பூ பழம் சகிதம் சுற்றம் சூழ வந்திருந்தாய் என் வீட்டுக்கு
பச்சை வண்ண ராசிப் புடவை அணிந்து
கையில் காபி கப்புடன் நெருங்கி வந்தேன்
இரண்டு நிமிடம் என் விழிகளுக்குள் உன்னை சிறைபிடித்தேன்
உனக்கும் அது விருப்பம் என்பதை புன்னகை மொழியில் புரிய வைத்தாய்
உன் அம்மா அப்பாவும் அன்புடனே பார்த்தார்கள்
'எங்க ராணிகேத்த ராசா தான் மாப்பிள்ளையும்' பாட்டி இரைந்தாள் சற்று சத்தமாகவே
வெட்கத்தின் விசை தாளாமல் ஓடி வந்து விட்டேன் என் தனியறைக்கு
செல்போன் மணி அடிக்கும் போதெல்லாம் நீயாக இருப்பாயோ என்று ஆர்வமுடன் எடுத்தேன்
நாளை என்ன பரிசு தருவாய்?
நம் குழந்தைக்கு அழகான தமிழ்ப் பெயர் தான் வைக்க வேண்டும்!!
ஆயிரம் ஆயிரம் திட்டமிடுதல்கள் ..
அத்தனை கனவுகளுக்கும் அடித்தளம் தர நீ வரவிருக்கும் நாளை எதிர்பார்த்திருந்தேன்
வந்தது என்னவோ தரகர் மட்டும் தான் - கையில் வேறு சில புகைப்படங்களுடன்
அந்த பையன் வீட்ல பொண்ணு எல்லாருக்கும் பிடிச்சுருக்கு
கொடுக்கல் வாங்கல் மட்டும் ஒத்து வரல சார்
இன்னொரு இடம் கை வசம் இருக்கு
அருமையான இடம்
நம்ம சக்திக்கு ஏத்த இடம்
நாளைக்கு வர சொல்லட்டுமா பொண்ணு பார்க்க?
அவருக்கு பழகிப் போயிருந்தது பார்ப்பதும் போவதும்
இன்னும் என் மனதிற்கு பழக்கம் ஆகவில்லை -
கனவுகள் கண்ணாடித் துகள்களாய் ஆன பிறகும்
அடுத்து பார்க்க வரும் ராசாவை நோக்கி புன்னகை செய்ய...
No comments:
Post a Comment