Tuesday, 7 May 2013

தியாகத்தின் பெயரால்



காலடியில் பூமி நழுவியது போல் அதிர்ச்சி. அமுதன் சொன்னது உண்மைதானா? இல்லை, விளையாடுகிறானா? இப்படியும் கூட விளையாட முடியுமா? காலண்டரைப் பார்த்தேன். தேதி மே-06 என்று காட்டியது. ஏப்ரல்-1 முடிந்து விட்டதே! குரல் கம்மி விக்கி விக்கிச் சொன்னானே? ஒரு வேளை, உண்மை தானோ? ஐயோ!

ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சந்திரா ஹாஸ்பிடல் நோக்கி விறைந்தேன். பெரிய போர்டிகோ, வழ வழ டைல்ஸ், பணம் கட்ட வரிசையில் காத்திருக்கும் சொந்தங்கள், அயர்ந்து அமர்ந்திருக்கும் நோயாளிகள், எதிரெதிர் ரூம்கள், ஏகாந்த அமைதி. ஆஸ்பத்திரியின் உள்ளே நுழையும் போதே ஒரு சூனியம். ஐயோ கடவுளே! அமுதன் சொன்னது பொய்யாய் இருக்கக் கூடாதா?

“மேடம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அட்மிட் ஆன சுந்தரப் பார்க்கணும்”

“எந்த சுந்தர்? அந்த தீக்குளிச்ச கேஸா?” – ‘ரிசப்ஷன் சாரி’ கணினியிலிருந்து பார்வையை அகற்றாமல் கேட்டது. இரக்கமில்லாத கேள்வி. ஆனால் அவள் கேட்டதில் என்ன தவறு? அவளுக்கு யார் அவன்? சாதாரண ‘தீக்குளிச்ச கேஸ்’ தானே! ஆனால் எனக்கு அப்படியா?

ஆருயிர் நண்பன். கண்ணில் கண்ணீருடன் அப்பா கழுத்தைக் கட்டிக் கொண்டு, ‘போகவே மாட்டேன்’ என்று அடம் பண்ணிக் கொண்டிருந்த அந்த முதல் நாள் வகுப்பன்று, டவுசர், சட்டை, வகிடெடுத்துச் சீவிய தலையுடன் சமத்தாய் ’அழாதே. உள்ள வந்தா டீச்சர் சாக்லேட் தருவாங்க. நேத்துக் கூட எனக்குத் தந்தாங்க. இதோ பாரேன்’ என்று அழுகையை மாற்றிய என் முதல் நண்பன். சேர்ந்து படித்து, சேர்ந்து விளையாடி, வீட்டுப்பாடம் செய்யாமல் சேர்ந்து அடி வாங்கி என்று பள்ளிக்காலம் முடியும் வரை சேர்ந்தே இருந்த என் நண்பன். அவனுக்குக் கிடைக்காத அப்பாவும்,  மதிப்பெண்களும் எனக்குக் கிடைத்ததால் இன்று என் பேரின் பின்னால் B.E. இவையிரண்டும் அவனுக்குக் கிடைக்காததால் அவன் M.Sc(Maths). என் படிப்பு எனக்குச் சோறு போட்டது, பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் வேலை வடிவில். அவனுக்கு இன்று வரைக்கும் வகையான வேலை அமையவில்லை. கொஞ்ச நாள் தனியார் பள்ளியில் தற்காலிக வேலை. காசு கொடுத்து வேலையைத் தக்க வைத்துக் கொள்ளும் சமத்து தெரியவில்லை அவனுக்கு. லாரி புக்கிங் ஆபிஸில் சில நாள் இருந்தான். உடன் வேலை பார்த்தவனுடன் பிரச்சனை. முன்கோபி. அவனாகவே ராஜினமா பண்ணி விட்டான். நிறைய இட மாற்றங்கள். கடைசியாக உள்ளூர் மளிகைக் கடையில் வேலை பார்த்ததாக நினைவு. அநேகமாக ஒவ்வொரு முறை அவனைச் சந்திக்கும் போதும் வேறு வேறு வேலையில் தான் இருப்பான். அவனுக்குப் பழகியிருந்ததோ இல்லையோ, எனக்குப் பழகியிருந்தது அவன் இடமாற்றங்கள். வாடகை வீடு. நோயுற்ற அம்மா. பள்ளி படிக்கும் தங்கை. சரியான சம்பளம் இல்லாத அவன். நடுத்தர வர்க்கத்தின் அனைத்து சாபங்களும் ஒருங்கே அமைந்த வீடு என்று அப்பா அடிக்கடி சொல்வார். ‘அம்மாவிற்கு இதயத்தில் பிரச்சனை. பெரிய ஆபரேஷன் பண்ணினால் தான் உயிர் நிலைக்கும். பார்ப்போம். அலாரம் அடித்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலக்கெடுவும் இருக்கிறது. அந்த வகையில் நானும் கொஞ்சம் அதிர்ஷ்டக்காரன்’-போன முறை சந்தித்த போது சொன்னான். அவனுக்காகக் கவலைப்படுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை. நானும் அவன் சார்ந்த நடுத்தர வர்க்க ஏணியின் முந்திய படி. வேறென்ன செய்ய முடியும்?

ரிசப்ஷனில் விசாரித்து அவன் இருந்த அறையை நோக்கி நகர்ந்தேன். அறை வாசலில் அமுதன் நின்றிருந்தான்.

‘என்னடா. எப்டி இருக்கான்?’

‘டாக்டர் பொழைக்க மாட்டான்னு சொல்றாங்க ராஜி. வேற ஆஸ்பத்திரிக்கும் கொண்டு போற நிலைமைல இல்லையாம். ஏன் ராஜி இப்டி பண்ணிட்டான்? கிறுக்குப்பய’ – அத்தனை நேரமாக அடக்கி வைத்திருந்த அழுகைக்குடம் உடைத்தான் அமுதன்.

வார்த்தைகளற்று அறைக்குள் விரைந்தேன். அவன் அம்மா ஓடி வந்து கட்டிக்கொண்டு கதறினார். தங்கை பயந்து மூலையில் சிலையானாள்.

முழுவதுமாய் சிதைந்திருந்தான். மேனி முழுதும் அக்னியின் நாக்குகளுக்கு இரையாகியிருந்து. கையிருக்க வேண்டிய இடத்தில் கறுப்புக் கட்டைகள். காலை மூடி வைத்திருந்தார்கள். கரு கலைந்து வெளி வந்தது போன்று கொத்தாகக் கரைந்து கொண்டிருந்தான். உயிர் கொஞ்சம் இருக்கிறதென்று சொல்ல எத்தனிக்கிறது ஏறி ஏறி இறங்கும் மார்புக்கூடு. கரைந்து வழிந்த முகத்தில் ஒரு கண் சரிந்திருந்தது. கடவுளே! இவனுக்கு இப்படி நேர வேண்டுமா?

‘ஏன் டா? ஏன் இப்படிச் செய்தாய். தீக்குளிக்கும் அளவுக்கு என்னடா மனம் உடைந்து போனாய்?’ – நெஞ்சம் கேட்கத் துடிக்கும் கேள்விகளுக்கு வாய் ஒத்துழைக்காமல் இறுகிக் கிடந்தது. எனக்காகவே காத்திருந்தது போல் ஏதோ சொல்ல வருகிறான். ஒரு கண் மூடித் திறந்தது மெல்ல. அந்த அசைவு தாங்க மாட்டாமல் நெஞ்சுக்கூடு கீழே இறங்கியது. மறு முறை கண் திறந்தான். திறந்த கண் மூடவேயில்லை. கண் வழியே உயிர் போய் விட்டது. கதறியழுதோம். போன உயிரைத் திருப்பி வாங்கும் சக்தி எங்கள் கண்ணீருக்கு இல்லை.

மொத மொதவென்று கட்சிக் கரை வேட்டிகள் சூழ்ந்தனர். ஆளுக்கொரு ஆளுயர மாலை. உடன் புகைப்படக்காரர்கள். கரை வேட்டிகள் எங்களை வெளியே தள்ளினார்கள். அது ஒரு ஜாதிக் கட்சியின் கூட்டம். ‘இவர்கள் எதற்கு இங்கே?’ எனக்குப் புரியவில்லை. அந்த முடிச்சை அமுதன் அவிழ்த்தான்.

‘ராஜி. சுந்தர் எதுக்கு இப்டி பண்ணினான்னு கேட்டயே? இதுக்குத் தான்’ – கரை வேட்டிகளைக் காட்டினான்.

‘வாட்?!’

‘ஆமா ராஜி. அந்த *** கட்சியின் தலைவர் ஊழல் வழக்கில் உள்ளே போயிருப்பது தெரியும்ல உனக்கு? அவரை விடுதலை பண்ணச் சொல்லி நம்ம ஊர்ல ஆங்காங்கே போராட்டம் நடந்தது. சுந்தரின் ஜாதி அந்தத் தலைவர். விடுதலையை வலியுறுத்தி இவன் தீக்குளித்திருக்கிறான். கடைசியில் கட்சிக் கொடியைக் கையில் வைத்திருந்தானாம்.’

‘நிஜமாவா சொல்ற அமுதா? என்னால் நம்ப முடியல. சுந்தர் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூடக் கிடையாது. இது சாத்தியமில்லை’

‘நிஜம் தான் ராஜி. அந்தக் கொடி பாதி கறுகிய நிலையில் கிடந்ததை நானும் பார்த்தேன். பாரேன். இவன் யார் என்னவென்று கூட இந்தக் கரை வேட்டிகளுக்குத் தெரியாது. ஆனால் மலர் வளையம், மீடியா என்று இதையும் அரசியலாக்கும் இந்தப் பதர்களை என்ன செய்தால் தகும்?’- அமுதன் வார்த்தைகள் என் மனதில் பதியவேயில்லை. மீண்டும் மீண்டும் அதே கேள்வி மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

எப்படி இது சாத்தியம்? இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை. சுந்தர் கட்சிக்காக – அதுவும் ஜாதி வெறியைத் தூண்டி விட்டு, ஓட்டு எண்ணிக்கையை உயர்த்த நினைக்கும், ஈன அரசியல் நடத்தும் அந்தக் கட்சிக்காக உயிர் கொடுத்தானா? நம்ப முடியவில்லை. ஆனாலும் அத்தனையும் மெய் தானென்று, இலவு வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை காமன்சென்ஸ் கூடத் தெரியாத கரை வேட்டிகளின் சலசலப்பு சத்தியம் செய்கிறதே? எப்படி நம்பாமல் இருக்க? அன்று அரசியல் குறித்து என்னவெல்லாம் சொன்னான்.

‘என்ன ராஜி, இப்போ என்ன திடீர்ன்னு ஊருக்கு வந்துருக்க? போன் கூடப் பண்ணல. எதுவும் விஷேசமா? – விஷமமாய்ச் சிரித்துக் கொண்டே சுந்தர்  கேட்டான்.

‘அடச்சீ..போடா. ஓட்டுப் போடுறதுக்காக வந்தேன்.’

‘என்னது? இந்த முக்காத்துட்டு பிரயோஜனமில்லாத ஓட்டுக்காகவா அங்கயிருந்து காசு செலவழிச்சு வந்த?

‘என்னடா இப்டி பேசுற? படிச்சவன் தான நீ? ஓட்டுப் போடுவது நம் ஜனநாயகக் கடமை. நான் ஒரு நல்ல மகளா, நல்ல தோழியா இருக்கேனோ இல்லையோ, நல்ல குடிமகளா இருக்கணும்னு நினைக்கிறேன்.’

‘அடடா. கொசுத் தொல்லைத் தாங்க முடிலடா நாராயணா..’

‘சுந்தர்..ப்ளீஸ். இந்த விஷயத்தில் கிண்டல் செய்யாதே. டென்சன் ஆயிடுவேன்’

‘சரி சொல்லு. எதுக்கு ஓட்டுப் போட்ட? நீ ஓட்டுப் போட்டதால என்ன மாற்றம் வந்துறப் போகுது? கேன் யூ எக்ஸ்ப்ளைன் மீ?’

‘ஷ்யர். என்ன மாற்றம் வந்துடப் போகுதுன்னு கேள்வி மட்டும் கேட்டுக்கிட்டு இருந்தா போதுமா? சமூக மாற்றம் வர வேண்டுமென்றால், நல்லதொரு, மக்கள் நலனை முன்னிருத்திய அரசியல் வேண்டும். அதெல்லாம் என் ஒரு ஓட்ல நடந்துருமான்னு தான கேக்க வர்ற? துளிகள் பல சேர்ந்தது தான் கடல் சுந்தர். என்னைப் போன்று நினைக்கும் பல ஓட்டுகள் சேரும். சேர்ந்தால் நாம் கனவு காணும் நாடு நமக்குக் கிடைக்கும். இதெல்லாம் நடக்க நாள் ஆகலாம். ஆனால் நடக்காமல் மட்டும் போய் விடாது சுந்தர்.’

‘ஹா.ஹா. என்ன ராஜி உளர்ற? அரசியல் உனக்கு என்ன செய்தது? உனக்காக ஒரு இலை கிள்ளிப் போட்டிருக்குமா? உன் வீட்டில் அரசியலா உலை வைத்தது? பலரின் வாழ்க்கையில் வேண்டுமானால் 'உலை' வைக்கும்.’

‘சுந்தர், நீ உங்கள் ஜாதிக் கட்சி தலைவரை மனதில் வைத்துப் பேசுகிறாய். நான் இங்கு சொல்வது அரசியல்வாதிகளை அல்ல. அரசியலை. இந்த அரசியல் இல்லாவிட்டால் நாம் பள்ளி, கல்லூரி படித்திருக்க மாட்டோம் சுந்தர். நீயே யோசித்துப் பார். இன்று என் வீட்டில் உலை கொதிக்கிறதென்றால் காரணம் என் படிப்பு. அது அரசியல் தந்த சலுகைகளால்தான் சாத்தியமானது.’

‘என்ன பெரிய கல்வி? என்ன கற்றுத் தந்தது அந்தக் கல்வி? இது தான் ஒழுக்கம் என்று கற்றுத் தந்ததா? எவ்வளவோ சிறப்பாகப் படித்திருந்தும் படித்து முடித்ததும் வேலை கொடுத்ததா? உன்னை மட்டும் வைத்துக் கொண்டு பேசாதே ராஜி. நீ பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் ஒருத்தி. இந்தியா உனக்கு என்ன செய்தது? அல்லது நீ தான் என்ன செய்தாய் இந்தியாவிற்கு? எத்தனை ப்ராஜெக்ட் நீ இந்தியன் கஸ்டமருக்குப் பண்ணியிருக்கிறாய்? உங்கள் ஐடியால் தான் இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறதாமே? இருக்கட்டும். மகிழ்ச்சி. அதற்காகத் தானே உங்களுக்கு இத்தனை சலுகைகள்? அது என்ன செய்தது? எங்கள் அடி மடியில் கை வைத்தது. B.E படித்தால் தான் மரியாதை, மற்றதெல்லாம் வேஸ்ட் என்ற நிலையை ஏற்படுத்தி வைத்திருப்பது உங்களுக்குப் புரியவில்லையா? வெளிநாடுகளின் கஜானா நிரம்புவதற்கு நீங்கள் ராப்பகலாக விழித்துத் தொண்டு செய்து கொண்டிருக்கிறீர்கள். உள்நாட்டில் இருந்து கொண்டு உள்ளூர் மக்களை உயர்த்த என்ன செய்தீர்கள்? எதாவது செய்ய நினைக்கும் எங்களையும் செய்ய விட்டீர்களா? எங்கு வேலைக்குப் போய் நின்றாலும் கணினி தெரிய வேண்டியிருக்கிறது. அது தப்பில்லை. ஆனால் கணக்கெழுதும் வேலைக்கு அடிப்படையாக கணினியை இயக்கத் தெரிந்தால் போதாதா? அதெற்கென்று ஒரு டிகிரி ஏன் அவசியப்படுகிறது? பிபிஓ வேலைக்கும் BEக்கும் என்ன சம்பந்தமென்று இன்னும் எனக்குப் புரியவில்லை. நீ சொல்கிறாயே அரசியல், அதுவும் உங்கள் கால்களைத் தானே கழுவுகிறது. எங்களுக்கு குறைந்தபட்சமாகவேனும் என்ன செய்தது? எம்பிளாய்மெண்ட் வாசலில் காத்திருக்கச் செய்து ஏமாற்றங்களை மட்டும் தானே பரிசளித்தது? அரசு வேலை வேண்டாம். ஒரு தனியார் வேலைக்கு எங்களைத் தயார்படுத்த முடிந்ததா? எங்கு போனாலும் இஞ்சினியரிங். அல்லது குறைந்த பட்சம் B.Sc-Computer Science. உழைக்கத் தயங்கும் சமுதாயமாக எங்களை மாற்றி வைத்திருப்பதும் உங்கள் அரசியல் தான்! உன்னை வாழ வைத்த அரசியல் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது?’

‘சுந்தர். நீ இன்னைக்கு என்னென்னவோ பிதற்றுகிறாய். விடு. இன்னொரு நாள் இது பற்றிப் பேசுவோம்’

அன்று என்னுடன் அப்படி வாதிட்டவனா இன்று அரசியல் தலைவனுக்காகத் தீக்குளித்தான்? இன்னும் புதிராகத் தான் இருக்கிறது. எல்லாம் முடிந்து என் வீடு திரும்பினேன். லெட்டர் பாக்ஸில் புதிதாய் ஒரு இன்லேண்ட் லெட்டர் கிடந்தது. பின் முகவரியில் சுந்தர் என்று பெயரிட்டிருந்தது. சுந்தரா? ஆம். இது அவன் கையெழுத்துதான். முத்து முத்தாக கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கும் அதே கையெழுத்து. இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் எழுதியிருக்கிறான். அடப்பாவி. அப்படியென்றால் நன்றாக யோசித்துத் தான் இந்த முடிவை எடுத்தாயா? உணர்ச்சியின் உந்துதலால் எடுத்த முடிவில்லையா?

****
அன்புத் தோழி ராஜிக்கு,

இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடு என்றுதான் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் தெரியாமல் செய்த தவறுகளுக்கு தான் மன்னிப்பு. தெரிந்தே செய்த தவறுகளுக்கு மன்னிப்பு எங்கேயும் கிடைக்கப் போவதில்லை, அதைக் கேட்பதில் நியாயமில்லையென்பதால் கேட்கவும் போவதில்லை.

அம்மாவுக்கு நாட்கள் நெருங்கி விட்டது. இனியும் ஆபரேஷன் பண்ணாமல் கடத்த முடியாது என்று 3 நாட்களுக்கு முன் டாக்டர் சொன்னார். நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்திற்கு இந்த மாதிரி பெரிய வியாதி தந்த ஆண்டவனைக் கொல்ல வேண்டும் போல் இருக்கிறது. கடன் வாங்கிப் பண்ணுவதற்கு ஐந்தோ பத்தோ இல்லை. தொகை பெரிது. சேர்த்து வைத்த சொத்து இல்லை விற்பதற்கு. எப்படியாவது புரட்டி வைத்தியம் பார்த்து விட்டு சம்பாதித்து சரி பண்ணிக் கொள்ளலாம் என்ற மன திடம் தருவதற்கு சாதகமான வேலை இல்லை. பாரேன் ராஜி, சிரிப்பாக இல்லை! நான் கற்ற கல்வி எனக்கு மன திடத்தைக் கூட கொடுக்கவில்லை. அம்மா போனால் பரவாயில்லை என்று நினைத்துச் சமாதானம் பண்ணிக் கொள்ள முடியவில்லை. ஆண்பிள்ளை என்ற திமிர் என் கையாலாகாத் தனத்தினால் நொறுங்குவதை என்னால் சகிக்கவே முடியவில்லை ராஜி.

நீ சொன்னாயே அன்று உன்னை வாழ வைத்த அரசியல் தான் இன்று என் கண்ணுக்குத் தெரியும் ஒரே வழி. அதை வைத்துத் தான் கடைசி முயற்சி எடுக்கப் போகிறேன். ஆம். ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் எங்கள் ஜாதிக்காரப் பன்னாடைக்காகத் தீக்குளிக்கப் போகிறேன். வியப்பாய் இருக்கலாம் உனக்கு ‘இவனா இப்படி’ என்று. ஆராய்ந்து பார்த்தால் அவன் தான் அடுத்து நம் தொகுதியில் ஜெயிப்பான். செல்வாக்கு அதிகம் இருக்கிறது. ஜெயில் வேறு போயிருக்கிறான். அதை வைத்தே ஓட்டு வாங்கி விடுவான். இந்த நேரத்தில் அவனுக்காக நான் உயிர் துறக்கிறேன் என்றால் அதை எப்படியாவது பெரிசுபடுத்தி அரசியல் ஆக்கி விடுவான். அவனுக்குத் தேவை ஓட்டு. கட்சி உறுப்பினரா என்னவென்ற ஆராய்ச்சியிலெல்லாம் போக விரும்பாது பொது ஜனம். அதன் மூலம் தியாகி என்ற பட்டம் கிடைக்கும். என் அம்மா ஆபரேஷன் நடக்கும். என் தங்கையும் உன்னைப் போல் B.E படித்து முன்னேறி விடுவாள். இது தான் நான் விரும்புவது. நான் இருந்து பண்ண முடியாததை இறந்து பண்ணிவிடுவேன். எந்த நேரத்திலும் உன்னைப் போல் என்னால் என் சுய நலம் தாண்டி பொது நலமாக சிந்திக்க முடியவில்லை ராஜி. என்ன பண்ண? என் வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்தது இது தான். என்ன, அம்மாவும் பாப்பாவும் கொஞ்ச நாள் அழுவார்கள். உனக்குப் பிடித்த பாஷையில் சொன்னால், உங்கள் மாலன் சார் சொல்வாரே ‘பிரச்சனை மரணங்கள் அல்ல, வலிகள்’ என்று. அந்த வலிகளை ‘அம்மா தங்கையுடன் இருந்து நீ மாற்றி விடுவாய்’ என்று தைரியம் இருக்கிறது. நீயும் உடைந்து விடுவாய் என்று தெரியும். வேண்டாம் ராஜி. எனக்காக நீ இலகியது போதும்.

இது கோழைத்தனம் தான். தவறான முடிவு தான். தெரியும். தியாகமென்ற பெயரில் இங்கு நமக்குக் கற்பிக்கப்பட்டவை அனைத்தும் முட்டாள்தனங்களும், சுயநலங்களும் தான் ராஜி.

கொஞ்சமேனும் நான் புண்ணியம் செய்திருந்தால் அடுத்த பிறவியிலும் நண்பர்களாகப் பிறப்போம். இப்போதைக்குப் பிரிகிறேன் – உன் வாழ்க்கையிலிருந்து மட்டும், இதயத்திலிருந்தல்ல.

என்றும் உன் உயிர்த்தோழன்,
சுந்தர்

****
மீண்டும் மீண்டும் அவன் வரிகள் மனதிற்குள் வந்து வந்து போகிறது. ‘தியாகமென்ற பெயரில் இங்கு நமக்குக் கற்பிக்கப்பட்டவை அனைத்தும் முட்டாள்தனங்களும், சுயநலங்களும் தான் ராஜி’

                           (முற்றும்)