இரண்டு மாதம். அங்கே வேலை தேடிக்கொள்கிறேன். அப்புறம் போகலாம். இங்கே இருந்து தேடிக் கொள்வது எனக்கு வசதி.'

'வேலைக்கெல்லாம் ஒன்னும் போக வேண்டியதில்லை'

'ஏன்?'

'வேலைக்குப் போய் என்ன பண்ணப் போற? காசு பணம் இல்லையா என்னிடம்?'

'பிரசாத், உங்கள் நடை, உடைகளில் இருக்கும் நவீனங்கள் சிந்தனைகளிலும் செயல்களிலும் இல்லையே? காசு பணத்திற்காகவா வேலைக்குப் போவது? நான் படிச்சுருக்கேன் பிரசாத். என் அப்பா கஷ்டப்பட்டுத் தான் என்னைப் படிக்க வைத்தார். அதை எப்படி வீணடிக்க முடியும்?'

'அதெல்லாம் முடியாது. நீ வேலைக்குப் போவதில் எனக்கு விருப்பமில்லை. என்னிடம் பணம் இருக்கு. உன்னை உட்கார வைத்து சோறு போட என்னால் முடியும்'

'பிரசாத், தயவுசெய்து நிப்பாட்டிக்கோங்க. எனக்கு என்ன தேவையென்று நான் தான் தீர்மானிக்கனும். நீங்க இல்ல. அதென்ன மூச்சுக்கு முன்னூறுவாட்டி, என்னிடம் பணம் இருக்கு. என்னிடம் பணம் இருக்கு ன்னு சொல்றேங்க? இப்போவே 'என் பணம்'ன்னு சொல்ற உங்கள நம்பி நான் எப்டி அங்க தனியா வர முடியும்? நான் வேலைக்குப் போவேன்'

அவள் பேச்சு அவன் அதிகார மனப்பான்மையைச் செருப்பால் அடித்து விட்டது போன்ற உணர்வு. ஆத்திரம் தாளாமல் ஒரு அறை விட்டான்.

'என்னடி..நானும் பார்க்குறேன்..ரொம்ப ஓவராத் தான் போற?' - இன்னொரு அறை வைக்க ஓங்கிய கையைத் தடுத்து இவனுக்கு விழுந்தது ஒரு அறை.

'என்னடி..என்னையே அடிக்குறயா? உன்ன என்ன செய்யுறேன்னு பாரு' - பெல்ட்டில் கை வைத்தான்.

'யார் சுழட்டினாலும் பெல்ட் சுழலும் என்பது ஞாபகம் இருக்கட்டும் மிஸ்டர்.பிரசாத்'

அவன் கை தானாய் உறைந்தது பெல்ட்டிலிருந்து.

***

கிஃப்டை மறக்காமல் எடுத்துக் கொண்டான். சாலையில் விரைந்து கொண்டிருக்கும் போது அவன் செல்போன் சிணுங்கியது.

ரீட்டா காலிங்...

(தொடரும்)

1 comment:

  1. * கொள்ளி வைக்க பேரன், ஜல்லி கொட்ட மருமகள் என்று ஒரே ரோதனையாக இருக்கிறது.

    நல்ல வரிகள்

    ReplyDelete