சாளரத்தின் வாசல் வழி சிட்டுக்களின் சலசலப்பு ;
காற்றில் கலந்து வரும் கனிந்த கீதம்;
பஞ்சணையில் படுத்துப் புரண்டு பார்க்கிறேன் ;
எழும்பச் சொல்லி விண்ணப்பிக்கின்றது விடிகாலைத் தேநீர் ;
எட்டுப் பேர் எட்டி நின்று சேவகம் செய்ய
எதிலும் மனமில்லாமல் விடிகிறது என் காலை;
வீடெங்கும் ஒளிர்கிறது பணத்தின் எதிரொளிப்பு
பார்த்தவுடன் பற்றிக் கொண்டது ஏதோவொரு உற்சாகம்
தங்கத்தை தடவிப் பார்த்துக் கொண்டே தாழ்வாரத்தில் நின்று பார்க்கிறேன்
கடல் சொன்ன ரகசியத்தை அவசரமாகக் கரைக்கு சொல்லும் கடலலைகள்
தந்தையின் தோள் கட்டிக்கொண்டு திருவிழாக் கடையை
வேடிக்கை பார்க்கும் விளையாட்டுப் பிள்ளையாய்க் கப்பல்கள்
விழிகள் விரித்து நான் வியந்திருக்க
கடல் என்ன சொன்னதோ சீற்றத்துடன் சீறி வந்தன சில்லென்ற அலைகள்
கரையை முத்தமிட்டே பழகிய முரட்டு அலைகள்
கரையையே விழுங்கும் அளவுக்கு சீறிப் பாய்ந்து வந்தது
கரை மேலென்ன இத்தனை காதலா என்று அதிர்ச்சியுடன் நான் நிற்க
சீற்றமிகு அலைகள் சினத்துடன் சிதைத்து விட்டது என் வீட்டையும்
செல்வமென்று நான் நினைத்த அனைத்தும் செல்லா இடம் நோக்கிச் சென்று விட்டது
உயிர் மட்டும் மிச்சமாய் நான் நிற்கிறேன் நாற்பதாயிரம் மைல் தாண்டி;
பகட்டாய் பணக்காரனாய் கண் விழித்தவன் இன்று
ஏழையாய் உறங்கப் போகிறேன்;
தொழிலால் ஏற்றத்தாழ்வு விளைத்த நான் இன்று
தொழிலின்றி நிற்கிறேன் நிராதரவாய்;
எதுவும் இல்லாத போது தெரிகிறது ஏழ்மையின் நிலைமை
பணத்தால் மனிதர்களை ஒதுக்கிய நான்
ஒதுங்கி நிற்கிறேன் எல்லாம் துறந்து ஊர் கரையில்;
ஜாதி மத பேதங்களை மறந்து விட்டேன்;
ஏற்றத் தாழ்வுகளை எரித்து விட்டேன்;
பணத்திமிரைப் புதைத்து விட்டேன்;
உழைக்க மட்டும் துணிந்த உடலோடு
நிற்கிறேன் - புது விடியலை நோக்கி