எங்கள் பள்ளியின் சாரணிய(Guide) இயக்கத்தில் எனது எட்டாம் வகுப்பிலிருந்து உறுப்பினராய் இருந்தேன். அதன் பொறுப்பாசிரியை திருமதி.குருமணி. எங்கள் சாரணிய இயக்கம் முன்நின்று சில பொதுச் சேவைகளில் ஈடுபட்டிருக்கிறோம். இரண்டு வருடம் எந்தப் பிரச்சனையுமின்றிப் போய்க் கொண்டிருந்தது.
10-ஆம் வகுப்பு வந்ததும் இயக்கத்தில் ஆர்வம் குறைந்தது. '10ஆம் வகுப்பு...கவனமா படிக்கணும்..இதில் மார்க் கம்மியானா அவ்ளோ தான்..' - என்ற பயமுறுத்தல்கள், 'நீ தான் இந்த குடும்பத்தைத் தாங்க வந்த குத்துவிளக்கு' என்ற ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு வித கிலியை மனதிற்குள் எற்படுத்தியிருந்தது அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். கேம்ப், மீட்டிங் என்று சில முக்கிய வகுப்புகளைக் கட் அடிப்பது போல் சூழ்நிலை அடிக்கடி ஏற்பட்டது.
அதனால் ஒரு முடிவெடுத்தவளாக அடுத்த மீட்டிங்கில் 'இனி நான் இயக்கத்திற்கு வரப் போவதில்லை' என்று டீச்சரிடம் சொல்லி விட்டேன். ஆர்வமாய் இருக்கும் பெண் தானே, ஏன் திடீர் விலகல் என்ற கேள்விக்கு எனது பதில்: 'படிப்பு பாழ்படுகிறது. சில முக்கிய வகுப்புகளை கட் அடிப்பது பிடிக்கவில்லை' என்ற எனது துணிந்த பதில் அவரைக் கோபப்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன். நிறைய அறிவுரைகள் சொன்னார். 'படிப்பு தான் வாழ்க்கை. அதில் தான் ஒட்டுமொத்த முன்னேற்றமும்' என்று நான் திடமாய் நம்பியிருந்த காலம் அது என்பதால் அவர் சொன்னது எதுவும் காதுகளைத் தாண்டி மனதைத் தட்டவில்லை. அதன் பிறகு மீட்டிங்குக்கு போகவேயில்லை. இந்தப் பிரச்சனையில் மேடம் சொன்ன கடைசி வார்த்தை: 'புத்தகப் புழுவாகவே இருந்தால் வாழ்க்கையில் எதையுமே கற்றுக் கொள்ள முடியாது' என்பது. அதையும் அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பின்பு, கல்லூரியில் ஊழல் ஒழிப்பு இயக்கம், தமிழ் மன்றம், பெண்கள் தின நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு என்று சில இயக்கங்களுக்கு நான் பெண்கள் தரப்புத் தலைவியாய் இருந்ததுண்டு. 'எதிலும் கொஞ்சம் வித்தியாசமாய்ப் பண்ணுவோம்' என்ற கும்பல் எங்களுடையது.
வருடாவருடம் விடுதி தினத்தையொட்டி போட்டிகள் நடப்பது வழக்கம். அந்த முறை சாதாரணமாக கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி என்றில்லாமல் கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகள், செந்தமிழ்ப் போட்டிகள் என்று முயன்றிருந்தோம். அது மாணவிகள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றிருந்தது.
அன்றைய ஆண்டு தமிழ் மன்ற விழாவில் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். விழா முடிந்து விடை பெறும்போது அப்துல் காதர் என்னை முதல்வர் அறையில் கூப்பிட்டு, 'சிறப்பாகப் பேசினாய். நல்ல சிந்தனைக்காரி' என்று பாராட்டினார். அப்பொழுது எங்கள் கல்லூரி முதல்வர் சொன்னார்: 'ஆமா சார். இந்தப் பொண்ணு எந்த ஈவண்ட் என்றாலும் நல்லா ஹேண்டில் பண்ணும். ஹாஸ்டல் டே-க்கு நடத்திய போட்டிகள், கான்செப்ட் எல்லாம் அத்தனை அருமை' என்றார். பெரியவர்கள் கூடியிருந்த அவையில் கிடைத்த அந்தப் பாராட்டு மனதிற்குப் புதுத் தெம்பைத் தந்தது.
புதிதாக முயற்சிக்கும் ஆர்வம், தலைமைப் பண்பு இவையனைத்தையும் கற்றுத் தந்தது என் சாரணிய இயக்கம். குருமணி டீச்சர் இல்லாமல் அதெல்லாம் சாத்தியமேயில்லை. அன்றைக்கு நான் அவரிடம் பேசியது எவ்வளவு தவறு என்று அந்த நாளில் நான் உணர்ந்தேன்.
அதன் பிறகு ஒன்றிரண்டு தருணங்களில் டீச்சரைப் பார்த்தாலும் இது பற்றிப் பேச சரியான சூழ்நிலை அமையவில்லை. இன்றும் கூட மன்னிப்பு கேட்க மனம் நினைக்கிறது. 'எந்த முகத்தை வைத்துக் கொண்டு சந்திக்க' என்பது போன்ற ஒரு சில மனத்தடைகளும் இருக்கின்றன. அடுத்த முறை பார்க்கும் போது கண்டிப்பாக மன்னிப்புக் கேட்டு விட வேண்டும். 'அன்று எனக்குக் கிடைத்த அத்தனை பாராட்டுக்களும் உங்களுக்குத் தான் சமர்ப்பணம்' என்று ஒரு முறையாவது சொல்லிவிட வேண்டும்.
பார்க்கலாம், அன்பு அகந்தையை வெல்லும் தினம் எப்போது வருமென்று?
(30.05.2013 புதிய தலைமுறை இதழ் பெண்கள் டைரி பகுதிக்காக எழுதியது)
No comments:
Post a Comment