Tuesday, 29 May 2012

ஹலோ



                                       
"தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!"
என்று கடவுளை வ்ணங்கி 'ஸ்ரீ ராம் ரெடிமேட்ஸ்'-ன் கல்லாப்பெட்டியில் அமர்ந்தான் வசந்த்.

"முருகா! போய் ஒரு டீ வாங்கிட்டு வாப்பா!"

"என்ன மீனாட்சி, மசமசன்னு நீக்காம போய் வேலையைப் பாரும்மா!பேச ஆள் கெடச்சுட்டாப் போதுமே?போ போ போய் அந்தத் துணியெல்லாம் மடிச்சு வை!"

"இதுக்குப் ப்ரைஸ்லிஸ்ட்லாம் ஒட்டியாச்சா?மடமடன்னு வேலையைப் பாருங்க தம்பிங்களா!" அதிகாரத்துடன் வளைய வந்து கொண்டிருந்தான் வசந்த்.

"நேத்தே படிச்சுப் படிச்சுச் சொன்னேன், இன்னைக்கு பையனுக்குத் தடுப்பூசி போடுறதுக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு போகணும்னு. இப்பவே மணி 8 ஆயிடுச்சு. இனிமே எழும்பி கிளம்பி..அங்க போனா 3 மணி நேரம் காத்துக் கிடக்கணும். அதுக்குத் தான் சீக்கிரம் கிளம்பணும்னு சொன்னேன். நான் சொன்னா இந்த வீட்டுல யாரு கேக்குறா? உன்னையும் சேத்துத் தான்" என்று விளையாட்டுப் பொருட்களை வாயில் வைத்துக் கொண்டிருந்தத் தன் 3 வயது மகன் ஸ்ரீராமையும் வசை பாடிக் கொண்டிருந்தாள் வசந்தின் மனைவி ஜானகி.

ஜானகி போட்ட போட்டில் கனவிலிருந்து விழித்துக் கொண்டான் வசந்த்.
"நான் கண்டதெல்லாம் கனவா? அய்யோ. மணி 8?!! செத்தேன் இன்னைக்கு. ஜானகி செல்லம்..பூஜ்ஜி..ஸாரீடா!!இதோ 10 நிமிசத்துல கெளம்பிடுறேன். கோவிச்சுக்காத செல்லக்குட்டி!!!" - மனைவியை சமாதானப்படுத்த ஓடினான் வசந்த்.

நம் நாயகன் வசந்த் ஒரு மத்திய ரக குடும்பத்தைச் சேர்ந்தவன். மனைவி ஜானகி. 3 வயதுக் குழந்தை ஸ்ரீராம். சிறிய ஓட்டு வீடு. பிரபல ஜவுளிக் கடையில் மாதம் 4௦௦௦/- சம்பளம். வரவும் செலவும் சரியாக இருக்கக் கூடிய - பணம் குறையும் போது கணவன்-மனைவி சண்டை நடக்கின்ற - சராசரிக் குடும்பம் அவர்களுடையது.

"நான் கொஞ்ச நேரம் வெளிய போய்ட்டு வரேன் ஜானகி", மனைவியிடம் விடைபெற்றுக் கொண்டு பக்கத்துத் தெரு டீக்கடைக்குச் சென்றான்.

"வேலா..! ஒரு டீ போடுடா."

"என்னடா வசந்த், ரொம்ப டல்லா இருக்க?எதாவது பிரச்சனையா?", வாஞ்சனையுடன் கேட்டான் வசந்தின் நெருங்கிய நண்பன் வேல்முருகன்.

"புதுசா ஒண்ணும் இல்லடா. மாசக்கடைசி ஆயிடுச்சுல்ல?கசகசங்குறா அவ. இந்த மாசச் சம்பளத்துலயாவது ஒரு மொபைல் போன் வாங்கலாம்ன்னு நெனச்சேன். அதுவும் நடக்காது போலடா!பையனுக்கு ஆஸ்பத்திரிச் செலவு இருக்கு. கடைல எல்லாரும் கிண்டல் பண்றாங்க. இந்தக் காலத்துல ஒரு மொபைல் கூட இல்லையான்னு. அது கூட பரவாயில்ல. நேத்துக் கடை ஓனர் திட்டிப்புட்டான்டா. சீக்கிரம் கடைக்கு வரச் சொல்லணும்னு சொல்றதுக்குக்கூட காண்டக்ட் நம்பர் இல்லையாம்! அசிங்கமா இருக்குடா!!", புலம்பித் தீர்த்து விட்டான் வசந்த்.

"டேய்! போன மாசமே நான் சொன்னேன்ல. வாடா நம்ம பெறகு போய் ஒரு மொபைல் வாங்கிட்டு வருவோம். எப்ப முடியுமோ அப்ப காசத் திருப்பிக் கொடு. ஒண்ணும் அவசரமில்ல." - வேலன்.

"இல்லடா. இருக்கட்டும். அவளுக்குத் தெரிஞ்சா கத்துவா! நான் கெளம்புறேன்டா. நாளைக்குப் பார்ப்போம்", வீடு திரும்பினான் வசந்த்.

வழக்கம்போல் வேலை முடித்து வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்தான். 9 மணி ஆகி விட்டபடியால் பேருந்தில் அவ்வளவாக கூட்டமில்லை.

"ஹப்பா..நிம்மதியா தூங்கிக்கிட்டே போகலாம்", ஆர்வமுடன் ஏறினான் பேருந்தில். ஸ்டாப் வருவதற்கு 5 நிமிடத்திற்க்குள் விழித்துக் கொண்டான். கடைசி ஸ்டாப் என்பதால் பேருந்தில் வசந்தைத் தவிர பயணிகள் வேறுமில்லை. அருகில் ஒரு பழைய மாடல் மொபைல் போன் கிடந்தது. பக்கத்து சீட்டில் இருந்தவர்கள் யாராவது தவற விட்டிருக்கலாம் என்று அதை எடுத்துக் கொண்டு எழுந்தான். அதற்கும் அவன் இறங்க வேண்டிய ஸ்டாப் வருவதற்கும் சரியாக இருந்தது.

"சார்..இது யார் போன்னு தெரியல. என் சீட்ல கிடந்தது!", என்று நடத்துனரிடம் தெரிவித்தான்.

அவர் என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. "நீ முதல்ல ஏறங்குயா. சும்மா வீட்டுக்கு போற நேரத்துல அது இதுன்னு வழ வழன்னு. ஏறங்குயா மொத", பொரிந்து தள்ளினார் நடத்துனர்.

"அட! நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி எரிஞ்சு விழறாங்க. சே இன்னைக்கு நாளே சரியில்ல. காலைல இருந்து பிரச்சனையாவே இருக்கு!", மனதுக்குள் பொருமிக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.

அந்த செல்போனை எடுத்துப் பார்த்தான். பழைய மாடல் மொபைல். எழுத்துப்பலகை ரொம்பத் தேய்ந்து போயிருந்தது. ஆனாலும் சத்தம் நன்றாகவே வந்தது. "சரி எப்படியோ நம்ம கைக்கு வந்துருச்சு. வச்சிருப்போம். நாமலாவா போய் எடுத்தோம்? அதுவா நம்மளத் தேடி வந்துருக்கு. நாமளும் நியாயமா நடத்துனர் கிட்ட கொடுக்கத் தானே செய்தோம்? நம்ம தப்பு இதுல ஒண்ணும் இல்லயே! தொலைச்சவன் தேடுனா என் கிட்ட தான் இருக்குன்னு நடத்துனர் சொல்லட்டும்."- என்று சமாதானம் சொல்லிக் கொண்டே அந்த போனுக்கு தன் சட்டைப்பையில் அடைக்கலம் கொடுத்தான்.

செல்போன் வந்த கதையை ஜானகியிடம் விவரித்தான். பெரிதாக ஒன்றும் மாற்றமில்லை."பார்த்து.. எதுலயாவது மாட்டிக்காம இருந்தேங்கன்னா சரி தான்", என்ற அறிவுறுத்தலுடன் அந்த விஷயம் முடிவு பெற்றது.

அன்று முதல் அந்த செல்போன் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாய் ஆகி விட்டது. காலை அலாரத்தில் ஆரம்பித்து இரவில் பாட்டுக் கேட்டுத் தூங்கும் வரை அது வசந்த் கூடவே இருந்தது எல்லா நேரமும்.

ஜானகியும் அடிக்கடித் தன் பிறந்த வீட்டாரிடம் பேசிக் கொண்டாள். பள்ளியில் விட்ட தொட்ட நட்பு வட்டத்தில் வசந்தும் சேர்ந்து கொண்டான்.

காலை விழிக்கும் போதே பெட்டை விட்டு எழுவதற்கு முன் இன்பாக்ஸ் ஐ பார்ப்பது காலைக் கடமைகளில் ஒன்றாக ஆகி விட்டது. வேலை நேரம் போக மற்ற நேரங்களிலெல்லாம் அவன் பொழுதுபோக்கு அந்த மொபைலுடனே இருந்தது.

மாதங்கள் பல இப்படியே உருண்டோடின.

வழக்கம்போல் அன்றும் கண் விழித்தவுடன் இன்பாக்ஸை பார்ப்பதற்க்காக செல்போனை எடுத்தான்.

அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுக் கிடந்தது. பரபரப்புடன் சார்ஜரில் சொருகினான். சார்ஜ் ஏறவில்லை. ஸ்விட்ச் ஆன் செய்ய முயற்சித்தான். முடியவில்லை. ஏதோ கோளாறு ஆகி விட்டது போல மொபைலில் என்று அதையே சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.

அந்த நேரத்தில் பரண் மேல் கிடந்த சாமானை எடுத்துத் தரும்படி ஜானகி அழைத்தாள்.

"ஆமா. எனக்கு இதான் வேலை. எடுக்க முடியலன்னா எதுக்கு அங்க வச்சுத் தொலச்ச?இந்த வீட்டுல எப்பத்தான் நிம்மதி கிடைக்குமோ?" - பொரிந்தான் வசந்த்.

"ஆமாங்க. நான் இருந்தா உங்களுக்கு நிம்மதி இருக்காது. என்னை எங்கயாவது கண் காணாத எடத்துல கொண்டு போய் விட்டுட்டு நீங்க சந்தோசமா இருங்க", கண்களில் நீர் நிறத்தாள் ஜானகி.

"அம்மா.. அம்மா அழாதம்மா. ஏன்ப்பா அம்மாவத் திட்ற. அழறாங்க பாருங்க", அப்பாவிடம் முறையிட்டான் ஸ்ரீராம்.

"வாடா வா. நீ தான்டா நேத்து அந்த போனை நோண்டிக்கிட்டுக் கெடந்தது. இப்போ அது கோளாறாப் போச்சு. சார்ஜ் ஆக மாட்டேங்குது. வந்துட்டான் அவங்க அம்மாவுக்காகக் கொடி தூக்கிட்டு", ஸ்ரீ ராம் அழுவதைக்கூட கவனிக்காமல் அதட்டினான்.

"என்னங்க ஆச்சு உங்களுக்கு? குழந்தைக்கிட்ட போய் இப்படிக் கத்துறேங்க. சார்ஜ் இல்லாம ஆஃப் ஆகியிருக்கும். இன்னைக்குக் காலைல இருந்து கரண்ட் வேற இல்ல. அதான் சார்ஜ் ஆக மாட்டேங்குதா இருக்கும். நீங்க ரொம்ப மாறிட்டேங்க. என்னைக்கு இந்தச் சனியன் போன் வந்ததோ அப்பவே நம்ம சந்தோசம் போயிடுச்சு. முன்னாடியெல்லாம் காசு, பணம் தான் இல்ல. நிறைய சந்தோசம் இருந்தது. நமக்குள்ள என்னதான் சண்ட வந்தாலும் நைட்டு சாப்பாட்டிலேயே சரியாப் போயிரும். இப்பல்லாம் காதுல ஹெட்செட்டை மாட்டிக்கிட்டு நீங்கபாட்டுக்கு போயிடுறிங்க. மறுநாள் எதுவுமே நடக்காத மாதிரி வேலைக்குக் கெளம்பி போயிடுறிங்க. நல்ல யோசிச்சு பாருங்க, என் கூட, நம்ம குழந்தை கூட நீங்க நேரத்தைச் செலவிட்டு எத்தனை நாள் ஆகுது?நான் இருக்க வேண்டிய எடத்துல இப்பல்லாம் இந்த மொபைல் போன் தான இருக்கு? பிறகு நான் எதுக்கு? நீ அழாதடா செல்லம். வா நீயாவது என் கூட இரு", - குழந்தையைத் தூக்கிக்கொண்டு படுக்கையறைக்குள் சென்றாள் ஜானகி.

"நான் இருக்க வேண்டிய எடத்துல இப்பல்லாம் இந்த மொபைல் போன் தான இருக்கு? பிறகு நான் எதுக்கு?" - மீண்டும் மீண்டும் அவன் செவிகளில் எதிரொலித்தது.

யோசித்துப் பார்த்தான். "என்னை அறியாமல் எப்படி இந்தத் தவறு நேர்ந்தது? ஜானகி சொன்னதெல்லாம் நியாயம் தானே? அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத நான் ஏன் இன்று என் மனைவியிடம் - செல்லக்குழந்தையிடம் - கத்தினேன்? கரண்ட் இல்லாததால் செல்போன் சார்ஜ் ஆகவில்லை என்பதைக் கூட யோசிக்காமல் ஏன் இந்தப் படபடப்பு?" - இது போன்ற பலப்பல கேள்வியோடு ஜவுளிக்கடையை அடைந்தான்.
"கடைசியில் எல்லாம் இந்த மொபைலால் தான். நம் சந்தோசங்களைத் திருடி விட்டது. இனி இது வேண்டாம் எனக்கு", என்று முடிவெடுத்தான் வசந்த்.

ஒரு வாடிக்கையாளர் வாங்கிய சேலைப்பையோடு தனது செல்போனையும் போட்டு விட்டான் வசந்த். 'இன்னைக்கோட தொலஞ்சது' என்று அவன் மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே அந்த வாடிக்கையாளர் திரும்பி வந்து மொபைலைக் கொடுத்து விட்டு 'பத்திரமா வச்சுங்கோங்க அண்ணன். ஏதோ என் கைல கெடச்சதால திரும்ப வந்துச்சு. வேற யார் கையிலயும் போய்ருந்தா? இவ்ளோ வெகுளியா இருக்காதீங்க அண்ணன்' இலவச அறிவுரையோடு மீண்டும் வந்து சேர்ந்தது.

டீக்கடை, கேன்டீன், பேருந்து என்று பல இடங்களில் வசந்த் முயற்சித்துப் பார்த்து விட்டான். நம்மளச் சுற்றி எல்லாரும் நல்லவங்களா இருக்காங்களே கடவுளே?


பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது இதைப் பற்றி ஆழமாக யோசித்தான். தவறு நம்மிடமா? செல்போனிடமா?
விடை கிடைத்தது பயண முடிவில்.
அவன் குழந்தைக்குப் பிடித்த மிட்டாய் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

"ஜானு..வாம்மா சேர்ந்து சாப்பிடலாம்"

ஆழமான நிம்மதியான உறக்கம். காலை கண் விழித்தவுடனே இன்று வழக்கம் போல் இன்பாக்ஸ் தேடவில்லை.

"என்ன ஜானு.. பையன் நைட்டு சீக்கிரம் தூங்கிட்டானா? காய்கறி மார்க்கெட் போய்ட்டு வரட்டுமா? தினம் நீ தானே அலையுற! இன்னைக்கு நான் போறேனே?", ஜானகி தலை கோதினான்.

அன்று முதல் தேவைக்கேற்ப போனைப் பயன்படுத்த ஆரம்பித்தான்.

நாட்கள் உருண்டோடின..

"அப்பா..அப்பா..எழுந்திருப்பா. இன்னைக்கு சன்டே. மணி 8 ஆயிடுச்சு. நேத்தே அம்மா வெளிய போகணும்னு சொன்னாங்கல்ல?எழுந்திருப்பா", நச்சரித்தான் ஸ்ரீராம்.

"டேய். ஏன்டா அப்பாவைத் தொல்லை பண்ற? தூங்குனா தூங்கட்டும் டா.. பாவம் வாரம் 6 நாள் ஓயாம உழைக்குறாரு. ஒரு நாளாவது நல்லாத்தூங்கட்டும். அங்க கொஞ்ச நேரம் காத்துக் கெடந்தாலும் பரவாயில்லை. என்ன பண்ணப் போறோம்? இந்தப் பக்கம் வா! அவர் தூங்கட்டும்", குழந்தையை அழைத்துச் சென்றாள் ஜானகி.

அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனின் உதவிக்காகப் படைக்கப்பட்டவை. மனிதனின் நேரத்தையோ, உறவுகளையோ திருடுவற்காக படைக்கப்பட்டவை அல்ல. வசந்த் புரிந்து கொண்டான். நீங்கள்?




2 comments:

  1. கதையின் நடை அழகாகவும் விறுவிறுபாகவும் இருந்தது.

    சில இடங்களில் பேச்சு தமிழும் பல இடங்களில் எழுத்து தமிழும் கலந்து இருப்பதற்கு காரணம்?

    ReplyDelete
    Replies
    1. வசனங்கள் பேச்சுத் தமிழிலும் மற்றவை எழுத்துத் தமிழிலும் இருக்கும் ஸ்டாலின்.
      பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

      Delete